செல்வா தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார். அதைப் படியுங்கள். பிறகு நான் அது பற்றி எழுதுகிறேன்.
ஏன் இப்படி நடப்பதில்லை?
புதியவர்கள், நாவல், சிறுகதை / கவிதை தொகுப்பு வெளியிடும் போது எழுதி முடித்த சூட்டோடு பதிப்பகத்தைத் தேடாமல் தான் சார்ந்த அல்லது நம்பும் இலக்கியவாதியை அணுகி, தன்னுடைய படைப்பைப் படிக்கக் கொடுத்து கருத்து கேட்டுவிடலாமே.
கவிதையில் திருத்தங்கள் செய்வது சங்கடம்தான். ஆனால், நாவலில் திருத்தங்கள் சாத்தியம்தானே? தகுதியான விமர்சகர் அல்லது எடிட்டர் இல்லாத சூழலில் நாம் மதிக்கும் எழுத்தாளரிடம் நம் எழுத்தைப் பற்றி கருத்து கேட்டுக் கொள்வதில் என்ன தவறு?
புத்தகமாக மாறி அது நிராகரிக்கப்படும் இம்சைக்கு பதில், அச்சுக்கு முன்னரே ஓரிருவர், நண்பர்களாகவே இருந்தாலும் கூட பரவாயில்லை, அவர்களிடம் படிக்கக் கொடுத்து, முன்முடிவுகள் இல்லாமல் அவர்கள் சொல்வதை சரி செய்து கொள்வது நல்லதில்லையா? எழுத்தாளரின் ஈகோ-வுக்கு இது ஒத்துவராது. ஆனால், ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்குமே?
***
செல்வா சொல்வதில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்ய விரும்புகிறேன். புதிய எழுத்தாளர்கள் மட்டும் அல்ல; எல்லா எழுத்தாளர்களுமே தங்களது படைப்புகளை யாரிடமாவது கொடுத்து எடிட் செய்து கொள்வதே முறை. சல்மான் ருஷ்டியின் நாவல்கள் கூட இப்படி எடிட் செய்யப்பட்டவையாகத்தான் இருக்கும். ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் அதுதான் முறை. இதற்கென்றே பல ஆலோசனை மையங்கள் ஆங்கிலத்தில் செயல்படுகின்றன. இந்தியாவில் பல மையங்கள் அப்படி உண்டு. இல்லாவிட்டால் பதிப்பகமே இந்த வேலையைச் செய்யும். எல்லா பிரபலமான பதிப்பகங்களிலும் எடிட்டிங் செய்வதற்கென்றே பிரிவுகள் உண்டு. தமிழில் எனக்குத் தெரிந்து க்ரியா இதைச் செய்வதாக இமையம் சொல்லியிருக்கிறார். மற்ற பதிப்பகங்கள் பற்றி எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை என்னுடைய நாவல்கள் எதுவுமே எடிட் செய்யப்படாமல் வந்ததில்லை. ராஸ லீலாவை தினமலர் ரமேஷ் எடிட் செய்து கொடுத்தார். அவர் ஒரு பிரமாதமான எடிட்டர்.
எக்ஸைலை எடிட் செய்தவர்கள் இருவர். அராத்து மற்றும் பத்ரி சேஷாத்ரி. பத்ரி சொல்லி ஒரு பத்து பக்கங்களை நீக்கி விட்டேன். அப்படி நீக்கியது எவ்வளவு தூரம் சரி என்று பின்னால் புரிந்தது. எக்ஸைல் -2 ஐ எடிட் செய்ய அராத்துவிடம் கொடுத்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. முடித்து விட்டீர்களா என்று நான் ஒருமுறை கூட கேட்கவில்லை. அவரே பேச்சை ஆரம்பித்தாலும் கூட எப்போது முடியுமோ அப்போது கொடுங்கள் என்று சொல்லி விடுகிறேன். 1200 பக்கங்கள். அவ்வளவு சுலபம் அல்ல.
தமிழில் மட்டும்தான் புதினங்கள் எடிட் செய்யப்படாமல் வருகின்றன. ஆங்கிலத்திலோ அல்லது பிற ஐரோப்பிய மொழிகளிலோ அப்படி வருவதில்லை.
இதற்குக் காரணம், எழுத்தாளர்களோ பதிப்பகங்களோ அல்ல. மொத்தமே 300 பிரதிகள் தான் விற்கும் என்ற சூழலில் எவன் எடிட்டிங் பற்றியெல்லாம் கவலைப்படுவான்?