மயிர்க் கூச்செறிதல்: சிறுகதை: அராத்து

இரவு திடீரென விழிப்பு வரும்போதெல்லாம் வஞ்சுளாவுக்கு போன் அடித்துப் பார்ப்பது   வழக்கமாகிப் போயிருந்தது செல்வேந்திரனுக்கு. இப்போதும் ரெஸ்ட் ரூமில் அமர்ந்து மொபைலில் மெசேஜ்களை கழித்துக் கொண்டிருந்தான். மூன்று நாட்களுக்கு முன் அவளிடம் இருந்து வந்த மெசேஜ் தான் கடைசி.  அதற்கு பதில் அனுப்புவதற்குள் ஆஃப்லைன் போனவள்தான்… பிறகு வரவேயில்லை.

“எனக்கு கொரோனா பாஸ்டிவ் டா.“

இதுதான் கடைசி மெசேஜ்.

வஞ்சு வஞ்சு என பாத்ரூமில் அமர்ந்தபடியே மந்திரம் போல சொல்லிக்கொண்டிருந்தான் செல்வேந்திரன்.

செல்வேந்திரனுக்கு வஞ்சுள வல்லியின் வேறு எந்த காண்டாக்டும் இல்லை. வஞ்சுள வல்லியின் கைப்பேசி எண் தெரியும். அவள் பெயர் வஞ்சுள வல்லி என்று தெரியும். வேறு எந்தத் தகவலும் தெரியாது. உறவினர்கள் யார், அப்பா அம்மா யார், தோழிகள் போன் நம்பர் என எந்தத் தகவலும் தெரியாது.

மேலிருக்கும் பத்தியில் ஒரு தகவல்தொடர்புப் பிழை உள்ளது. ஒரு விஷயத்தை சரளமாக சொல்லிக்கொண்டு போகும் போது ஏற்படும் தகவல் பிழைதான் அது. வஞ்சுளாவின் மார்பு சைஸ் , அவளுக்கு பிடித்த பேண்டி பிராண்ட், அவள் தொடையில் போட்டிருக்கும் டாட்டூ டிசைன், அவள் அக்குளில் இருக்கும் சிவந்த மரு, யோனியில் இருக்கும் சின்ன வெட்டுக்காயம் ,இதைப்போல கணக்கிலடங்காத  தகவல்களின்  கிடங்காகத் திகழ்ந்தான் செல்வேந்திரன்.

வஞ்சுளா முடி நீக்கி பயன்படுத்தி, அதனால் வரும் அலர்ஜிக்கு என்ன கிரீம் தடவுவாள் என்பது வரை செல்வாவுக்கு அத்துப்படி.

வஞ்சுளா முடி நீக்கி பயன்படுத்தும் நாளில் செல்வாவும் அதே பிராண்ட் முடி நீக்கி பயன் படுத்துவான். நேரம் குறித்து வைத்துக்கொண்டு, திட்டமிட்டு, சமகாலத்தில் இருக்கும் அனைத்து தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் பயன்படுத்தி, இருவரும் ஹெச் டி விடியோ கால் ஆன் செய்து வைத்துக்கொண்டு, முடி நீக்கி பயன் படுத்துவார்கள். விஞ்ஞான வளர்ச்சியால் ஈருடல் ஓர்மயிராக திளைத்து நிற்கும் தருணம் அது.

”ஏன்டா செல்லம்? நீ ட்ரிம்மர் யூஸ் பண்ணலாம் இல்ல?” என்று வஞ்சுளா கேட்டதுண்டு .

“இல்லடா கண்ணுகுட்டி , உனக்கு அது எவ்ளோ எரியும்? அதே எரிச்சலை நானும் அனுபவிக்கணும் டீ“ என்று பதில் அளித்து,  தங்கள் காதலை காவியத்தைத் தாண்டிய வேறொரு உயரத்தில் நிற்க வைத்த செல்வேந்திரன், இதுவரை உலகில் உருவாகியிருந்த உன்னதமான காதலையெல்லாம் முடி நீக்கியால் பொசுக்கப்படும் ரோமங்கள் போல பொசுக்கித் தள்ளினான்.

அப்போது , வஞ்சுளா “அப்டி எல்லாமே பண்ண முடியாதுடா கண்ணு. இப்ப பாரு எனக்கு பீரியட்ஸ் வரும்” என ஆரம்பித்ததும் அவளை மேலே பேச விடாமல் தடுத்து நிறுத்திய செல்வா , அதன் பின் வஞ்சுவுக்கு பீரிய்டஸ் வரும் போதெல்லாம் தானும் பேட் வைத்துக்கொள்ள ஆரம்பித்தான். தான் பேட் வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வஞ்சுளாவுக்கு அனுப்பி வைத்தான். அதைப் பார்த்த வஞ்சுளா காதலின் எல்லையைக் கடந்து கரைந்து போய் , கசிந்துருகி வெற்று மார்பிள் தரையில் வெகுநேரம் படுத்துக் கிடந்தாள்.

ரத்த பிசுபிசுப்புக்காக தக்காளி சாஸை பேடில் கொட்டி ஜட்டிக்குள் வைத்துக்கொள்ளும்  செல்வேந்திரன் , வயிறு வலிக்க வேண்டும் என்பதற்காக 100 கிராம் ஊற வைத்த அரிசி , கொஞ்சம் கொள்ளு , நான்கு ஸ்பூன் கோலமாவு , நான்கைந்து சாக்பீஸ் சாப்பிட்டு விட்டு கடைசியில் கொஞ்சமாக நிப்பான் வினிலக்ஸ் 5000 இண்டீரியர் பெயிண்டை 3 ஸ்பூன் குடித்து விட்டு படுப்பான். 

ஒரு தகவல் விட்டுப்போய் விட்டது என்று சொல்ல வந்தால் அது தன் பாட்டுக்கு இழுத்துக்கொண்டு போகிறது. அவர்களின் தனித்துவமான காதலைச் சொல்ல இது நேரமில்லை. அதையெல்லாம் நீட்டி முழக்கி சொல்லிக்கொண்டு இருந்து விட்டு,  மீண்டு வரும் வரை காலம் நிற்குமா என்ன? கதையே முடிந்து போயிருக்கும். பிறகு நிகழ்கால கதையைச் சொல்ல ஆரம்பித்து அதையே ஃப்ளாஷ் பேக்காக சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம். பின்னணித் தகவல்களை எல்லாம் விட்டு விட்டு நிகழ்காலக்  கதையைப் பார்ப்போம். சில அடிப்படைத் தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.

செல்வேந்திரன் சிங்கப்பூரில் வேலை செய்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்காரன். வஞ்சுள வல்லி திருச்சியில் இருக்கிறாள். இருவருக்கும் ஆன்லைன் மூலம் பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் ஆனார்கள். எந்த அளவு நெருக்கம் என்று புரிந்திருக்கும். ஒரு மனம் ஒத்த தம்பதியினர் தங்கள் மொத்த வாழ்நாளில் பேசிக்கொண்டதை விட 1000 மடங்கு அதிகமாக சாட்டிலும் , போன் கால் மூலமாகவும், விடியோ கால் மூலமாகவும் பேசி இருந்தார்கள்.

செல்வேந்திரன், தூக்கம் கெட்டுப்போய், வஞ்சுளாவை வேறு எப்படியாவது தொடர்பு கொள்ள முடியுமா ? அல்லது யாரிடம் வஞ்சுவைப் பற்றி கேட்பது என யோசித்துக்கொண்டு லேப்டாப் கீ போர்டில் தாளம் போட்டுக்கொண்டு இருந்தான்.

முட்டாள்த்தனமாக கூகிளில் ”வஞ்சுள வல்லி, திருச்சி “ என தேடினான். வஞ்சுள வல்லி நாச்சியார் தர்ஷன் டைமிங்க்ஸ் என்று ஒரு லிங்க் முதலில் வந்தது. “என் கடவுளின் தரிசனம் எனக்கு எப்போது கிடைக்கும்?” என்று முனகினான்.

வஞ்சுளாவின் மொபைல் எண்ணை கொடுத்துத் தேடினான் கூகிளில் .”லிஸ்டா டே நியுமராஸ் டெல் “ என தலைப்பிட்டு என்னவோ ஒரு வெப்சைட் வந்தது.வஞ்சுளாவின் ஃபேஸ்புக் பக்கம் போய் பார்த்தான். ப்ரொஃபைல் படம் இல்லாமல் , பெண் குரங்கு போல ஃபேஸ்புக் கொடுத்திருந்த ஒரு டெம்ப்ளேட் ப்ரொஃபைல் பிக்சரில் வஞ்சுளா அழுது கொண்டு இருந்தது போல இருந்தது.

வொர்க்ப்ளேஸ், ரிலேஷன், என எதிலும் காட்டுவதற்கு ஒன்றுமில்லை என ஃபேஸ்புக் நிர்த்தாட்சண்யமாகச் சொன்னது. ஃபிரண்ட் லிஸ்டில் சம்மந்தம் இல்லாத நான்கு பேரை காட்டியது. அவர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களுக்குக் கூட பதிலேதும் சொல்லாமல் ஃபேஸ்புக் சர்வரில் டேட்டாவாக உறைந்து போய் கிடந்தார்கள். இதே போல ஒரு கண்றாவியும் இல்லாத இந்த ப்ரொஃபைலைப் பார்த்துதான் செல்வேந்திரன் , ஹாய் என்று மெசேஜ் போட்டான் சில மாதங்களுக்கு முன்பு.

பதில் மெசேஜ் வந்ததும் ,

“நீங்க ரொம்ப சாஃப்டா?” என்று ஆரம்பித்தான். இந்த முதல் மெசேஜை செல்வாவே போய்ப் பார்க்க வேண்டும் என்றால் மூன்று மாதங்கள் இடைவிடாமல் மெசேஞ்சரில் மேல் நோக்கி ஸ்கிரால் செய்து கொண்டிருக்க வேண்டும்.

கூகிளில் மீண்டும் போய் , “corona patients in tamilnadu , vanjula valli “ என்று டைப் செய்து தேடிப் பார்த்தான்.

கொரோனா டெத் இன் டமில்நாடு ,

கொரோனா வைரஸ் டமில்நாடு ஹைலைட்ஸ் என்பதாக சில வலைத்தளங்கள் வந்தன.

எப்படியேனும் வஞ்சுளவல்லி தமிழக மருத்துவமனையில் படுத்திருக்கும் போட்டோவை கூகிள் மூலம் பிடித்து விட வேண்டும் என்பதாக செல்வேந்திரனின்  நடவடிக்கைகள் இருந்தன.

“டேரக்ட்லி கனக்ட் வித் கொரோனா பேஷண்ட்ஸ் இன் டமில்நாடு” என்ற லிங்கை கண்டு பிடித்து விட வேண்டும் என்று வெறி ஏறி மும்முரமானது அவன் முகத்தின் கோரம்.

“டேரக்ட் விடியோ கால் டூ கொரோனா ஃபீமேல் பேஷண்ட்ஸ் இன் டமில்நாடு” என்ற ஆப் லிங்கை தேடிக்கண்டடைய முடியும் என்ற மனதின் தன்னம்பிக்கை அந்தத் தூக்கக் கலக்கத்திலும் முகத்தில் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது.

“கொரோனா பேஷன்ட்  வஞ்சுளவல்லி ஈஸ் வெயிட்டிங்க் ஃபார் விடியோ சாட் வித் யூ” என்று ஏதேனும் விளம்பரம் இப்போது கூட கண்ணில் பட வாய்ப்பிருக்கிறது என்று நினைத்திருப்பான் போல , ஃபேஸ்புக்கின் ஆர்ட்டிஃபீஷியல் இண்டெலிஜென்ஸை குழப்பி , அதைப்போன்ற விளம்பரத்தை  வரவழைக்க முயன்று கொண்டிருந்தான்.

அசதியாகி தூங்கி விட்டான் செல்வேந்திரன் . கட்டிலை விட்டு வெளியே போன அவன் உள்ளங்கை அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தது. அதில், கொரோனாவில் போகுமா போகாதா என யாருக்கும் தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் உயிர் போல அவனது மொபைல் தத்தளித்துக்கொண்டிருந்தது. விடிகாலையில் அவன் எழுந்திருக்கும் வரையில் அந்த மொபைல் அவன் கையை விட்டு கீழே விழவே இல்லை. இதெல்லாம் மனிதனின் பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கம் தான் எனினும் , ஒரு முறை அவனே கீழே விழுந்து எழுந்து மீண்டும் கட்டிலில் ஏறி படுத்தபோதும் மொபைல் கீழே விழவில்லை என்பதை ஆராய்ச்சி செய்யத்தான் வேண்டியிருக்கிறது.

தூங்கி எழுந்ததும் , மொபைலில் வஞ்சுள வல்லி ஏதேனும் மெசேஜ் அனுப்பி இருக்கிறாளா என்று பார்த்தான். ஏதுமில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து மீண்டும் ஆன் செய்து பார்த்தான்.

“யுவர் அவய்லபிள் பேலன்ஸ் இன் தி அக்கவுன்ட் நம்பர்” என ஆரம்பித்து சிங்கை டாலர் 36 .05 என ஒரு எஸ் எம் எஸ் வந்தது.

தன் அறையில் இருந்து வெளியே வந்து கிச்சனுக்குள் நுழைந்து கெட்டிலில் பிளாக் டீ போட்டான். அந்த அபார்ட்மெண்டில் இருக்கும் மற்றவர்கள் நடமாட்டம் கிச்சனில் இல்லை. கிச்சனில் இருந்து வெளியே பார்த்தான். சாலை தெரிந்தது. ஒரு கார்  சிங்கப்பூரை விட்டு நியூசிலாந்துக்கு போவது போல வேகமாகப் போய்க்கொண்டு இருந்தது.

மீண்டும் தன் அறைக்குத் திரும்பி , தன் மொபைலை எடுத்து “கொரோனா உதவிக் குழு தமிழ்நாடு “ என்று தேடினான்.

சில குழுக்கள் வந்தன.

நம்பிக்கையுடன் தேநீர் அருந்தினான்.

அந்த குழுக்களில் ஒவ்வொன்றாக , ஜாயின் செய்தான். டாய்லெட் போனான். மீண்டும் வந்து படுத்து சில நிமிடங்கள் தூங்கினான்.

தூங்கி எழுந்து பிரட் எடுத்து ஜாம் தடவி சாப்பிட்டான். ஒரு பழச்சாறு பாக்கெட் எடுத்து குடித்தான்.

சில குழுக்களில் இவனை அனுமதித்து இருந்தார்கள். அந்தக் குழுவில் இருக்கும் சிலரை தொடர்பு கொண்டு , அதில் திருச்சியில் இருக்கும் ஓரிருவரைப் பிடித்தான்.

“எனக்குத் தெரிந்த ஒருவர் , வஞ்சுள வல்லி. அவர் கொரோனா பேஷண்டாக திருச்சியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தகவல் தெரியவில்லை. எந்தத் தொடர்பும் கிடைக்க வில்லை. விசாரித்து ஏதேனும் தொடர்பு எண் கொடுக்க முடியுமா “

இந்த மெசேஜை காப்பி செய்து பலருக்கும் பேஸ்ட் செய்தான். தொடர்ந்து லேப்டாப்பில் அலுவல் வேலைகளில் ஈடுபட்டான்.

இன்பாக்ஸில் , தோழரே நீண்ட முயற்சிக்குப்பின் கண்டு பிடித்து விட்டோம். இதுதான் தொடர்பு எண் என” மெசேஜ் டிங்க் என்றது.

அந்தத் தொடர்பு எண்ணை அழைப்பதற்கு முன் சாப்பிட்டு விடலாம் என்று நினைத்தான் போல. மொபைலை எடுத்து கிராப் ஃபுட் ஆப்பை ஓப்பன் செய்தான். ஏதேனும் புது ரெஸ்டாரண்ட் சேர்ந்திருக்கிறதா என்று பார்த்தான். இல்லை. கடுப்பாகி வழக்கமாக சாப்பிடும் உணவையே ஆர்டர் செய்தான். சாப்பாடு வந்து சேரும் வரை ராக்கெட் போய் தன்னுடைய சுற்றுவட்டப் பாதையில் நிலைகொள்வதை ஒவ்வொரு நிலையாக டிராக் செய்து பார்த்துக்கொண்டு இருப்பது போல அந்த ஆப்பில் உணவின் ஸ்டேட்டஸை  பார்த்துக்கொண்டு இருந்தான். உணவை வைத்து வந்து விட்டது போல காலிங்க் பெல் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தால் உணவு வைக்கப்பட்டு இருந்தது. சாப்பிட்டு முடித்து குப்பைக்கூடையில் வீசிய பின், ஏசி போட்டு சில நிமிடங்கள் கண்ணை மூடிக்கொண்டு கிடந்தான்.

நடு மெத்தையில் அமர்ந்து கொண்டு மெசேஜ் மூலம் கிடைத்திருந்த அந்த எண்ணை அழைத்தான்.

ரிங்க் போன பின்பு எடுக்கப்பட்ட அந்த எண் கரகரப்பான குரலில், யாருங்க என்றது.

“வஞ்சுளவல்லி …”

“ நீங்க யாருங்க ?”

“நான் செல்வேந்திரன்னு , அவங்களோட …”

“அடங்கங்கோத்தா  …தேவடியாப்பயலே , நீ சிங்கப்பூர்தானே ?”

“ஆமா …ஆனா மரியாதையாப் பேசுங்க ப்ரோ.”

“என்னாது , மரியாதையா ? ஏன்டா நாயே ? விடியோல அவுத்துப்போட்டு மசிரை சிரைச்சிகிட்டு இருக்கீங்க , மெண்டலாடா நீங்க ?”

“அசிங்கமாப் பேசாதீங்க ப்ரோ. ஒரு பொண்ணோட மனசை உங்களுக்குப் புரிஞ்சிக்கத் தெரியலை”

“பன்னாடைப் பயலே , கல்யாணம் கட்டி , புள்ளையப் பெத்து எடுத்து இருக்கேன். எனக்கு அவளைப் புரிஞ்சிக்கத் தெரியலையா ? நானும் உன்னை மாதிரி , அவ முன்னால அவுத்துப்போட்டு மசிரெடுக்கணுமா ? அதான் புரிஞ்சிக்கறதா ? “

“அது மட்டும் இல்ல , அவ பெயினைப் புரிஞ்சிக்கணும் ப்ரோ “

“எது , தக்காளி சாஸ் கேர்ஃப்ரீல உத்தி  அதை ஜட்டில  வச்சிக்கிறதா ? ஏன் அதை குஞ்சை அறுத்துகிட்டு செய்ய வேண்டியதுதானே ? தமிழ்நாட்ல பொறந்த பயதானே நீ ? இவ வீட்டுக்குத் தீட்டானப்ப மட்டும் வச்சிப்பியா ? இல்ல ஒக்கா ஓத்தா தீட்டாவறப்பெல்லாம் வச்சிப்பியா ? “

“அசிங்கமா பேசாதீங்க ப்ரோ, அவளுக்குன்னு ஒரு மனசு இருக்கு. அதை நீங்க புரிஞ்சிக்கவே இல்ல. அவளுக்கு ஆர்கஸம்னா என்னான்னே தெரியலை.அந்த அளவுக்குதான் நீங்க வச்சிருந்து இருக்கீங்க. “

“ஆர்கஸமா ? அதல்லாம் எனக்குத் தெரியாதுடா பன்னிப்பயலே ..எதாச்சும் கொழப்பாத . ஏண்டா நாயே அங்க சிங்கப்பூர்ல எவ்ளோ சீனக்காரிங்க இருப்பாளுங்க. அவ கிட்ட எல்லாம் உன் பப்பை காட்டி நொட்ட வேண்டியதுதானே? அவல்லாம் உன் மூஞ்சில மூத்திரம் போறாளா? அவளுங்கட்ட புடுங்க வேண்டிதான? இங்க புள்ளையப் பெத்து வச்சிருக்கா , அந்த புள்ளையப் பாத்துக்க வுடாம , செரைக்க வச்சி விடியோ போட்டுட்டு இருக்கியாடா நாயே?”

“உங்க கோவம் புரியிது ப்ரோ. புள்ளைய நீங்களும் பாத்துக்க வேண்டியதுதானே? நீங்களும் தானே பெத்தீங்க? இதெல்லாம் உங்களுக்குப் புரியாது. வஞ்சுக்கு கொரோனான்னு கேள்விப்பட்டேன். அவ இப்ப எப்டி இருக்கா?”

“ஓ? என் புள்ளைக்கு சூத்து கழுவி வுட்டதெல்லாம் உன்கிட்ட நான் போட்டோ எடுத்து காட்டணும். இல்லன்னா , நீங்க வீடியோல செரைச்சிப்பீங்க ? நான் அமுக்கிகிட்டு இருக்கணும். அதான் கொரோனான்னு கேள்விப்பட்ட இல்ல , மயிரு வந்து பாக்க வேண்டிதானே ?”

“பேண்டமிக் ப்ரோ. ஃபிலைட் இல்ல. அதான் வர முடியலை. “

“இப்பதாண்டா கொரோனா ?குச்சுக்காரி மவனே… கண்டார ஓழி மவனே , 6 மாசமா போன்லதான நொட்டிட்டு இருந்த? வந்து பாத்து கூட்டிட்டு போயிருக்க வேண்டிதானே? இந்த மாதிரி மெண்டல் கேஸுன்னு தெரிஞ்சி இருந்தா நானே அனுப்பி வுட்ருப்பேன் இல்ல?“

“…..”

“என்னடா …சுன்னி , நக்கிப் புண்ட , அமுக்கமா இருக்குற?”

“சரி ப்ரோ , இப்ப இதல்லாம் பேச நேரம் இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டு உங்க நம்பரை செல்ஃப் சப்போர்ட் குரூப் மூலமா புடிச்சி இருக்கேன். அதுக்கு மரியாதை குடுங்க . வஞ்சுக்கு என்ன ஆச்சி ? இப்ப எப்டி இருக்கா ? ப்ளீஸ் அதை மட்டும் சொல்லுங்க.”

“அவ செத்துட்டாடா …புள்ளையையும் என்னையும் விட்டு போயிட்டாடா, நாறப்பயலே.“

“ஓஹ் ப்ரோ …இதைக் கேக்கவா நான் இவ்ளோ கஷ்டப்பட்டு உங்க நம்பரை கண்டு புடிச்சேன்? “

செல்வேந்திரன் கொஞ்ச நேரம் குலுங்கிக் குலுங்கி அழுகிறான்.

வஞ்சுள வல்லியின் கணவனுக்கு தான் கூட இவ்வளவு அழவில்லையே என்று முதன் முறையாகக் கொஞ்சம் குற்றவுணர்ச்சி வருகிறது. ஒருவேளை இந்த விடியோவில் முடி நீக்கிக்கொள்வதில் உண்மையில் ஏதேனும் உயர் ரக காதல் இருக்கிறதோ? தக்காளி சாஸ் ஊற்றி, பேட் வைத்துக்கொண்டு, பெயிண்ட் குடிப்பதிலும் ஒருவிதமான உச்சபட்ச காதல் உருப்பெருகிறதோ? அது ஒரு தூய்மையான பரிசுத்தமான அன்புதானோ? சங்க காலக் காதல்களில் தவறவிட்ட ஒரு கூறுதானோ இது? அல்லது காதல் நவீன வடிவம் பெறும் போது அது தன்னைத்தானே இப்படிப் புதுப்பித்துக்கொண்டு இதுவரை இருந்த கதல்களை எல்லாம் காலில் போட்டு மிதிக்கிறதோ? இவன் ஒரு நவீன ரோமியோதானோ? என்றெல்லாம் அறிவுஜீவித்தனமாக சிந்திக்க அவன் மூளை இடம் கொடுக்க வில்லை மற்றும் அவனால் முடியாது எனினும் , அவன் மூளையின் ந்யூரான்களின் , கெமிக்கல்களின் மாற்றம்  ஒரு அறிவு ஜீவி மூளையில் நடந்தால் எப்படி இருக்கும்? என்ன மாதிரியான சிந்தனை எல்லாம் அந்த அறிவு ஜீவிக்கு வரும் என ஒப்பிட்டுப் பார்த்து இப்படித்தான் சிந்திப்பான் என ஒரு மாதிரி குத்துமதிப்பாக ஒரு முடிவுக்கு வந்து  எழுத வேண்டியிருக்கிறது.

அழுகை முடிந்ததும், கேவல் தணிந்ததும்,

“ப்ரோ, கடைசியாக ஒரு ஹெல்ப் “ என்கிறான் செல்வேந்திரன்.

“சொல்லுங்க ப்ரோ “ என்று தணிகிறான் கணவன்.

“வாட்ஸப்ல என் விலாசம் அனுப்பி வைக்கறேன். அவ கடைசியா கொரோனாவுல சாவறப்ப போட்டிருந்த டிரஸ் . ….அது பிரா, பேண்டியா கூட இருக்கலாம். அதை எனக்கு பக்காவா பேக் பண்ணி கூரியர்ல அனுப்பி வைங்க ப்ரோ. அவள சாகடிச்ச அதே கொரோனா வைரஸ்ல நானும் சாகணும் ப்ரோ.“