ஒரு பிரபல எழுத்தாளரின் புதிய பதிப்பகம்

எஸ். ராமகிருஷ்ணன் தனக்கென்று ஒரு பதிப்பகம் வைத்திருக்கிறார்.  இன்னும் பல எழுத்தாளர்கள் தங்களுக்கென்று பதிப்பகம் வைத்திருக்கிறார்கள்.  நானோ குடிசைத் தொழில் மாதிரி என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்து வந்து கொண்டிருந்தேன், மனுஷ்ய புத்திரன் உயிர்மை ஆரம்பிக்கும் வரை.  ஒருவேளை அவர் அதற்கு முன்பு பணியில் இருந்த பதிப்பகத்திலேயே தொடர்ந்திருந்தால் ராம்ஜியும் காயத்ரியும் ஸீரோ டிகிரி பதிப்பகம் ஆரம்பிக்கும் வரை கூட என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.  என்னுடைய நிலைமை அப்போது எப்படியிருந்தது என்றால் – அப்போது என்றால் உயிர்மை ஆரம்பிப்பதற்கு முன்பு – நான் அணுகாத பதிப்பகமே தமிழில் இல்லை.  கிழக்கு, காலச்சுவடு உட்பட எல்லா பதிப்பகங்களையும் அணுகினேன்.  என்ன தவறு செய்து விட்டேன் என்றால், அதனதன் உரிமையாளர்களை அணுகாமல் நடுவில் உள்ள ஆட்களை அணுகினேன்.  காலச்சுவடுவில் அரவிந்தனைக் கேட்டேன்.  இயலாது என்ற பதில் வந்தது.  கிழக்குவில் பாலா என்ற நண்பர் இருந்தார்.  அவரைக் கேட்டேன்.  இயலாது என்ற பதில் வந்தது.  இப்படி அநேகம்.  அப்புறம்தான் உயிர்மை தொடங்கியது.  என் புத்தகங்களும் வர ஆரம்பித்தன.  என் புத்தகங்களையெல்லாம் ஆரம்பத்தில் புரட்சிகரமான முறையில் பதிப்பித்தவன் என்ற முறையில் நானும் ஒரு பதிப்பாளன் தான் என்று சொல்லிக் கொள்ளலாம்.  ஆனாலும் எனக்கென்று ஒரு பதிப்பகம் தொடங்குவதில் எனக்கு சுத்தமாக ஆர்வமில்லை.  எழுத்தைத் தவிர நான் எப்படி வேறு ஒரு தொழிலில் ஈடுபட முடியும்? 

ஆனாலும் பிறருக்காக – பிறருடைய புத்தகங்களைப் பதிப்பிப்பதற்காக பதிப்பகம் ஆரம்பிக்க வேண்டும் என்று அவ்வப்போது எண்ணம் தோன்றும்.  உதாரணமாக, நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூல்கள்.  உதாரணமாக, ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகள் மாதிரி.  ஸி.ஆர். ஸ்ரீனிவாச ஐயங்காரின் சங்கீதக் கட்டுரைகள் மாதிரி.  எல்லாமே hard bound புத்தகங்கள்தாம்.  என்னுடைய புத்தகங்கள் தொடர்ந்து ஸீரோ டிகிரியில்தான் வரும்.  அதில் ஒன்றும் மாற்றம் இல்லை.  ஆண்கள் பெண்களிடம் சொல்லும் ஒரு பொய் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  என்னுடைய கடைசிப் பெண் நீதான் என்று.  அப்படி அல்ல.  நிஜமாகவே சொல்கிறேன்.  என்னுடைய கடைசி பதிப்பகம் ஸீரோ டிகிரிதான்.   இனிமேல் என்னுடைய எல்லா புத்தகங்களும் கிடைக்கும் ஒரே இடம் ஸீரோ டிகிரி பதிப்பகம்தான்.  அதில் மாற்றமே இருக்காது.  ஒரு நண்பர் என்னுடைய அசோகா நாவலைப் பதிப்பிக்கிறேன் என்று சொல்லி, நீங்கள் எத்தனை லட்சம் கேட்டாலும் தருகிறேன் என்று சொன்னார்.  கோடிகளில் புரள்பவர்.  என் குடும்ப நண்பர்.  ”இல்லை தம்பி, இது பணம் பற்றிய விஷயம் இல்லை.  இனிமேல் என்னுடைய எல்லாப் புத்தகங்களும் ஸீரோ டிகிரியில்தான் என்பது முடிவாகி விட்ட விஷயம்.  என் காலத்துக்குப் பிறகு கூட அப்படித்தான்.  அரசாங்கம் கூட என் எழுத்துக்களை அரசுடைமை ஆக்கக் கூடாது என்று உயில் எழுதி வைத்திருக்கிறேன்” என்று சொல்லி விட்டேன். 

ஆனாலும் ஆனந்தரங்கம் பிள்ளை போன்றவர்களுக்காகப் பதிப்பகம் தொடங்கலாம் அல்லவா?  என் பதிப்பகத்தில் புத்தகம் வெளியிட வேண்டுமானால் அதன் ஆசிரியர் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவராக இருக்க வேண்டும்.  நூல் அரசுடைமை ஆக்கப்பட்டிருக்க வேண்டும்.  காப்பிரைட் வேண்டும் என்று வாரிசுப் புடுங்கிகளைத் தொங்கிக் கொண்டிருக்க நம்மால் ஆகாது.  எல்லாமே hard bound டீலக்ஸ் எடிஷன் தான்.  எல்லா புத்தகங்களும் சுதர்ஸன் கிராஃபிக்ஸில்தான் அச்சடிக்கப்படும்.  (ஆமாம், அந்த அச்சகம் இப்போதும் இயங்குகிறதா?) முன்பெல்லாம் க்ரியா புத்தகங்கள் அங்கேதான் அச்சடிக்கப்பட்டன. 

ஒவ்வொரு புத்தகமும் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்ட நூல்களை விடவும் தரமாக இருக்கும்.  விநியோகத்திற்கு புத்தகங்கள் யாருக்கும் தரப் பட மாட்டாது.  பணம் கொடுக்கவில்லை என்று அவர்களைத் தொங்கிக் கொண்டிருக்க முடியாது.  நம்மைத் தூக்கில் தொங்க விட்டு விடுவார்கள் விநியோகஸ்தர்கள்.  பிறகு, போட்ட புஸ்தகங்களை எப்படி விற்பது?  புஸ்தகம் வேண்டுமானால் எனக்கு எழுதிக் கேட்க வேண்டும்.  புத்தகம் வாங்க அது ஒன்றுதான் வழி.  புத்தக விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன். 

இந்த உருப்படியான சிந்தனைகளெல்லாம் எனக்கு சில பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஆசாரமான அய்யங்கார் பெண்மணியோடு பேசிக் கொண்டிருக்கும்போதுதான் தோன்றியது.  ஆசாரம் என்றால் படு ஆசாரம்.  என்னுடைய துக்ளக் கட்டுரைகள் மட்டுமே படிப்பார். 

நீங்கள் அடுத்த ஜென்மாவில் என்னவாகப் பிறக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டேன். 

ஆம்பளையாக.

அய்யய்யோ.  அப்புறம்?

கல்யாணமே கிடையாது.

அய்யய்யோ, என்ன இது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கிறீர்கள்?  அப்படியானால் தாம்பத்யம்?  அதுவும் வாழ்க்கைக்கு அவசியம் இல்லையா?

ஏன், தாம்பத்யம் இல்லேன்னா எதுவுமே இல்லியா?  ஆம்பளைகளெல்லாம் இந்தப் பக்கம் நாலு அந்தப் பக்கம் நாலுன்னு கொத்துண்டு அலையலியா? 

ஓ, சரி.  அப்புறம்?

அப்புறம் என்ன, தண்ணி கிண்ணி அது இது எல்லாம் பாத்துட வேண்டியதுதான். 

அப்போது பார்த்து அவரது பர்த்தாவின் போன் வந்தது.  அவர் சொன்னதைக் கேட்டு விட்டு, “அதெல்லாம் வாண்டாம்.  ஆஃபீஸ் முடிஞ்சு நேரா ஆத்துக்கு வாங்கோ போறும்” என்று சொல்லி ஃபோனை கட் பண்ணி விட்டார்.

இப்படி எல்லோரும் எல்லாவற்றுக்கும் ஆசைப்படும் போது நாமும் பதிப்பக முதலாளியாக ஆசைப்பட்டுப் பார்த்தேன்.  அவ்ளோதான். 

முடிந்தவர்கள் சந்தா/நன்கொடை அனுப்பித் தாருங்கள்.

***

சந்தா/நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai