149. எஸ்.ரா., ஜெயமோகன், சாரு நிவேதிதா

இளங்கோவன், போவால்

நான் தில்லியில் இருந்த 1978-1990 கால கட்டத்தில் பல அரிதான நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவற்றைப் பற்றி அவ்வப்போது விரிவாக எழுதியும் இருக்கிறேன்.  கலைகளிலேயே ஆக இளமையானதும், எல்லா கலைகளின் சாத்தியப்பாடுகளையும் தன்னில் உள்வாங்கிக் கொண்டதுமான சினிமாதான் மக்கள் மனதை மிகவும் ஈர்க்கக்கூடியது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.  ஆனால் எனக்கு அதில் சந்தேகம் உண்டு.  கலைகளிலேயே மக்கள் மனதை மிகவும் அதிகமாக பாதிக்கக் கூடியது நாடகம்தான் என்பது என் கருத்து.  நாடகம் என்பது ஒரு சிறிய அளவிலான புரட்சி.   அங்கே 1982-இல் நான் பார்த்த ரத்தன் திய்யமின் இம்ஃபால் இம்ஃபால் என்ற நாடகத்தைப் பார்த்து நாடகம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன்.  அடுத்து, இப்ரஹீம் அல்காஸி, மோஹன் ராகேஷ், ஹபீப் தன்வீர், மராத்தி நாடகாசிரியர் விஜய் டெண்டூல்கர் என்று ஏராளமானவர்களின் நாடகங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.  தமிழில் அ. ராமசாமியின் துர்க்கிர அவலம், செ. ராமானுஜத்தின் கருத்த தெய்வத்தைத் தேடி போன்ற நாடகங்கள்.  அடுத்து கார்ஸியா லோர்க்காவின் நாடகங்களைப் பார்த்தேன்.  அவரது The House of Bernarda Alba என்ற ஒரு குறிப்பிட்ட நாடகத்தை என்னால் எந்நாளும் மறக்க இயலாது.  இதை ஒரு ஹிந்தி நாடகமாகப் பார்த்தேன்.  எண்பதுகளின் தொடக்கத்தில் பார்த்தது இன்னமும் காட்சி காட்சியாக ஞாபகம் இருக்கிறது.  அதேபோல் கிரேக்க நாடகங்கள்.  Sophocles, Euripides, Aeschylus, Aristophanes என்று பலருடைய நாடகங்களையும் திரும்பத் திரும்பப் பார்த்தேன்.  திரும்பத் திரும்பப் படித்தேன்.  படித்தேன் என்பது முக்கியம்.  நாடகம் நடந்த மறுநாள் ஆங்கில தினசரிகளில் வரும் மதிப்புரைகளை வெட்டி வைத்துக் கொள்வேன்.  அப்பத்திரிகை கட்டிங்ஸ் இன்னமும் என்னிடம் உள்ளன.  ஒரு நாடக வெறி பிடித்து அலைந்தேன்.  ஆனால் நான் ஒரு நாடகாசிரியன் இல்லை. இதே போன்ற வெறிதான் சங்கீதத்திலும்.  இல்லாவிட்டால் 35 ஆண்டுகளுக்கு முன்னால் வீணை எஸ். ராமநாதனின் சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம் நூலுக்கு மீட்சி பத்திரிகையில் மதிப்புரை எழுத முடியுமா? உலக சினிமா?  சொல்லவே வேண்டாம்.  வெறியோ வெறி.  தினமும் ஒரு உலக சினிமா.  பார்க்காத இயக்குனரே கிடையாது.  இப்போது இது எல்லாமே உங்கள் மொபைலில் விரல் நுனியில் கிடைக்கிறது. 

இந்தப் பின்னணியில்தான் மதுரை நாடக விழாவில் ஒரு திடீர் நாடகத்தை உருவாக்கி, இயக்கி அடி வாங்கியது.  அடித்தவர்கள், பொங்கியவர்கள் எல்லோரும் நாடகக் கலையை நான் அவமானப்படுத்தி விட்டதாகவே கருதினார்கள்.  நான் யோசித்தேன்.  எல்லா கலைகளையும் என் கண்ணே போல் கருதி அதற்காகவே வாழும் நான் எப்படி நாடகக் கலையை அவமானப்படுத்த முடியும்?  என்னிடமிருந்த TDR பத்திரிகைப் பிரதிகளைப் புரட்டினேன்.  The Drama Review என்ற அந்த அமெரிக்கப் பத்திரிகைக்குப் பெரும் பணம் கொடுத்து நான் சந்தாதாரனாக இருந்தேன்.  அதில் இருந்த நாடகப் புகைப்படங்களிலோ பாத்திரங்கள் யாரும் உடுப்பே போட்டிருக்கவில்லை.  ஓ, நாம் எத்தனையோ பரவாயில்லையே என்று நினைத்துக் கொண்டேன். 

அப்போதெல்லாம் எழுத்தாளர்களின் வேடந்தாங்கல் அமெரிக்க நூலகம்.  தில்லியில் கனாட் ப்ளேஸில் கர்ஸன் ரோட் ஆரம்பத்தில் இருக்கிறது.  சென்னையில் கதீட்ரல் ரோட் ஆரம்பம்.  கதீட்ரல் ரோட் நூலகத்துக்கு க.நா.சு. காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து போவது பற்றி பலரும் எழுதியிருக்கிறார்கள்.  இப்போது போல் இத்தனை துப்பாக்கிகள் இல்லை.  ஒன்றிரண்டு துப்பாக்கி நிற்கும்.  எங்கே என்று சைகையில் கேட்கும்.  லைப்ரரி என்று ஒரு ஒற்றை வார்த்தை.  உடம்பைப் பரிசோதித்து விட்டு உள்ளே விட்டு விடும்.  அதற்கப்புறம் மாலை வரை அங்கேதான் வாசம்.  அங்கெல்லாம் தேடின பிறகுதான் அகஸ்தோ போவால் (Augusto Boal) என்ற ஒரு நாடகக்காரரின் பெயர் தெரிய வந்தது.  அதற்கு முன்னால் எனக்கு போவால் பெயர் தெரியாது.  கேள்வி கூடப் பட்டிக்க மாட்டேன்.  உடனடியாக அவரது புத்தகங்களைப் படித்தேன்.  நான் மதுரையில் இயக்கிய நாடகம் போவாலின் Forum theatre என்ற கோட்பாட்டின்படி அமைந்திருந்ததை அப்போதுதான் தெரிந்து கொண்டேன்.  உடனடியாக வெளி என்ற நாடகத்திற்கான பத்திரிகையில் போவாலின் Theatre of the Oppressed என்ற நூலிலிலிருந்து Forum theatre மற்றும் Invisible Theatre என்ற பகுதிகளை மொழிபெயர்த்தேன்.  ஒரு முழுப்புத்தகம் அளவுக்கு நீளும் பகுதிகள் அவை.  நான்கு வெளி இதழ்களில் வெளிவந்தன அக்கட்டுரைகள். 

தில்லியில் இருந்ததால் இது சாத்தியமாயிற்று என்று சொல்லாதீர்கள்.  ஆப்ரஹாம் பண்டிதரின் கர்ணாமிருத சாகரத்தை எங்கே இருந்தாலும் படிக்கலாம்.  இந்த விஷயங்கள் எல்லாமே இன்று காலை முகநூலில் என் நண்பர் இளங்கோவனும் அகஸ்தோ போவாலும் இணைந்து இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது.  இன்றைய தினம் தமிழில் அகஸ்தோ போவால் பற்றித் தெரிந்தவர்கள் மூன்று நான்கு பேர் இருக்கும்.  இளங்கோவன் (சிங்கப்பூரில் வசிக்கும் நாடகாசிரியரான இளங்கோவன் அகஸ்தோ போவாலிடமே நாடகப் பயிற்சி பெற்றவர்), செ. ரவீந்திரன், வெளி ரங்கராஜன், அடியேன்.

எஸ்.ரா.வை எடுத்துக் கொண்டால் இந்திய வரலாறு பற்றி ஒரு எழுத்தாளனுக்கு என்ன தெரிந்திருக்க முடியும்?  ஆனால் எஸ்.ரா. ஒரு வரலாற்றுப் பேராசிரியராக உரு மாறி ஒரு பெரிய தொடரை எழுதினார்.  கார்ல் மார்க்ஸ் பற்றி ஒரு பேருரை.  மூன்று மணி நேரம்.  எப்படி முடிந்தது என்று அவரிடம் கேட்டேன்.  அந்த உரைக்காக ஒரு ஆண்டு படித்தேன் என்றார்.  ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய வேலை அவர் தனியாளாகச் செய்து கொண்டிருக்கிறார்.

ஜெயமோகன்.  கேட்கவே வேண்டாம்.  எல்லோருக்குமே பலஹீனமான இடங்கள் உண்டு.  எனக்கு விஞ்ஞானம், தொழில்நுட்பம் பலஹீனம்.  ஜெயமோகன் இதுவரை இசை பற்றி எழுதியதில்லை.  அதில் அவருக்கு ஆர்வமும் இல்லை.  என்னிடம் ஒரு பழக்கம் உண்டு.  எது பற்றி எழுதினாலும் அது பற்றித் தமிழில் என்ன வந்துள்ளது என்று பார்த்து படித்து விட்டே தொடங்குவேன்.  அப்படி ஒரு முறை எம்.எஸ். பற்றி எழுத வேண்டி வந்த போது தமிழில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் எப்போதும் போல் முன்னணியில் ஜெயமோகன் வந்து நிற்கிறார்.   ஜெயமோகன் தான் இசை பற்றி எழுத மாட்டாரே என்று ஆச்சரியப்பட்டுப் பார்த்தால் எப்போதும் போல் ஒரு அம்பது பக்கக் கட்டுரை. அவ்வளவையும் படித்தேன்.  டி.ஜே.எஸ். ஜார்ஜ் எம்.எஸ். பற்றி எழுதிய ஒரு ஆய்வு நூல் பற்றிய நீண்ட மதிப்புரை அது.  சூரியனுக்குக் கீழே உள்ள எல்லா விஷயங்களைப் பற்றியும் ஒருவர் எழுதுவது சாத்தியமே இல்லை.  ஆனால் சூரியனுக்குக் கீழே உள்ள எல்லா விஷயங்களையும் ஒரு நுண்ணுணர்வோடு அணுகத் தெரிந்திருக்க வேண்டும்.  தெரிந்திருந்தால் அவன் கலைஞன்.  Cradle of Filth என்ற இசைக்குழுவின் இசையை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று நான் ஜெயமோகனிடம் கேட்ட கேள்விக்கு அவர் எழுதியிருந்த பதிலை என் வாழ்நாளில் மறக்க இயலாது.  இசை பற்றி அவர் எழுதியிருக்காமல் இருக்கலாம்.  ஆனால் இசை குறித்த நுண்ணுணர்வு இல்லையேல் அந்த பதிலை எழுதியிருக்க முடியாது.  எனக்கு பதில் தெரியாததால்தான் அவரைக் கேட்டேன். 

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இன்று எங்களை விட மூத்தவர்கள் இருக்கிறார்கள்.  இந்திரா பார்த்தசாரதி ஒரு ஜீனியஸ்.  வண்ணநிலவனிடமிருந்து நான் வித்தை கற்றவன்.  பூமணி, வண்ணதாசன் எல்லோரும் இன்னமும் தீவிரமாக எழுதுகிறார்கள்.   ஆனாலும் ஏன் சகலரும் எஸ்.ரா., ஜெயமோகன், சாரு நிவேதிதா என்று மூவரைக் குறிப்பிடுகிறார்கள்?  பொதுவாக கலை சார்ந்த விஷயங்களில் ஒரு ஆழ்ந்த நுண்ணுணர்வோடு அணுகுதல் எங்கள் மூவருக்கும் கைவரப் பெற்றது.  மிகக் கடினமான உழைப்பைக் கோருகின்ற விஷயம் இது.  ஆனால் இது எல்லாமே விரல் நுனியில் கிடைக்கின்ற இந்தக் காலத்தில் யாருக்கும் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் தெரியவில்லை, போவால் தெரியவில்லை.  எதுவுமே தெரியவில்லை. 

இப்போது உங்களுக்குக் கிடைத்திருக்கின்ற வசதிக்கு நாங்கள் மூவர் என்றால் உங்களில் அறுவர் உதித்திருக்க வேண்டும்.  ஒருவர் கூட இல்லை.  நீங்கள் நல்ல கதை எழுதலாம்.  நாவல் எழுதலாம்.  ஆனால்… மேலே மீண்டும் படியுங்கள்.  என் மீது கோபம் கொள்ளாதீர்கள்.  நான் பெருமிதத்துடன் இதை எழுதவில்லை.  ஆழ்ந்த துயரத்துடன் எழுதியிருக்கிறேன்.  ஒரு எழுத்தாளனுக்கு அடிப்படையான சில கடமைகள் இருக்கின்றன.  என்னிடம் வரும் ஒருத்தனை நீ தேவிப்ரஸாத் சட்டோபாத்யாய எழுதின what is living and what is dead in Indian Philosophy என்ற நூலையோ Lokayata என்ற நூலையோ படித்திருக்கிறாயா என்று கேட்பேன்.  தமிழில் கரிச்சான் குஞ்சு மொழிபெயர்த்திருக்கிறார்.  இல்லை என்று சொன்னால், கிரேக்க நாடகாசிரியர் எழுதிய அத்தனை நாடகங்களையும் படித்திருக்க வேண்டும்.  அதுவும் இல்லையென்றால், அவன் சினிமாவுக்கு வசனம் எழுத மட்டுமே லாயக்கு.  நான் சொல்வது முரட்டு அடியாகத் தோன்றலாம்.  இதன் பொருள் உங்களுக்கு இன்னும் முப்பது ஆண்டுகளில் தெரியும்.  தெரியாமலே போனால் தமிழ் இலக்கியத்துக்கு விடிவு காலம் இல்லை.