151. சில ஆன்மீகப் பயிற்சிகள்

நாஸ்திகனாக இருந்த என்னை நம்பிக்கையாளனாக மாற்றிய இரண்டு புத்தகங்களில் ஒன்று, Autobiography of a Yogi.  அதில் பரமஹம்ச யோகானந்தா அவருடைய குரு அவருக்கு அளித்த சில ஆன்மீகப் பயிற்சிகளைப் பற்றிச் சொல்கிறார்.  அதில் இரண்டை உங்களுக்குச் சொல்லப் பிரியப்படுகிறேன்.  சம்பவம் நடப்பதெல்லாம் இமயம்.  ஆசிரமத்தின் ஒரு இடத்தில் யோகானந்தரை தான் சொல்லும் வரை அந்த இடத்திலேயே அசையாமல் நிற்கும்படி சொல்லி விட்டுப் போய் விடுகிறார் குரு. இவ்வளவு விவரமாக, தெளிவாகச் சொன்னாரா என்று எனக்கு ஞாபகம் இல்லை.  ஒரு நாள் ஆயிற்று, ரெண்டு நாள் ஆயிற்று.  குருவின் தடயத்தையே காணோம்.  சோறு தண்ணி இல்லை.  இமையத்தில் பனி எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.  நாலைந்து நாள் கழித்துத் திரும்பிய குரு எதுவுமே நடக்காதது போல் வா போகலாம் என்றாராம்.  இன்னொரு முறை, யோகானந்தரை ஒரு குகைக்குள் போகச் சொல்லி விட்டாராம்.  நான் சொல்லும் வரை வெளியே வர வேண்டாம், உனக்குத் தேவையான உணவு தரப்படும்.  அதை எடுப்பதற்காக மட்டும் குகையை விட்டு வெளியே வரலாம்.  விஸர்ஜனம் செய்ய உள்ளேயே ஒரு ஏற்பாடு இருக்கிறது.  ஒரு சின்ன அறை மாதிரியான குகை.  கும்மிருட்டு.  மேலேயிருந்து ஒரு சிறிய துளையின் வழியே வரும் ஒரு கீற்று வெளிச்சம்.  மற்றபடி தனிமைச் சிறைதான்.  இப்படி ஆறு மாதம் உள்ளே இருந்தாராம் யோகானந்தர். 

தச்சு வேலை செய்து வாழும் ஒரு வாசக நண்பர்.  மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உண்டு. கொரோனா காலத்தில் தனக்கு ரேஷன் கடையில் கொடுத்த உதவித்தொகையான ஆயிரம் ரூபாயை எனக்கு அனுப்பி வைக்கிறார். 

ஒரு சினிமா பாடகர் இறந்து போனால் ஏன் எழுத்தாளர்களெல்லாம் ஹிஸ்டீரியா வந்தது போல் ஆகிறார்கள் என்று கேட்டால் உடனே அங்கே வந்து குதிக்கும் காமன்மேன் புழுபுழுத்துச் சாவாய் என்று சாபம் இடுகிறான். 

இலக்கிய முகமூடி அணிந்த இன்னொரு காமன்மேனோ நீ எழுதுவதெல்லாம் புளுகு மூட்டை, உன்னை விட்டேனா பார் என்று வரிந்து கட்டுகிறான். 

இது எல்லாவற்றையும் ஒன்றே போல் எடுத்துக் கொள்வதுதான் ஆன்மீகப் பயிற்சி. 

ததாகதர் தியானத்தில் இருக்கும்போது அவர் மீது காறி உமிழ்வான் ஒருத்தன்.  தினமுமே அதை அவன் செய்து கொண்டிருந்தான்.  தியானம் முடிந்து எழும் ததாகதர் அவனை ஏதும் கடிந்து கொள்ளாததைப் பார்த்து சீடர்கள் அவரிடம் கேட்ட போது அவர் சொன்னார்:

நான் இந்த அசிங்கத்தை நீர் கொண்டு தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும்.  அவனோ தன் அசிங்கத்தை என் மீது கொட்டாமல் தனக்குள்ளேயே வைத்துப் புழுங்கினான் என்றால், மனம் வெடித்துச் சாவான்.  அவனை நான் மரணத்திலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். 

ததாகதர் குறிப்பிட்டதை நவீன கால வார்த்தைகளில் சொன்னால், suppression of anger மற்றும் brain haemorrhage.