பூச்சி 103 : ஆவியாக வந்து உங்களைச் சும்மா விட மாட்டேன்…

முன்குறிப்பு: கட்டுரையை முழுசாகப் படியுங்கள். நேற்று பதிவேற்றம் செய்ததோடு மீண்டும் நிறைய எழுதியிருக்கிறேன்.

நேற்று (12.7.2020) தமிழ் இந்துவில் வைரமுத்துவின் பிறந்த நாளை ஒட்டி ஒரு முழுப்பக்கக் கட்டுரை வந்ததாக அறிந்தேன். தமிழில் நான் விரும்பிப் படிக்கும் இரண்டு கவிஞர்கள் அதில் வைரமுத்துவின் புகழ்பாடி எழுதியிருக்கும் கட்டுரைகளின் மேற்கோள்களையும் கண்டேன். இதெல்லாம் எனக்கு நேற்று மாலைதான் தெரிய வந்தது. காலையிலேயே தெரிந்திருந்தால் சமஸுக்கான கடிதத்தை எழுதியிருக்க மாட்டேன். வைரமுத்துவின் காலணிகளை நக்கி எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளுக்குச் சொந்தக்காரர்களான ஷங்கர் ராமசுப்ரமணியன், ஆசைத்தம்பி இருவரோடும் இனி எனக்கு எந்த உறவும் இல்லை. அதில் ஷங்கர் ராமசுப்ரமணியனை நான் இருபது ஆண்டுகளாக அறிவேன். அவரா இப்படி என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. நானெல்லாம் பட்டினி கிடந்து செத்தாலும் சாவேனே தவிர இப்படி ஒரு நாய்ப்பிழைப்பை செய்ய மாட்டேன். ”ஒரு யுகச் சந்திப்பில் வைரமுத்து என்னும் நிகழ்வு உருவெடுக்கிறது”  என்று சொல்லும் அளவுக்கு இலக்கியம் தெரியாத மூடர் அல்ல ஷங்கர். ஆனால் சொல்லியிருக்கிறார். இதைச் சொல்ல வேண்டிய தொழில் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டிருந்தால் இந்து அலுவலகத்திலிருந்து வெளியேறி ரோட்டுக்கு வந்து உட்கார்ந்து பிச்சை எடுத்து சாப்பிடுவேன்.  ஏனென்றால், என் எழுத்து மூலமாக தரகு வேலை செய்து வாழ்வதை விட, ஒரு பிரமுகரின் காலணியை நக்கிப் பிழைப்பதை விட பிச்சை எடுப்பது அகௌரவம் அல்ல.  எழுத்தில் சோரம் போவதுதான் கேவலம்.   என்னிடம் இருக்கும் ஷங்கர் ராமசுப்ரமணியனின் புத்தகங்களை நண்பர் செல்வகுமார் வந்து வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.  அவருக்கும் அதைப் படிக்க இஷ்டம் இல்லாவிட்டால் சங்கரின் கவிதைப் புத்தகத்தை – என் வீட்டுப் பூனைகள் அவ்வப்போது தரையில் ஆய் போய் வைப்பதைத் துடைக்க வீட்டில் காகிதம் இல்லாத குறை தீர்ந்தது என்று அதற்குப் பயன்படுத்திக் கொள்வேன்.  

வைரமுத்து நோபல் பரிசுக்கு அடி போட்டார். இன்னமும் அடி போட்டுக் கொண்டிருக்கிறார். பாவம், அவருக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர் கிடைக்கவில்லை. கிடைத்தால் நோபல் கிடைக்கும். நோபலின் தரம் அவ்வளவு தாழ்ந்து கிடக்கிறது. பாடலாசிரியர்களுக்கெல்லாம் இலக்கிய நோபல் கொடுக்கிறார்கள். நோபலுக்கான முயற்சி ஒரு பக்கம் இருக்கட்டும், உள்ளூர் பரிசைப் பார்ப்போம் என்று ஞானபீடப் பரிசுக்கு முயற்சிக்கிறார் வைரமுத்து. அதற்கான திட்டங்களில் ஒன்றுதான் இந்த இந்து முழுப்பக்கம். எனக்கு பத்திரிகை கிடைக்கவில்லை. யாராவது எலெக்ட்ரானிக் காப்பி அனுப்புங்கள். இங்கே என் வீட்டில் காகிதங்களுக்குத் தடை உள்ளது. படிப்பதற்காகக் கேட்கவில்லை. ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்க்க வேண்டும். ஏனென்றால், அவசரத்தில் ஜெயமோகன் அதை கவனிக்காமல் விட்டிருக்கலாம். பொதுவாக நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் வரும் போது சில சமயங்களில் படமாகப் போடாமல் கட்டுரையாக எழுதி, கீழே வலது ஓரத்தில் Advt என்று போடுவார்கள். அதை கவனிக்காமல் ஜெயமோகனும் பெருந்தேவியும் எழுதியிருந்தால் அவர்களை நம்பி இதை நான் எழுதக் கூடாது. விளம்பரம் செய்யக் கூடவா உரிமை இல்லை என்று வைரமுத்து என்னிடம் சண்டைக்கு வருவார்.

இன்னமும் சொல்கிறேன். ஞானபீடப் பரிசுக்கு முயற்சி செய்ய அவருக்குப் பூரண உரிமை உண்டு. அகிலனுக்கே ஞானபீடம் வாங்கிக் கொடுத்தவர்கள் நாம். அப்படியிருக்கும்போது வைரமுத்து குறைச்சல் இல்லை. ஆனால் ஆசைத்தம்பியும் ஷங்கர் தம்பியும் இப்படி விலை போனதுதான் எனக்குத் துயரம். வள்ளலார் மட்டன் ஸ்டால் என்று பெயர் வைப்பார்களா யாராவது? வைரமுத்துவைப் பாராட்ட ஷங்கர் ராமசுப்ரமணியனா? என்னடா இது கொடுமை!!! இனிமேல் கண்ணகி டிஸ்கோ பார் என்று கூட வரும் போல் இருக்கிறது. மதிப்பீடுகள் சீரழிந்து இந்த நிலைக்கு வந்து விட்டன. இந்த வைரமுத்து நாமாவளி ஆரம்பித்தது எப்போது என்றால், அவர் பிறந்த நாளுக்கு விழா வைத்து தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் இயங்கிக் கொண்டிருந்த கலாப்ரியா போன்ற கவிஞர்களுக்குப் பரிசு கொடுத்ததை இந்த சிறுபத்திரிகை ஆட்களெல்லாம் வாங்கிக் கொண்ட போதே ஆரம்பித்து விட்டது. பரிசு என்ன தெரியுமா? அஞ்சாயிரம் ரூபாயோ பத்தாயிரம் ரூபாயோ. அப்போது அதை எதிர்த்து நான் எழுதியபோது கலாப்ரியா என் மீது கோபித்துக் கொண்டார். அவருக்கு வைரமுத்து கொடுத்த பரிசு ரூபாயை விட கலாப்ரியா IOB வங்கி அதிகாரியாக வாங்கிய சம்பளம் அதிகம். நான் நண்பர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு, நோ சொல்லிப் பழகுங்கள் என்று. மேலும், அதிகாரம்தான் உச்சக்கட்ட போதை. மதுவெல்லாம் ஒன்றுமே இல்லை. வைரமுத்து ஒரு அதிகார மையம். அந்த அதிகாரத்துக்கு மயங்கி விட்டார்கள் சிறுபத்திரிகை எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும்.

ஜெயமோகனிடம் நான் வியக்கும் விஷயம் என்னவென்றால், அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் பிஜேபியினர் அவரைக் கொண்டாடினாலும் அவர் காங்கிரஸ்தான் இந்தியாவுக்கு இப்போது தீர்வு என்கிறார். இந்துத்துவ அதிகாரத்துடனும் சரி, திராவிட அதிகாரத்துடனும் சரி, அவர் கை கோர்க்க முரட்டுத்தனமாக மறுக்கிறார். சுந்தர ராமசாமியின் legacyயை நான் இன்று ஜெயமோகனிடம்தான் பார்க்கிறேன். எங்களுக்குள் ஆயிரம் கருத்து மோதல்கள் இருப்பினும் ஜெயமோகனுக்கு இதற்காக என் சலூட்.

மேற்கண்ட பதிவை நான் நேற்று (13.7.2020) எழுதியிருந்தேன்.  அந்தப் பதிவை நேற்றே படித்தவர்கள் மீண்டும் ஒருமுறை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  சில முக்கியமான மாற்றங்களைச் செய்திருக்கிறேன்.  மேற்படி வைரமுத்து நாமாவளிக் கட்டுரை இன்று காலைதான் எனக்குப் படிக்கக் கிடைத்தது.  அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இருந்தது. எது என்றால், தமிழ் இலக்கியத்தில் ட்ரைய்னிங் எடுத்துக் கொண்ட இரண்டு பேர்வழிகள் (ஆசைத்தம்பி, ஷங்கர் ராமசுப்ரமணியன்) இன்று அதை இலக்கியத்துக்கு அந்நியமான ஒருவருக்கு இலக்கிய பீடம் அளிப்பதற்குப் பயன்படுத்துகிறார்களே என்பதுதான் ஆபாசம், அசிங்கம்.

புரிகிறாற்போல் சொல்கிறேன்.  இருவரில் ஆசை பற்றி எனக்கு அதிகம் தெரியாது.  ஆனால் இருவரும் கவிஞர்கள்.  சிறுபத்திரிகைகளில் – இலக்கிய உலகில் நிலைபெற்றவர்கள்.  இவர்களின் இலக்கிய மதிப்பீடுகள் எப்படியெல்லாம் உருவாகியிருக்கும்?  அது ஒரு பெரிய வரலாறு.  எல்லோருக்குமான வரலாறுதான்.  இலக்கியத்தில் சமரசம் செய்யாதிருத்தல்.  இதுதான் அடிப்படை.  ஒரு கோடி கொடுத்தாலும் ஒரு இலக்கியவாதி மு. வரதராசனாரின் நாவலை இலக்கியப் படைப்பு என்று சொல்ல மாட்டான்.  சொத்தையே எழுதி வைத்தாலும் கோவி. மணிசேகரனின் எழுத்தை இலக்கியம் என்று சொல்ல மாட்டான்.  அவ்வளவு ஏன், பாலகுமாரனுக்கே அதுதான் நிலைமை.  அப்படியிருக்க இந்த ஷங்கர் வந்து ஏன் வைரமுத்துவுக்கு இப்படி நாம சங்கீர்த்தனம் பாடுகிறார்?  ”ஒரு யுகச் சந்திப்பில் வைரமுத்து என்னும் நிகழ்வு உருவெடுக்கிறது.”  ”தனது கற்பனையால் அகண்டம் கொண்ட கலைஞர்.”  மற்றும் கட்டுரையினூடே ஆத்மாநாம், வானம்பாடி இயக்கம் அது இது இத்யாதி.  ஏன் இந்தக் கட்டுரையை தமிழ் இந்து வேறு ஒரு சினிமா நிருபரையோ அல்லது வேறு ஒருவரையோ வைத்து எழுதவில்லை?  எப்படியும் தமிழ் இந்துவில் இருபது பேர் ஆசிரியர் குழுவில் இருப்பார்கள்.  அதில் ஏன் ஆசைத்தம்பி, ஷங்கர் என்ற இரண்டு சிறுபத்திரிகைக் கவிஞர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்?  ஏனென்றால், இவர்கள்தான் தொழில் தெரிந்தவர்கள்.  பதினேழு பதினெட்டு நூற்றாண்டுகளில் சதிர் தெரிந்த தாசிகளிடம்தான் மிராசு, ஜமீன் எல்லாம் போகும். 

நம்முடைய இலக்கிய மதிப்பீடு என்ன?  அது ஜெயமோகனாக இருந்தாலும் சரி, அவருக்கு நேர் எதிர் கோணத்தில் நின்று கொண்டிருக்கும் சாரு நிவேதிதாவாக இருந்தாலும் சரி, சுந்தர ராமசாமி சொன்னதுதான் மதிப்பீடு.  அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது அகிலன் மலக்கிடங்கு என்றார் சு.ரா.  அதையே அசோகமித்திரனிடம் கேட்டிருந்தால், அப்படியெல்லாம் சொல்லப்படாது, அவா அவா அவாளுக்குத் தெரிஞ்சதை எழுதறா, அதிலே இந்த ராமசாமிக்கு என்ன வந்தது?  இதெல்லாம் பர்வெர்ஷன் என்றுதான் சொல்வார்.  ஆனால் நாம் எல்லோருமே நமது இலக்கிய மதிப்பீடுகளை, இலக்கிய அறத்தை ராமசாமியிடமிருந்து கற்று வந்திருக்கிறோம்.  புதுமைப்பித்தனிடம் கற்று வந்திருக்கிறோம்.  இல்லாவிட்டால் கல்கி ஒரு மகா பெரிய இலக்கியவாதி என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே ஐயா?  புதுமைப்பித்தனும் செல்லப்பாவும் க.நா.சு.வும் தங்கள் வாழ்நாள் பூராவும் போராடிப் போராடித் தங்கள் பிராணனை விட்ட கதை அல்லவா அது?  வணிக எழுத்தின் மீது யாருக்கும் எப்போதும் எந்தப் பிரச்சினையும் இல்லை.  ஆனால் வணிக எழுத்து இலக்கியமாகத் தளுக்கும்போதுதான் இலக்கியவாதிகள் கொதித்து எழுகிறார்கள்.  அதனால்தான் அகிலன் என்பவர் இலக்கியச் சாதனைக்கான ஞானபீடப் பரிசு வாங்கிய போது மலக்கிடங்கு என்று திட்டினார் சுந்தர ராமசாமி.

வைரமுத்து ஒரு நல்ல பாடலாசிரியர்.  சந்தேகமே இல்லை.  அற்புதமான பாடலாசிரியர்.  ஆனால் அவர் அத்தோடு நிற்கவில்லையே?  ஞானபீடத்தை நோக்கி அல்லவா ஒவ்வொன்றாகக் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்? தமிழ் இலக்கியத்தில் சாதனை செய்தவர்களைப் பற்றி அவருடைய உரைகள் – அது தொகுப்பாக வந்தது – அவருடைய சிறுகதைகள் – விகடனில் வந்த நாவல்கள் – இதை வைத்துத்தான் அவர் இலக்கியத்துக்கான ஞானபீடத்தை நோக்கி நகர்கிறார்.  இதற்குத்தான் ஆசைத்தம்பியும் ஷங்கர ராமசுப்ரமணியனும் தாங்கள் புதுமைப்பித்தனிடமும் சுந்தர ராமசாமியிடமும் கற்றதை வைத்து இங்கே வைரமுத்துவுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்க உழைத்திருக்கிறார்கள்.  கவிதைக்கும் பாடலுக்கும் (lyrics) வித்தியாசம் தெரியாதா இந்த சிறுபத்திரிகைக் கவிஞர்களுக்கு?  சினிமா பாடல் எழுதுவர் எல்லாம் கவிஞரா?  அவர்கள் பாடலாசிரியர்கள்.  பாடலும் எழுதி கவிதையும் எழுதிய ஒரே ஆள் பாரதிதான்.  அவருக்குப் பிறகு யாரும் இல்லை.  வைரமுத்து எழுதுவது பாடல்கள்.  கவிதை இல்லை.   ஆக, வைரமுத்து கவிஞரே இல்லை என்கிறேன், எங்கிருந்து வந்தது ஐயா கலைஞர் என்ற அடைமொழி?  கலைஞர் என்ற அடைமொழியை யாருக்குக் கொடுக்கலாம் என்பது கூடவா இந்த இரண்டு bootlickersக்கும் தெரியாமல் போயிற்று? 

வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் போல் தமிழில் ஆயிரம் நாவல் வந்திருக்கும்.  மேலாண்மை பொன்னுச்சாமி, பொன்னீலன் என்று ஏராளமான பெயர்கள்.  அதில் இலக்கியமாக சாதனை புரிந்தவர் கி.ராஜநாராயணன்.  அதில் சர்வதேச இலக்கியத்தரத்துக்கு உச்சம் தொட்டவர் வண்ணநிலவன்.  இந்த இருவரின் நிழலைக் கூடத் தொட முடியுமா வைரமுத்துவால்?   

இன்றைய தினம் தமிழ் இந்துவில் வருத்தம் தெரிவித்து ஓர் அறிவிப்பு வந்துள்ளது.  ஆஹா, பிரச்சினையையே திசை திருப்பி விட்டது இந்து தமிழ் திசை.  வைரமுத்துவின் மேல் பாலியல் புகார் இருப்பதால், அந்தப் பாலியல் புகார்களுக்கும் அவரது இலக்கிய சாதனைகளுக்கும் சம்பந்தமில்லை என்று அவர்கள் நினைத்தார்களாம்.  அடடாடாடா…  இதன் மூலம் வைரமுத்து நினைத்ததைத்தான் இந்த வருத்த அறிவிப்பின் மூலமும் சாதித்து விட்டார்.  வைரமுத்துவின் இலக்கிய சாதனை சாதனைதான்.  ஆனால் பாலியல் புகார் காரணமாக அதற்கு ஒரு தடங்கல்.  அவ்வளவுதான்.  நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இவரது இலக்கியமே பம்மாத்து என்கிறேன்.  அந்தப் பம்மாத்தை மூடி மறைக்கத்தான் தமிழ் இந்துவுக்கு இலக்கியவாதிகள் தேவைப்பட்டிருக்கிறார்கள்.

பிரச்சினை என்னவென்றால், நமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சினிமாக்காரர் என்றால் சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து காலணியை நக்க வேண்டும்.  அப்படித்தான் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம்.  அதுதான் விஷயம்.  அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.  யாரையும் குற்றம் சொல்லிப் பயன் இல்லை.  வைரமுத்து சிறுகதைத் தொகுதி வெளியிட்ட போதும் தமிழ் இந்துவில் இப்படித்தான் செய்தார்கள்.  கிட்டத்தட்ட வைரமுத்துவின் பிரச்சார பீரங்கி போல் செயல்படுகிறது தமிழ் இந்து.  அவருக்கு ஞானபீடத்தை வாங்கிக் கொடுத்து விட்டுத்தான் ஓய்வார்கள் போல் தெரிகிறது.

ஜூலை 13 வைரமுத்து பிறந்த நாள்.  ஜூலை 7 இன்னொரு தமிழ் இலக்கியவாதியின் பிறந்த நாள்.  இப்போது அவர் வயது 90.  இந்த வயதிலும் மிக மும்முரமாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்.  அவருடைய ஔரங்கசீப் என்ற நாடகம் நாடக உலகில் ஒரு மைல்கல்.  அவருடைய படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான குரல் கொண்டவை.  அறிஞர் என்ற சொல்லுக்குப் பொருத்தமானவர்.  பெயர் இந்திரா பார்த்தசாரதி.  அவரது பிறந்த நாளில் தமிழ் இந்துவில் ஒரு வரிச் செய்தி கூட கிடையாது.  அவர் என்று இல்லை. ஒரு எழுத்தாளனின் பிறந்த நாளும் தமிழ் இந்துவில் வராது.  ஆனால் செத்துப் போனால் ஒரு பக்கத்துக்கு ஒப்பாரிக் கட்டுரை வரும்.  Necrophelia.  தமிழ் இந்து நண்பர்களே, நான் செத்துப் போனால் இந்த மாதிரி ஒப்பாரிக் கட்டுரைகளைப் போட்டால் நான் ஆவியாக வந்து உங்களை உண்டு இல்லை என்று பண்ணி விடுவேன், ஜாக்கிரதை.