அது ஒரு காலம்…

ஒரு நாஸ்டால்ஜியாவில் அப்படி ஒரு தலைப்பு வைத்து விட்டேன். ஆகஸ்ட் மாதம் 2013-இல் எழுதிய கட்டுரை பின்வருவது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது ஏதோ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது போல் தோன்றுகிறது. இந்தக் கட்டுரை இப்போது வெளிவர இருக்கும் இஞ்சி சுக்கு கடுக்காய் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. புத்தகத்தில் கட்டுரைத் தலைப்பு: Thanks, Nirmal…

Thanks, Nirmal…

கரூரில் என்னை சந்தித்த நிர்மல் கருவாடும் Absinthe –உம் கொடுத்தார்.  எப்படி இருந்தது என்று எழுதியிருக்கவேண்டும். நான் இதுபோன்ற விஷயங்களில் கொஞ்சம் சோம்பேறி. அவரே எழுதக் கேட்டிருந்தார்.  கருவாடு அட்டகாசம்.  ரொம்ப அருமையாக இருந்தது.  நெத்திலிக் கருவாடு.  அதிலும் அவந்திகாவின் கருவாட்டுக் குழம்பு போல் நான் எங்குமே சாப்பிட்டதில்லை.

Absinthe:  சாமி லக்ஸம்பர்கிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த அனிஸை போன வாரம் ஒருநாள் சாப்பிட்டேன்.  இமயமலையில் சாப்பிட்டது போக மூணே மூணு ரவுண்டு தான் மிச்சம் இருந்தது.  அனிஸ் என்றால் ஜீரகம்.  அனிஸ் மது, ஜீரகத்திலிருந்து தயாரிப்பது.  ஃபிரஞ்சுக்காரர்கள் சாப்பிடுவது.  மற்றபடி உலகில் அனிஸ் அருந்துபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  ஃப்ரான்ஸ் தவிர மற்ற நாடுகளில் கிடைக்குமா என்று கூடத் தெரியவில்லை.  எனக்குப் பிடித்த மது வகைகளில் ஒன்று அனிஸ்.  கடும் போதையாக இருக்கும்.  ஆனால் நீங்கள் போதையாக இருக்கிறீர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரியாது.  நாறாது.  மணக்கும்.  கசக்காது.  இனிக்கும்.  தண்ணீரில் கலந்தால் வெள்ளை நிறத்தில் மாறி விடும்.  ஒருமுறை ஊட்டியில் அதைச் சாப்பிட்டு விட்டு கதி கலங்கிப் போய் விட்டார் அராத்து.  மறுநாள் மதியம் வரை உறங்கினார்.

நான் வாரம் ஒருமுறை தான் குடிப்பது வழக்கம்.  போன வாரம் வெள்ளிக்கிழமை – வாரம் முழுவதும் எக்ஸைல் வேலை மண்டையைப் பிளந்து விட்டதால் – ஒரு மாறுதலுக்காக அனிஸை அருந்தினேன்.  மூணு ரவுண்டுதான் இருந்தது.  போதும் என்று நினைத்தேன்.  பார்த்தால் போதவில்லை.

அப்ஸிந்த் குடித்தால் செத்து விடுவார்கள் என்று உலகில் ஒரு கருத்து நிலவுகிறது.  நீங்களே கூகிளில் தேடிப் படித்துப் பார்க்கலாம். Arthur Rimbaud, Verlain இருவரும் இந்த அப்ஸிந்தைக் குடித்து விட்டுத்தான் லண்டன் தெருக்களில் கட்டிப் புரண்டு சண்டை போட்டார்கள் என்று படித்திருக்கிறேன்.  இருவருக்கும் ஓரின உறவு இருந்தது.  நீ உன் மனைவியோடு சேரக் கூடாது; என்னோடுதான் இருக்க வேண்டும் மவனே என்று சொல்லி வெர்லேனின் மூஞ்சியில் குத்துவாராம் ஆர்தர் ரேம்போ.  இவர் பதிலுக்குத் தாக்க லண்டன் தெருக்களே அமர்க்களப்படும்.

இவர்கள் இருவரும் ரவுடிகள் இல்லை சாமிகளா…  ஆர்த்ர் ரேம்போவை கவிக் கடவுள் என்பார்கள்.  37 வயதில் செத்தார்.  தினமும் அப்ஸிந்த் தான் குடிப்பாராம்.

வான்கோவுக்கும் பிடித்த மது அப்ஸிந்த்.  ஹெமிங்வேக்குப் பிடித்த மதுவும் அப்ஸிந்த்.  உலகில் எல்லா கலைஞர்களுக்கும் பிடித்த மது அப்ஸிந்த்தாக இருந்திருக்கிறது.  ஆனால் அப்ஸிந்த்தை அளவுக்கு அதிகமாகக் குடித்தால் அந்தக் கணமே மோட்சமாம்.  பெங்களூரில் நானும் அராத்துவும் ஒரு கடையில் அப்ஸிந்தைப் பார்த்த போது அதிலேயே எழுதி இருந்தான்,  அதிகம் குடித்தால் உடனடி மரணம் என்று. ஆனால் அளவு என்பது எது என்று எந்தப் பயலும் எழுதவில்லை.  அதனால் எங்களுக்கு ஒரே பயம்.  இதில் இன்னொரு படு முக்கியமான விஷயம், அப்ஸிந்த்தில் 62 % ஆல்கஹால்.  மற்ற மது வகைகளில் 30 சதவிகிதம்தான் இருக்கும்.  ஆனானப்பட்ட ஸ்காட்ச் விஸ்கியிலேயே 40 சதவிகிதம்தான்.

எனவே, ரொம்ப ரொம்ப பயந்து கொண்டே அனிஸ் மூணு ரவுண்ட் அருந்திய பிறகு அப்ஸிந்த் ஒரு லார்ஜை கிளாஸில் ஊற்றினேன்.  பார்த்தால் நன்னாரி சர்பத் நிறம்.  அதில் தண்ணீரைக் கலந்து குடித்தால் மதுரை ஜிகிர்தண்டா ருசி.  அடப் பாவிகளா! இதைத் தமிழ் எழுத்தாளனுக்கு ஊற்றிக் கொடுத்தால் ஒரே நாளில் தமிழ் இலக்கியமே எமலோகம் போய் விடுமே என்று பயந்து போனேன்.  ஏனென்றால் அப்படி ஒரு ருசி.  நம் ஆட்கள் ஒரே வேளையில் ரெண்டு போத்தல் குடித்து விட்டு ஒரேயடியாய் டாட்டா சொல்லி விடுவார்களே?

செம ருசி.  செம மணம்.  அப்படியே ரோஜாப் பூ மணம்.  பயந்து பயந்து இடைவெளி விட்டு விட்டு நாலு ரவுண்டு போனேன்.  மொத்தம் ஏழு ரவுண்டு.  அனிஸ் மூணு.  அப்ஸிந்த் நாலு.  உள்ளுக்குள் போதை சுழன்று அடித்தது.  ஆனால் வெளியில் மூச்.  ஒரு மண்ணாங்கட்டியும் தெரியவில்லை.  சிலரிடம் போனிலும் பேசினேன்.  ரெமி மார்ட்டின் ரெண்டே ரெண்டு ரவுண்டு போட்டு விட்டு போனில் பேசினால் “என்ன ஒயின் சாப்பிட்டீங்களா?” என்று கண்டு பிடித்து விடுவார்கள். ஆனால் அன்றைய தினம் யாருமே கண்டு பிடிக்கவில்லை.  காரணம், குரலில் செம தெளிவு.  நடையில் செம தெளிவு.  வெளியில் ஒன்றுமே தெரியவில்லை.  ஆனால் உள்ளுக்குள் ராஜ போதை.  என்னடா இது, ரொம்ப வித்தியாசமா இருக்கு என்று நினைத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருந்த போது, அவந்திகா வந்தாள்.  இரவு மணி ஒன்பது இருக்கும்.  வெளியில் வேலையாகப் போயிருந்தாள்.

வந்ததும் “என்ன ஒயின் சாப்பிட்டியா?” என்றாள்.  ஆமாம்மா என்றேன்.  எவ்ளோ என்று கேட்டவள், அவளே யூகமாக, என்ன, ரெண்டு கிளாஸ் சாப்பிட்டியா என்றாள். 

ஆமாம்மா.

ம்… பார்த்தியா, இப்படி அளவா குடிச்சா ஸ்டெடியா இருக்கீல்ல?  ஏன் எப்பவும் இப்படி அளவா குடிக்கக் கூடாது நீ?

என்ன பதில் சொல்வது என்று முதலில் குழம்பியவன் கொஞ்சம் நிதானித்துக் கொண்டு, “ம்க்கும்… இனிமே ரெண்டு கிளாஸ்தான் குடிக்கணும், நீ சொல்றது கரெக்ட்” என்றேன்.

எப்போதும் இரவில் மூன்று முறை எழுவேன், பாத்ரூம் போக.  அன்றைய தினம் காலை ஆறு மணிக்குத்தான் எழுந்தேன்.  பார்த்தால் கட்டிலில் என் இரண்டு பக்கமும் இரண்டு தலையணைகள் இருந்தன.  புரண்டு கீழே விழுந்து விடக் கூடாது என்று வைத்திருக்கிறாள் அவந்திகா.

இன்றும் வெள்ளிக்கிழமைதான். 

***