ஒரு சிறிய ஞாபகமூட்டல்

பல வாசக நண்பர்கள் க.நா.சு. பற்றிய என் உரையின் பதிவைக் கேட்டு எழுதி வருகின்றனர். ஒரு ஐம்பது பேர் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் 47 பேர் இதுவரை சாருஆன்லைனுக்கு சந்தா அல்லது நன்கொடை அளிக்காதவர்கள். ஒவ்வொருத்தருக்காக நான் வேலை மெனக்கெட்டு “கட்டணம் இல்லாமல் அனுப்புவதில்லை; இதுவரை கட்டணம் இல்லாமலேயே இருபது ஆண்டுகளாகப் பேசி வந்திருக்கிறேன். இனிமேல் கட்டணம் வாங்குவதாக முடிவு செய்திருக்கிறேன். கட்டணம் வாங்காமல் இருந்தால் உரையின் பதிவை நான் நம்முடைய இணைய தளத்தில் நான் பேசி முடித்த மறுநாளே கொடுத்திருப்பேன்” என்று கடிதம் எழுத வேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகிறது. 47 பேருக்கும் அப்படி எழுதினேன். ஒரு தப்பு வேறு பண்ணி விட்டேன். காப்பி பண்ணி வைத்துக் கொண்டு ஒவ்வொரு கடிதத்திலும் அதை பேஸ்ட் பண்ணி அனுப்பியிருக்கலாம். எனக்கு அது இப்போதுதான் தோன்றுகிறது. 47 பேருக்கும் தனித்தனியேதான் எழுதினேன். இதில் வந்த எரிச்சலில் இன்னொரு அனர்த்தமும் பண்ணி விட்டேன். ஒரு நண்பர் மாதாமாதம் 3000 ரூ. அனுப்புவார். அவருக்கும் அப்படி எழுதித் தொலைத்து விட்டேன். நல்லவேளை, அவர் கோபித்துக் கொள்ளவில்லை. பாருங்கள், வாசகர்கள் தன் எழுத்தாளர் மீது எத்தனை பரிவாக இருக்கிறார்கள் என்று. அவர் கோபித்துக் கொள்ளாதது மட்டும் அல்ல; ”பணம் அனுப்பாமல் கேட்டு விட்டதற்கு மன்னிப்புக் கோருகிறேன் சாரு. இதோ அனுப்பி வைக்கிறேன்” என்று கடிதம் எழுதி பணமும் அனுப்பினார். பிறகுதான் ஏதோ மனதில் உறைத்து அவரது மின்னஞ்சல் முகவரியைப் போட்டுத் தேடினால் மாதாமாதம் 3000 ரூபாய் அனுப்பிக் கொண்டிருக்கிறார். இந்த 47 பேரால் ஏற்பட்ட குழப்பம். அந்த 47 பேரில் ஓரிருவர் பணம் செலுத்தி வாங்கிக் கொண்டார்கள். ஒரு சிலர் தன்னால் அனுப்ப இயலாது என்று சொன்னதால், அவர்களுக்கு மூன்று உரையையும் அனுப்பினேன். 40 பேரிடமிருந்து எந்தப் பேச்சும் இல்லை.

நண்பர்களே, இந்த உரைக்காக நான் எவ்வளவு உழைக்கிறேன் என்பதை நான் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. கிட்டத்தட்ட நான்கு மணி நேர உரை. முன்பு என்றால் பேசி முடித்ததும் சதீஷ்வரிடமிருந்து உரைப் பதிவு கிடைத்ததும் அடுத்த நிமிஷம் இணைய தளத்தில் பதிவேற்றி விடுவேன். அப்படித்தான் 40 ஆண்டுகளாக செய்து கொண்டிருந்தேன். எங்கேயும் பணம் கேட்பதில்லை. பணம் என்ற விஷயமே என் சிந்தனையில் இருந்ததில்லை. நான் மட்டும் இல்லை. எல்லா எழுத்தாளர்களுமே இப்படித்தான். நான் தான் எழுதியிருந்தேனே, இதில் என் குருநாதர்கள் அமெரிக்கன் எம்பஸிக்காரன் தான். எப்போது போய் வீசா கேட்டாலும் உன் வங்கிக் கணக்கு டுபுக்காக உள்ளது, வெளியே போ. ஒருமுறை இரண்டு முறை அல்ல. நான்கு முறை. கனடியன் எம்பஸியில் ரெண்டு முறை. பிரிட்டிஷ் எம்பஸியில் ஒருமுறை. அதனால்தான் இப்படி பணத்தின் பக்கம் திரும்பினேன். ஏனென்றால், பயணம் எனக்கு மதம். பயணம் எனக்குக் கடவுள். வயது 66. இப்போதே என்னால் திபெத் போக இயலாது. 13000 அடிக்கு மேல் சென்றால் மூச்சு விட இயலாது. ஆக்ஸிஜன் சிலிண்டர் வேண்டும். பொலிவியாவிலிருந்து விழுந்தடித்துக் கொண்டு சீலே சென்றேன். சில நாடுகள் இப்படி என் பட்டியலில் நீக்கப்பட்டு விட்டது.

அதனால் என்னை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்காதீர்கள். ஏற்கனவே மாணவர்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் ஆகியோரிடமிருந்து பணம் வாங்குவதில்லை என்று ஒரு முடிவு. உங்களால் பணம் அனுப்ப முடியாவிட்டால் எழுதுங்கள். பதிவை அனுப்பி வைக்கிறேன். இத்தனையும் படித்து விட்டு, லிங்க் கொடுங்கள் என்று மொட்டையாக எழுதாதீர்கள். ஒரு நண்பரின் கதையைச் சொல்கிறேன். மாதம் 5000 ரூ. அனுப்பும் நண்பர். தனவந்தரெல்லாம் இல்லை. நடுத்தர வர்க்கம். ஸாஃப்ட்வேர் எஞ்சினியர். ஒவ்வொரு சந்திப்புக்கும் சுள்ளாப்பாக வந்து விடுவார். க.நா.சு. சந்திப்புக்குக் காணோம். பதிவைக் கேட்டும் எழுதவில்லை. என்ன ஆச்சு என்று கடிதம் எழுதினேன். ரொம்ப வேலை, சந்திப்புக்கு வர முடியவில்லை என்று பதில். அது சரி, ஏன் பதிவைக் கேட்டு எழுதவில்லை; நானே ஒவ்வொரு நண்பராகக் கேட்டு எழுத முடியுமா என்று கேட்டேன். இல்லை சாரு, இந்த மாதம் கொஞ்சம் வீட்டுச் செலவு, சந்திப்புக்காகப் பணம் அனுப்ப இயலவில்லை. அதனால்தான் பதிவைக் கேட்டு எழுதக் கூச்சமாக இருந்தது என்கிறார். அதாவது, மாதாமாதம் 5000 ரூ. அனுப்பும் நண்பர். இப்படியும் இருக்கிறார்கள்.

நான் பணத்தை மதிப்பவன் இல்லை. எல்லா எழுத்தாளர்களுமே அப்படித்தான். பணத்தை மதிப்பவனால் எழுதவே முடியாது என்பது என் நம்பிக்கை. என் மாதாந்திர உரையும் கட்டண உரை இல்லை. நீங்கள் பாட்டுக்கு வந்து கேட்டு விட்டுப் போகலாம். ஆனால் அந்த உரையின் பதிவு வேண்டும் என்றால், கொஞ்சம் பணம் கொடுங்கள் என்று கேட்கிறேன். அதுவும் நீங்களே நிர்ணயிக்கும் தொகைதான். அதிலும் பாருங்கள், சந்திப்புக்கு வரும் 100 பேரில் 50 பேர் மாதச் சந்தா கொடுப்பவர்கள்தான். எல்லோராலும் 5000 முடியாது. 300, 500 இப்படி. ஒரு நண்பர் 108 அனுப்புகிறார். அந்த 108-ஐப் பார்த்தால் முதல் தேதி பிறந்து விட்டது என்று நினைத்துக் கொள்வேன்.

பல பகுத்தறிவுவாதிகள் கடவுளைக் காண குருக்கள் எதுக்கு, அவருக்கு தட்சணை எதுக்கு என்று கேட்பதைப் பார்த்திருக்கிறேன். உமக்குத்தான் நம்பிக்கை இல்லை அல்லவா, அப்புறம் எதுக்கு இதிலெல்லாம் நீர் மூக்கை நுழைக்கிறீர்? கடவுள் எல்லாமாக இருக்கிறார், தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார். கோவில் எதுக்கு என்று கேட்கும் நம்பிக்கையாளர்களும் உளர். அவர்களுக்கு வள்ளலார் பிரமாதமாக பதில் சொல்லியிருக்கிறார். நாம் அங்கே போக வேண்டாம். கோவில் என்பது சாமியின் இடம் மட்டும் அல்ல. அது ஒரு கலாச்சார அடையாளம். அங்கே அந்தக் கடவுளின் பிரதிமைக்கு அலங்காரம் செய்வதும், பூசனை செய்வதும் சாதாரண வேலை அல்ல. தீப அலங்காரம் செய்வதென்பது நெருப்பின் உள்ளே வாழ்வதைப் போன்றது. தேகமே தீயாய் மாறும். உலைக்களம் அது. ஆறு மணி நேரத்துக்குத் தொடர்ச்சியாக விசர்ஜனம் செய்யாமல் நிற்க வேண்டும். தட்சிணைத் தட்டில் பணம் போட்டால் பக்கத்தில் நிற்கும் இளைஞன் கேட்பான், சாமியைக் கும்பிட இடையில் பணம் எதுக்கு? ஐந்து மைல் வேகாத வெய்யிலில் டப்பா சைக்கிளில் தபால் கொண்டு வந்து கொடுக்கும் தபால்காரருக்கு ஒரு டம்ளர் மோர் கொடுத்துப் பழகிய நம் கலாச்சாரத்தை நாம் இழந்து விட்டோமா என்ன?

இதையெல்லாம் திரும்பத் திரும்ப எழுத கொஞ்சம் லஜ்ஜையாகத்தான் இருக்கிறது. இதில் சதீஷ்வரின் உழைப்பு வேறு இருக்கிறது. ஏகப்பட்ட நண்பர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். ஞானம் மழை போன்றும் காற்றைப் போன்றும் தரப் பட வேண்டியதுதான். அதுதான் என் கருத்தும். ஆனால் ஊர்ப் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பியுங்கள் என்று வாத்தியாரை அழைத்துக் கொண்டு வந்து ஊர் நடுவே விட்டு விட்டால் போதாது இல்லையா? சங்க காலத்திலிருந்து புலவன் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறான். சங்க காலப் பெருமையெல்லாம் பேசலாம். ஆனால் அரண்மனைக்குச் சென்று மன்னன் புகழ் பாடித்தானே சங்கக் கவிஞன் பிழைத்திருக்கிறான்? அதை இந்தக் காலத்திலாவது மாற்ற வேண்டி இந்த 2000 வருடப் பாரம்பரியத்தில் முதல் ஆளாக மணி கட்டியிருக்கிறேன். இதை மூன்று எழுத்தாளர்கள் பரிகசித்தும் அவமதித்தும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள். ஞாநி, பிரபஞ்சன், மற்றொரு முற்போக்கு எழுத்தாளர். இருந்தாலும் பரவாயில்லை, ஞானத்தை இலவசமாக வழங்கும் சூழல் தமிழில் இல்லை என்பதால் இது பற்றி முதல் முதலாகப் பிரஸ்தாபிக்கும், வலியுறுத்தும் தர்மசங்கடப் பணியை மேற்கொண்டேன்.

தவறாக எண்ண வேண்டாம். மாதச் சந்தா அனுப்பும் நண்பர்கள் யாருக்கேனும் உரைப் பதிவு தேவையெனில் எழுதுங்கள். ஒவ்வொருவராகக் கேட்டு எழுத நேரம் இல்லை. அப்படியும் ஒரு பத்து பேருக்குக் கேட்டு எழுதி அனுப்பி விட்டேன்.

charu.nivedita.india@gmail.com

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai