ஜனவரி 4, தற்கொலைக் குறுங்கதைகள் வெளியீட்டு விழா

அன்பு நண்பர்களுக்கு,

ஓர் வேண்டுகோள்.  ஜனவரி 4-ஆம் தேதி சென்னை  தி. நகரில் உள்ள ஸர் பிட்டி தியாகராயா ஹாலில் மாலை ஆறு மணி அளவில் நடக்க இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவுக்காக நம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் தீயாக வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் மற்றும் அராஜகம் 1000 ஆகிய இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட இருக்கின்றன.  அரங்கத்தின் கொள்ளளவு 800.  ஓரளவு 700 பேராவது வந்தால்தான் 70 பேர் வந்ததாக நம் எதிரிகள் எழுதுவார்கள்.  அவர்களைப் பற்றிக் கவலையில்லை.  நமக்கே கொஞ்சம் சந்துஷ்டியாக இருக்கும்.  பத்திரிகையாளர் மதன், மனுஷ்ய புத்திரன், இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வசந்த், நீயா நானா ஆண்டனி மற்றும் பலர் பேசுவர்.  பார்த்திபன் வெளியூரில் இருக்கிறார்.  கேட்க வேண்டும்.  அடியேனும் பேசுவேன். 

என்ன பேசுவது என்று யோசனையாக இருந்த போது ஒருநாள் கனவில் வந்து என்னென்னவெல்லாம் பேச வேண்டும் என்று கோர்வையாக ஒரு குரல் சொல்லிக் கொண்டே போனது.  அதாவது, ஒரு முழுமையான சொற்பொழிவே அங்கு நிகழ்ந்து முடிந்தது.  இப்படித்தான் அடிக்கடி நடந்து வருகிறது.  ஒரு முழுக் கதையே கனவில் நடக்கிறது.  கனவுகளை அடியொற்றியே ஒரு நாவல் எழுதலாம் போல் இருக்கிறது.  கனவில் வரும் குரல் மஹா அவ்தார் பாபாவா அல்லது அடியேனின் ஆழ்மனக் குரலா என்று கண்டு பிடிக்க முடியவில்லை.  கனவு என்பதால் குரலை அடையாளம் காண முடியவில்லை. 

நகரில் ஒரு பத்து பதினைந்து இடங்களில் தட்டி கட்ட வேண்டும்.   முக்கியமாக நாகேஸ்வர ராவ் பூங்கா வாசலில் ஒன்று.  கபாலீஸ்வரர் கோவில் தேரடி பக்கத்தில் இருக்கும் பாரதீய வித்யா பவனுக்கும் சித்திரைக் குளத்துக்கும் நடுவில் தெரு முக்கில் ஒரு தட்டி  கட்டி விட்டாலே 700 பேர் வந்து விடுவர்.  வட சென்னை, சின்மயா நகர் ஆட்களெல்லாம் வர மாட்டார்கள்.  அங்கெல்லாம் வேண்டாம்.   நண்பர்கள் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.  (பாஸ்கர் ராஜா சென்னையில் இருந்தால் நன்கு திட்டமிடுவார்.  ரொம்ப நாட்களாகத் தொடர்பில் இல்லை.  மதுரையில் பார்த்தது).  என் நண்பரிடம் சொன்னால் 500 பேரை அழைத்துக் கொண்டு வந்து விடுவார். அந்த மாதிரி கூட்டம் தேவையில்லை.  விநாயக முருகன் சென்ற வாரம் என் வீட்டுக்கு வந்திருந்த போது ஒரு சம்பவம் சொன்னார்.  காசி தியேட்டர் பக்கத்தில் ஒரு பாலம் இருக்கிறது அல்லவா?  அந்த ஆற்றில் முதலை கிடக்கிறது என்று எவனோ ஒரு ஆள் புரளியைக் கிளப்பி விட, ஒரே கூட்டம் கூடி, பெரிய போக்குவரத்துப் பிரச்சினை ஆகி விட்டதாம்.  போலீஸ் வந்து இங்கே முதலை இல்லை என்று சொல்லியும் யாரும் நம்பவில்லையாம்.  கூட்டம் குறையவே இல்லை என்றதும், “இங்கே முதலை இல்லை” என்று பெரிய போர்டு வைத்தார்களாம்.  இருந்தும் மக்கள் அதை நம்பாமல் கூட்டம் கூட்டமாகக் கூடி பாலத்துக்குக் கீழே கீழே பார்த்து போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்தார்களாம்.  நம்ம ஊரில் (இல்லாத) முதலைக்குத்தான் கூட்டம் கூடும் என்று முடித்தார் வி.மு.  (பேச்சில் காட்டும் இவ்வளவு சுவாரசியத்தை எழுத்தில் காட்டக் கூடாதா நண்பரே?)

சரி, விடுங்கள்.  இப்படி முதலை பார்க்கும் கும்பலில் புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஆட்களை வரவழைப்பது சிரமம்தான்.  ஆனால் நாம் தீயாய் வேலை செய்தால் முடியும்.  பாருங்கள்.  காலையில் நடைப் பயிற்சிக்கு செல்லாமல் இதை டைப் செய்து கொண்டிருக்கிறேன்…

அன்புடன்,

சாரு 

 

Comments are closed.