பூச்சி 63

பூச்சியை முடித்து விட்டு வேறு வேலையைப் பார்க்கலாம் என்றால், இதை இன்னும் ஆரம்பித்தது போலவே இல்லை என்கிறாற்போல் இருக்கிறது.  இந்த உணர்வு வரும் போதெல்லாம் எனக்கு இரண்டு பேரின் ஞாபகம் தொற்றும்.  அசோகமித்திரன், ஜான் பால் சார்த்தர்.  86 வயதில் அவர் காலமாகும் வரை – ஏன், சாகும் தருணத்தில் கூட அசோகமித்திரன் நம்மிடம் சொல்வதற்குப் புதிது புதிதாகக் கதைகள் வைத்திருந்தார்.  ஆச்சரியம் என்னவென்றால், அந்தக் கதைகள் அவரது இளம் பிராயத்துக் கதைகளாக இருந்தன.  ஜெமினி ஸ்டியோவில் வேலை பார்த்த கதைகளாக இருந்தன.  எத்தனையோ கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி எழுதிக் குவித்த பிற்பாடும் 86 வயதில் அவரது 26 வயதுக் கதைகள் குவிந்து கிடந்தன. 

சார்த்தர் வேறு மாதிரி.  ஜெர்மன்காரர்களே நிறைய எழுதுவார்கள் என்ற ஒரு புகார் உண்டு.  சாதாரணமாக நாம் ஒரு பக்கத்தில் சொல்லக் கூடிய விஷயத்தை அவர்கள் இருபது பக்கத்துக்குச் சொல்வார்கள்.  ஆனால் சார்த்தர் ஃப்ரெஞ்சுக்காரர் ஆயிற்றே?  நான் அடிக்கடி என்னுடைய மூலம் ஃப்ரெஞ்ச் சிந்தனைப் பள்ளி என்று சொல்வதைப் போல சார்த்தரின் மூலம் ஜெர்மன் தத்துவம்.  அவர் சொன்னதில்லை; ஆனால் அவரைப் பற்றி அப்படி சொல்வார்கள்.  ஹைடேக்கரின் நீட்சிதான் சார்த்தர் என்பார்கள்.  அது உண்மையும்தான்.  அவர் எழுதிய கடைசிப் புத்தகம் ஃபேமிலி இடியட்.  இது ஒரு புத்தகம் அல்ல.  ஐந்து பாகங்களாக வந்த புத்தகம்.  குஸ்தாவ் ஃப்ளெபர் பற்றிய வரலாறு. 

“A man is never an individual,” Sartre writes, “it would be more fitting to call him a universal singular. Summed up and for this reason universalized by his epoch, he in turn resumes it by reproducing himself in it as singularity. Universal by the singular universality of human history, singular by the universalizing singularity of his projects, he requires simultaneous examination from both ends.” This is the method by which Sartre examines Flaubert and the society in which he existed.

மேற்கண்ட பத்தியை நாம் தமிழில் மொழிபெயர்த்துப் புரிந்து கொள்வதை விட ஆங்கிலத்திலேயே எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.   மனிதன் என்பவன் தனிமனிதன் கிடையாது.  அவனே அவனுடைய அடையாளத்தை நிர்ணயித்து விட முடியாது.  பிரபஞ்சத்தில் அவனுடைய இருப்பை அவனுடைய தனிமனிதத்தன்மையே நிர்ணயிக்காது.  பிரபஞ்சத்தோடு அந்தத் தனிமனிதன் கொள்ளும் உறவே அவனது தனிமனித இருப்பை நிர்ணயம் செய்கிறது.  இதை நாம் praxis என்று எளிமையாக அழைக்கலாம்.  இதே முறைமையில்தான் 1821 – 1880 காலகட்டத்தில் வாழ்ந்த ஃப்ளெபரின் வாழ்வை ஐந்து பெரிய தொகுதிகளாக எழுதினார் சார்த்தர்.  முதல் தொகுதிக்கு மதிப்புரை எழுதிய ஃப்ரெட்ரிக் ஜேம்ஸன் ”இது தத்துவ நூலா?  வாழ்க்கை வரலாறா?  அரசியல் புத்தகமா?  இது மூன்றுமே சேர்ந்தது என்று நினைக்கிறேன்” என்றார்.  இன்னொரு விமர்சகர் இது ஒரு நாவல் போல் இருக்கிறது என்றார். 

ஃப்ளெபர் திருமணம் செய்து கொள்ளாதவர்.  அதனால் அவருக்குக் குழந்தையும் இல்லை.  வாழ்நாள் பூராவும் வேசிகளோடுதான் சகவாசம் கொண்டிருந்தார்.  குறிப்பாக துருக்கி, லெபனான் போன்ற நாடுகளில் அதிகம் சுற்றிக் கொண்டிருந்தார்.  அதன் காரணமாகவே வாழ்நாள் பூராவும் சிஃபிலிஸ் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.  இதன் காரணமாகக் கூட இருக்கலாம், ஒரு பூர்ஷ்வா பின்னணியைக் கொண்ட சார்த்தருக்கு ஃப்ளெபர் மீது ஆரம்பத்திலிருந்தே பெரும் ஈடுபாடு இருந்திருக்கிறது.  நீங்கள் சார்த்தரின் நாஸியா என்ற நாவலைப் படித்திருக்கிறீர்களா?  இல்லையெனில் அவசியம் படிக்க வேண்டிய நாவல்.  அதில் வரும் நாயகன் அந்த்வான் ரோக்கெந்த்தென் ஒரு வரலாற்றாசிரியன்.  அவன் ஃப்ரெஞ்ச் புரட்சியின் போது வாழ்ந்த ஒரு கனவானின் வாழ்க்கை வரலாற்றை எழுத முற்படுவான்.  ஒரு தருணத்தில் கண்ணாடியைப் பார்க்கும் போது அவனுக்குக் கண்ணாடியில் தெரிவது அந்த்வானா, கனவானா என்ற சந்தேகம் ஏற்படும்.  இந்த இடத்தில் சார்த்தரையும் ஃப்ளெபரையும் பொருத்திப் பார்க்கலாம்.  சார்த்தர்தான் நாஸியாவின் நாயகன்.  கனவான்தான் ஃப்ளெபர்.  எதற்கு இதை ஆரம்பித்தேன் என்றால், குஸ்தாவ் ஃப்ளெபர் பற்றி ஐந்து பெரும் தொகுதிகளை எழுதிய சார்த்தர் ஐந்தாவது தொகுதி வந்ததும் இன்னும் நான் ஃப்ளெபர் பற்றி ஆரம்பிக்கவே இல்லையே என்றார்.  பிறகு ”இத்தனை தொகுதிகள் எழுதியும் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்று தோன்றுவதால் இந்தப் பணியை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்” என்றும் அறிவித்து விட்டார். 

***

நகரங்கள் பற்றி எப்போதுமே ஆர்வம் கொண்டிருப்பவன் நான்.  பல நகரங்களின் வரலாற்றைப் படிக்கும்போது இஸ்தாம்பூல் போன்ற ஒரு சுவாரசியமான வரலாற்றைக் கொண்ட நகரம் வேறு இல்லை என்றே தோன்றும்.  பெரும் வரலாற்றைக் கொண்டிருந்த நகரங்கள் பல அழிந்து விட்டன.  முற்றாக இல்லை என்றாலும் பழம்பெருமை இல்லை.  மகாபலிபுரம் இன்று ஒரு கிராமம்.  காஞ்சீபுரம் ஒரு சிற்றூர்.  ஆனால் இஸ்தாம்பூல் மட்டும் இன்னும் அப்படியே இருக்கிறது.  ஓர்ஹான் பாமுக் எழுதிய புதினங்களை விடவும் இஸ்தாம்பூல் பற்றி எழுதிய புத்தகம்தான் என்னை மிகவும் கவர்ந்தது.  தில்லி பற்றி வில்லியம் டால்ரிம்பிள் எழுதிய City of Djinns புத்தகமும் பிரமாதமான ஒன்று.  மும்பை பற்றி Suketu Mehta எழுதிய Maximum City என்ற புத்தகத்தை இன்னும் படித்து முடிக்கவில்லை.  மிக சுவாரசியமான புத்தகம்.  அதைப் படித்த போதுதான் மும்பை ஒரு தீவு என்ற விஷயமே தெரிய வந்தது.  நானெல்லாம் ஒரு நகரத்தைப் பற்றி இந்த ஜென்மத்தில் எழுதவே முடியாது.  அதற்கான தகுதியே எனக்கு இல்லை.  நேற்று குலாம் அலியும் மெஹ்தி ஹஸனும் ஒரு நாலைந்து மணி நேரம் கேட்டுக் கொண்டிருந்தேன்.  இருவரையும் பற்றி ஐநூறு பக்கத்திற்கு எழுத முடியும்.  ஆனால் நான் 33 ஆண்டுகளாக வாழ்ந்த சென்னை பற்றி ஐந்து பக்கம் எழுதவே திணறுவேன்.  ஏனென்றால், நான் சென்னையில் வாழவில்லையே.  புத்தகங்களிலும் இசையிலும்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்?  சென்னை பற்றிய எந்த நினைவுகளும் என்னிடம் இல்லை.  சென்னையின் தெருக்களில் நான் சுற்றியது இல்லை.  வட சென்னை எந்தத் திசை என்றே தெரியாது.  குரோம்பேட்டையில் என் நண்பர் பா. ராகவன் வசிக்கிறார் என்று தெரியும்.  மற்றபடி ஈசிஆர் வருவதற்கு முன்பு தாம்பரம் வழியாக பாண்டிச்சேரி போகும்போது குரோம்பேட்டை என்று ஒரு ஊர் வரும்.  அவ்வளவுதான்.  என்னுடைய சில பணக்கார நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் உலகத்தில் போகாத நகரங்களே இல்லை.  போவார்கள்.  ஐந்து நட்சத்திர ஓட்டல் அறையில் தங்கிக் குளித்து விட்டு காரில் கிளம்பி வியாபார விஷயத்தை ஒரு அறையில் பேசி முடிப்பார்கள்.  மாலையில் திரும்பி நட்சத்திர ஓட்டல் பாரில் குடி.  இப்படியே நாலைந்து நாள் போகும்.  ஐந்தாவது நாள் அந்த ஊரில் உள்ள ஒரு டூரிஸ்ட் மையத்தைப் பார்த்து விட்டு ஊர் திரும்புவர்.  இப்படி அவர்கள் ‘பார்க்காத’ நகரங்களே உலகில் இல்லை.  நான் சென்னையில் ’வாழ்வதும்’ இப்படித்தான்.   எக்ஸ்பிரஸ் அவென்யூவும் சத்யம் தியேட்டரும்தான் சென்னையா?  மற்றபடி என் செயல்பாடு முழுவதும் இந்த இருபதுக்கு இருபது அறைதான்.  இது ஒரு நூலகம்.  வில்லியம் பர்ரோஸின் மொழியில் சொல்வதானால் இது என் பங்க்கர். 

மைலாப்பூரைப் பற்றி வேண்டுமானால் பத்து பக்கம் எழுதலாம்.  அதை எக்ஸைலில் எழுதியிருக்கிறேன்.  மற்றபடி எழுதுவதற்குக் கதைகளைக் கொண்ட ஊர் தில்லி.  அங்கே பத்துப் பனிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தேன்.  வாழ்க்கைதான்.  படு சுவாரசியமான வாழ்க்கை.  ஒருநாள் பிரகதி மைதானில் ஒரு சர்வதேச புத்தக விழாவில் ஒரு புத்தகக் கடையில் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த போது பக்கத்தில் ஒரு அமெரிக்கையான பெண்மணி எனக்கு நமஸ்தே என்றார்.  பார்த்தால் இந்திரா காந்தி.  தொடக் கூடிய தூரம்.  இப்போது கூட அது நம் கற்பனையா என்று தோன்றுகிறது.  ஆனால் அவர் பக்கத்தில் முகமது யூனுஸ் நின்று கொண்டிருந்தார் என்பது இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.  கலாச்சாரத்தைப் பொறுத்தவரை இந்திராவின் ஆலோசகர் யூனுஸ்.  அவர் ஏன் எனக்கு நமஸ்தே சொன்னார் என்பதும் எனக்கு அப்போதும் இப்போதும் புரியவில்லை.  பிரதம மந்திரி என்பதற்கான செக்யூரிட்டி அதிகாரி கூட இல்லை.  வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.  நானும் சிரித்தபடி நமஸ்தே சொன்னேன்.  அப்போதெல்லாம் தீவிரவாதம் தலைதூக்கியிருக்கவில்லை.  ஒருமுறை இந்திராவின் பர்ஸனல் ப்ராஞ்சில் செக்ரட்டரியாக வேலை செய்ய தில்லி லெஃப்டினண்ட் கவர்னர் ஜக்மோகன் என்னை அழைத்தார்.   என்னுடைய அதிகாரி எஸ்.கே. குல்லர் அனுப்பும் நீண்ட குறிப்புகள் பிழையில்லாமல் தட்டச்சு செய்யப்பட்டிருப்பதைக் கண்டு என்னை நேரில் அழைத்து அந்த விஷயத்தைச் சொன்னார். அது 1980.  இரண்டாவது முறையாக இந்திரா பிரதம மந்திரியாக வந்திருந்தார்.  அந்த வாய்ப்பை ஒரு ஸ்டெனோ தன் வாழ்வில் கிடைத்த தங்கச் சுரங்கமாக நினைத்திருப்பான்.  அப்படி இந்திராவின் ஸ்டெனோவாக இருந்த ஆர்.கே. தவன் தான் பின்னாளில் பெரிய ஆளாகத் தெரிய வந்தார்.  அப்போது நான் தில்லி நகரத்தைப் பற்றிய நூல்களைத் தேடிப் படித்துக் கொண்டிருந்தேன்.  ஜக்மோகன் அப்போது ஒரு முக்கியமான நூலை எழுதியிருந்தார்.  தில்லி பற்றி.  Rebuilding Shahjahanabad என்பது அந்தப் புத்தகம்.  நான் ஜக்மோகனிடம் நான் ஒரு எழுத்தாளன் என்றும் வயிற்றுப்பாட்டுக்காகவே இந்த வேலையில் ஒட்டிக் கொண்டிருக்கிறேன் என்றும் பிரதம மந்திரியின் பர்சனல் பிராஞ்சுக்கு நான் ஒத்து வர மாட்டேன் என்றும் விளக்கினேன்.  அவருடைய புத்தகத்தையும் படித்திருந்தேன் என்றதும் சற்று திகைப்புடன் அனுப்பி விட்டார்.  குல்லர்தான் பிழைக்கத் தெரியாதவன் என்று திட்டிக் கொண்டிருந்தார்.  ஒரு நாலே ஆண்டுகள் பேயாய் உழைத்து விட்டு வேலையை விட்டு விட்டு மெட்றாஸ் ஓடி விடலாமே, அதுதானே உன் எழுத்துக்கு நல்லது, இல்லையானால் இந்த வேலையிலேயே வாழ்நாள் பூராவும் இருந்து குப்பை கொட்ட வேண்டியிருக்குமே என்றெல்லாம் பலவாறாகப் பேசினார்.   மீண்டும் கவர்னரிடம் பேசவா என்று கேட்டார்.  நான் உறுதியாக மறுத்து விட்டேன்.  பதவி, அதிகார சுகம் கண்டு விட்டால் அதிலிருந்து மீள்வது சாத்தியமே இல்லை.  ஏற்கனவே அந்த அதிகார சுகத்தை நான் கண்டிருக்கிறேன்.  அங்கே சிவில் சப்ளைஸ் என்றால் தாதா மாதிரி.  ரேஷன் கார்டுதானே எல்லாம்?  நான் ரேஷன் கார்டு கொடுக்கும் அதிகாரியின் செக்ரட்டரி.  ஒரு காகிகத்தில் கையெழுத்துப் போட்டால் இன்ஸ்பெக்டர்கள் சலாம் அடித்து ரேஷன் கார்டை என் கையில் கொடுத்து விட்டுப் போவார்கள்.  இதனால் ஹோம் மினிஸ்ட்ரியில் பலருக்கும் ரேஷன் கார்டு வாங்கிக் கொடுத்ததால் என்னை செக்யூரிட்டி செக் இல்லாமல் ஹோம் மினிஸ்ட்ரிக்குள் விடுவார்கள்.  மினிஸ்ட்ரி ஆஃப் இம்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸின் டெபுடி செக்ரட்டரியாக இருந்த கபூர் என்பவர் (அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி) என் நண்பராக இருந்தார்.  எல்லாம் ரேஷன் கார்டு செய்யும் மாயம்.  ஏனென்றால், நீங்கள் எவ்வளவு செல்வாக்கு வாய்ந்தவராக இருந்தாலும் ராஷனிங் இன்ஸ்பெக்டர்கள் போக்கு காட்டி விடுவார்கள்.  ஏதாவது ஒரு ஷரத்தைச் சொல்லி கையை விரித்து விடுவார்கள்.  ஆனால் நான் விரலை அசைத்தால் ராஷன் கார்டு தயார்.  அங்கே ரேஷனை ராஷன் என்றுதான் சொல்வார்கள்.   கபூர் எனக்கு போன் செய்யும் போதெல்லாம் கூட வேலை பார்த்த காமினி – அவள் ஒரு பஞ்சாபி, கபூர் சாபிடம் பஞ்சாபியிலேயே பேசி விட்டு என்னிடம் பயபக்தியுடன் போனைக் கொடுப்பாள்.  பிறகு கபூர் சாபை உங்களுக்கு எப்படித் தெரியும் ரவிஜி என்பாள்.  எல்லாம் ராஷன் கார்டுதான் என்பேன்.  கபூர் மூலமாக ஒரு காரியம் சாதித்துக் கொண்டதில்லை.  மினிஸ்ட்ரி ஆஃப் இம்போர்ட்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்ஸ் என்றால், காசு கொட்டோ கொட்டு என்று கொட்டும்.  ஆனால் என் மூலம் அவருக்கு ஒரு நூறு ரேஷன் கார்டாவது செய்து கொடுத்திருப்பேன். 

நானும் குல்லரும் ஜிபி ரோடுக்கு ரேஷன் கார்டு விநியோகிக்க, ரேஷன் கார்டை பரிசோதிக்க நேரில் செல்வோம்.  அது தில்லியின் சிவப்பு விளக்குப் பகுதி.  முடித்து விட்டு இருவரும் எங்கேயாவது நட்சத்திர விடுதி பாருக்குப் போய் விடுவோம்.  எக்ஸைல் நாவலில் கதைச் சுருக்கம் மாதிரிதான் எழுதியிருக்கிறேன்.  ஒவ்வொரு எபிஸோடும் ஐம்பது ஐம்பது பக்கம் வரும்.  எதையுமே இன்னும் எழுதவில்லை.  மஜ்னூ கா டில்லா எபிசோட் பற்றி மட்டுமே விரிவாக எழுதினேன். 

தில்லி நகரில்தான் வாழ்ந்திருக்கிறேன்.  இதெல்லாம் இன்று பா. ராகவனின் ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் என்ற தொடரின் பதினைந்தாவது அத்தியாயத்தைப் படித்தபோது இதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது. 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai