பூச்சி 125 : இரண்டு சொற்கள்

திங்கள்கிழமை பரீட்சையாக இருக்கும், ஞாயிற்றுக்கிழமை தண்ணி அடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீரங்கம் கும்பல்.  நான் பார்த்த ஸ்ரீரங்கம் அப்படி.  அப்படித் தண்ணி அடித்தவர்கள் அனைவரும் இப்போது இன்ஃபோஸிஸ் போன்ற நிறுவனங்களில் மூன்று லகரம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  அவ்வப்போது முகநூலிலும் விமர்சனம் எழுதி தமிழின் தலை சிறந்த விமர்சகர் என்ற விருதும் வாங்குகிறார்கள்.  அவர்கள் கல்லூரிப் பாடப் புத்தகங்களைத் தொட்டது கூட இல்லை.  எல்லாம் வகுப்பில் கேட்டதுதான்.  அதை வைத்தே டிஸ்டிங்ஷன்.  எல்லாம் அய்யங்கார் மூளை.  இப்படிச் சொன்னால் அபிலாஷ் என்னை அடிக்க வருவார்.  தற்காலத்தில் ஓரளவு politically கரெக்டாகச் சிந்திக்கக் கூடியவர் அவர் ஒருத்தராகத்தான் இருக்கிறார்.  ஆனால் நானும் இந்த மைலாப்பூரில் அய்யங்கார் அய்யர்களோடு பழகிப் பழகி ஏற்கனவே இருந்த அராத்துத்தனத்தோடு அவர்களின் அராத்துத்தனமும் சேர்ந்து விட்டதன் காரணமாக, இந்த ஆறாவது பாவத்தைச் செய்து கொண்டிருக்கிறேன்.  அதாவது, எனக்கு நாளை மறுநாள் பரீட்சை.  இன்று இங்கே வந்து இந்த நீண்ட கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஆமாம், ஆரம்பிக்கும்போதே இது நீளும் என்று தெரிந்து விட்டது.  ஏனென்றால், என் ஜென்மப் பகைவரைப் பற்றிய ஒரு கட்டுரை இது.  நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ந. சிதம்பர சுப்ரமணியன் பற்றிப் பேச வேண்டும்.  மண்ணில் தெரியுது வானம் படித்தாயிற்று.  இதய நாதம் படிக்க வேண்டும்.  அதை விட்டுவிட்டுத்தான் இதைத் தட்டிக் கொண்டிருக்கிறேன். 

எல்லாம் இந்த ஆயில் புல்லிங்கினால் வந்தது.  காலையில் எழுந்து தியானத்தை முடித்து விட்டு நல்லெண்ணையை வாயில் ஊற்றிக் கொப்புளிக்க ஆரம்பித்தேன்.  இருபது நிமிடம் கொப்புளிக்க வேண்டும்.  அந்த நேரத்தில் என்ன செய்வது?  மணி ஐந்து.  இருபது நிமிடத்துக்கு முகநூலைப் பீராயலாம் என்று பார்த்தால் எடுத்த எடுப்பில் ஜென்மப் பகைவர்.  யார்?  நம்முடைய பா. ராகவன் தான்.  அவர் பகைவரான கதை தெரிந்தால் நீங்களே என் பக்கம்தான் பேசுவீர்கள்.  எனக்கு ஸ்ரீரங்கப் பெருமாளோடு சம்பந்தம் ஏற்பட்ட உடனேயே அந்த ஆள் (ராகவன் அல்ல, ரங்கநாதன்) எனக்கு அறிமுகப்படுத்தினது அக்கார அடிசலை.  நான் ஒரு உணவுப் பிரியன் என்பதாலோ என்னவோ அப்படி நடந்திருக்கலாம்.  நானும் அன்றைய தினத்திலிருந்து என் குல வழக்கப்படி அறிமுகம் செய்தவரை மறந்து விட்டு அக்கார அடிசலின் ரசிகனாகி விட்டேன்.  ரசிகனாகி என்ன பயன்?  அந்த அய்ட்டம் எங்குமே கிடைக்கவில்லை.  எனக்கு ரங்கநாதன் மீது பெரும் கோபம்தான் உண்டாயிற்று.  ஒரு பொருளை அறிமுகப்படுத்தினால் அது கிடைக்கவும் செய்ய வேண்டும் அல்லவா?  என்னை சுற்றிச் சுற்றி அய்யங்கார்கள்தான்.  வீட்டு அம்மணியே அய்யங்கார்.  அவளிடம் என்ன பதார்த்தம் கேட்டாலும் கிடைக்கும்.  எவனாவது பன்றிக் கறியும் வாத்துக் கறியும் ஒரு அய்யங்கார்ப் பெண்ணிடம் கேட்பானா?  அதையும் மனம் முகம் கோணாமல் செய்து கொடுத்தவள் அக்கார அடிசலைக் கேள்வியே பட்டதில்லை என்று சொல்லி விட்டாள்.

சரி விடு என்று சொல்லி விட்டு, என் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் என் மைத்துனிகளிடம் கேட்டேன்.  அவர்கள் சிரித்துக் கொண்டே கேள்விதான் பட்டிருக்கிறோம், சாப்பிட்டதில்லையே என்று கை விரித்து விட்டார்கள்.  சரி, ஏன் சிரித்தீர்கள் என்று கேட்டேன்.  ஏதோ மழுப்பி விட்டார்கள் என்றாலும் எனக்குப் புரிந்து விட்டது.  அதாவது, புதிதாக மதம் மாறியவர்கள்தான் ரொம்பத் தீவிரமாக இருப்பார்கள்.  மதம் மட்டுமல்ல, மொழி, தேசம் எல்லாவற்றிலும்.   மனித வெடிகுண்டாக மாறுபவர்களைப் பற்றி விசாரித்தால் அவர்கள் புதிதாக மதம் மாறியவர்களாக இருப்பார்கள்.  என்னை அப்படி நினைத்து விட்டார்கள் என் மைத்துனிமார்.  (மார்கள் என்று எழுதுவது இலக்கணப் பிழையாம். காணவும் கடிதம், கீழே)

சாரு, 

பிழையென்று தலைப்பிட்டு எழுதுகிறேன் பொறுக்கவும். 

ரகரம், பகர ஈற்று (என்ப, மொழிப), மார், கள் ஆகியன தமிழில் பன்மையைக் குறிக்கும் சொற்கள் என்பதை அறிவோம்.

உங்களது  எழுத்தில் (பூச்சி 120) ‘மனைவிமார்களும்’ என்று இடம்பெற்றுள்ளது. மார் இருக்கையில் கள் தேவையில்லை.

சொல்ல வேண்டும் என்று தோன்றியது உரிமையோடு சொல்லிவிட்டேன். 

ஒருவேளை நீங்கள் நடைமுறையில் உள்ள சொல் வழக்கை ஏன் மாற்ற வேண்டும் என்றும் கூட ‘மார்கள்’ என்று எழுதியிருக்கலாம். அப்படியெனில், என்னை மன்னிக்கவும்.

அன்புடன்,

இமான்.

 நான் ஒரு உணவுப் பிரியன் என்று என் மைத்துனிமாருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.  அக்கார அடிசில் மீதான இதே பிரேமைதான் எனக்குக் கருவாட்டுக் குழம்பின் மீதும் உண்டு என்பதும் அவர்களுக்குத் தெரியாது.  ஆனாலும் இந்த அய்யங்கார்களெல்லாம் என் வயிற்றில் பால்தான் வார்த்தார்கள்.  ஏனென்றால், எனக்குக் கிடைக்காதது அவர்களுக்கும் கிடைக்கவில்லை அல்லவா?  அதில் நமக்கு ஒரு ஆறுதல்.  அந்த ஆறுதலில் அக்கார அடிசிலைப் போட்டவர் உங்கள் பகைவரா இல்லையா, நீங்களே சொல்லுங்கள்?  அவர்தான் பா.ராகவன்.  அதற்கு முன்னால் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனைப் பற்றியும் சொல்லி விடுகிறேன்.  அவரும் பால் வார்த்த கோஷ்டியைச் சேர்ந்தவர்தான்.  ம்ஹும், நானும் கேள்விதான் பட்டிருக்கிறேனே ஒழிய சாப்பிட்டதில்லை என்று சொல்லி விட்டார்.  இந்த இடத்தில்தான் வருகிறார் பகைவர் பா. ராகவன்.  எங்கள் வீட்டில் வாரம் ஒருமுறை உண்டு.  அதுவும் வெண்கலப் பானையில்.  வெண்கலப் பானையில்தான் அக்கார அடிசில் செய்ய வேண்டுமாம்.  கவலையே படாதீர்கள் சாரு, வீட்டுக்கு வாருங்கள், என் மனைவி பிரமாதமாகச் செய்வார் என்றார்.  படு ஆர்வத்துடன் எங்கே வீடு என்று கேட்டேன்.  ஆஃகானிஸ்தானுக்கும் உஸ்பெகிஸ்தானும் இடையில் ஆஃப்கன் பகுதியில் மஸார் எ ஷெரிஃப் என்ற பிரபலமான ஊர் இருக்கிறது இல்லையா, அதற்குப் பக்கத்தில் உள்ள குரோம்பேட்டை என்றார்.  அங்கேயெல்லாம் போவது நடக்கிற காரியமா?  இவரை எவன் குரோம்பேட்டையெல்லாம் போய்க் குடியிருக்கச் சொன்னது?  இங்கேயே உத்தம எழுத்தாளனாக என்னைப் போல் மைலாப்பூரில் வசித்திருந்தால் ஜம்மென்று போய் ஒருநாள் அக்கார அடிசிலை வெளுத்துக் கட்டியிருக்கலாம். 

அப்படி குரோம்பேட்டையில் வசிப்பது கூடத் தப்பில்லை.  எனக்குக் கிடைக்காத அக்கார அடிசிலை இவர் எப்படி வாரம் ஒருமுறை சாப்பிடப் போயிற்று?  அதுதான் பகைக்குக் காரணம்.

சரி, நம் பெயரை உச்சரிக்கவே எல்லோரும் அஞ்சுகின்ற சூழலில் நம்மோடு நட்புறவும் கொண்டாடுகிற ஒருத்தரைப் பகைத்துக் கொள்வது நம்முடைய இலக்கிய வாழ்வுக்கு நல்லதல்ல  என்று தோன்றி, அக்கார அடிசில் பிரச்சினையை மறைத்து விட்டு மேலுக்குப் பழகிக் கொண்டிருந்தேன்.  அப்போதும் குறுக்கிட்டது இன்னொரு பிரச்சினை.  இலக்கியப் பிரச்சினையாக இருந்தால் எவ்வளவோ பரவாயில்லை.  இது மறுபடியும் உணவுப் பிரச்சினை.  அவர் ஒரு பேலியோ மனிதர்.  அதைப் பற்றி அவர் பிரஸ்தாபிக்கும் போதெல்லாம் எனக்குப் பற்றிக் கொண்டு எரியும்.  என்ன காரணம் என்றால், எனக்கு பேலியோ ரொம்ப இஷ்டம்.  ஆனால் அதெல்லாம் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை.  நமக்கு காலைச் சிற்றுண்டியே பெரும் பாதாள பைரவிப் பிரச்சினை.  காரணம், எனக்குக் காலைச் சிற்றுண்டி சிற்றுண்டி அல்ல.  பேருண்டி.  காலையில் அரசன், மதியம் மத்திமம், இரவில் பிச்சைக்காரனைப் போல் உண்ணும் வழக்கம்.  சொல்லப் போனால் இரவில் உண்பதே இல்லை.  ஒரே ஒரு மாதுளை அல்லது ஆப்பிள்.  ஆக, காலையில் நடைப் பயிற்சியை முடித்தால் எட்டரை மணி அளவில் யோசித்தால், முதல் நாள் மதியம் மூன்று மணிக்குச் சாப்பிட்டதுதான்.  எப்படி இருக்கும்?  குடல் கண் வழியே வந்து விடும்போல் இருக்கும்.  அம்மணி கடும் உறக்கத்தில் இருப்பாள்.  அவள் நள்ளிரவு ஒரு மணிக்குத்தான் உறங்கச் செல்வது.  பள்ளியெழுச்சி ஒன்பது ஆகும்.  அப்புறம் ஆயில் புல்லிங், வீடு சுத்தம் எல்லாம் முடிந்து அடுக்களைக்குள் நுழைய பத்து ஆகும்.  உண்டி கிடைக்க பத்தரை பதினொன்று ஆகும்.  நான் பசியால் துடிப்பதைப் பார்த்து விட்டு ஒருநாள் எட்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, நள்ளிரவில் எழுப்பி விடப்பட்ட  சிறுமியைப் போல் அலங்க மலங்க விழித்தாள்.  போதையில் குழறுபவனைப்போல் நீ சாப்பிடணும், நீ பசியா இருப்பே, உனக்கு டிஃபன் பண்ணனும் என்று உளறினாள்.  நான் சாப்பிட்டு விட்டேன் என்று பொய் சொல்லி விட்டேன்.  என்ன சாப்பிட்டே என்றாள்.  ஓட்ஸ் கஞ்சி என்று சொல்லி விட்டு, வந்து ஓட்ஸ் கஞ்சியே குடித்தேன்.  அதைவிடப் பட்டினி கிடந்து சாவது சாலச் சிறந்தது. 

பத்தரைக்குள் நான் ரெண்டு பிஸ்கட், பத்து பாதாம் பருப்பு, வீட்டில் கேரட் இருந்தால் ஒரு கேரட், ஒரு வெங்காயம், ரெண்டு தக்காளி என்று என்னவெல்லாம் கைக்கு மாட்டுகிறதோ அதையெல்லாம் தின்பேன்.  காஃபி குடிக்கலாம் என்று பார்த்தால் கோனார் எட்டரைக்குத்தான் பால் கொண்டு வருவார்.  எனக்குப் பசும்பாலில்தான் காஃபி குடிக்க வேண்டும்.  பாலும் புதிதாக இருக்க வேண்டும்.  இப்படிப் பல விதிகள் உண்டு.  ஆக, காஃபியும் எட்டரைக்கு மேல்தான்.  நேற்றைய பாலில் குடிப்பது, ஆவின் பாலில் குடிப்பது போன்றவற்றுக்குப் பதிலாக பாலிடாலைக் குடிக்கலாம். 

ஆக, என்னதான் பிஸ்கட், கேரட், தக்காளி, வெங்காயம் என்று எதை சாப்பிட்டாலும் பசியில் ஒரு இம்மியத்தனை கூடக் குறையாது. சமயங்களில் பசியின் காரணமாகவே மாரடைப்பு வந்து விடுமோ என்று கூட பயந்திருக்கிறேன்.  அப்படி ஏதேனும் ஆனால் மருத்துவம் செய்வதற்கு முன்னால் ரெண்டு இட்லியோ ஒரு ப்ரெட் துண்டோ கொடுங்கள், வீட்டுக்கு ஓடி விடுவேன் என்றுதான் சொல்ல வேண்டும்.  ஆமாம், பசியினால் மாரடைப்பு வருமா? 

எல்லாவற்றுக்கும் காரணம், கொரோனாதான்.  கொரோனாவினால் அவந்திகாவின் ஆன்மீக வகுப்புக்கு வரும் இரண்டு பெண்கள் (இளம் வயது) மரணம்.  மற்றும் இரண்டு இளம் பெண்களுக்கும் அவர்களும் குடும்பத்தினர் அத்தனை பேருக்கும் வந்து பத்து லட்சம் செலவு ஆகி, பிழைத்துக் கொண்டார்கள்.  எல்லாம் இருபது பேர் மக்கள் தொகை கொண்ட அவந்திகாவின் ஆன்மீக வகுப்பில்.  அதனால் அவளுக்கு கிலி.  அதனால் பல தடை உத்தரவுகள் நிலவுகிறது.  ஸ்விக்கிக்குத் தடை.  இல்லாவிட்டால் நான் இந்நேரம் ராஜா.  அப்பு முதலித் தெருவில் அருமையான இட்லி மாவு கிடைக்கிறது.  வெளியிலிருந்து வரும் இட்லி மாவுக்குத் தடை.  எனக்கோ இட்லி மாவு அரைக்கத் தெரியாது.  அவந்திகாவுக்கோ அவ்வப்போதுதான் அதற்கு நேரம் கிடைக்கும்.  ஓட்டலுக்குச் செல்லவும் தடை.  ஓட்டலுக்கு அரசாங்கம் தடை.  ஆனால் பார்சல் வாங்கிப் போகலாம்.  பார்சலுக்குத்தான் ஏற்கனவே நம் வீட்டில் தடையாயிற்றே? 

கருந்தேள் ராஜேஷை உங்களுக்குத் தெரியும்தானே?  அவர் வாழ்நாளில் பழமே சாப்பிட்டதில்லை.  ஏன்?  பிடிக்காது, சாப்பிடவில்லை.  வாழைப்பழம், மாதுளை, மாம்பழம், திராட்சை, அவக்காதோ, பலா… எந்தப் பழமுமே சாப்பிட்டதில்லை.  நாவல் பழம் கூடவா?  ம்ஹும், இல்லை.  அதேபோல் நான் இந்தக் கொரோனா வரும் வரை பிஸ்கட்டே சாப்பிட்டதில்லை.  பிடிக்காது.  அப்படிப்பட்ட பிஸ்கட்டைக் கூட இப்போது ரெண்டு ரெண்டு சாப்பிடுகிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  புலி பசித்தாலும் பழமொழியைப் போல் கண்ட பிஸ்கட்டையும் சாப்பிடுவதில்லை.  கராச்சி பிஸ்கட் மட்டும்தான்.  அதிலும் பழ பிஸ்கட் இல்லை.  உப்பு பிஸ்கட் மட்டும்தான்.  அதிலும் பாருங்கள் ஒரு மோசடி வேலை.  ப்ரௌன் ட்ரீ கடையில் வாங்கினால் இந்த கராச்சி பிஸ்கட் நன்றாக இருக்கிறது.  இதே பிஸ்கட்டை ஸ்விக்கி மூலம் வாங்கினால் மயிரு மாதிரி இருக்கிறது.  உப்பு பிஸ்கட்டில் உப்பை அள்ளிக் கொட்டி வைத்திருக்கிறான்கள்.  கவரைப் பார்த்தால் அதே கராச்சி பிஸ்கட்தான்.  அப்புறம்தான் ரொம்ப ஆராய்ச்சி பண்ணிக் கண்டு பிடித்தேன், ஸ்விக்கி மூலம் வருவது நுங்கம்பாக்கம் ஃப்ராஞ்ச்சைஸ் நிறுவனம்.  ஹைதராபாதிலிருந்து வருவது அல்ல.  மவுண்ட் ரோடு புஹாரியில் டீ ரொம்பப் பிரபலம்.  இதே மவுண்ட் ரோடு புஹாரியின் ஏசி பிரிவு அதே கட்டிடத்தின் அருகில் உள்ளது.  அங்கே டீ குடித்தால் மயிரு மாதிரி இருக்கும்.  நிலைமை இப்படி இருக்கும்போது ஹைதராபாதுக்கும் நுங்கம்பாக்கத்துக்கும் எத்தனை தூரம்?  அப்புறம் எங்கள் செக்யூரிட்டியைக் கூப்பிட்டு பக்கத்தில் உள்ள ப்ரௌன் ட்ரீயில் வாங்கி வரச் சொன்னேன்.  இதுவே விதி மீறல்தான்.  ஆள் ஆளுக்கு செக்யூரிட்டியைக் கடைக்கு அனுப்பிக் கொண்டிருந்தால் அப்புறம் குடியிருப்புப் பாதுகாப்பு என்ன ஆகும்?

எல்லாம் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் உள்ள நேர வித்தியாசம்தான்.  அவந்திகாவுக்குக் காலை ஒன்பது மணிதான் காலை ஆறு மணி.  எனக்கோ காலை ஒன்பது மணி என்பது கிட்டத்தட்ட மதியம்.  இப்படிப்பட்ட அவலநிலையில், ஏற்கனவே பேலியோ என்றால் வெறித்தனமாகப் பிடிக்கும் என்ற நான் பேலியோ உணவுக்காரர்களை எவ்வளவு பகையோடு பார்ப்பேன்?  அதுதான் பா. ராகவனை நான் பகைவனாக நினைக்கக் காரணம். 

எல்லாம் இன்றைய ஆயில் புல்லிங்கின் போது முகநூலைப் பார்த்ததால் ஏற்பட்ட விளைவு.  பா. ராகவனுக்கு அவ்வப்போது முதுகுவலி வருகிறதாம்.  இந்தியாவில் எல்லோருக்கும் முதுகு வலி.  அதிலும் எழுத்தாளர்களுக்கும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களுக்கும் இது ஒரு தீராத பிரச்சினை.  அந்தக் குறிப்பில் ராகவன் அடியேனையும் குறிப்பிட்டு என்னுடைய காலை நடையையும் பிரஸ்தாபித்திருக்கிறார்.  உண்மையில் எனக்கு முராகாமி மாதிரி மாரத்தான் ஓடத்தான் ஆசை.  ஆனால் அதற்கு இதயப் பிரச்சினை இருக்கக் கூடாது.  முராகாமி மாரத்தானில் உலக அளவில் சாதனை படைத்தவர்.  முப்பது மைல் ஓடி விட்டு பியர் குடிப்பாராம்.  நான் ஏன் தினந்தோறும் விடாமல் நடக்கிறேன்? 

பதினைந்து வயதிலிருந்து நாற்பது வயது வரை காலையில் ஓடினேன்.  நாகூரில் ஈச்சந்திடலில் ஓடியது பற்றியும், தில்லியில் தில்லிப் பல்கலைக்கழகத்தில் ஓடியது பற்றியும் நாவல்களில் எழுதியிருக்கிறேன்.  நாற்பதில் சென்னை வந்து ஓட முடியவில்லை.  ஆனால் உடற்பயிற்சிக் கூடம் போனேன்.  ஏரோபிக்ஸ் போனேன்.  நீராவிக் குளியல் போனேன்.  ஐம்பது வயது வரை எனக்கு ஜுரம் இரண்டு முறை மட்டுமே வந்துள்ளது.  ஜலதோஷம் மற்றும் தலைவலி வந்ததே இல்லை.  இன்றைய தேதி வரை தலைவலி என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது.  டச்வுட். டச்வுட். டச்வுட்.  அதன் காரணமாக, ஐம்பது வயதில் நமக்கெல்லாம் உடம்புக்கு எதுவும் வராது என்ற திமிரில் இருந்து விட்டேன்.  பார்த்தால் ஹார்ட் அட்டாக்.  ரத்தக் குழாயில் அடைப்பு.  அப்போது மருத்துவமனையில் மலஜலம் போகும்போது பேஸின் மாதிரி ஒன்றைக் கொடுத்து படுக்கையிலேயே உட்கார்ந்தபடியே மலஜலம் போகச் சொல்கிறார்கள்.  உடம்பு பூராவும் ஏதேதோ ஒயர்கள் மாட்டியிருப்பதால் நம்மால் முடிந்தாலும் கழிப்பறை செல்ல முடியாது.  எனக்கோ மனிதர்கள் பக்கத்தில் இருந்தால் மலஜலம் போக இயலாது.  (உங்களால் மட்டும் முடியுமா என்ன?)  அதுதான் ஸ்க்ரீன் இருக்கிறதே சார், நான் ஸ்க்ரீனுக்கு வெளியேதானே நிற்கிறேன் என்பார் செவிலி.  இல்லை சிஸ்டர், நீங்கள் எங்காவது போய் விட்டு அஞ்சு பத்து நிமிஷம் கழிச்சு வாருங்கள் என்று சொல்லி அனுப்பி விடுவேன்.  அப்போதும் கஷ்டம்தான்.  இந்த வதை இனியொருமுறை வேண்டாம் என்பதற்காகவே மழை பெய்தாலும் குடை பிடித்துக் கொண்டு நடந்து விடுகிறேன். 

அதெல்லாம் சரி, ராகவன் வேறொன்றும் சொல்கிறார்.  இங்கே பாருங்கள்:  ”தமிழ்நாட்டு எழுத்தாளர்களில் நானறிந்து நடைப் பயிற்சியை ஒரு கலையாகப் பயின்று, ஒரு நாளும் தவறாமல் செய்யும் எழுத்தாளர், சாரு. என்ன ஒன்று, நடந்துவிட்டு மகா முத்ராவுக்குப் போய் காப்பி டிபன் சாப்பிட்டுவிடுவார்.”

இந்தக் குறிப்பில் இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டும் இருந்திருக்காவிட்டால் இந்தப் பதிவே எழுதியிருக்க மாட்டேன்.  அதனால் இந்தப் பதிவை ரசிப்பவர்கள் அந்த இரண்டு வார்த்தைகளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.  அந்த இரண்டு வார்த்தைகள், என்ன ஒன்று.  அட பெருமாளே, முந்தின நாள் மதியம் மூன்று மணிக்கு சாப்பிட்ட ஒருவன் மறுநாள் காலை ஒன்றரை மணி நடந்து விட்டு சாப்பிடவும் இல்லையென்றால் நேராக வைகுண்டம்தான். 

மேலும், இப்போதெல்லாம் (அதாவது, கொரோனாவுக்கு முன்பு)  நாகேஸ்வர ராவ் நடையை முடித்து விட்டு நேராக மகாமுத்ரா இல்லை.  அங்கே போதுமான அளவு பிஹாரி பணியாட்கள் கிடைப்பதில்லையாம்.  தமிழர்கள் எல்லோருமே தாங்கள் படித்திருந்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, இன்ஃபோஸிஸில்தான் வேலை வேண்டும், இல்லாவிட்டால் அம்மா உணவகத்தில் இலவசமாகச் சாப்பிட்டுக் கொள்கிறோம், இம்மாதிரி சர்வர் வேலையெல்லாம் எங்கள் சங்கத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இழுக்கு என்று சொல்லி விட்டதால் தமிழ்நாடே உடல் உழைப்புப் பணியாளர்களுக்கு சத்தீஸ்கர், நேப்பாள், பிஹார் ஆகிய மாநிலங்களைத்தான் நம்பியிருக்கிறது.  அதனால் மஹாமுத்ராவில் பணியாற்றும் பிஹார் தொழிலாளர்கள் ஒன்பது மணிக்குத்தான் வேலைக்கே வருகிறார்கள் என்பதால் அங்கே நிலைமை அவந்திகாவின் நேரம் மாதிரிதான் இருக்கிறது.  அங்கே சாப்பிடுவதற்கு வீட்டுக்கே வந்து அவந்திகாவுடனேயே பதினோரு மணிக்குக் காலை உணவு சாப்பிடலாம். 

அப்படியானால் எங்கே சாப்பிடுவது?  அதற்கு நான் இட்லியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.  ஏற்கனவே நான் இட்லி பற்றி ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக் குவித்து விட்டேன்.  அதனால் நீங்கள் இனி இட்லி பற்றி எழுதினால் நான் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் சேர்ந்து விடுவேன் என்று காயத்ரி வேறு மிரட்டியிருக்கிறாள்.  இதில் இன்னொரு பஞ்சாயத்து வேறு இருக்கிறது பாருங்கள்.  உலகிலேயே பெரிய நாவல் எழுதியது யார் என்று ஒரு விவாதம்.  பார்த்து விடலாம் என்று கூகிளில் தேடினேன்.  வெண்முரசுதான் இருந்தது.  35000 பக்கம்.  வெற்றிப் பட்டியலில் அடுத்த ஆள் யாரோ ஒரு ஜப்பான்காரன்.  அவன் ஏதோ 8000 பக்கம்தான் எழுதியிருக்கிறான்.  எட்டாயிரம் எங்கே?  முப்பந்தைந்தாயிரம் எங்கே?  இட்லி பற்றி நான் ஒரு பத்தாயிரம் பக்கமாவது எழுதியிருப்பேனே, ஏன் வரவில்லை என்றேன்.  ”அது கட்டுரை,  நீங்கள் நாவலாக எழுதினால்தான் அந்தப் பட்டியலில் வரும்” என்றாள் காயத்ரி.  சாரு எழுதுவது கட்டுரையானாலும் சரி, கதையானாலும் சரி, விமர்சனமானாலும் சரி, எல்லாமே நாவல்தான் என்று அபிலாஷ் சொல்லியிருக்கிறாரே என்றேன். 
“அபிலாஷும் கூகிளும் ஒரே மாதிரி சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா என்ன?  பேசாமல் நீங்கள் இட்லி புராணம் என்றே எழுதி விடுங்கள்.  நாவலில் சேர்க்க வாய்ப்பு உண்டு.”

சரி, இட்லி பற்றி நான் எழுதாத ஒரு விஷயம்.  நீங்கள் வெளியிலிருந்து மாவு வாங்கி வீட்டில் இட்லி போட்டு சாப்பிடுகின்ற ஆளா?  அப்படியானால் நீங்கள் சாப்பிடுவது இட்லியே அல்ல.  உங்கள் இல்லத்திலேயே அரைத்துச் சாப்பிடுவதுதான் இட்லி.  இன்னொரு நுணுக்கமும் சொல்கிறேன்.  இதையும் இதுவரை எழுதியதில்லை.  இட்லி வேகின்றது அல்லவா, வெந்து முடிந்ததும் இட்லிப் பானையிலிருந்து இட்லி எடுக்கப்பட்டு நேராக உங்கள் தட்டுக்கு வராமல் ஏதோ ஒரு பாத்திரத்துக்குப் போய் – பிறகு –  உங்கள் தட்டுக்கு வந்தால் அதற்குப் பெயரும் இட்லி அல்ல.  இட்லி தட்டில் விழும்போது ஆவி பொங்கி வர வேண்டும்.  அதற்குப் பெயர்தான் இட்லி.  இப்போதெல்லாம் வீடுகளில் இட்லியை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி வைத்து விட்டு பிறகு சாப்பாட்டு மேஜைக்குக் கொண்டு வந்து பரிமாறுகிறார்கள்.  அதெல்லாம் ரொம்ப ஹராம். 

சரவண பவனிலும் ஆவி பறக்கும் இட்லி வரும்.  அது ஆர்ட்டிஃபீஷியல் ஆவி.  முக்கால் மணி நேரத்துக்கு முன்பு போட்டு, பாத்திரத்தில் எடுத்து வைத்த இட்லியை அவனில் (oven) வைத்து எடுத்து வருவார்கள்.  அது ஆணுக்குப் பெண் வேஷம் போடுவதைப் போன்றது.

இப்படி மூன்று ஆண்டுகள் நானும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும் ராமசேஷனும் இட்லிக்காக மிகக் கடுமையான கள ஆய்வுகளை மேற்கொண்டோம்.  சும்மா ஜாலிக்காகச் சொல்லவில்லை.  மைலாப்பூர் பஸார் தெருவில் அய்யர் மெஸ்ஸில் அப்படி இட்லி கிடைக்கும் என்பார்கள்.  அங்கே போவோம்.  அங்கே போவோம் என்பது ரெண்டே வார்த்தை.  கண்ணிமைக்கும் நேரத்தில் தட்டி விடலாம்.  ஒருநாள் நாங்கள் அங்கே போனது ஒரு சிறுகதை.  ஒரு பூனை மட்டுமே ஏறிச் செல்லக் கூடிய சிமெண்ட்டால் ஆன  பாழடைந்த சுழல் படிக்கட்டுகளை ஏறிச் சென்றால் முதல் மாடியில் அய்யர் மெஸ் என்று இருந்தது.  உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஏறினோம்.  ஆனால் போர்டு மட்டும்தான்.  மெஸ்ஸை மூடி ஒரு மாதம் ஆயிற்று.  போகாத இடமே இல்லை.  கடைசியில் தெற்கு மாட வீதி ராமகிருஷ்ண மடத்துத் தெரு சந்திக்கும் முனையில் உள்ள சங்கீதா சிற்றுண்டிச் சாலையில்தான் நான் குறிப்பிட்ட ஆவி இட்லியைக் கண்டு பிடித்தோம்.  மிக அருமையான மிளகாய்ப் பொடி, நல்லெண்ணெய், சின்ன வெங்காய சாம்பார், சட்னி எல்லாம் உண்டு.  காஃபியும் பிரமாதம்.  எல்லாம் ஆறு மாதத்துக்கு முன்னால் கதை.   

ராயர் கஃபே எல்லாம் தமிழ்நாட்டின் கதைதான்.  சோழர் காலத்திய தமிழன் கிழக்கே கடாரம் வரை, மேற்கே ஆஃப்ரிக்கா வரை சென்று வென்றிருக்கிறான்.  இப்போது அவன் கூலித் தொழிலாளர்களாக இல்லாத இடமே இல்லை.  சங்கத் தமிழ் வளர்த்தவனுக்கு இன்று தமிழே எழுதத் தெரியவில்லை.  அப்படியாகி விட்டது ராயர்.  ராயர் கஃபேயின் சிறப்பு என்ன?  இட்லி இட்லித் தட்டிலிருந்து எடுக்கப்பட்டு நேராக நம் இலையில் வந்து விழும்.  ஆவி பறக்க பறக்க.  முகத்தையே கொஞ்சம் எட்டத்தான் வைத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு பந்தியில் ஸ்டூலில் இடம் இருந்தாலும் பந்தி முடிந்துதான் அடுத்த பந்தியில் அமரலாம்.  அப்போதுதான் இட்லி ஈடு ஈடாக எடுத்து சூடாக வைக்க முடியும்.  இப்போது சூடு இட்லியே காணோம்.  ஒரே தலைமுறையில் கலி முற்றுமா?  ராயர் கஃபேவுக்குச் செல்லுங்கள்.  சேட்டுகளின் ஒரே தள்ளுமுள்ளு.  இடம் கிடைக்கவே அரை மணி நேரம் ஆகிறது.  சரி, சூடான இட்லி எங்கே போச்சு?  ஸ்விக்கி, ஸொமாட்டோ ஆட்களுக்குப் போய் விடுகிறது.  குண்டானில் போட்டு வைத்துள்ள ஆறின இட்லிதான் நமக்கு.  சென்னையின் பரிபாஷையால் மனசுக்குள் திட்டி விட்டு வந்தேன். 

இப்படியெல்லாம் கள ஆய்வு செய்துதான் அந்தத் தெற்கு மாடவீதி சங்கீத ஓட்டலைக் கண்டு பிடித்தோம்.  பெயரில் கவனம் தேவை.  வீதிக்கு வீதி சங்கீதா தென்படும்.  அதெல்லாம் டுபுக்கு.  இந்தத் தெற்கு மாடவீதியும் மட் ரோடும் சந்திக்கும் இடத்தில் உள்ளதுதான் சூடான இட்லிக்கு உகந்தது. 

சரி, இந்த முதுகுவலிக்கு என்ன செய்வது?  எங்கே பிராமணன் மாதிரி புலம்ப வேண்டியதுதான் நான்.  சூரிய நமஸ்காரம் ஒன்றே போதும்.  வாழ்நாள் பூராவும் மருத்துவர் பக்கமே போக வேண்டாம்.  இந்த உடம்பும் பாங்காக்கின் Patpong தெருப் பெண்கள் மாதிரி நம் இஷ்டப்படி வளையும்.  சொன்ன பேச்சு கேட்கும்.   ஒரே ஒரு நமஸ்காரத்திலிருந்து துவங்கலாம்.  108 நமஸ்காரங்கள் செய்பவர்கள் எல்லாம் இப்போதும் இருக்கிறார்கள்.  நாம் ஒரு ஐந்து பண்ணலாம்.  ஒன்றுமே இல்லை.  வலி வந்தால் தரையில் படுத்து உருளுவேன் என்கிறார் ராகவன்.  அப்படி உருள்வதையே கொஞ்சம் படிப்படியாக, முறையாக உருண்டால் அதுதான் சூரிய நமஸ்காரம்.  பூனை செய்கிறது ஐயா, நாம் செய்தால் என்ன?  பூனை ஒரு நாளில் இருபது முறை சூரிய நமஸ்காரம் செய்கிறது.  பார்த்திருக்கிறீர்களா?  நாய்கள் செய்கின்றன.  கையை முன் தரையில் வைத்து தலையைத் தூக்க வேண்டியதுதான்.  கொஞ்சம் ரெண்டே ரெண்டு நிமிஷம் இந்த இந்துத்துவா பந்துத்துவா எல்லாவற்றையும் தூர வைத்து விட்டு பாபா ராம்தேவின் யூட்யூப் காணொலிகளைப் பாருங்கள்.  இந்த உலகத்திலேயே மிக அற்புதமான யோகா டீச்சர் அவர்தான்.  எனக்கு யோகா தெரிந்ததால் சொல்கிறேன்.  அவருடைய அரசியல் சமூகவியல் எல்லாம் முக்கியம் இல்லை.  யோகா நம் உடலுக்காக.  பட்பாங்காரிகள் மாதிரி உடம்பு சொன்ன பேச்சு கேட்க வேண்டுமா?  பாபா ராம்தேவின் சூரிய நமஸ்கார காணொலியைப் பாருங்கள்.  பார்க்கவும் முடியாத அளவுக்கு இந்துத்துவாவை வெறுக்கிறீர்களா, அழகழகான வெள்ளைக்காரக் குட்டிகள் சூரிய நமஸ்காரம் சொல்லித் தருகிறார்கள்.  அதையும் பார்க்கலாம். 

ஒரு காணொலி.

சில வெள்ளைக்காரிகள் உடலில் எந்த ஆடையும் இன்றி யோகா கற்பிக்கிறார்கள்.  சாமி, சத்தியமாக porn இல்லை. அப்புறம் ஏன் ஆடையின்றிக் கற்பிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.  ஒருவேளை யோகாவை இப்படிப் ப்ரமோட் பண்ணினால் இன்னும் யோகாவுக்கு ஆதரவு கூடும் என்று நினைக்கிறார்களோ என்ன கருமமோ.  அதைப் பார்த்தால் நம் உடம்புக்குத்தான் கேடு வந்து சேரும்.

நிறுத்திக் கொள்கிறேன். 

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai