நண்பர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்…

அந்த மனநோயாளி என்னைப் பற்றி எழுதும் எந்த அவதூறுக்கும் பதினைந்து ஆண்டுகளாக நான் எந்த பதிலும் எழுதியது இல்லை. அதுதான் அவனுக்கு நான் தரும் அதிக பட்ச தண்டனை. ஆனால் முந்தாநாள் ஸ்ரீராம் ஏதோ நான் எழுதியதில் ஒரு பிழை என்று சொல்லி அவன் எழுதியதை என்னிடம் காண்பிக்க அங்கிருந்து ஆரம்பித்தது வம்பு. பதினைந்து வருடம் கட்டிக் காத்த அமைதி கெட்டு விட்டது. அவனுக்குத் தேவை என்னோடு சண்டை. அதுதான் அவனுடைய பொழுதுபோக்கு, அவனுடைய வாழ்க்கை. மனநோயாளிக்கு என்ன வேண்டும்? எல்லோரும் கட்டிப் புரள வேண்டும். இப்போது பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள், அவனுக்கும் இவனுக்கும் சண்டை, எழுத்தாளன்களே இப்படித்தான். நானே அவனை ப்ளாக் செய்து விட்டு என் வேலையைப் பார்த்துக் கொண்டு கிடக்கிறேன். உங்களுக்கு என்ன வந்தது? இந்த வம்பில் என்னை மாட்டி விடுகிறீர்கள்? முடிந்தால் நீங்களும் ப்ளாக் செய்து விட்டுப் போங்கள். இல்லையா? என்னிடம் வந்து பிழை திருத்தம் சொல்லாதீர்கள்.

இன்று அமிர்தம் சூர்யா. அவரும் நல்ல எண்ணத்தில்தான் செய்தார். சாரு எப்படி இவ்வளவு பெரிய பிழையை விட்டார்? அப்படித்தான் அவன் தன் மனநோய் விளையாட்டுக்கு அழைப்பான். நீங்கள் விளையாடுங்கள். மனநோயாளி ஆகுங்கள். என்னை இழுக்காதீர்கள். எவனோ ஒரு மனநோயாளி ஃப்ரான்ஸில் நான்கு பச்சைக் குழந்தைகளை சுத்தியலால் அடித்துக் கொன்றதாகப் படித்தேன். இரண்டு குழந்தைகள் அவனுடையவை. இரண்டு தங்கச்சி குழந்தைகள். மனைவியையும் கொன்று விட்டான். இம்மாதிரி ஆட்களோடு போய் என்னை மல்லுக்கு நிற்கச் சொல்கிறீர்கள். நியாயமா என்று யோசித்துப் பாருங்கள். அவனுக்கு நேரத்தைக் கொல்ல எந்த வேலையும் கிடையாது. குழந்தை குட்டியும் கிடையாது. கடைசியாகப் படித்த புத்தகம் ஜேஜே சில குறிப்புகள். அது வந்து முப்பத்தஞ்சு வருஷம் ஆச்சோ என்னவோ. அவனும் என்னதான் பண்ணுவான்? திரும்பத் திரும்ப எங்கள் மூன்று பேரையுமே படித்துப் படித்துப் படித்துப் பாயைப் பிறாண்டிக் கொண்டிருக்கிறான். விடுங்கள். இனி என் கவனத்துக்குக் கொண்டு வராதீர்கள்.

எஸ்.ரா.வின் ஒரு கதைதான் ஞாபகம் வருகிறது. ஒரு ப்ரூஃப் ரீடர் பற்றிய கதை. அந்த ப்ரூஃப் ரீடருக்குக் கடைசியில் பைத்தியம் பிடித்து… வேண்டாம் ரொம்ப குரூரமான முடிவு. அது நிஜமாக நடந்த கதை. அந்தக் கதைதான் இந்த மனநோயாளியைப் பற்றி நினைக்கும்போது ஞாபகம் வருகிறது. பாவம்.