முன்னோடிகள் – 16

மூன்று தினங்களாக முழு மூச்சாக எடிட்டிங் வேலையில் மூழ்கிக் கிடந்தேன்.  அதை முடித்தால்தான் பிற வேலைகளை கவனிக்க முடியும்.  இன்னும் ஒரு பத்து நாள் அதில் போகும்.  இன்று காலை ராகவனோடு நீண்ட நேரம் பேச முடிந்தது.  சி.சு. செல்லப்பா பற்றிய என் உரையைக் கேட்டாராம்.  மிகவும் சிலாகித்துச் சொன்னார்.  ராகவனிடம் ஒரு திறமை உண்டு.  எவ்வளவு சின்ன தப்பாக இருந்தாலும் கண்டு பிடித்து விடுவார்.  அவர் கண்ணுக்கோ காதுக்கோ அது மாட்டி விடும்.  ஜீவனாம்சம் நாவலில் சாவித்திரி தன் புக்காம் போகிறாள் என்று சொல்லி விட்டேன்.  அந்தத் தவறை அந்த நாவலைப் படித்திருக்காவிட்டாலும் கூட பிராமண நண்பர்கள் கவனித்திருக்கலாமே?  அவள் தன் பெற்றோர் வீட்டுக்குப் போவது எப்படி புக்காம் ஆகும்?  புகுந்த அகம்தான் பேச்சு வழக்கில் புக்காம்.  பொறந்தாம் என்று சொல்லியிருக்க வேண்டும்.  அதுவும் பேச்சு வழக்கில் சொல்வதைத் தமிழில் எழுதிக் காட்ட முடியாது.  பொறந்தா(ங்) என்று கடைசியில் ம் என்று உதடுகளை மூடக் கூடாது.  பிறந்த அகம் பொறந்தா(ங்).  இனிமேல் அந்த உரையில் திருத்த முடியாது.  யாருமே சுட்டிக் காட்டவில்லை என்பது ஆச்சரியம். 

வாஷிங்டனில் வசிக்கும் என் நண்பர் வினோத் ஒரு விஷயம் சொன்னார்.  ஞாயிற்றுக் கிழமை இந்திய நேரம் காலை ஆறு மணி அங்கே சனி மாலையாக இருக்கும்.  சனிக்கிழமை மாலையில்தான் அங்கே நண்பர்கள் கூடுவார்கள்.  குடும்பச் சந்திப்புகள் நிகழும் நேரம்.  அதனால் அமெரிக்க வாசகர்களை நோக்கி அமைக்கப்பட்ட அந்த நேரம் உண்மையில் அவர்களால் பயன்படுத்த முடியாத நேரம்.  ஆக, இப்போதைய மாற்றப்பட்ட நேரம் அவர்களுக்கு சனிக்கிழமை காலை எட்டரை, பத்து என்பதாக இருக்கும்.  இது பரவாயில்லைதானே?  இந்தியாவிலும் யாரும் அதிகாலையில் எழுந்து ஆறு மணிக்கு வந்து உட்கார வேண்டிய சிரமம் இல்லாமல் சனிக்கிழமை முன்னிரவு எட்டரைக்கு அமர்ந்தால் இரவு பனிரண்டு பனிரண்டரை வரை கேட்கலாம்.  இது பற்றி ஒருவர் கூட அபிப்பிராயம் எழுதவில்லை.  யாரும் படிக்கவில்லையா?  ஒரு நண்பர், என்ன நேரத்தை மாற்றி விட்டீர்களா என்று ஆச்சரியப்பட்டார்.  ஆச்சரியம்தான். 

க.நா.சு. பற்றிய என் உரை கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நீண்டு விட்டதால் ஒருசில வாசகர்கள் தங்கள் கேள்விகளை அஞ்சல் செய்திருந்தார்கள். 

இன்றய கூட்டத்தில் ஒருவர் அரபி இசை கேட்க முடியவில்லை என்று சொன்னது எனக்கு ஆச்சரியமாக  இருந்ததது. உங்கள் கலகம் காதல் இசை என்ற புத்தகத்தை இப்போதுதான் படித்து முடித்தேன். இப்போது விக்தர் ஹாராவில் இருந்து ஷாப் மாமி வரை கேட்டு வருகிறேன்.  என்  கேள்வி உலக  இசை  மீதான உங்கள் ஆர்வம் உலக  நடனங்கள்  மேலும் உள்ளதா?

2) உங்கள் “ரெண்டாம் ஆட்டம்” நாடகத் தொகுப்பை முன்வைத்து எனது கேள்வி.1993-ல் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து படித்த  போது மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். புதுவகை கற்பனைகள், கலைவடிவம் இவையெல்லாம் எதிர்காலத்தில் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பு உள்ளதா?

நன்றி 

கௌதம், 

கோவை.

ஆறு தினங்கள் முன்பு வந்த கடிதத்துக்கு இப்பொதுதான் பதில் எழுத முடிந்தது. நடனம் குறித்து ஒரு புத்தகமாக வரும் அளவுக்கு எழுதியிருக்கிறேன்.  ஆனால் எல்லாமே ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.  காயத்ரி எனக்கென்று ஒரு ரீடர் கொண்டு வர வேண்டும் என்று சொன்னாள்.  அதற்கான ஏற்பாடுகளிலும் இருக்கிறாள்.  அப்படி வரும்போது ஒவ்வொரு தலைப்பாக வைக்கலாம்.  அதில் நடனம் என்றும் ஒரு பகுதி வரும்.  ஆனால் நடனம் பற்றி நான் எழுதியவற்றைத் தனியாகத் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தால்தான் நலம்.  உதய் ஷங்கரின் கல்பனாவிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரை அது.

காலம் வெகுவேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.  இன்றைய தினம் ரெண்டாம் ஆட்டம் நாடகத்தைப் போட்டால் அத்தனை எதிர்ப்பு இருக்காது.  எல்லோரும் பாராட்டுவார்கள்.

***

அப்பா,
நகுலன் உரை ஏற்படுத்திய அதிர்விலிருந்தே மீள முடியவில்லை. இப்போது க.நா.சு. இனிமேல் இரவு பகலாக அடுத்த மாத சந்திப்புக்கு கோபி கிருஷ்ணனின் படைப்புகளைப் படிக்கப் போகிறேன்.
உண்மையில் உங்கள் உரையின் மூலமாக இந்தப் படைப்பாளிகளை மிக நெருக்கமாக உணர்கிறேன். குறிப்பாக நகுலனை. கோபி கிருஷ்ணன் என்னுடைய ஆசிரியர்களில் ஒருவராக நினைத்துக் கொண்டிருக்கிறேன். அடுத்தச் சந்திப்புக்குக் காத்துக்கொண்டிருக்கிறேன். நிறைய கேள்விகள் கேட்பேன்.

இன்றைய உரையில் க.நா.சுவின் ‘உயில்’ கவிதையை நீங்கள் வாசித்துக் கேட்ட அந்தத் தருணம் மிகவும் அற்புதமாக இருந்தது.

வளன்

***

நான் குமுதத்தில் எழுதி வரும் சொல் தீண்டிப் பழகு கட்டுரைத் தொடரை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.  அவை மிக முக்கியமான கட்டுரைகள்.  மாதிரிக்கு சென்ற வாரம் வந்த கட்டுரையைத் தருகிறேன். 

க.நா.சுப்ரமணியம் எழுதிய இலக்கியச் சாதனையாளர்கள் என்ற சிறிய நூலை சமீபத்தில் படித்துக் கொண்டிருந்தேன்.  முதல் கட்டுரையே இந்த விஷயம்தான்.  சம்பவம் நடந்த ஆண்டு 1941. க.நா.சு. ராஜாஜியைச் சந்திக்கப் போகிறார். அப்போது கேரளம், கர்னாடகம், ஆந்திரா எல்லாம் மதறாஸ் ராஜதானி என்று ஒரே மாநிலமாக இருந்தது. கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.  அதற்கு முன்னால் ராஜாஜி இரண்டரை ஆண்டுகள் ராஜதானியின் முதல் மந்திரியாக இருந்தார்.

ராஜாஜி வீட்டின் காவல்காரரிடம் ஏதோ சொல்லித் தப்பித்து உள்ளே போய் விட்டார் க.நா.சு.  ஏதோ ஒரு இலக்கிய விழாவுக்காக ராஜாஜியை அழைக்க வேண்டும். வீட்டு வாசலில் ராஜாஜி ஹிண்டு கே. சீனிவாசனிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.  அப்போது மகாத்மா காந்தி மதறாஸ் வர இருந்த சமயம்.  உள்ளே யாரோ வருவதைப் பார்த்து “யார் அது, ஐ அம் வெரி பிசி” என்று ராஜாஜி சொல்ல க.நா.சு., “ஐ அம் கே.என். சுப்ரமணியம்” என்கிறார்.  உடனே ராஜாஜி நக்கலாக, “ஓ, த ஃபேமஸ் ரைட்டர்?” என்று கேட்க, க.நா.சு.வும் விட்டுக் கொடுக்காமல் “நாட் சோ ஃபேமஸ் அஸ் சம் பீப்பிள் அன்ஜஸ்ட்லி ஆர்” என்கிறார். உடனே ஹிண்டு சீனிவாசன் பெரிதாகச் சிரிக்க ராஜாஜி குரலில் கடுமையை வரவழைத்துக் கொண்டு என்ன விஷயம் என்று கேட்டதாகச் சொல்கிறார் க.நா.சு.  பிறகு அந்த இலக்கியக் கூட்டத்துக்கும் ராஜாஜி வந்தாராம்.  அப்போதைய காலம் அப்படி இருந்திருக்கிறது. இப்போதெல்லாம் முதல் மந்திரியாக இருந்த ஒருவரை ஒரு எழுத்தாளன் இப்படிச் சந்தித்து விட முடியுமா, முதல்வருக்குத்தான் எழுத்தாளனின் பெயர் தெரிந்திருக்குமா என்று யோசிக்கவே முடியவில்லை. 

ராஜாஜி சில பல கதைகள் எழுதியிருந்தாலும் பொதுவாகவே இலக்கிவாதிகள் மீது அவர் நட்புடன் இருந்ததில்லை என்று தோன்றுகிறது.  பாரதியைப் பற்றி ராஜாஜி காந்தியிடம் ஏதோ சொல்லப் போய் தானே காந்தி, “இவர் உங்கள் மொழியின் சொத்து, இவரைப் பாதுகாத்துப் போஷியுங்கள்” என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்? ராஜாஜி பாரதியை உரிய முறையில் அறிமுகப்படுத்தியிருந்தால் காந்தி அப்படிச் சொல்லியிருப்பாரா?  வாஸ்தவத்தில் காந்தி சொன்ன வார்த்தையை ராஜாஜி காந்தியிடம் சொல்லியிருக்க வேண்டும்.  அங்கே அது உல்ட்டாவாக நடந்து விட்டது.  இதற்கு முன்பும் கூட ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.  புதுமைப்பித்தன் சாப விமோசனம் என்று ஒரு கதை எழுதியிருந்தார்.  அந்தக் கதை, கல்லாக இருந்த அகலிகை ராமனின் ஸ்பரிசம் பட்டு உயிர் பெற்றவள், ராமன் தன் மனைவியின் கற்பை நிரூபிக்க அவளைத் தீக்குளிக்கச் செய்தான் என்பதைக் கேள்வியுற்று மீண்டும் கல்லாகிறாள். உடனே ராஜாஜி வெகுண்டு எழுந்து வால்மீகி ஒரு மகரிஷி என்றும் அவர் மீது கை வைக்க புதுமைப்பித்தன் போன்ற நபர்களுக்கெல்லாம் இடம் கிடையாது என்றும் எழுதினார். 

என்னிடம் பலரும் கேட்கும் ஒரு கேள்வி, எழுத்தாளர் என்பவர் சமூகத்துக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்க வேண்டாமா?  இப்படிக் கேட்பவர்கள் பெரும்பாலும் இலக்கிய வாசிப்பு அதிகம் இல்லாதவர்களாகவே இருப்பார்கள்.  இலக்கியம் வாசித்திருந்தால் இந்தக் கேள்வி வராது.  பொதுவாகவே தமிழ்நாட்டில் எழுத்தாளர்களை மதிக்கும் மரபு இருந்ததில்லை. முதலில் நாம் எழுத்தாளருக்கும் போதகருக்குமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். யாரும் குடிக்கக் கூடாது என்ற போதனையை முன்வைக்கும் ஒரு நபர் ரகசியமாகக் குடிக்கிறார் என்றால் அது கண்டிக்கத்தக்கது.  ஆனால் எழுத்தாளர் என்பவர் அப்படிப்பட்ட போதகர் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.  மகாப் பெரியவர் சந்திரசேகரேந்திரரிடம் ஒருவர் “என் குருவிடம் ஒழுக்கம் இல்லை; நான் குருவை மாற்றிக் கொள்ளவா?” என்று கேட்டபோது அவர் சொன்னார்: “அப்படிச் செய்தால் உனக்கு வாழ்நாள் முழுவதும் குருவே கிடைக்க மாட்டார். வீட்டில் உள்ள துடைப்பம் அழுக்காகத்தான் இருக்கும்.  ஆனால் அதனால் தரை சுத்தமாகிறதா இல்லையா பார்.”  இதே பதில்தான் எழுத்தாளர் பற்றிய கேள்விக்கும் சொல்ல முடியும்.

தஸ்தயேவ்ஸ்கி ஒரு சூதாடியாக இருந்தார்.  அதனால் அவரைப் பின்பற்றி நாம் சூதாட முடியுமா?  அல்லது, அவர் சூதாடினார் என்பதற்காக அவரது எழுத்துக்களை நிராகரிக்க முடியுமா?  வில்லியம் சரோயன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார்.  பெரும் சூதாடி.  தன் சொத்தையெல்லாம் சூதாடி சூதாடியே அழித்தார்.  அவர், சூதாடினால்தான் என்னால் எழுதவே முடிகிறது என்று கூறினார்.  வில்லியம் பர்ரோஸ் ஒரு ட்ரக் அடிக்ட்.  நோபல் பரிசு பெற்ற வில்லியம் ஃபாக்னர் ஒரு பெரும் குடிகாரர். 

என் வாழ்வில் நடந்த ஒன்றைக் கூறுகிறேன்.  நான் 22 வயதில் உபநிஷத்துக்களைக் கற்றுக் கொண்டேன். அவை என்ன சொல்கின்றன என்ற ஆராய்ச்சிக்குள் நான் இங்கே போகவில்லை.  ஒரே வாக்கியத்தில் சொன்னால், இந்தப் பிரபஞ்சமும் நாமும் ஒன்று என உணர்தல்தான் உபநிஷத்துக்களின் சாரம்.  ஆனால் இதை எனக்குக் கற்பித்த குருவுக்குக் காசுதான் கடவுள். எச்சல் கையால் காக்காய் ஓட்டாதவர். கஞ்சத்தனம் மட்டும் அல்ல; காசு சேர்த்து சேர்த்து தஞ்சாவூரில் வீடு வீடாக வாங்குவார். எல்லோரும் திட்டுவார்கள்.  ஆனால் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்.  ஏனென்றால், அவ்வளவு பிரமாதமான ஆசிரியர்.  அவரைப் போல் அத்தனை லகுவாகவும் அழகாகவும் கற்பிக்கின்ற ஆசிரியரை அரிதாகவே பார்த்திருக்கிறேன்.  அவர் கற்றுக் கொடுப்பதற்கும் அவர் வாழ்க்கைக்கும்தான் எப்பேர்ப்பட்ட வித்தியாசம்? அதனால் நமக்கு என்ன?  அவர் ஒரு மெஸஞ்சர்.  அவ்வளவுதான். எத்தனையோ பெயர் தெரியாத ஞானிகள் உபதேசித்த அந்த ஞானத்தை இத்தனை நூற்றாண்டுகளாக ஒருவர் பின் ஒருவராகத் தடம் பிடித்து நமக்குக் கொடுக்கின்ற ஒரு தூதர்.  என்னைப் போல் எத்தனையோ பேருக்கு அவர் கற்பித்திருக்கிறார்.  அவர் தந்த ஞானம்தான் ஒளி விளக்காக அமைந்து என் வாழ்நாள் முழுவதுமே வழி காட்டியிருக்கிறது.  என் எழுத்தை வாசிப்பவர்களையும் அது சென்றடைந்திருக்கிறது.  தஸ்தயேவ்ஸ்கி என்ற ஒரு சூதாடி எழுத்தாளனின் ”ஒரு அசிங்கமான சம்பவம்” என்ற ஒரே ஒரு கதை போதும், அடுத்த மனிதனின் சுதந்திரத்தில் குறுக்கிடாமல் வாழ்வது எப்படி என்பதைச் சொல்லிக் கொடுக்க.

எழுத்தாளனை இப்படித்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  அதே சமயம் ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கேயான ஒரு சத்தியத்தைக் கடைப்பிடித்துத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.  அந்த சத்தியம் உங்களுக்கும் எனக்கும் மாறுபட்டதாக இருக்கலாம்.  க.நா.சு.வின் வாழ்க்கையிலிருந்தே உதாரணம் தருகிறேன்.  க.நா.சு. தன் குடும்பத்தை கவனித்தது இல்லை.  கடும் செலவாளி.  தன் தந்தையிடமிருந்து பணம் வாங்கிப் பத்திரிகை நடத்தினார்.  குடும்பத்தின் சேமிப்பை தான் நடத்திய பத்திரிகைகளுக்காகவே அழித்தார். ஆனால் தன் வாழ்நாள் பூராவும் அவர் சமரசம் செய்து கொண்டதில்லை.  துக்ளக் பத்திரிகையில் அவர் ஒரு தொடர் எழுதிக் கொண்டிருந்தார்.  கடும் பரபரப்பை உண்டாக்கிய தொடர்.  சமகாலப் பத்திரிகைகள் எல்லாவற்றையும் பற்றிய அவருடைய விமர்சனம்தான் அது. ஒவ்வொரு பத்திரிகையும் அவர் மீது கோபம் கொண்டது.  45 வாரம் எழுதி விட்டார்.  ஒரு வாரம் அவர் எழுதிக் கொண்டிருந்த பத்திரிகை பற்றியே எழுதினார்.  தொடர் நிறுத்தப்பட்டது. 

இன்னொரு சம்பவம்.  1985-இல் நடந்த சம்பவம். க.நா.சு. அப்போது அந்தப் பத்திரிகையில் ஒரு தொடர் எழுதிக் கொண்டிருந்தார். 50 வாரங்கள் கடந்து விட்டன.  அந்தப் பத்திரிகை சார்ந்திருந்த ஒரு அரசியல் தலைவரின் 61-ஆவது பிறந்த நாள் ஒரு வாரத்தில் வர இருந்தது.  பத்திரிகையிலிருந்து தூது வந்தது.  தலைவரின் இலக்கியப் பங்களிப்பு பற்றி எழுதுங்கள்.  வாரம் 5000 ரூ. தருகிறோம்.  தூதுச் செய்தியை எடுத்துக் கொண்டு வந்தவர் க.நா.சு.வின் அத்யந்த நண்பர்.  க.நா.சு. எப்படி வாழ்ந்தார் என்று ஒரு எழுத்தாளர் சொல்கிறார்:  படித்துப் படித்து கண்கள் சரியாகத் தெரியவில்லை.  பூதக் கண்ணாடி கொண்டுதான் படிப்பார்.  மவுண்ட் ரோட்டில் காலில் செருப்பு கூட இல்லாமல், கிழிந்து போன சட்டைக் காலர் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக காலரை மேலே தூக்கி விட்டுக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க மவுண்ட் ரோடில் அமெரிக்க நூலகத்துக்கு நடந்தே சென்று கொண்டிருப்பார்.  அப்படி அவரைப் பலமுறை பார்த்திருக்கிறேன் என்று எழுதுகிறார் அந்த எழுத்தாளர். 

புதுமைப்பித்தனை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  தமிழ்ச் சிறுகதையின் மூலவர்களில் ஒருவர்.  வறுமையின் காரணமாக 42 வயதில் இறந்தவர்.  அவரை மரணப் படுக்கையில் கவனித்துக் கொண்டவர் தொ.மு.சி. ரகுநாதன்.  ரகுநாதன், புதுமைப்பித்தனின் உயிர் நண்பரான க.நா.சு.வுக்கு ஒரு கடிதம் (போஸ்ட் கார்ட்) எழுதுகிறார். அதில் இப்படி உள்ளது: ”புதுமைப்பித்தனின் நிலை கவலையாக இருக்கிறது.  மருந்து வாங்கக் கூட பணம் இல்லை.  கொஞ்சம் அனுப்பி வையுங்கள்.” இப்படி எழுதியிருந்தது பேனாவால் அடிக்கப்பட்டு, “புதுமைப்பித்தன் சற்று முன்னர் காலமானார்.” ஒரே போஸ்ட்கார்டில் இரண்டு செய்திகள்.  இதுதான் தமிழ் எழுத்தாளனின் நிலைமை.  ஆனாலும் ஒரு அரசியல் தலைவரின் இலக்கிய சாதனை பற்றி க.நா.சு.விடம் எழுதச் சொல்லி தூது வருகிறது.  அந்தத் தகுதியும் பீடமும்தான் இன்னமும் தமிழ் எழுத்தாளனிடம் மிச்சம் இருக்கிறது. 

சரி, கதையைக் கேளுங்கள்.  தூது வந்த நண்பரிடம் க.நா.சு. சொல்கிறார்.  ”அவரிடம் இலக்கியம் இல்லையேப்பா.” ”வாரம் 5000 ரூ. தருகிறார்கள்.”  “இதோ பார், எனக்கு 70 வயது ஆகிறது.  இதுவரை சத்தியம் தவறாமல் வாழ்ந்து விட்டேன்.  இப்போது இந்தப் பணத்துக்காக சத்தியம் தவறலாம் என்று நீ சொல்.  எழுதுகிறேன்.”  “ஐயோ, சொல்லச் சொன்னார்கள்.  சொல்லி விட்டேன்” என்று தலை தெறிக்க ஓடி விட்டார் தூது வந்த நண்பர்.  அந்த வாரத்திலிருந்து க.நா.சு.வின் தொடர் அந்தப் பத்திரிகையில் நின்று விட்டது. அதுதான் எழுத்தாளனின் தர்மம், எழுத்தாளனின் சத்தியம்.  அந்த சத்தியம்தான் என்னையும் இந்தக் கணம் வரை வழி நடத்துகிறது. 

***

என்னுடைய க.நா.சு. பற்றிய உரை தேவைப்படுகின்றவர்கள் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai