168. தீபாவளி

அவந்திகாவுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வது பிடிக்காது.  அது நான் செய்த அதிர்ஷ்டம்.  பல பெண்களுக்கு வெளியே செல்வதுதான் பிடிக்கும்.  ’நான் என்ன அடிமையா. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க? வெளியே தெரு போக வேண்டாமா?’ என்பது அவர்கள் வாதம்.  வாரம் ஒருமுறையாவது ஓட்டலில் சாப்பிட வேண்டும்.  வாரம் ஒருமுறையாவது சினிமாவுக்குப் போக வேண்டும்.  கடற்கரைக்குப் போக வேண்டும்.  கோவிலுக்குப் போக வேண்டும்.  உறவினர் வீட்டுக்குப் போக வேண்டும்.  புடவை எடுக்கப் போக வேண்டும்.  இப்படி பலது உண்டு.  அவந்திகாவுக்கு எங்கே செல்வதற்கும் பிடிக்காது. நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பார்த்த சினிமாவை ஒரு கை விரல்களுக்குள் அடக்கி விடலாம்.  ரஜினி பாபா மாதிரி படம் எடுத்தால் மாதம் ஒருமுறை கூட பார்க்கலாம்.  அப்படி எடுத்தால் ரஜினியின் சூப்பர் ஸ்டார் ஸ்டேடஸ் என்ன ஆவது?  நாங்கள் பார்த்த கடைசிப் படமும் அதுதான். நாங்கள் சேர்ந்து பார்த்த முதல் படம் மின்சாரக் கனவு.  அதுதான் எங்கள் ஹனிமூன். 

ஓட்டலில் சாப்பிட்டால் ஒத்துக் கொள்ளாது.  விதிவிலக்காக மஹாமுத்ரா அவளுக்கு ஒத்துக் கொள்ளும் என்பதால் அவளுடைய பிறந்த நாள் அன்று அங்கே செல்வோம்.  அவளுக்காக நான் செய்யும் மகத்தான தியாகங்களில் அதுதான் தலையாயது.  எனக்கு மஹாமுத்ராவின் டிஃபன் தான் பிடிக்குமே ஒழிய சாப்பாடு பிடிக்காது.  ஒரு சாப்பாடு வேறு 600 ரூ.  நாங்கள் கொறிக்கும் காக்காய் கொறியலுக்கு 1200 ரூ. அழ வேண்டும்.  சரி, பிறந்த நாள் அன்று பஞ்சாயத்து கூடாது என்பதால் நானும் சூப்பர் சூப்பர் என்று நடித்து விடுவேன்.  நல்லவேளை, இந்த டிசம்பரில் அந்தப் பிரச்சினை இருக்காது.  இன்னும் கொரோனா தேசத்தை விட்டு விலகாததால் நாங்களும் வீட்டை விட்டு வெளியே கிளம்பவில்லை.

வீட்டுக்குப் பின்னால் இருக்கும் மெரினா பீச் கூட பிடிக்காது.  என்னய்யா இது, கடல் பிடிக்காத மனித ஜீவி உண்டா என்று கேட்டால் கூட்டம் பிடிக்காதே என்பாள்.  கடற்கரை ரொம்ப அசுத்தமாக இருக்கிறதாம். வீடுதான் அவளுக்கு சொர்க்கம்.  நானும் இருக்க வேண்டும்.  நான் இல்லாவிட்டால் சொர்க்கம் நரகம்.  ஆரம்ப காலத்தில் நான் தீபாவளி சமயத்தில் ஒரு முறை கூட வீட்டில் இருந்ததில்லை. திரைப்பட விழாக்கள் குளிர்காலத்தில்தான் நடக்கும் என்பதால் வெளியூர் போய் விடுவேன்.  அதற்கெல்லாம் குறுக்கே நிற்க மாட்டாள்.  சென்ற ஆண்டு கூட தீபாவளி சமயத்தில் துபாயில்தான் இருந்தேன். இடையில் சில ஆண்டுகளில் தீபாவளிக்கு ஊரில் இருந்தபோது தீபாவளி பிடிக்கவில்லை. 

நம்மூரில் பண்டிகை என்றால் என்ன?  பலகாரம் சாப்பிடலாம்.  புத்தாடை கிடைக்கும்.  அதெல்லாம் ஒரு காலம்.  அப்போது இந்தியாவில் ஏழை பணக்காரன் என்ற இரண்டு வர்க்கம்தான் இருந்தது.  நடுத்தரம் அப்போது இல்லை.  ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் நடுத்தர வர்க்கத்தின் பூதாகார வளர்ச்சியின் காரணமாக, தெருவுக்குத் தெரு பலகாரக் கடைகளும் ஏரியாவுக்கு ஏரியா மால்களும் வந்து விட்டன.  முன்பெல்லாம் தீபாவளிக்குத்தான் முறுக்கு, அதிரசம், சுழியம், அதிரசம், பொருவிளங்காய் உருண்டை, சீனி உருண்டை என்று கிடைக்கும்.  இப்போதோ ஆனந்த பவனிலும் கிராண்ட் ஸ்வீட்டிலும் எல்லாம் (கத்தை கத்தையாக வாங்கிக் கொண்டு) அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள்.  புத்தாடைகளுக்குக் காரணமே தேவையில்லை. நினைத்தால் புத்தாடைதான்.  ஆக, தீபாவளி என்றால் விசேஷம் வெடி மட்டும்தான் என்று ஆகி விட்டது.  எனக்கோ வெடியே பிடிக்காது.  அதன் காரணமாகவே வெளியூர்களுக்குத் தப்பி

விடுவேன்.  இந்த முறை கொரோனா காரணமாகத் தப்ப முடியவில்லை.  அதனால் அவந்திகாவுக்கு இது நிஜமான தீபாவளிதான். 

எனக்கு எந்த சத்தமும் பிரச்சினை இல்லை.  இந்த சத்தத்தில் பூனைகளும் நாய்களும் படும் வேதனையைக் கண்டால் சகிக்க முடிவதில்லை.  இந்த உலகில் மனிதனுக்கு அதிகாரம் இருப்பதால் தான் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைக்கிறான்.  ஒரு வாரத்துக்கு அந்த உயிர்கள் படும் வேதனை சொல்லி முடியாது. 

எந்தப் பொழுதுபோக்கிலும் ஈடுபாடு இல்லாத அவந்திகாவுக்கு ஒரே ஒரு ஷோக்குதான் இருந்தது.  அது புடவை எடுப்பது.  கடைக்குப் போக மாட்டாள்.  ஒரு தெலுங்கு அம்மா வருவார்.  அவரிடம் கிடைக்கும் புடவைகளைப் போல் சத்யபாலில் மட்டும்தான் கிடைக்கும்.  சத்யபால் விலை அப்போதே பத்து இருபதில் போகும்.  ஆனால் இந்தத் தெலுங்கு அம்மா ஆயிரத்தில் கொடுப்பார்.  நான் வாங்கிய புடவைக் காசையெல்லாம் சேர்த்திருந்தால் ஒரு வீடே வாங்கியிருக்கலாம் என்பாள் அவந்திகா.  இப்போதைய இசைக் கலைஞர் கௌஷிகி சக்ரவர்த்திதான் அவந்திகா அளவுக்கு டிஸைனர் புடவை கட்டிப் பார்த்திருக்கிறேன்.  பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் எல்லாவற்றையும் தூக்கி ஏழைபாழைகளிடம் கொடுத்து விட்டு சாரதா அம்மையார் மாதிரி மாறி விட்டாள்.  அதோடு முடிந்தது புடவை ராஜ்ஜியம். 

ஒருநாள் அந்தத் தெலுங்குப் புடவை அம்மாளை வரவழைத்து பதினைந்து புடவை வாங்கினாள்.  எதற்கு என்று கேட்டபோதுதான் தீபாவளி விஷயமே எனக்குத் தெரிந்தது.  நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குப் போனால் ராகவன், ராமசேஷன் மூலமாக நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்வேன்.  இப்போது அதுவும் இல்லாததால் தீபாவளி விஷயமே தெரியாமல் இருந்தது.  அவள் புடவை வாங்க மாட்டாள் என்று தெரியும்.  நான் தான் நான் எடுக்கும் முடிவுகளை மாற்றிக் கொண்டே இருப்பேன்.  அவளெல்லாம் உடும்புப் பிடிதான்.  பதினைந்து புடவைகளைப் பார்த்ததுமே காரணம் விளங்கி விட்டது.  ஆனால் யார் அந்தப் பதினைந்து பேர் என்றுதான் புரியவில்லை.  இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வெளி வளாகத்தைப் பெருக்கும் பெண்கள் இருவர்தானே?  மீதி பதின்மூன்று பேர் யார் என்று கேட்டேன்.  மூன்று வாட்ச்மேன்களின் மனைவிகள். தெருவில் பணி புரியும் துப்புரவுப் பணியாளர்கள் மூன்று பேர்.  இதையெல்லாம் பார்த்து பக்கத்து வீட்டில் வீட்டு வேலை செய்யும் பெண்மணி “எனக்குக் கொடுக்க மாட்டீங்களாம்மா?” என்று ஆதரவற்றுக் கேட்கவும் அவருக்கு ஒன்று.  இப்படி பதினைந்தும் காலி.  அவளுக்கு எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை.

நான் பொதுவாக ஆடை அலங்காரங்களில் பெருவிருப்பம் கொண்டவன்.  அதுவும் கடந்த ஒரு ஆண்டாக என்னை விட்டு அகன்று விட்டது.  புத்தனைக் கற்க ஆரம்பித்ததிலிருந்து இது போன்ற லௌகீக ஆர்வங்கள் போய் விட்டன.  அதுதான் காரணமாக இருக்கும்.  பட்சணம் கூட வெளியில் வாங்கிக் கொள்ளலாம், நீ செய்து கஷ்டப்பட வேண்டாமே என்றேன்.  எனக்கு தீபாவளி பிடிக்காமல் போனதற்குக் காரணம் இந்த வெடி மட்டும் அல்ல, பட்சணம் செய்கிறேன் பேர்வழி என்று இந்தப் பெண்கள் படும் அவஸ்தையைக் காணச் சகிக்க முடிவதில்லை.  பொருவிளங்காய் உருண்டை உருட்டுவதெல்லாம் எவ்வளவு கஷ்டம் தெரியுமா?  கை பழுத்து விடும்.  சூடு ஆறுவதற்கு முன்னால் உருட்ட வேண்டும்.  ஆறி உருட்டினால் உடைந்து விடும்.  ரஸ குல்லா செய்வது சுலபம்தான்.  ஆனால் இதுவரை ரஸகுல்லாவின் உள்ளே ரவை மாதிரி கல்லாக இல்லாமல் எல்லாமே ஒரே அடர்த்தியாக இருக்க வேண்டும்.  அதற்கு ரொம்பப் பக்குவம் வேண்டும்.  பல பெண்கள் இதில் தோற்று விடுவார்கள்.  முறுக்கு பல்லை உடைக்கும்.  அவந்திகா ஒரு மகத்தான சமையல் வல்லுனர் என்பதால் இந்தப் பிரச்சினை எதுவும் இருக்காது.  ஆனால் சிரமப்படுவதைப் பார்க்க சிரமமாக இருக்கும் என்பதால் வெளியே வாங்கிக் கொள்ளலாம் என்றேன்.  வெளியே வாங்கலாம் என்றால் நான் சுஸ்வாத் என்பேன்.  அவள் கிராண்ட் ஸ்வீட் என்பாள்.  அவளுக்கு சுஸ்வாத் ஆகாது.  கிராண்ட் ஸ்வீட்ஸை நான் கையாலேயே தொட மாட்டேன்.  அவந்திகாவைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஜெயமோகன் ஞாபகம்தான் வரும்.  எனக்கு வீட்டுக்குள்ளேயே ஒரு ஜெயமோகன். 

பதினைந்து புடவையும் எவ்வளவும்மா என்றேன்.  அவருக்கு ஒன்பது மாதமாக வியாபாரம் இல்லாததால் ஆறாயிரம் ரூபாயைக் குறைத்து ஒன்பதாயிரம்தான் வாங்கிக் கொண்டார் என்றாள்.  அடடா, இந்த ஒன்பதாயிரத்தில் பதினைந்தாள் பூனை உணவு ஆயிற்றே என்று மனதுக்குள் நினைத்தேன்.  அதைப் படித்து விட்டது போல் “அதெல்லாம் கடவுள் அனுப்புவார், கவலைப்படாதே” என்றாள் சட்டென்று.  கடவுள் என்றால் வாசகர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். 

நண்பர்களுக்கு என் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.  சக ஜீவராசிகளைத் துன்புறுத்தாமல் சத்தம் கேட்காத பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுங்கள்.   

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai