தமிழ் இந்து : வைரமுத்து : இலக்கியவாதிகள்

நேற்று தமிழ் இந்துவில் வைரமுத்துவின் பிறந்த நாளை ஒட்டி ஒரு முழுப்பக்கக் கட்டுரை வந்ததாக அறிந்தேன். தமிழில் நான் மிக விரும்பிப் படிக்கும் இரண்டு கவிஞர்கள் அதில் வைரமுத்துவின் புகழ்பாடி எழுதியிருக்கும் கட்டுரைகளின் மேற்கோள்களையும் கண்டேன். இதெல்லாம் எனக்கு நேற்று மாலைதான் தெரிய வந்தது. காலையில் தெரிந்திருந்தால் சமஸுக்கான கடிதத்தை எழுதியிருக்க மாட்டேன். தமிழ் இந்து இத்தனை கீழ்த்தரமான நாளிதழ் என்று தெரிந்திருக்கும். வைரமுத்துவின் காலணிகளை நக்கி எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளுக்குச் சொந்தக்காரர்களான ஷங்கர் ராமசுப்ரமணியன், ஆசைத்தம்பி இருவரோடும் இனி எனக்கு எந்த உறவும் இல்லை. அதில் ஷங்கர் ராமசுப்ரமணியனை நான் இருபது ஆண்டுகளாக அறிவேன். அவரா இப்படி என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. நானெல்லாம் பட்டினி கிடந்து செத்தாலும் சாவேனே தவிர இப்படி ஒரு நாய்ப்பிழைப்பை செய்ய மாட்டேன். வைரமுத்துவை ஒரு யுகச் சந்திப்பில் வைரமுத்து என்னும் நிகழ்வு உருவெடுக்கிறது”  என்று சொல்லும் அளவுக்கு இலக்கியம் தெரியாத மூடர் அல்ல ஷங்கர். ஆனால் சொல்லியிருக்கிறார். இதைச் சொல்ல வேண்டிய தொழில் நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டிருந்தால் இந்து அலுவலகத்திலிருந்து வெளியேறி ரோட்டுக்கு வந்திருப்பேன். அவ்வளவுதான். ஷங்கர் ராமசுப்ரமணியனின் புத்தகங்களை என்னிடமிருந்து செல்வகுமார் பெற்றுக் கொள்ளலாம். வைரமுத்து நோபல் பரிசுக்கு அடி போட்டார். இன்னமும் அடி போட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்குப் பாவம், நல்ல மொழிபெயர்ப்பாளர் கிடைக்கவில்லை. கிடைத்தால் நோபல் கிடைக்கும். நோபலின் தரம் அவ்வளவு தாழ்ந்து கிடக்கிறது. பாடலாசிரியர்களுக்கெல்லாம் இலக்கிய நோபல் கொடுக்கிறார்கள். நோபலுக்கான முயற்சி ஒரு பக்கம் இருக்கட்டும், உள்ளூர் பரிசைப் பார்ப்போம் என்று ஞானபீடப் பரிசுக்கு முயற்சிக்கிறார். அதற்கான திட்டங்களில் ஒன்றுதான் இந்த இந்து முழுப்பக்கம். எனக்கு பத்திரிகை கிடைக்கவில்லை. யாராவது எலெக்ட்ரானிக் காப்பி அனுப்புங்கள். இங்கே என் வீட்டில் காகிதங்களுக்குத் தடை உள்ளது. படிப்பதற்காகக் கேட்கவில்லை. ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்க்க வேண்டும். ஏனென்றால், அவசரத்தில் ஜெயமோகன் அதை கவனிக்காமல் விட்டிருக்கலாம். பொதுவாக நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் வரும் போது சில சமயங்களில் படமாகப் போடாமல் கட்டுரையாக எழுதி, கீழே வலது ஓரத்தில் Advt என்று போடுவார்கள். அதை கவனிக்காமல் ஜெயமோகனும் பெருந்தேவியும் எழுதியிருந்தால் அவர்களை நம்பி இதை நான் எழுதக் கூடாது. விளம்பரம் செய்யக் கூடவா உரிமை இல்லை என்று வைரமுத்து என்னிடம் சண்டைக்கு வருவார். இன்னமும் சொல்கிறேன். ஞானபீடப் பரிசுக்கு முயற்சி செய்ய அவருக்குப் பூரண உரிமை உண்டு. அகிலனுக்கே ஞானபீடம் வாங்கிக் கொடுத்தவர்கள் நாம். அப்படியிருக்கும்போது வைரமுத்து குறைச்சல் இல்லை. ஆனால் ஆசைத்தம்பியும் ஷங்கர் தம்பியும் இப்படி விலை போனதுதான் எனக்குத் துயரம். வள்ளலார் மட்டன் ஸ்டால் என்று பெயர் வைப்பார்களா யாராவது? வைரமுத்துவைப் பாராட்ட ஷங்கரா? என்னடா இது கொடுமை!!! இனிமேல் கண்ணகி டிஸ்கோ பார் என்று கூட வரும் போல் இருக்கிறது. மதிப்பீடுகள் சீரழிந்து இந்த நிலைக்கு வந்து விட்டது. இந்த வைரமுத்து நாமாவளி ஆரம்பித்தது எப்போது என்றால், அவர் பிறந்த நாளுக்கு விழா வைத்து தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் இயங்கிக் கொண்டிருந்த கலாப்ரியா போன்ற கவிஞர்களுக்குப் பரிசு கொடுத்ததை இவர்கள் வாங்கிக் கொண்ட போதே ஆரம்பித்து விட்டது. பரிசு என்ன தெரியுமா? அஞ்சாயிரம் ரூபாயோ பத்தாயிரம் ரூபாயோ. அப்போது அதை எதிர்த்து எழுதியபோது கலாப்ரியா என் மீது கோபித்துக் கொண்டார். அவருக்கு வைரமுத்து கொடுத்த பரிசு ரூபாயை விட கலாப்ரியா IOB வங்கி அதிகாரியாக வாங்கிய சம்பளம் அதிகம். நான் நண்பர்களிடம் அடிக்கடி சொல்வதுண்டு, நோ சொல்லிப் பழகுங்கள் என்று. மேலும், அதிகாரம் தான் உச்சக்கட்ட போதை. மதுவெல்லாம் ஒன்றுமே இல்லை. வைரமுத்து ஒரு அதிகார மையம். அந்த அதிகாரத்துக்கு மயங்கி விட்டார்கள் சிறுபத்திரிகை எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும். ஜெயமோகனிடம் நான் வியக்கும் விஷயம் என்னவென்றால், அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் பிஜேபியினர் அவரைக் கொண்டாடினாலும் அவர் காங்கிரஸ்தான் இந்தியாவுக்கு இப்போது தீர்வு என்கிறார். இந்துத்துவ அதிகாரத்துடனும் சரி, திராவிட அதிகாரத்துடனும் சரி அவர் கை கோர்க்க முரட்டுத்தனமாக மறுக்கிறார். சுந்தர ராமசாமியின் legacyயை நான் இன்று ஜெயமோகனிடம்தான் பார்க்கிறேன். எங்களுக்குள் ஆயிரம் கருத்து மோதல்கள் இருப்பினும் ஜெயமோகனுக்கு இதற்காக என் சலூட்.

https://www.jeyamohan.in/134758/