முன்னோடிகள் – 15

To You Through Me என்ற தலைப்பு அழகாக இருந்தாலும் ஆங்கிலத்தில் இருப்பதால், புத்தகங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது பிடிக்காது என்பதால் இந்தத் தலைப்பை முன்னோடிகள் என்று மாற்றி விடலாம் என்று பார்க்கிறேன்.  இலக்கிய முன்னோடிகள் என்று ஜெயமோகன் ஒரு பெரிய புத்தகம் (உண்மையில் இங்கே ‘பெரிய’ தேவையில்லை, பழக்க தோஷமாக வந்து விட்டது, மன்னிக்க) எழுதியிருக்கிறார் என்றாலும் அதில் உள்ள முதல் பாதியை அடித்து விட்டு முன்னோடிகள் என்று வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன்.  இன்று நான் இந்தப் பக்கமே வந்திருக்கக் கூடாது.  நேற்றிலிருந்து ஒரு புத்தகம்.  600 பக்கம்.  அதை முடித்தால்தான் குமுதம் கட்டுரையைத் தொடங்க முடியும்.  குமுதம் ஜனரஞ்சகப் பத்திரிகை என்பதால் அதற்கு நான் போகிற போக்கில் எல்லாம் எழுதுவதில்லை.  இப்போது முன்பு போல் இல்லை.  சாண்டில்யனை பதினைந்திலிருந்து இருபது லட்சம் பேர் வரை படித்தார்கள்.  அதாவது, ஒரு வீட்டுக்கு ஒரு குமுதம் என்றாலும் அதை மூன்று பேர் படிப்பார்கள் என்ற கணக்கில் சொல்கிறேன்.  இப்போது படிப்பவர்கள் கம்மி.  இருபத்தைந்து வயதுக்குக் கம்மியானவர்கள் காகிதத்தில் படிப்பதில்லை.  எதுவுமே படிக்காதவர்களே அதிகம்.  ஆனால் படிப்பவர்கள் முன்பு போல் இல்லை.  பெரும்பாலானவர்கள் மேலோட்டமாக எழுதப்படுவதை வாசிப்பதில்லை.  அதைத்தான் விகடனில் தவறாகப் புரிந்து கொண்டு ஞானி நடத்திய நிகழ், பரிமாணம் பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளைப் போல் வெளியிட்டு மூடு விழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இப்போதைய வாசிப்புப் பழக்கத்தைச் சொல்கிறேன்.  அவ்வளவுதான்.  ஜனரஞ்சக வாசகர்கள் நிகழ், பரிமாணம் போல் எதிர்பார்க்கவில்லை.  உயிர்மை மாதிரி எதிர்பார்க்கிறார்கள்.  அதைத்தான் நான் குமுதத்தில் எழுதுகிறேன்.  இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்றால், குமுதம் மூலமாக எனக்கு வரும் கடிதங்கள்.  கடிதம் என்பது, இருபது பேர் எனக்கு எழுத நினைத்தால் ஒருவர் எழுதுவார். அப்படித்தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  அதனால்தான் குமுதத்துக்கு எழுதுவதை அத்தனை தீவிரமாக எடுத்துக் கொள்கிறேன்.

இப்படி புதன் என்பது குமுதம் நாள் என்றாலும் இங்கே வந்து தோண்டிக் கொண்டிருப்பதன் காரணம் முகநூல்.  அதில் எனக்குத் தெரியும் ஒரே ஆள், அராத்து.  மற்ற பெரும்பான்மையோரை ப்ளாக் செய்து விட்டேன்.  தெரியும் சிலருக்கும் லைக் போடுவதில்லை.  அதனால் அவர்களும் மறைந்து விடுவார்கள்.  தெரிவதில்லை.  ஆக, பார்க்கக் கிடைக்கும் ஒரே பெயர் அராத்துவின் முகநூல் குறிப்பால் இந்த முக்கிய நாளில் இங்கே தோண்டிக் கொண்டிருக்கிறேன்.

பொதுவாக குரு சிஷ்ய உறவில் சிஷ்யர்களே முந்துவார்கள்.  அதற்குத்தான் மார்க்ஸ் அழகான வார்த்தை சொல்லியிருக்கிறார்.  நான் ஹெகலை விட உயரமானவன்.  ஏனென்றால், நான் ஹெகலின் தோள் மீது நின்று கொண்டிருக்கிறேன்.   இந்த உயரப் பிரச்சினையின் காரணமாக பாதிக்கப்படும் ஒரே நபர், குருதான்.  பொருமிப் பொருமியே இறந்து விடுவார்கள்.  அப்படி இறந்து போன ஒரு மாபெரும் எழுத்தாளரை எனக்குத் தெரியும்.  பெயரைச் சொன்னால் என்னைக் கொன்று விடுவார்கள்.  சிஷ்யன் என்ன செய்வான் பாவம்?  அவன் பாட்டுக்கு எழுதினான்.  குருவிடம் கற்றதை எழுதினான்.  குரு பாய்ந்தது எட்டு அடி.  சிஷ்யன் பாய்ந்தது பதினாறு அடி என்றால் குரு பொறுத்துக் கொண்டிருப்பார்.  சிஷ்யன் ராக்ஷஸன்.  பாய்ந்தது பதினாறாயிரம் அடி.  அதிர்ச்சி தாங்காமல் மன உளைச்சல்.  வயோதிகம் வேறு.  அடித்து விட்டது.  விதி.  யாரையும் ஒன்றும் சொல்ல முடியாது. 

இதெல்லாம் சங்கீத உலகில் சர்வ சகஜம்.  ஆனால் நானோ கவலையே பட மாட்டேன்.  சாரு, உளறாதீங்க என்பாள் சிஷ்யை.  சிரித்துக் கொள்வேன்.  ஓ, பெண் என்பதால் விட்டுக் கொடுக்கிறேன் என்பீர்களா?  ஆண் தடிமாடு அப்படிச் சொன்னாலும் சிரித்துக் கொள்வேன்.  ஏன் தெரியுமா?  தஸ்தயேவ்ஸ்கி யார்?  தஸ்தயேவ்ஸ்கியோடு இலக்கியம் முடிகிறது என்று நம்பும் பல்லாயிரக்கணக்கான பேர் இன்றும் உண்டு.  டால்ஸ்டாய் யார்?  காந்தி காந்தியாக மாறக் காரணமாக இருந்த ஞானி.  இந்த ரெண்டு பேரையுமே தூக்கி விசிறி அடித்த ஆள் வ்ளதிமீர் நபக்கோவ்.  தஸ்தயேவ்ஸ்கி ஒரு துப்பறியும் எழுத்தாளர்.  தல்ஸ்தோய் ஒரு முதிய கதைசொல்லி.  எழுத்தாளரே இல்லை.  இப்படி விசிறி அடித்தார் நபக்கோவ்.  இவன் யாரடா நம் கடவுள்களையே தூக்கி அடிப்பவன் நபக்கோவ் என்று படித்துப் பார்த்தேன்.  ரொம்பப் பெரிய புத்திசாலி.  மேதை.  ஆனால் படைப்பாளி என்று பார்த்தால், உலகமே கொண்டாடும் அவனுடைய லொலிதாவை என்னுடைய ஒரே ஒரு சிறுகதை காலி பண்ணி விட்டது.  லொலிதாவின் நாயகன் குற்ற உணர்வால் பீடிக்கப்பட்டவன்.  உன்னத சங்கீகத்தின் நாயகன் அந்த realmக்குள்ளேயே வரவில்லை.  அந்தக் கதையே அந்த லண்டன் கூமுட்டைக்குப் புரியாமல் அதை ஒரு தினத்தந்தி செய்தியைப் போல் வாசித்து கதை எழுதியவனை பீடஃபைல் பீடஃபைல் என்று கத்திக் கொண்டிருக்கிறது, 21 ஆண்டுகளாக.  அப்படிக் கத்திக் கத்தியே அதன் உயிர் பிரிந்து விடும் போல் இருக்கிறது.  கதை எழுதியவனை பீடஃபைல் குற்றச்சாட்டில் உள்ளே தள்ளினால்தான் அந்தப் பரிதாபகரமான உயிர் காப்பாற்றப்படும்.  அதற்கு அடியேன் என்ன செய்ய முடியும்?  அப்படிப் பார்த்தால் ஷேக்ஸ்பியரைத்தான் முதலில் உள்ளே தள்ள வேண்டும்.  ஏனென்றால், ஜூலியட்டின் வயது 13. கதை நடக்கும் காலம் பதிமூன்றாம் நூற்றாண்டு.  எழுதப்பட்டது பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி.  என் கதை நடப்பது இயேசுவின் காலம்.  பிறகு அது நகர்ந்து 1970க்கு வருகிறது.  இதெல்லாம் அந்தக் கூமுட்டைக்குப் புரியாது.  போகட்டும். 

அடுத்த பின்நவீனத்துவ இலக்கியக் கடவுள் உம்பர்த்தோ எக்கோ.  பெரிய அறிஞர்.  சந்தேகமே இல்லை.  அறிவுத் துறையில் என் ஆசான்.  ஆனால் படைப்பாளியாக என் நிழலைக் கூடத் தொட முடியாது.  இதையெல்லாம் படித்தால் என்னை எழுத்தாளனாக ஏற்காத பொடிசுகளுக்குச் சிரிப்பு சிரிப்பாக வரும் என்பதும் எனக்குத் தெரியும்.  வடிவேலு சில படங்களில் குஸ்தி வீரனாக வருவார் இல்லையா, அந்தக் காட்சிகள்தான் இப்படிப்பட்ட என்னுடைய சுய பிரதாபங்களைப் பார்த்து அந்தப் பொடிசுகளுக்கு ஞாபகம் வரும்.  நான் காமெடி பண்ணுவதாகத் தோன்றும்.  அப்படியும் அந்தப் பொடிசுகள்தான் பரிதாபம்.  க.நா.சு.வின் வாழ்விலிருந்தே ஒரு உதாரணம் தருகிறேன்.  அவர் ஆல்பர் கம்யூவின் இல்லத்தில் ஒன்பது மாதம் தங்கியிருக்கிறார்.  பாரிஸில்.  அதற்கான ஆதாரங்கள் க.நா.சு.வின் எழுத்திலேயே உள்ளன.  ஆனால் இங்கே உள்ள அசடுகள் அத்தனையும் க.நா.சு. டூப் விடுவதாக நம்பின.  வெங்கட் சாமிநாதன் என்னிடமே சொல்லியிருக்கிறார், க.நா.சு. சொல்வதெல்லாம் டூப்பு என்று.  அப்போது நான் க.நா.சு.வைப் படிக்கவில்லை.  படித்தால்தான் தெரிகிறது, வெ.சா.தான் அசடு என்று.  கம்யூ அல்ஜீரியன்.  வாழ்நாள் பூராவும் முஸ்லீம்களின் நலனைப் பற்றியே யோசித்தவர், எழுதியவர்.  (ஆனாலும் முஸ்லீம்கள் அவரை வெறுத்தார்கள். ஏனென்றால், அவர் அரசியல்ரீதியாக சரியாக சிந்திக்கவில்லை.  அல்ஜீரியா தனி நாடாக ஆகக் கூடாது, ஃப்ரான்ஸின் பகுதியாகவே இருக்க வேண்டும் என்று எழுதினார்.  அதனாலேயே அல்ஜீரியர்கள் கம்யூவை துரோகியாகப் பார்த்தார்கள், வெறுத்தார்கள்.  ஆனால் அல்ஜீரியா பற்றியும், முஸ்லீம்களைப் பற்றியும் எதுவுமே தெரியாத சார்த்தர் – ஒரு அரிஸ்டோக்ரட்டாக வாழ்ந்த சார்த்தர் அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்ததால் அல்ஜீரியர்களுக்கு ஹீரோவாக விளங்கினார்!)  சரி, விஷயத்துக்கு வருவோம்.  கம்யூ க.நா.சு.விடம் “நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களே, இந்தியாவில் முஸ்லீம்கள் அதிகம் ஆயிற்றே, அவர்களின் வாழ்க்கை நிலை எப்படி?” என்று கேட்கிறார்.  க.நா.சு.வுக்கு பதில் தெரியவில்லை.  ஆக, க.நா.சு. சொல்வதை நம்ப வேண்டுமானால் உங்களுக்குப் பாரிஸ் தெரிந்திருக்க வேண்டும், கம்யூ தெரிந்திருக்க வேண்டும்.  எதுவுமே தெரியாத கும்பகோணத்து அய்யராகவே தில்லியில் வாழ்ந்து கொண்டிருந்தால் க.நா.சு. பேசுவதெல்லாம் டூப்பாகத்தான் தெரியும்.  அதைப் போலவேதான் நான் சொல்வதும் பேசுவதும் எழுதுவதும் பல பொடிசுகளுக்கு டூப்பாகத் தெரிகிறது.  இன்றைய ஆங்கிலக் கவிகளில் குறிப்பிடத் தக்கவரான விவேக் நாராயணன் என் எழுத்தை இன்றைய நவ எழுத்தாளர்களின் வரிசையில் வைக்கிறார்.  கரீபியன் ரெவ்யூவில் எழுதும் வாணி கபில்தேவ் (ட்ரினிடாடைச் சேர்ந்த கவிஞர்) என் எழுத்து நபக்கோவ் எழுத்து போல் இருப்பதாகச் சொல்கிறார்.  எழுத்தாளர்களின் எழுத்தாளராகக் கருதப்படும் Allan Sealy என்னைப் பற்றி எழுதியதை மார்ஜினல் மேன் அட்டையிலேயே போட்டிருக்கிறேன்.  இப்படியெல்லாம் ஒவ்வொரு முறையும் என் பயடேட்டாவையே கொடுத்துத் தொலைக்க வேண்டியிருப்பது என் விதி.     

ஆக, தஸ்தயேவ்ஸ்கி, தோல்ஸ்தோய் போன்றவர்களையே காலி பண்ணுகிற நபக்கோவ், பின்நவீனத்துவ சிகரம் உம்பர்த்தோ எக்கோ ஆகியவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளுகின்ற நான் என்னிலிருந்து வளர்ந்த அராத்துவைப் பார்த்தா மருளப் போகிறேன்?  இதைக் கூட ஏன் சொல்கிறேன் என்றால், இங்கே உள்ளவர்கள் ஏன் தன் மாணாக்கர்களைப் பார்த்து மருள்கிறார்கள் என்ற ஆதங்கத்தினால்தான்.  என்னைப் பற்றி எனக்கே தெரிந்ததால்தான் என்னுடைய அரூ பேட்டியைப் படித்தவர்களை விட என்னைப் பற்றி அராத்து எழுதியதைப் படித்தவர்கள் மூன்று மடங்கு அதிகம் என்று அறிகிற போது அதை ஒரு புன்சிரிப்போடு என்னால் கடந்து செல்ல முடிகிறது. 

சரி, இப்போது விஷயத்துக்கு வருகிறேன்.  அராத்துவின் முகநூல் பதிவில் க.நா.சு.வின் அசுரகணம் குப்பை, குப்பையிலும் குப்பை என்று நிறுவியிருக்கிறார்.  ஆனால் நானோ என்னுடைய கிட்டத்தட்ட நான்கு மணி நேர உரையில் அசுரகணம் க.நா.சு.வின் நாவல்களிலேயே ஆகச் சிறந்தது என்று சொல்லியிருக்கிறேன்.  அராத்து நிறுவியிருக்கிறார்.  நான் சொல்லியிருக்கிறேன்.  நான் க.நா.சு. மாதிரி.  என்னால் எதையுமே நிறுவ முடியாது.  சொல்ல மட்டுமே முடியும்.  ஆனால், ஜெயமோகன் க.நா.சு. ஒரு படைப்பாளி அல்ல; அதையும் விட மேலான மையம் என்று நிறுவியிருக்கிறார்.  இலக்கிய மையம்.  என்னைப் பொறுத்தவரை அப்படி மையம் என்று சொல்வதே ஒரு படைப்பாளியைக் குழி தோண்டிப் புதைப்பது மாதிரிதான்.  சுந்தர ராமசாமியும் க.நா.சு.வின் புனைகதைகளை, நாவல்களை நிராகரிக்கிறார்.  அவருமே க.நா.சு.வை ஒரு இலக்கிய மையமாகவே கட்டமைக்கிறார்.  இந்த மையத்துக்கெல்லாம் இருபத்தைந்து ஆண்டுகள்தான் ஆயுள்.  படைப்பாளி மட்டுமே காலத்தை வென்றவன்.  க.நா.சு.வை இலக்கிய உலகமே விமர்சகராக மட்டுமே பார்க்கிறது.  விதிவிலக்காக அவரைப் படைப்பாளியாகக் காண்பது, கி.அ. சச்சிதானந்தம், சி. மோகன், தஞ்சை ப்ரகாஷ், சாரு நிவேதிதா.  இந்த நான்கு பேரின் குரலும் பலஹீனமானவை.  சு.ரா.வின் குரலும், ஜெயமோகனின் குரலும்தான் பலமானவை.  இந்த இருவரையும் சாராத இளைஞர் குழுவில் என் எழுத்தை வாசிக்கின்றவர்களுக்கு அராத்துவின் பார்வை முக்கியமானதாகப் படும்.  ஏனென்றால், ஒருவரை வீழ்த்துவதே மனித மனதுக்கு உவப்பானது.  அராத்துவின் வயதில் எனக்கு தி.ஜா.வைப் பிடிக்கவில்லை.  நிராகரித்தேன்.  புதுமைப்பித்தனைப் பிடிக்கவில்லை.  நிராகரித்தேன்.  இப்போது இருவரையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறேன்.  புதுமைப்பித்தனை நிராகரித்ததற்குக் காரணம், அவர் எழுத்தில் காணும் சாதிய மனோபாவம்.  அப்படிப் பார்த்தால் உலக இலக்கியம் படைத்திருக்கும் திருக்குறளையே நிராகரிக்க வேண்டியிருக்கும், பெண்ணடிமைத்தனத்தைப் போற்றியிருப்பதால். (தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.  இப்படி ஒன்று இரண்டு அல்ல; ஏராளமாக உள்ளது).  காலப்போக்கில்தான் இலக்கியப் படைப்பாளிகளை அவர்களின் காலத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்ற தெளிவு எனக்கு ஏற்பட்டது.  ஷேக்ஸ்பியரிலேயே கறுப்பின மக்கள் மீதான இனத் துவேஷம் உண்டு என்ற விமர்சனங்கள் உண்டு.  இப்படிப்பட்ட கோட்பாட்டு ரீதியான விமர்சனங்களில் எனக்கு நம்பிக்கை போய் விட்டது.  இப்படிப்பட்ட வறட்டுத்தனம் இலக்கியத்துக்கே எதிரானது என்ற இடத்தை நான் வந்தடைந்து விட்டேன்.

ஆனால் அராத்து நிராகரிப்பது அப்படி அல்ல.  பலவிதமான இலக்கிய நியாயங்களைச் சொல்லி நிறுவியே காலி பண்ணுகிறார்.  ஏற்கனவே அவரால் காலி பண்ணப்பட்டவர்களின் கல்லறையில் எக்கச்சக்கமான கல்லறைகள் உள்ளன.   முதலில் இருப்பது எஸ். சம்பத்.  இடைவெளி உலகின் மிகச் சிறந்த நாவல்.  சி.மோகன் சொன்னார்.  நானும் சொன்னேன்.  க.நா.சு. எழுதிய நாவல்களிலேயே ஆகச் சிறந்தது அசுரகணம்.  சி.மோகன் சொன்னார்.  நானும் சொன்னேன்.  இரண்டுமே குப்பை என்று நிறுவியிருக்கிறார் அராத்து.  க.நா.சு.வை கிட்டத்தட்ட 80 ஆண்டுக் காலமாக படைப்பாளியே இல்லை என்றும் அவர் ஒரு விமர்சகர் என்றும் ஒட்டு மொத்தத் தமிழ் இலக்கிய உலகமே சொல்லி வருகிறது.  அதை மாற்ற முயற்சிக்கிறேன் நான்.  இப்போது அராத்து வந்து அசுர கணம் குப்பையிலும் குப்பை என்கிறார்.  தமிழில் மட்டுமே நம் முன்னோர்களைக் குழி தோண்டிப் புதைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.  ஆனால் இதுவும் நல்லதுதான்.  ஏனென்றால், தமிழ் அளவுக்கு ஆங்கிலம் தெரிந்த க.நா.சு. எதற்காகத் தமிழ் என்ற ரத்தக் காட்டேரியை மணந்து கொள்ளச் சொன்னது?  மணந்தால் இப்படித்தான் சாக வேண்டும். (தமிழ் என்கிற போது நான் தமிழ் மொழியைச் சொல்லவில்லை.  தமிழ்ச் சூழலை சொல்கிறேன்.  தமிழ் என்ன பண்ணியது, அதைப் பேசுபவர்கள் செய்யும் பாவத்துக்கு?)   தஸ்தயேவ்ஸ்கி, தோல்ஸ்தோயை நபக்கோவ் காலி பண்ணவில்லையா என்று கேட்கக் கூடாது.  அவர்கள் இருவரும் உலக இலக்கியத்தின் முடிசூடா மன்னர்கள்.  ரஷ்யாவின் அடையாளங்கள்.  இங்கே நம் மகாத்மா காந்தி மாதிரி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  நபக்கோவ் அங்கே புனிதங்களை உடைத்தார்.  இங்கே நாம் ரத்தக் காட்டேரி ரத்தம் உறிஞ்சித் துப்பிய சவத்தின் எச்சத்தைத் தின்று கொண்டிருக்கிறோம். 

க.நா.சு. பற்றிய என் உரையின் லிங்க் வேண்டுவோர் எனக்கு எழுதுங்கள். 

charu.nivedita.india@gmail.com

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai