மஹாபாரதம்

இந்தத் தருணம் மிக நெகிழ்வான தருணம் . ஐந்து நிமிடத்திற்கு முன்னால் ஐம்பதாவது நபர் முழு மகாபாரதத்தை முன் பதிவு செய்தார் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் . இந்தப் பெருமை எல்லாம் வருட கணக்கில் ஓயாது மொழி பெயர்த்த Arul Selva Perarasan S யே சாரும். 9999 ரூபாய் கொடுத்து புத்தகத்தை முன்பதிவு திட்டத்தின் கீழ் வாங்குவதற்கு ஐம்பது நபர்கள் முன் வந்திருக்கிறார்கள் என்பதெல்லாம் பதிப்பக துறையில் அதுவும் இந்த காலகட்டத்தில் இறைவன் நிகழ்த்திய அதிசயம் என்று தான் நினைக்கிறேன். எங்களை நம்பி முன்பதிவு செய்த அனைவருக்கும் நன்றிகள் பல.

மேலே உள்ள பதிவு ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் (தமிழில்: எழுத்து பிரசுரம்) ராம்ஜி முகநூலில் எழுதியிருப்பது. தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சி. இந்த முன்பதிவுத் திட்டம் குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளிலும் தினமலர், தினமணி போன்ற தினசரிகளிலும் செய்தியாக வந்திருந்தால் குறைந்த பட்சம் 500 பேராவது 9999 ரூ. அனுப்பி முன் பதிவு செய்திருப்பார்கள் என்பதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. என் பதிப்பகமாக இருந்தால் நான் அதற்கான வேலைகளை முனைப்பாகச் செய்வேன். அந்தந்தப் பத்திரிகை ஆசிரியர்களை நேரில் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொல்லுவேன். விஷயத்தைச் சொன்னால்தானே அவர்களுக்குத் தெரியும்? அவர்களாக முகநூலில் பார்த்துச் செய்ய மாட்டார்களே?

மகாபாரதம் நம் இந்தியாவின் சொத்து. இந்தியப் பாரம்பரியத்தின், இந்தியக் கலாச்சாரத்தின், இந்தியக் கதை சொல்லும் மரபின் சொத்து. உலகில் மகாபாரதத்துக்கு இணையான ஒரு இதிகாசம் இல்லை. உலக இதிகாசங்கள் அனைத்தையும் படித்து விட்டே இதைக் கூறுகிறேன்.

இப்படி விளம்பரமே இல்லாமல் 50 பேர் முன்பதிவுத் திட்டத்துக்கு 9999 ரூ அனுப்பியிருப்பது பெருமைக்குரிய விஷயம்தான். என் எதிர்பார்ப்பு ஒரு இருநூறு பேராவது முன்வர வேண்டும் என்பதுதான். நான் அருட்செல்வப் பேரரசனிடம் சொல்லியிருந்தேன், இந்த நூல் பத்தாயிரம் பிரதிகள் விற்கும் என்று. விற்கும்.

தமிழில் இதுவரை வந்துள்ள மகாபாரதம் அனைத்தும் சுருக்கப்பட்ட பதிப்புகளே. மவீரா பதிப்பு மணிப்பிரவாள நடையில் அமைந்தது. அதுவும் இப்போது அச்சில் இல்லை. அது எல்லோருக்குமான பதிப்பும் அல்ல. சற்று மணிப்பிரவாள நடையில் பரிச்சயம் உள்ளவர்களால்தான் மவீரா பதிப்பை வாசிக்க முடியும். எனவே மகாபாரதம் என்றால், இப்போதைக்குத் தமிழில் அருட்செல்வப் பேரரசனின் இந்த மகாபாரதம் மட்டுமே முழுமையான மகாபாரதம். வாங்கிப் பயன் பெறுங்கள். முன்பதிவு செய்யுங்கள்.

https://tinyurl.com/mahabharatham