145. ஹெம்லாக் விஷத்தைக் கொடுக்காததற்காக நன்றி!

தமிழ்க் கலாச்சார சூழலில் ஒரு எழுத்தாளன் தன்னை எங்கே பொருத்திக் கொள்கிறான் என்பதுதான் என்னுடைய இத்தனை நாள் புலம்பல் கட்டுரைகளின் சாரம்.  பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் ஒரு தினசரி ஆசிரியரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.  நெருங்கிய நண்பர்.  போனேன்.  ஒரு பாட்டிலில் ஒரு திரவத்தில் ஒரு மனிதக் கட்டை விரல் மிதந்தது.  கூடவே கடிதம்.  சுருக்கமான கடிதம்.  இன்ன நடிகரிடம் இதை சேர்ப்பித்து விடவும்.  மற்றும் சில விவரங்கள்.  அன்னாருடைய படம் நன்றாக ஓட வேண்டும் என்று பிரார்த்தனை.  நான் அவருடைய வெறித்தனமான ரசிகன்.  நடிகரின் பெயரை இங்கே குறிப்பிட்டு இப்போது மீண்டும் அவர் ரசிகர்களிடமிருந்து புழு சாபம் பெற நான் விரும்பவில்லை.  மேலும் நடிகரின் பெயரைப் போட்டும் பயன் இல்லை.  ஏனென்றால், ஒட்டு மொத்த சமுதாயமே அப்படித்தான் இருக்கிறது என்பதை இந்த ஒரு வாரத்தில் அறிந்து கொண்டேன்.  எனக்கு இப்படிப்பட்ட விரல் பலி தியாகிகள் மீது அசூயையும் பரிதாபமும் இருந்து வந்தது.  அதுவும் கூட கடந்த வாரம் நடந்த சம்பவங்களால் மறைந்து விட்டது.  எழுத்தாளர்களுமே இவ்விதமான விரல் பலி தியாகிகள் என்பதை சமீபத்தில் தெரிந்து அதிர்ந்தேன். 

கனிந்து விட்டேன் கனிந்து விட்டேன் என்கிறீர்களே, இதுதான் கனிந்ததன் லட்சணமா என்று கேட்டு ஒரு நண்பர் எழுதியிருந்தார்.  கனிந்து விட்டதாக மற்றவர்கள் சொல்கிறார்கள்.  மனைவி சொல்கிறாள்.  எனக்குமே அப்படித்தான் தோன்றியது.  இல்லாவிட்டால், ஜல்லிக்கட்டின் போதே அதற்கு எதிராக எழுதி மரண பலி ஆகியிருப்பேன்.  கலாச்சாரத்தின் பேரால் மாடுகளைத் துன்புறுத்துவது ஆகாது என்பது ஒரு பிராணி நலம் பேணுபவனான எனது பார்வை.  இந்த என் சொந்தக் கருத்து மற்றவர்களின் நம்பிக்கையை அவமானப்படுத்துகிறது என்று என்னைக் கொன்று போட்டிருப்பார்கள்.  அப்போதைய உணர்ச்சிகரமான சூழல் அப்படி. 

நான் சொல்வது தவறாகக் கூட இருக்கலாம்.  சரி, ஒருத்தர் ஒரு விஷயத்தைப் பற்றித் தவறாக நினைப்பதற்குக் கூட உரிமை இல்லையா ஐயா?   நீங்கள் நினைப்பது போலவே அடுத்தவனும் நினைக்க வேண்டும் என்பது எப்பேர்ப்பட்ட அராஜகம்! அடுத்து காஷ்மீர் விசேஷ அந்தஸ்தை ரத்து செய்தது.  அதிலும் என் கருத்து எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், இடதுசாரிகள், முஸ்லீம்கள் ஆகியோரின் கருத்துக்கு எதிராக இருந்தது.  நான் பல ஆண்டுகளாகவே காஷ்மீரின் விசேஷ அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்று எழுதி வந்தவன்.  அடுத்து, குடியுரிமைச் சட்டம்.  அதிலும் என் கருத்து மேற்கண்ட நான்கு சாராரின் கருத்துக்கு மாற்றாகவே இருந்தது.  ஆக, இம்மாதிரி நேரங்களிலெல்லாம் நான் எதுவுமே எழுதாமல் அமைதியாகத்தான் இருந்தேன்.  கருத்துச் சுதந்திரம் என்று எண்ணி எழுதிவிடவில்லை.

இரண்டு காரணங்கள்.  ஒன்று, அரசியலில் மட்டும் அல்லாமல் சமூக அளவிலேயே மக்களின் மனோபாவம் ஃபாஸிஸத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.  ஒரு சாராரிடம், சகிப்புத்தன்மை இன்மை.  இன்னொரு சாராரிடம், அடிப்படைவாதம்.  மூன்றாவது கட்சியோ, என்னுடைய கடவுளை முடிந்தவரை பரப்பு.  இந்தச் சூழலில் என் அரசியல், சமூக அபிப்பிராயங்கள் ஃபாஸிஸ்டுகளின் பக்கம் இருப்பதாக அர்த்தம் கொள்ளப்படும் என்பதால் கருத்து சொல்லவில்லை.  மேலும்,  இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரம் என்பதெல்லாம் சும்மா வெறும் பேச்சு என்று எனக்கு நன்றாகத் தெரியும்.  இடதுசாரிகளும் புத்திஜீவிகளும் எழுத்தாளர்களும் கருத்துச் சுதந்திரம் பற்றி வாய் கிழியப் பேசுவார்கள்.  ஆனால் தங்கள் கருத்துக்கு மாற்றாகப் பேசினால் கொலை செய்யவும் அஞ்சமாட்டார்கள்.  உதாரணமாக, பெருமாள் முருகனுக்குக் கொலை மிரட்டல் விடப்பட்டது.  பெ.மு.வுக்கு ஆதரவாகத் திரண்டது இடதுசாரி.  அப்போது நான் வாயை மூடிக் கொண்டுதான் இருந்தேன்.  ஒரு இடதுசாரி என்னை மாட்டி விட வேண்டும் என்றே பெ.மு. பற்றி என் கருத்தைக் கேட்டு, அவருடைய எழுத்து குப்பை என்று நான் சொல்லவும் பொதுமேடையிலேயே கொலை மிரட்டல் விட்டு, ஏழெட்டு ரவுடிகளை அழைத்து வந்து அடிக்க முயன்று, எங்கே போனாலும் விட மாட்டேன் என்று சவால் வேறு விட்டதால் ஒரு வாரம் போலீஸ் பாதுகாப்போடு இருந்தேன்.  கொலை மிரட்டல் விட்டது ஒரு கம்யூனிஸ்ட்.  கம்யூனிஸ்டுகள்தான் பெருமாள் முருகனுக்குக் கொலை மிரட்டல் விட்டதற்கு நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள்.  அவர்களில் ஒருவர்தான் எனக்குக் கொலை மிரட்டல் விட்டவரும்.  சரி, ஏதோ ஒருவர் அப்படிச் செய்து விட்டார்.  மற்றவர்கள் இது பற்றி ஒரு கண்டனம் தெரிவித்திருக்கலாம் இல்லையா? யாருமே வாயே திறக்கவில்லை. ஏன் செயலில் காட்டாமல் சொல்லோடு நிறுத்தி விட்டார் என்று மனதுக்குள் நினைத்திருக்கலாம். 

அதேபோல் கருணாநிதி இறந்த போதும் எல்லோரும் அவர் பற்றிக் கட்டுரைகள் எழுதிப் புகழாரம் சூட்டிக் கொண்டிருந்தபோது நானும் நான்கு கட்டுரைகள் எழுதினேன்.  விமர்சனங்கள்.  ஆனால் தளத்தில் போட அச்சப்பட்டு, முகநூலில் மட்டுமே பதிவேற்றினேன்.  வேறு எங்குமே பிரசுரிக்கவில்லை.  ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் கேட்ட போது கூட உயிருக்கு பயம் என்று சொல்லி அப்படியே அமுக்கி விட்டேன்.  என்னதான் யாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் ஜாதி என்றாலும் கல்புர்கி போல் வேண்டுமென்றே தலையைக் கொடுத்துத் தலையை இழக்க எனக்கு இஷ்டமில்லை.  இதையெல்லாம்தான் கனிந்த நிலை என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.  பத்தாண்டுகளுக்கு முன்பு என்றால் இதையெல்லாம் எழுதி வைத்திருப்பேன்.  ஆனாலும் கவனியுங்கள், கருணாநிதி எவ்வளவு பெரிய தலைவர், அவரைப் பற்றிய விமர்சனத்தை அவரது மறைவு தினத்தின்போது என்னால் எழுத முடிந்தது.  யாரும் செத்துப் போ, புழுத்துப் போ என்றெல்லாம் சொல்லவில்லை.  சொல்லப் போனால், எந்த வசையும் கிடைக்கவில்லை.  ஆனால் எப்போதுமே சினிமாக்காரரை விமர்சித்தால் நம் உயிர் நம் கையில் இல்லை.  இப்போதாவது வெறும் சாபத்தோடு விட்டார்கள்.  பெரியவர் என்றால், என்னைத் துண்டு துண்டாக வெட்டியே போட்டிருப்பார்கள்.  நானும் அப்படி ஒரு காலகட்டத்தில் உயிரோடு இருந்தேன் என்றால், என்னால் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது, பேசாமல் ஒரு டிக்கட் எடுத்துக் கொண்டு மஸாய் மாரா ஓடி விடுவேன்.  மஸாய் மாரா ஏன் என்றால், அந்தக் கானகத்தில்தான் வைஃபை கிடையாது.  வெளியுலகத் தொடர்பே இல்லாமல் யானை புலி சிங்கங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கலாம். 

திரும்பவும் சொல்கிறேன்.  தமிழில்தானே சொல்கிறேன்.  புரிந்து கொள்ளுங்கள்.  துக்கம் கொண்டாடுங்கள்.  அதில் தப்பே இல்லை.  நானும் எஸ்பிபி ரசிகன் தான்.  உங்கள் கண்ணீரை விட அதிக வார்த்தைகளை அவர் உயிரோடு இருந்த போதே ஆனந்த விகடனில் மனம் கொத்திப் பறவையில் எழுதியிருக்கிறேன்.  அவருடைய உன்னை நான் பார்த்தது என்ற ரகளையான பாடலைப் பற்றி.  என்னுடைய புகார் எல்லாமே, விரல் வெட்டி தியாகிகளான எழுத்தாளர்களைப் பற்றித்தான்.  கீழே உள்ள ஒரு பத்தி ஒரு எழுத்தாளனின் பதிவு.  எப்படிப்பட்ட எழுத்தாளன்?  சமகாலத் தமிழ்ச் சிறுகதையின் உச்சபட்சம் என்று ஜெயமோகன் சொல்கிறார்.  இன்னொரு பக்கம் ஜெயமோகன் ஒரு எழுத்தாளரே இல்லை என்று சொல்கிற, எந்த சமகால எழுத்தாளனையுமே அங்கீகரிக்காத இன்னொரு எழுத்தாளரும் இவரது சிறுகதைகளைப் பாராட்டுகிறார்.  அவர் பாராட்டிய ஒரே எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர் இவர்.  அப்படிப்பட்ட உச்சபட்சம் எழுதுகிறார்:

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை என் காதில் அம்மாவின் குரலோ, வேறு யாருடைய குரலோ தினந்தோறும் ஒலிக்க வாய்ப்பிருந்ததில்லை.  ஆனால் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் குரல் ஒருநாள் தவறாமல் எனக்குக் கேட்டுக்கொண்டிருந்தது. சிறையிலிருந்த போது கூட யாராவது ஒரு சிறைத் தோழன் அவரைப் பாடிக்கொண்டிருப்பான்.

எம்.ஜி.ஆர். இரசிகர்களான எங்களுக்கு எஸ்.பி.பி. எங்களுடைய ஆள் என்ற ஒரு பிணைப்பிருந்தது. ‘ஆயிரம் நிலவே வா’ எனத் தொடக்கிவைத்த வாத்தியார் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’, ‘அவளொரு நவரச நாடகம்’, ‘பாடும்  போது நான் தென்றல் காற்று’ என ஒவ்வொரு படத்திலும் எஸ்.பி.பியை தன்னுடனேயே அழைத்து வந்தார். நடிகர் திலகத்துக்கு எஸ்.பி.பி. பாடியது மட்டும் குறைச்சலா என்ன! ‘பொட்டு வைத்த முகமோ’ பாடி அய்ம்பது வருடமிருக்குமா? இன்றுவரை பாரிஸில் நடக்கும் எந்த இலக்கியக் கூட்டத்தின் பின்னிரவும் இந்தப் பாடலைப் பாடாமல் முடிவதில்லையே.

‘மணியோசை கேட்டு எழுந்து’ என்றொரு பாடல். இருமிக்கொண்டே பாடுவார். என் பள்ளிக் காலத்தில் அந்தப் பாடல் மிகப் பிரபலம். கேட்டுப் பித்துப் பிடித்திருந்தோம். பொடியன்கள் லவ் லெட்டரில் கூட இந்தப் பாடலை எழுதுவார்கள். இசைஞானியோடு அவர் சேர்ந்த பாடல்களைப் பற்றி நான் என்ன சொல்வது!  எதைச் சொல்வது! ‘அந்தி மழை பொழிகிறது’ கேட்ட போதுதானே காதலிக்கவே ஆசை வந்தது.  

டி. ராஜேந்தர் இசையில் அவர் பாடிய பாடல்கள் அப்போது எங்கள் சுவாசமல்லவா. ‘வசந்தம் பாடி வர’ என மயங்கியும் “நானும் உந்தன் உறவை“ எனக் கலங்கியும் திரிந்தோமே. ‘வாசமில்லா மலரிது’வை தொடங்கும் போது எஸ்.பி.பி. சிரிக்கும் கசப்பான சிரிப்பே ‘ஒருதலைராகம்’ படத்தின் மொத்தக் கதையையும் சொல்லிவிடுமே!

ஏ.ஆர். ரகுமானின் இசையில் அவர் பாடிய ‘தங்கத் தாமரை மகளே’ பாடலுக்கு தேசிய விருது என்ற செய்தி வெளியாகியபோது அவர் பாரிஸில் பாடிக்கொண்டிருந்தார். K.J. ஜேசுதாஸும் அவரும் இணைந்து செய்த முதலாவது மேடைக் கச்சேரி அதுதான். கூட்டம் நிரம்பி டிக்கெட் இல்லையென்று  கதவை மூடிவிட்டார்கள். மண்டபக் கதவுகளை உடைத்துத் திறந்துகொண்டு இரசிகர்கள் உள்ளே நுழைந்தோம். ஒரு சிறிய பதற்றத்திற்குப் பிறகு எல்லாக் கதவுகளும் திறக்கப்பட்டுக் கச்சேரி நடந்தது. “அதாண்டா இதாண்டா“ பாடலை அவர் முழங்கிய போது பார்வையாளர் வரிசையிலிருந்த சிலர் மீது அருள் வந்து  ரஜினிபோல கைளை விசுக்கிக்கொண்டு குறுக்கும் நெடுக்கும் நடக்கத் தொடங்கிவிட்டார்கள். அப்போது பாட்டின் நடையை  எஸ்.பி.பி மாற்றிவிட்டார். பாரிஸ் ரஜினிகளின் ஆட்டத்திற்கு ஏற்ப அவர் பாடினார். அன்று என்னவொரு கொண்டாட்டம்!  

நான்கு வருடங்களுக்கு முன்பு கோவா விமான நிலையத்தில்  காத்திருந்தேன். எதிர்வரிசையில் பாடும்நிலா நின்றிருந்தது. அவரிடம் போய் பேசவெல்லாம் விரும்பவில்லை. அவரைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதுமானது என்பதால் பார்த்துக்கொண்டேயிருந்தேன். ஒரு சிறுமி அவரை நெருங்கி அவரது காலைத் தொட்டு ஆசிர்வாதம் பெற்றாள். நான் தூர நின்றே மனதால் வணங்கினேன். அது என் பண்பாட்டை வணங்குதல் போன்றது.  

இன்று லக்ஸம்பேர்க்கிலிருந்து ரயிலில் பாரிஸுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது மறைவுச் செய்தி கிட்டியது. ஒரு சிறிய குறிப்பை முகநுாலில் எழுதுவதால் என்னவாகி விடப்போகிறது என வெறுமையாகக் கிடந்தேன்.  கிட்டத்தட்ட 12 மணிநேரங்கள் கடந்திருக்கும் இவ்வேளையில் என்னால் எழுதாமல் இதைக் கடக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஏனெனில் நான் இழந்திருப்பது ஒரு வாழ்க்கை முறையை. ஒரு பண்பாட்டை.  

அஞ்சலி! அஞ்சலி! அஞ்சலி!

எழுதிய உச்சபட்சத்தின் பெயர் ஷோபா சக்தி.  இன்றைய தமிழ்க் கலாச்சாரத்தின் குறியீடு இந்த அஞ்சலிக் குறிப்பு.  இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு வணிக எழுத்தாளர் இப்படி எழுதலாம்.  புரிந்து கொள்வேன். ஒரு இலக்கியவாதி இப்படி எழுதியிருக்கிறார்.  இந்தக் கடிதத்தின் மனோபாவத்துக்கும் விரல் கொடுத்த தியாகியின் மனநிலைக்கும் உள்ள நூற்றுக்கு நூறு ஒற்றுமை உங்களுக்குப் புரிகிறதா?

இவரை விடுங்கள்.  நான் ஒருவரை தத்துவவாதி என நினைத்தேன்.  அது உங்கள் தப்பு என்று சொல்ல மாட்டார் என்று நம்புகிறேன்.  அவரும் ஒரு கவிதை எழுதி அஞ்சலி.  செய்யுங்கள்.  ஆனால் சென்ற மாதம்தானே ஒரு இசைக் கடவுள் இறந்து போனார்.  அதுவும் எப்படி?  பத்தாயிரம் ஆண்டு பாரம்பரியத்தைக் கொண்ட இந்திய இசையின் கடைசிக் கொழுந்து.  அவரோடு பத்தாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் முடிவுக்கு வந்து விட்டது.  இனி அவர் அளவுக்கு ஆன்மாவை இசையில் தோய்த்த மகான்களைக் காண்பது சாத்தியம் இல்லை.  அவர் பெயர் பண்டிட் ஜஸ்ராஜ்.  அவர் இறந்த போது நீங்கள் கவிதை பாடவில்லையே நண்பா?  அவரைக் கண்டால் எஸ்பிபி சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்குவார்.  பாலுவுக்குத் தன் உயரமும் தெரியும்; ஜஸ்ராஜ் யார் என்பதும் தெரியும்.  ஜஸ்ராஜ் ஓர் இசைக் கடவுள்.  பாலுவுக்குக் கடைசி வரை சாஸ்த்ரீய சங்கீதம் கற்றுக் கொள்ளும் ஆசை இருந்தது.  நேரமின்மையால் முடியவில்லை என்றார். 

இசையில் தோய்ந்த ஆன்மா என்றேன்.  அதன் பொருள் என்ன?  முதலில் இசை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இசைக்கும் ஜஸ்ராஜின் இசைக்கும் சம்பந்தமாவது உண்டா?  இன்னொரு ஆன்மா இருந்தது.  ஜஸ்ராஜுக்கு மூத்தது.  பேர் பிஸ்மில்லா கான்.  அவர் ஒரு மகாத்மா.  மனிதனாக நடமாடிய தெய்வம்.  அவர் பொய் சொல்ல மாட்டார் என்று நம்புகிறீர்களா?  நம்பாவிட்டால் இந்த வரியோடு இதைத் தூக்கிப் போட்டு விடுங்கள்.  நம்பினால் தொடர்ந்து படியுங்கள்.  அவருக்குப் பதினேழு பதினெட்டு வயது இருக்கும்போது நடந்தது போல.  நல்ல முதிய வயதில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் இதை நினைவு கூர்ந்தார்.  அவர் வாழ்ந்தது காசி இல்லையா?  காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிஸ்மில்லா முஸ்லீமாக இருந்தாலும் பரம்பரை பரம்பரையாக இவர்கள் குடும்பத்தினர்தான் கோவிலில் ஷெனாய் வாசிப்பது.  மாமாதான் பிஸ்மில்லாவின் குரு.  மாமாவுக்கு உடல்நலம் குன்றியிருந்த ஒரு சமயம் பிஸ்மில்லாவைப் போய் வாசிக்கச் சொல்கிறார்.  அப்போதே பிஸ்மில்லாவிடம், டேய் தம்பி, கோவிலில் உனக்குப் புரியாதது போல் ஏதாவது நடந்தால் ஒன்றும் பயந்து விடாதே, சகஜமாக இரு என்று சொல்லியிருக்கிறார்.  பிஸ்மில்லாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஒருநாள் ஜாமப் பூஜை முடிந்து குருக்கள் கிளம்பிய பிறகு பிஸ்மில்லா கர்ப்பக்கிருஹத்தில் தனியாக அமர்ந்து ஷெனாய் வாசித்துக் கொண்டிருக்கிறார்.  கர்ப்பக்கிருஹம் உள்ளே தாளிட்டிருக்கிறது.  இரவு பத்து மணி இருக்கும்.  கோவிலில் ஈ காக்கை இல்லை.  அப்போதெல்லாம் கோவிலில் கூட்டம் இருக்காது.  இப்போதுதான் பேராசை அதிகமாகி பக்தியும் அதிகமாகி விட்டது.  கண்களை மூடி தன்னிலை மறந்து வாசித்துக் கொண்டிருக்கிறார் பிஸ்மில்லா.  அப்போது அவர் நாசியில் ஒரு மணம்.  கண்களைத் திறந்து பார்த்தால் மூலவர் விஸ்வநாதர் கண்ணெதிரே நிற்கிறார்.  இவருக்கு ஏதோ மோடி மஸ்தான் வித்தை மாதிரி இருக்கிறது.  பயந்து போய் வேர்த்து விட்டது.  விஸ்வநாதர் வாயைத் திறந்து பயப்படாதே வாசி என்று சொல்ல, இவர் தொடர்ந்து வாசிக்கிறார்.  ஆனால் கொஞ்ச நேரத்துக்கு மேல் முடியவில்லை.  எழுந்து வந்து கதவைப் பார்க்கிறார். உள்ளே தாளிட்டபடியே இருக்கிறது.  வெளியிலும் பார்க்கிறார்.  எந்த சப்தமும் இல்லை.  மிரண்டு போய் வீட்டில் வந்து படுத்தேன்.  ஜுரம் வந்து விட்டது.  மறுநாள் மாமாவிடம் சொன்னேன்.  பயப்படாதே, இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் முதலிலேயே சொன்னேனே என்றாராம்.  இதை பகுத்தறிவாளர்கள் மனத்தோற்றம், ஹலூசினேஷன் என்பார்கள்.  ஆனால் பிஸ்மில்லா கான் இதை இன்னும் விவரித்துச் சொல்லியிருக்கிறார்.  இம்மாதிரியான இசையின் கடைசிக் கொழுந்துதான் ஜஸ்ராஜ்.  அவரது மரணம் உங்களிடம் ஒரு சிறிது சலனத்தைக் கூட எழுப்பவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியம் கவியே!

அந்தக் காரணத்தினால்தான் என் மௌனம் துறந்து இது விஷயம் எழுதத் தலைப்பட்டேன்.  விரலை வெட்டி அனுப்பிய அந்தக் காமர்மேருக்கும் இந்த எழுத்தாளருக்கும் என்ன வித்தியாசம்?  எதுவுமே இல்லை.  நோயாளியும் மருத்துவரும் ஒருவரே.  (ஆம், காமர்மேர்தான்.  காமன்மேன் என்றால் இரண்டு மரியாதை கெட்ட ன் வருகிறது.  நான் வீரப்பனையே மரியாதையாக வீரப்பர் என்று எழுதிய ஆள்.  நல்லவேளை, ஹிட்லருக்குத்தான் பெற்றோரே ன்-இல் முடியாமல் ர்-இல் முடிவது போல் பெயர் வைத்து விட்டார்கள்.

இப்போதும் நினைக்கிறேன்.  பாலு அந்த நிகழ்ச்சிக்குப் போகாமல் இருந்திருந்தால் இன்னும் பதினைந்து ஆண்டுகளாவது இருந்திருப்பார்.  ஆனால் அந்த நல்ல ஆத்மாவிடமிருந்து நீங்களெல்லாம் என்ன கற்றுக் கொண்டீர்கள்?  என் சக எழுத்தாளர்களின் அவலநிலை பற்றிக் கேள்வி கேட்டால், செத்துப் போ என்று சொல்வதைத்தானா?  இதுதான் வெகுஜனக் கலாச்சாரத்தின் இயல்பு என்கிறேன்.  Mass psychology of fascism.  மதக் கலவரங்களின் போது ஆயிரக்கணக்கான பேரைக் கொல்கிறார்களே, அவர்களெல்லாம் யாரென்று நினைக்கிறீர்கள்?  நரகத்திலிருந்து வந்த கொலைகாரச் சிப்பாய்களா?  இப்போது என்னைப் பார்த்து செத்துப் போ என்று சொல்பவர்கள்தான்.  1947இல் பாகிஸ்தானிலிருந்து வரும் ரயில் வண்டிகள் முழுவதும் இந்துக்களின் பிணங்கள்.  இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் ரயில் பெட்டிகள் முழுவதும் முஸ்லீம்களின் பிணங்கள்.  உள்நாட்டிலும் எங்கும் பிணக்காடு. 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31, நவம்பர் 1, 2, 3 தேதிகளில் மட்டும் தில்லியில் கொல்லப்பட்ட 3000 சீக்கியர்கள்.  பிறகு உலகமறிந்த குஜராத் படுகொலை.  பின்னர், சமீபத்திய தில்லி வெறியாட்டம்.  நல்லவேளை, தில்லிக் கலவரம் பெருமளவில் பரவாமல் நூறு என்ற எண்ணிக்கையோடு பிணச்சரிவு நின்றது.

மேற்கண்ட கலவரங்களில், படுகொலைகளில் ஈடுபடுவது யார்?  என்னால் பெயர் குறிப்பிடப்பட்ட ஜனரஞ்சக எழுத்தின் குறியீடாக விளங்கும் நல்ல மனிதர் தன் ஆதங்கத்தை முகநூலில் வெளிப்படுத்தினார்.  தங்கமான மனிதர்.  பாடகரில் எஸ்பிபி ஒரு தங்கம் என்றால் ஜனரஞ்சக எழுத்தில் இவர் ஒரு தங்கம்.  முகநூலில் எழுதியிருந்த ஆதங்கத்திலும் தன் பண்பையே வெளிப்படுத்தியிருக்கிறார்.  படித்தேன்.  அவரை அனாவசியமாக வருத்தப்படுத்தினோமே என்று வருந்தினேன்.  ஆனாலும் என்ன செய்ய, புதுமைப்பித்தனோடு அவரை ஒப்பிட்டு எழுத முடியாதே என்றும் குழம்பினேன்.  விஷயம் அது அல்ல.  அவருடைய பதிவுக்குப் பின்னூட்டம் இட்டிருக்கும் இருநூறு பேரும் என் மீது விஷத்தைக் கக்கியிருக்கிறார்கள்.  சந்தேகம் இருந்தால் உங்கள் முகநூல் பக்கத்தில் வெறுமனே சாரு நிவேதிதா என்ற இரண்டு வார்த்தைகளை மட்டுமே எழுதிப் பாருங்கள்.  வேறு எதுவுமே எழுத வேண்டாம்.  ஒரு நூறு பின்னூட்டம் வரும்.  அதில் கண்டபடி என்னைத் திட்டி, சாபமிட்டு எழுதுவார்கள்.  இவர்களெல்லாம் கும்பலாகத் திரளும்போதுதான் வன்முறைகளில் இறங்குகிறார்கள்.  இப்படித்தான் ஃபாஸிஸத்தி வெகுஜன உளவியல் (mass psycyology) உருவாகிறது.  கும்பல் மனோபாவம்.  இந்தப் படுகொலையில் ஈடுபடுபவர்களுக்குக் குடும்பம் குழந்தை அம்மா அப்பா எல்லோரும் இருப்பார்கள்.  சாமியெல்லாம் கும்பிடுவார்கள்.  ஆனால் பழி வாங்கும் ஆள் வேறு, குழந்தையைக் கொஞ்சும் ஆள் வேறு. ஒரே உருவம்தான்.  ஒரே பெயர்தான்.  ஒரே ஆதார் அட்டைதான்.  பழிவாங்கும்போது சைத்தான்.  குழந்தையைக் கொஞ்சும் போது உன்னதன்.  உளவியல் நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், பிரார்த்தனைக்காகத் தலைமுடியைக் காணிக்கையாக்குவது கூட தன் தலையை வெட்டிக் காணிக்கையாக்குவதன் அடையாளம்தான் என்று. அதனால்தான் ஒரு அரசியல் தலைவர் ஜெயிலுக்குப் போனபோது (ஊழல் குற்றச்சாட்டு) ஒரு தொண்டர் தன் நாக்கை அறுத்து திருப்பதி உண்டியலில் போட்டார்.  இப்போது சினிமா ரசிகர்களும் சக எழுத்தாளர்களும் என் நாக்கை அறுத்துப் போடத் துடிக்கிறார்கள். 

இன்றுதான் முகநூலில் படித்தேன்.  ப்ரூஸ்லி படத்தில் வரும் காட்சி பற்றி ஒரு நண்பர் விளக்கியிருந்தார்.  தண்ணீரை நீங்கள் தண்டிக்க முடியுமா?  பழி வாங்க முடியுமா?  விரலால் குத்தினால் தண்ணீர் உள்ளே போகும்.  குடுவையில் போட்டால் குடுவையில் கிடக்கும்.  அண்டாவில் போட்டால் அண்டா.  அப்படித்தான் நானும்.  உங்கள் வசைகளும் கோபமும் என்னைத் தீண்டாது.  டேய், இதெல்லாம் சும்மா வார்த்தைடா, உன்னை நேரடியாக உதைக்கணும் என்று சொல்லி உதைத்தாலும் அதற்காக நான் என்ன வருந்தவா முடியும்?  ஏனென்றால், எழுத்தாளர்களை சுட்டுக் கொல்வதே பொதுஜனத்தின் மரபு.  எழுத்தாளர்களை சிறையில் தள்ளுவதே சமூகத்தின் பழக்கம்.  தென்னமெரிக்காவில் எத்தனை எத்தனை எழுத்தாளர்கள் இப்படிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்!  எத்தனை எத்தனை எழுத்தாளர்கள் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்!  அதையெல்லாம் பார்க்கும்போது நீங்கள் செய்வது ஒன்றுமே இல்லை.  வெறும் அல்ப வார்த்தைகளால் திட்டுகிறீர்கள்.  அவ்வளவுதான். 

மீறி நீங்கள் காரியத்தில் இறங்கினாலும் நான் என் ஆசான்களை நினைத்துக் கொள்வேன்.  முதல் ஆசான் யேசு.  அவர் மட்டும் கொஞ்சூண்டு சமரசம் பண்ணிக் கொண்டிருந்தால் சிலுவையைத் தவிர்த்திருக்கலாமே?  யேசுவின் போதனைகளால் பதற்றமடைந்த யூதர்களின் பூசாரி யேசுவைக் குறி வைத்தனர்.  அதை அறிந்து கொண்ட யேசு தன் பிரசங்கங்களை ரகசியமாகவே செய்து வந்தார்.  விஷயங்களையும் நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்து, கதைகளின் மூலமே சொல்வார்.  பாதிப் பேர் அவர் சொல்வதை நம்புகிறார்கள்.  பாதிப் பேர் நம்புவதில்லை.  அதனால் அவர் அதிசயங்களை நிகழ்த்தத் தொடங்குகிறார்.  அதன் உச்சக்கட்டமாக பெத்தானி கிராமத்தில் லாசரஸ் என்ற செத்துப் போனவனைப் பிழைக்கச் செய்கிறார்.  அதுதான் உச்சம்.  யேசுவின் புகழ் பிரந்தியம் முழுக்கப் பரவுகிறது.  யூதப் பூசாரிகள் அதிர்ந்து போகிறார்கள்.  இதைத் தொடர்ந்து நடந்த ஒரு சம்பவம்தான் யேசுவின் வாழ்வையே புரட்டிப் போட்டது.  ஜெரூசலேமில் இருந்த யூத ஆலயத்தின் உள்ளே இருந்த சந்தைக்கடை வைத்திருந்தவர்களை அடித்து விரட்டி, ஆலயங்களை சந்தையாக மாற்றாதீர்கள் என்று கண்டித்தார்.  நம்முடைய புனித ஸ்தலத்தின் மீதே கை வைக்கிறானா என்று கொதித்தனர் யூதப் பூசாரிகள். 

உடனடியாக யேசுவின் மீது தெய்வ நிந்தனைக் குற்றம் சுமத்தப்படுகிறது.  யூதாஸ் தான் தன்னைக் காட்டிக் கொடுக்கப் போகிறான் என்பதும் அவருக்குத் தெரிகிறது.  ஆக, யேசுவின் வாழ்க்கையைப் பார்க்கும் போது அவர் முழுக்க முழுக்க ஒரு கலகக்காரனாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது.  யேசுவின் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றத்தின் தண்டனை மரணம்.  ஆனால் ஆளுநர் பிலாத்துவுக்கு அதில் இஷ்டமில்லை.  ஆனாலும் மொத்தப் பொதுஜனமும் யேசுவைக் கொல்லுங்கள் கொல்லுங்கள் என்று கூச்சலிடுகிறது.  பிலாத்து பொதுஜனத்தின் உணர்ச்சிவேகத்தினால் ஒரு கட்டாயத்துக்கு உட்பட்டே மரண தண்டனை விதிக்கிறார். அதுவும் சிலுவை மரணம்.  அக்காலத்தில் தெய்வ நிந்தனைக்கான தண்டனை கல்லால் அடித்துக் கொல்லுதல்.  மரணம் உடனடியாக நிகழ்ந்து விடும்.  சிலுவை மரணமோ மிகப் பெரும் உடல் வாதையைத் தரக் கூடியது.  அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களுக்கே சிலுவை மரணம் தரப்பட்டது.  அந்த தண்டனையை யேசுவுக்குத் தந்தார்கள்.

இவ்வளவு விரிவாக ஏன் எழுதுகிறேன் என்றால், என் பிரியத்துக்குரிய நண்பர்கள் பலரும் ’ஏன் இந்த நேரத்தில் இப்படி எழுதி வாங்கிக் கட்டிக் கொள்கிறீர்கள்?’ என்று கேட்பதால்தான்.  சாக்ரடீஸ் எப்படிச் செத்தார்?  மற்றவர்கள் புனிதமாக நினைத்ததை அவமரியாதையாகப் பேசுகிறார்.  இளைஞர்களின் மனதைக் கெடுக்கிறார். இதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.  சாக்ரடீஸை ஏதென்ஸ் நகர மக்கள் மாபெரும் புத்திஜீவி என்று கருதினாலும் ஒரு gadfly என்றே அவர் அறியப்பட்டார்.  வில்லங்கமான ஆள் என்று பொருள்.  புனிதங்களைக் கிண்டல் செய்பவர்.  ஹெம்லாக் என்ற விஷத்தைக் கொடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவர் நினைத்தால் பேசாமல் இருந்திருக்கலாம்.  அவர் எழுதிய நூல்கள் ஒன்று கூட இல்லை.  இளைஞர்களிடையே பேசிக் கொண்டே இருந்தார்.  அவர் பேசியதையெல்லாம் பிளேட்டோதான் தொகுத்து வெளியிட்டார்.  சமயம் பார்த்து எழுதுங்கள் என்று எனக்கு யோசனை சொல்லும் என் நலனில் அக்கறை கொண்ட நண்பர்களுக்கு நான் யேசுவின் கதையையும் சாக்ரடீஸின் கதையையும் படிக்கச் சொல்லி சிபாரிசு செய்கிறேன்.   

அதிகாரம் சமூகத்தின் கையில் இருக்கிறது.  கலைஞனும் தத்துவவாதியும் தனித்தே நின்று கொண்டிருக்கிறான்.  அவ்வப்போது கொல்லவும் படுகிறான்.  என்னுடைய இந்த இரண்டு ஆசான்களையும் மனதில் இருத்தியபடியே என் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்…   

***

கோபி கிருஷ்ணன் உரைகள் இரண்டும் தேவைப்படுபவர்கள் எனக்கு எழுதுங்கள். மாதச் சந்தா/ நன்கொடை அனுப்புபவர்களுக்கு அந்த உரைகள் தேவையென்றாலும் தயக்கமில்லாமல் எழுதுங்கள். சிலர் எழுதிக் கேட்டு நான் அனுப்பாமல் விட்டிருக்கலாம். அவர்களும் எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

சந்தா/நன்கொடை அனுப்ப முடிந்தவர்கள் அனுப்ப முயற்சி செய்யுங்கள்.

அடுத்த மாதாந்திர சந்திப்பு நவம்பர் முதல் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்திய நேரம் காலை ஆறு மணிக்கு நடைபெறும்.

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai