150. தீண்டாமை

”ம்யூசிக்லாம் எங்க ஏரியால்ல, அங்கெ எப்டி நீ வர்லாம்?  ஏற்கனவே உனக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமே இல்லேங்கறேன், இதுல ம்யூசிக் வேறயா?  அதும் கருணாமிருத சாகரம்?  டேய், இவன வுட்டா எங்கிங்கியோ போய்டுவான் போலருக்கே?” என்று ஒரு குரல் கேட்கிறது.  முகநூலில் எழுதியது போதாது என்று எல்லோருக்கும் வாட்ஸப்பிலும் அனுப்பியிருக்கிறது.  விஷயம் என்ன தெரியுமா? கருணாமிருத சாகரம் வெளியானது 1917.  அதில் உள்ள கண்டுபிடிப்புகளோடு மகா வைத்தியநாத சிவன் முரண்பட்டார் என்று சொல்லி விட்டேன் அல்லவா?  சிவன் இறந்தது 1893.  ”டேய் நாயே, எப்பிர்ரா 1893இல் செத்தவர் 1917-இல் வெளிவந்த புஸ்தகத்தை மறுத்திருக்க முடியும்? ஏண்டா என் நீங்க மூணு பேரும் இப்டி ஏன் உசிரை வாங்கறீங்க?  அங்கெ ஒரு பக்கம் பார்த்தா ராமகிருஷ்ணனுக்கு எதுவுமே தெர்ல.  ஜெயமோகனோ சுத்த தண்டம்.  இந்த சாருங்கிற நாய்க்கோ மூளையே இல்ல.  நான்லடா பெரிய பிஸ்தா.  ஒண்ணுந்தெரியாத ஒங்களை ஏண்டா இந்த ஒலகம் கொண்டாடுது?  இருங்கடா, ஒங்களை வைக்கிறண்டா வைக்கிற எடத்துல வைக்கிறண்டா, மொதல்ல இந்த சாரு நாயி.”

இப்படித்தான் பைத்தியத்தின் மூளை யோசிக்கிறது.  என்ன செய்ய?  வள்ளலாரையே போட்டு உண்டு இல்லை என்று பண்ணினார் நாவலர்.  நான் பாட்டுக்கு எந்தப் பைத்தியம் என்ன கத்தினால் நமக்கு என்ன என்று வேலையைப் பார்த்துக் கொண்டு போகிறேன்.  இதற்கிடையில் நண்பர்களின் அன்புத் தொல்லை வேறு.  மேட்டர் வாட்ஸப்பிலும் வந்து விட்டதைப் பார்த்து என் நண்பர் அதிர்ந்து விட்டார்.  ஐயோ, சாரு எப்படி இந்த மாபெரும் பிழையை கவனிக்காமல் விட்டார்?  உடனே பைத்தியத்தின் வாட்ஸப் மெஸேஜை எனக்கு ஃபார்வர்ட் செய்து விட்டார். 

நூறு ஆண்டுகளுக்கு முன் தீண்டாமை எத்தனை கொடூரமாக இருந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறதா?  திரும்பத் திரும்ப ஒரே கேள்விதான்.  உனக்கு சிவன் பத்தி என்னடா தெரியும்?  இதுதான்.  சரி, கடவுள் என்னைப் படைத்து விட்டான்.  பைத்தியத்துக்குப் பிடிக்கவில்லை என்று தற்கொலையா செய்து கொள்ள முடியும்?  அல்லது, இந்தப் பைத்தியத்துக்குப் பிடிக்கவில்லை என்று எழுதாமல் இருக்க முடியுமா?  பைத்தியத்துக்கு ஒரே வைத்தியம் என் எழுத்தைப் படிக்காமல் இருப்பதுதான்.  ஆனால் பைத்தியமோ என் எழுத்தை வைத்து ஆராய்ச்சியே செய்து பைத்தியம் முற்றிக் கொண்டிருக்கிறது.  என் நண்பர்களே, இனிமேல் பைத்தியம் உங்களுக்கு என்னைப் பற்றி அனுப்பும் வாட்ஸப் செய்திகளை எனக்கு அனுப்பாதீர்கள்.  தயவுசெய்து.  ஏனென்றால், பைத்தியம் சொல்லும் புள்ளி விபரங்கள் என்னதான் எவிடென்ஸ் இருப்பது போல் தெரிந்தாலும் எல்லாம் இது எழுதின ஒரே ஒரு ஃபேக் கதை போல் ஃபேக்தான்.  பன்றியோடு சண்டை போட்டு நான் ஜெயித்தாலும் நான் பன்றியோடு சண்டை போட்டதால் நானும் பன்றியாகி விடுவேன் இல்லையா?  அதனால் இதுதான் நான் கொடுக்கும் கடைசி விளக்கம். 

ஏற்கனவே ஒருமுறை நடந்தது இது: ராயர் கஃபேயில் நான் போன வாரம் காபி குடித்தேன் என்று எழுதினேன்.  உடனே பைத்தியம் வந்து ராயர் கஃபே மூடி இருபது வருஷம் ஆச்சு, இந்த சாரு புருடா விட்றான் என்று முகநூலில் எழுத, உடனே நூறு பேர் சாரு தானே, அவன் ஒரு புருடா பேர்வழி என்று தெரியாதா சார், அவன் ஒரு லூசு சார், அவனுக்கு உண்மையே வராது சார் என்று எழுதினார்கள்.  அப்புறம் நானே அதற்கு விளக்கமாறு எழுத வேண்டியதாயிற்று.  டேய் அற்பப் பதர்களா, ராயர் கஃபே இப்போது தெரு மாறி வேறு தெருவுக்கு வந்து விட்டதடா, என்று சொல்லி, தெருப் பெயரையும் சொல்லி, அதற்குப் பக்கத்திலேயே ஒரு ஆழ்வாரின் அவதார ஸ்தலமும் இருக்கிறது என்று சொல்லி போட்டோ பிடித்து போட்ட பிறகுதான் பைத்தியம் அடங்கியது.  இங்கே சொன்னது பைத்திய நோயை அல்ல.  ஆளை.

இப்போது இந்த ஆண்டு விஷயம்.  புத்தகம் வந்தது 1917.  ஆப்ரஹாம் பண்டிதர் இறந்தது 1919.  ஆனால் அவர் பல ஆண்டுகளாக தன் இசை குறித்த கண்டுபிடிப்புகளைப் பல மாநாடுகள் நடத்தி, இந்திய அளவில் பல மகத்தான கலைஞர்களை நேரில் வரவழைத்து அவர்களிடம் விவாதித்து, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து, வீணையில் வாசித்துக் காண்பித்து பலபடியாக பிரச்சாரம் செய்திருக்கிறார்.  பரோடாவில் ஒரு மாநாடு நடத்தி அங்கே வீணையில் அப்போது கொடிகட்டிப் பறந்த மைசூர் சௌடய்யாவை வரவழைத்து – பண்டிதருக்கு ஆங்கிலமும் அத்துப்படி என்பதால் வட இந்திய விற்பன்னர்களையும் சம்மதிக்கச் செய்திக்கிறார்.

அக்காலத்தில் இருந்த அத்தனை பிராமணப் பெரியவர்களும் பண்டிதர் சொல்வதில் உள்ள நியாயத்தை ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.  மஹா வைத்தியநாத சிவன் தவிர.  என்று சொல்கிறார் பண்டிதர்.  நான் பண்டிதர் சொல்வதை நம்பவா அல்லது இந்தப் பைத்தியம் சொல்வதை நம்பவா?  புத்தகம் எப்போது வேண்டுமானாலும் வருமடா மூடா.  அந்த நூலில் சில தொகுதிகள் பண்டிதர் இறந்த பிறகுதான் வந்துள்ளன.  அவர் மகன் பதிப்பித்து.  அதற்காக பண்டிதரின் ஆவி எழுதினதாக அர்த்தமா?  சில பல அத்தியாயங்களை பண்டிதரின் மகளே பண்டிதர் எழுதி வைத்த குறிப்புகளைக் கொண்டு பூர்த்தி செய்திருக்கிறார்.  பண்டிதரின் குடும்பத்தில் எல்லோருமே பண்டிதரின் ஞானத்தைப் பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர். 

இதோ கேள் பண்டிதர்:

என்னை உற்சாகப்படுத்திய மைசூர் வைணீக வித்வான் மஹா ராச ராச ஸ்ரீ கிருஷ்ண ராவ் B.A., அவர்களுக்கும்… என்று தொடங்கி ஒரு ஐம்பது பெயர்கள் உள்ளன.  அதில் உ.வே.சா. பெயரெல்லாம் உள்ளன.  உ.வே.சா.வும் இந்த நூலுக்கு அணிந்துரை அளித்துள்ளார்.  அடுத்த பத்தி:

ஒரு ஸ்தாயியில் வரும் நுட்பமான சுருதிகள் இன்னவையென்று அறிந்து கொள்ள இயலாமல், ச – ப முறையாய் ஒரு ஸ்தாயியில் பன்னிரண்டு சுரங்கள் ஏமாற்றத்தை உண்டாக்கக் கூடியவையென்றும், ச – ப முறையில் ஒரு ஸ்தாயியில் 53 சுருதிகள் கிடைக்கின்றனவென்றும், அவைகளில் 22 சுருதிகளைப் பூர்வத்தோர் வழங்கி வந்திருக்கிறார்களென்றும், தமிழர்களுக்கு சங்கீதம் ஏது என்றும் சொல்லி, என் அபிப்பிராயத்திற்கு முற்றிலும் விரோதமாயிருந்தாலும் கர்னாடக சங்கீதத்தில் மிகப் பாண்டித்தியமுள்ளவரென்று நாளது வரையும், யாவராலும் கொண்டாடப்பட்டு வரும் சிறந்த வித்வான் மகா-ராச-ராச-ஸ்ரீ மகா வைத்யநாதயைர் அவர்களிடத்திலும்…

இதற்கு என்னடா அர்த்தம் மூடனே? 

ஏற்கனவே சாகரத்தின் பல பக்கங்களில் சிவனும் இவரும் எப்படியெல்லாம் வேறுபடுகிறார் என்று தியாகைய்யர் காலத்திலிருந்து ஆராய்கிறார் பண்டிதர்.  ஆனால் மிகுந்த மரியாதையுடன். 

இசை கட்டுரையில் எல்லாம் வைத்திருக்கிறேன்.  நீ என்னைத் தொடர்ந்து படி.  ஏதாவது factual errors இருந்தால் மட்டும் எனக்குத் தெரியப்படுத்துங்கள் நண்பர்களே!  ஆனால் வேண்டாம்.  உங்களுக்கு எது factual error எது வன்மம் என்றே தெரியாது இல்லையா?  மேலே பைத்தியம் கொடுத்த விவரத்தைப் பார்த்தே நீங்கள் ஏமாந்து போகவில்லையா?  எனவே, நீங்கள் இனிமேல் கேட்கும் எந்த சந்தேகத்துக்கும் விளக்கம் தர மாட்டேன்.  பைத்தியத்துக்கு வைத்தியம் என் எழுத்தைப் படிக்காமல் இருப்பது.  அதை அந்தப் பைத்தியம் செய்யாது.  இன்னும் ஒரே மருந்துதான் இருக்கிறது.  தனிமையில் வாழ சபிக்கப்பட்ட பைத்தியத்துக்கு ஒரு புத்திர பாக்கியம் கிடைக்க இறையருள் புரிந்தால் பைத்தியம் தீர்கிறதா என்று பார்க்கலாம்.  வயதானால் என்ன?  கடவுள் மனம் வைத்தால் எதுவும் நடக்கும்.  பிரார்த்தனை.