லத்தீன் அமெரிக்க சினிமா

உலக சினிமா என்றால் அதிக பட்சமாக நாம் ஒருசில நாடுகளையே கவனிக்கிறோம்.  குறிப்பாக, ஹாலிவுட், கொரியா, ஜப்பான், மற்றும் ஒரு சில பிரபலமான ஐரோப்பிய இயக்குனர்கள்.  இவைதான் இந்தியாவில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் சுற்றிச் சுற்றி வருகின்றன.  திரைப்படக் கல்லூரிகளில் கூட மற்ற நாடுகளின் திரைப்படங்கள் பற்றிப் பேசப்படுவதில்லை.  மேலும், ஆவணப் படங்கள் என்று ஒரு தனிப் பிரிவே இருக்கிறது.  சினிமா பற்றிய நம்முடைய ஒட்டு மொத்த அனுபவத்தையே மாற்றக் கூடியவை ஆவணப் படங்கள்.

Ulrike Ottinger என்று ஒரு ஜெர்மானிய இயக்குனர். அவர் எடுத்த Taiga (1992) என்ற எட்டு மணி நேர ஆவணப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று பல காலமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.   இன்னும் முடியவில்லை.  காரணம், அந்த டிவிடியின் விலை 25000 ரூ.  ஒட்டிஞ்சர் வடக்கு மங்கோலியாவில் ஒரு ஆண்டு தங்கி எடுத்த படம் அது. திரைப்பட சங்கம் போன்ற அமைப்புகள்தான் அதை வாங்கித் திரையிட முடியும். 

1980 வாக்கில் தில்லியில் நடந்த திரைப்பட விழாவில் லத்தீன் அமெரிக்க சினிமா என்ற ஒரு பிரிவில் தென்னமெரிக்க நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.  அவை பற்றிய குறிப்புகளை வைத்துக் கொண்டு லத்தீன் அமெரிக்க சினிமா என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி 1985-இல் வெளியிட்டேன்.   

அப்போதெல்லாம் கணினி, இணையம் என்று எதுவும் கிடையாது.  தென்னமெரிக்க நாடுகள் பற்றிய விபரம் வேண்டுமென்றால், நூலகங்களில்தான் தேட வேண்டும்.  அப்படி நூலகம் நூலகமாக அலைந்து குறிப்புகள் எடுத்து எழுதிய அந்தப் புத்தகத்தை வெளியிட அப்போது எந்தப் பதிப்பகமும் முன்வராததால்தான் நானே அதை வெளியிட நேர்ந்தது.  (அப்போதெல்லாம் என்னுடைய எல்லா புத்தகங்களையும் நானேதான் வெளியிட்டுக் கொண்டிருந்தேன்!)  ஆனால் விற்பனையில் மட்டும் சுணக்கம் இருக்காது.  லத்தீன் அமெரிக்க சினிமா புத்தகம் வெளியிட்ட ஆறே மாதத்தில் 1000 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன.  (விற்ற நிறுவனம் ஒரு பைசா கொடுக்கவில்லை.  அது வேறு சோகக் கதை!)

அந்த 1980 திரைப்பட விழாவில் நான் பார்த்த படங்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது.  அதில் ஒன்று, நிகாராகுவாவின் They will not pass என்ற ஒரு ஆவணப் படம்.  வறுமையைப் பொறுத்தவரை 1980-இல் நிகாராகுவா எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்னமும் இருக்கிறது.  ஒரே வித்தியாசம், முன்பு இருந்தது போல் படுகொலைகள் இல்லை.  ரிகபர்த்தோ லோபஸ் பெரஸ் என்று ஒரு கவிஞர்.  நிகாராகுவாவைச் சேர்ந்தவர்.  1929-இல் பிறந்தவர். 

 அந்தக் காலகட்டத்தில் தென்னமெரிக்க நாடுகளில் மிகக் கொடுமையான சர்வாதிகாரிகள் இருந்தார்கள்.  அவர்களில் ஒருவர் சொமோசா கார்சியா என்பவர்.  நிகாராகுவாவையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தார்.  கேள்வி கேட்டால் பதில் துப்பாக்கியால் சொல்லப்படும்.  ஆனால் ராணுவத்தின் உதவியுடன் தேர்தல் மட்டும் நடக்கும்.  ஓட்டுப் போடுபவர்கள் எத்தனை பேர் தெரியுமா? நூறு பேர்.  அதன் பெயர் தேர்தல்.  இம்மாதிரி போலி தேர்தல் நடத்தி மீண்டும் மீண்டும் சொமோசாவே பதவிக்கு வந்து கொண்டிருந்த நிலையில் அடுத்த முறையும் சொமோசா இப்படி ஒரு தேர்தல் நடத்தி அதிபராக வந்தால் அவரை நடுத்தெருவில் வைத்துச் சுடுவேன் என்று பத்திரிகைகளில் அறிவித்தார் லோபஸ் பெரஸ்.  லோபஸ் பெரஸைப் பிடிக்க ராணுவம் போலீஸ் எல்லாம் ஏவி விடப்பட்டன.  ஆனாலும் மக்கள் ஆதரவு பெரஸுக்கு இருந்ததால் அவரைப் பிடிக்க முடியவில்லை.  சொமோசாவும் பயப்படவில்லை.  நான் ஒரு தேசத்துக்கே அதிபர்.  என் பின்னணியில் உலகத்தையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்கா பக்க பலமாக இருக்கிறது.  ஒரு பொடிப் பயல் என்னை என்ன செய்து விட முடியும் என்று இருந்தார்.  தேர்தலும் நடந்தது.   96 பேர் வாக்களித்து சொமோசா ஜெயித்தார். (96 ஓட்டுகளும் சொமாசாவுக்குத்தான்!)  இப்படி ஒரு வரலாறு காணாத வெற்றி  21.9.1956 அன்று உலகத்துக்கு அறிவிக்கப்பட்டது.  ஒருத்தர் கூட சொமோஸாவுக்கு எதிராக ஓட்டுப் போடவில்லை என்று அறிவித்தார்கள்! அந்த வெற்றி விழாவில் சொமோஸா அதிபராக மீண்டும் அறிவிக்கப்பட்ட தருணத்தில் லோபஸ் பெரஸ் என்ற கவிஞன் தான் அறிவித்ததை நடைமுறைப் படுத்தினான்.  சொமோஸா சுட்டுக் கொல்லப்பட்டார்.  பின் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டான் லோபஸ் பெரஸ் என்ற கவிஞன். 

இதைப் படிக்கும் போது நமக்கு மிகவும் அதிர்ச்சியாகத் தோன்றும்.  ஆனால் இதன் பின்னணியைப் பார்த்தால் நம்ப முடியாததாக இருக்கும்.  மனாகுவா என்பது நிகாராகுவா நாட்டின் தலைநகர்.   23-12-1972 அன்று அந்த நகரில் ஒரு பூகம்பம் ஏற்பட்டது. பத்தாயிரம் பேர் உயிரிழந்தார்கள். ஐம்பதாயிரம் பேர் காயமுற்றார்கள். இரண்டு லட்சம் பேர் வீடு இழந்தார்கள். நாட்டின் அதிபரான சொமோஸாதான் மீட்புக் குழுவின் தலைவர். அறுபது கோடி டாலர் வெளி நாடுகளிலிருந்து உதவிப் பணமாகக் கிடைத்தது. அத்தனை பணத்தையும் சொமோஸா தன் சுவிஸ் வங்கிக் கணக்கில் போட்டுக்கொண்டார். இச்செய்தி உலகப் பத்திரிகைகள் பலவற்றிலும் வெளியானது. கடுமையாக கண்டிக்கப்பட்டது.

1979இன் புள்ளி விபரப்படி 2000 சதுர கி.மீ. விளைநிலம் சொமோஸா குடும்பத்திற்குச் சொந்தமாக இருந்தது.

ஒரு அமெரிக்க டெலிவிஷன் பேட்டியில் பேட்டியாளர் “உங்கள் சொத்து மதிப்பு பல கோடி டாலர்கள் என்பது உண்மையா?” என்று சொமோஸாவிடம் கேட்டார். சொமோஸா அமைதியாக “அது பொய், என்னிடம் பத்து கோடி டாலருக்குமேல் இல்லை” என்று பதில் சொன்னார். 

“நாட்டிலுள்ள ஒரே விமானப் போக்குவரத்து கம்பெனி உங்களுக்குச் சொந்தமானதா?”

“ஆமாம்.”

“பிரம்மாண்டமான கப்பல் நிறுவனம்?”

“ஆமாம், என்னுடையதுதான்.”

“துறைமுகமும் உங்களுடையது தானே?”

“ஆமாம், அதை நான்தான் கட்டினேன்”

“நிகராகுவாவிற்கு மெர்ஸிடஸ் டிரக்குகள் சப்ளை செய்வது நீங்கள்தானே?”

“ஆமாம்.”

“அந்த டிரக்குகள் தேசியப் படையினருக்குத் தானே?”

“ஆமாம். எல்லாம் அல்ல. பெரும்பாலானவை.”

“நாட்டின் முக்கிய டெலிவிஷன் நிலையம் உங்களுக்குச் சொந்தமானதா?”

“ஆமாம்.”

“செய்தித்தாள்கள்?”

”ஆமாம், அதுவும் தான்.”

“நிகரகுவாவின் மிகப் பெரிய ஹோட்டல்?”

“நான் அதில் வெறும் பங்குதாரர் தான்.”

“ஆனால் நிர்வாகம் எல்லாம் உங்கள் கையில் தானே?”

“ஆமாம்.”

“பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உங்களுக்கு இருக்கிறதல்லவா?”

“ஆமாம்.”

“வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், கட்டிடம் கட்டும் பொருட்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள், பிரம்மாண்டமான மாட்டுப் பண்ணைகள் – இவைகள் எல்லாம் உங்களுடையதுதானே?”

இப்படிப்பட்ட பதில்களை சற்றும் எதிர்பாராத டி.வி. பேட்டியாளர் தன் சமநிலையை இழக்க ஆரம்பித்து விட்டதை ரசித்துக் கொண்டே “ஆமாம், அதில் என்ன சந்தேகம்?” என்று மிகவும் அமைதியாகச் சொன்னார் சொமோஸா.

“உங்கள் நாட்டில்… எல்லாமே உங்களுக்குச் சொந்தமாயிருக்கிற இடத்தில் ஒரு பிச்சைக்காரனைப் பார்க்கும் போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்?”

“இன்னும் பணக்காரனாக வேண்டும் என்று நினைப்பேன்.”

அமெரிக்க நிருபருக்கு இந்தப் பதிலைக் கேட்டதும் அதிர்ச்சி தாங்க முடியவில்லை.

“எனக்குப் புரியவில்லையே?”

“ரொம்பவும் சுலபம். நான் பணக்காரனாக ஆகத்தான் என் மக்களின் நிலை உயரும். என் வியாபாரம் அதிகரிக்க அதிகரிக்க நிறைய பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். இப்படியாகத் தான்…”

பேட்டி இத்துடன் முடிவடைந்து விடுகிறது. அநேகமாக இதற்குமேல் பேட்டியாளர் பேசும் சக்தியை இழந்திருக்கலாம்!

இந்தப் பேட்டி நான் முன்பு குறிப்பிட்ட ஆவணப் படத்தில் இடம் பெற்றிருக்கிறது.  இதெல்லாம் ஏன் இத்தனை காலம் சென்ற பிறகும் இன்னும் என் கவனத்தை ஈர்க்கிறது என்றால், சென்ற ஆண்டு நான் சீலே சென்றிருந்த போது அங்கே ஒரு காட்சியைக் கண்டேன்.  சீலேயின் தலைநகர் சாந்த்தியாகோ நகரில் ஒரு சந்தடி மிகுந்த சாலை.  தி.நகர் ரங்கநாதன் சாலையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.  அங்கே சாலை ஓரத்தில் சில கறுப்பின மனிதர்கள் வெளிநாட்டுக் காலணிகளை வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள்.  ரோந்துப் போலீஸ் வருவது தெரிந்ததும் காலணிகளை அப்படியே மூட்டையாக அள்ளித் தோளில் மாட்டிக் கொண்டு ஓடி மறைந்தார்கள்.  அந்த மனிதர்களின் ஆடைகள் கூட கிழிந்து போயிருந்தன.  (பணக்காரர்கள் ஸ்டைலுக்குக் கிழித்துப் போட்டுக் கொள்வார்களே, அப்படி அல்ல.  அவர்கள் பிச்சைக்காரத் தோற்றத்தில் இருந்தார்கள்.  குழி விழுந்த கண்கள்.  ஒட்டிய கன்னங்கள்.  சரியாகச் சாப்பிட்டே பல நாட்கள் இருக்கும் போல் தெரிந்தது.)

போலீஸ் போனதும் திரும்பவும் வந்த அவர்களிடம் எந்த நாடு என்று கேட்டேன்.  சிலர் எல் சால்வதோர் என்றும் சிலர் நிகாராகுவா என்றும் சொன்னார்கள்.  சொமோஸா மாதிரியான நேரடிக் கொலைகார சர்வாதிகாரிகள் இப்போது இல்லை என்றாலும் மறைமுகச் சுரண்டல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  வெனிசுவலா எத்தனை பெரிய நாடு.  அந்த நாடே இப்போது திவாலாகி விட்டது.  பாதி வெனிசுவாகாரர்கள் அகதிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் சீலேயில் திரிந்து கொண்டிருந்ததை என் கண்களால் பார்த்தேன்.  வெனிசுவலா பெண்கள் என்றால், கொஞ்சம் படித்தவர்களாக இருந்தால்  ஓட்டலில் வேலை பார்க்கிறார்கள்.  இல்லாவிட்டால் அவர்களைப் பார்க்கக் கூடிய இடம், விபச்சார விடுதிதான்.  மேலும், சீலேயில் அப்படிப்பட்ட விடுதிகள் மட்டும் இல்லாமல், பல காஃபி ஷாப்புகளிலும் இரண்டு பீஸ் மட்டுமே அணிந்த வெனிசுவலா பெண்கள் வாடிக்கையாளர்களுக்குக் காஃபி கொடுத்துக் கொண்டிருப்பது சர்வ சகஜமான காட்சி. 

1980 வாக்கில் எழுதி, 1985-இல் வெளிவந்து பிறகு இன்று வரை காணாமல் போய் விட்ட அந்த லத்தீன் அமெரிக்க சினிமா என்ற புத்தகம் இப்போது முன்பதிவுக்குத் தயார்.  1985-இல் வந்த போது அந்தப் புத்தகம் 100 பக்கம் இருந்தது.  இப்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர் அருண் நடத்தி வரும் பேசாமொழி என்ற பத்திரிகையில் மேலும் சில முக்கியமான லத்தீன் அமெரிக்க இயக்குனர்கள் பற்றி விரிவாக எழுத நேர்ந்தது.  அந்தக் கட்டுரைகளை இந்த நூலில் இரண்டாம் பாகமாகச் சேர்த்திருக்கிறேன்.  இப்போது புத்தகம், 180 பக்கம்.  விலை, 225 ரூ.  ரூ 180 செலுத்து முன்பதிவு செய்து வைத்தால் 20 சதவிகிதம் மிச்சம். 

இந்த நூலில் உள்ள படங்களை அவ்வளவு எளிதில் டாரண்ட் மூலம் அல்லது மற்ற சினிமா தளங்கள் மூலம் பார்த்து விட முடியாது.  இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் கூட இந்தப் படங்கள் இருக்காது.  எங்காவது தென்னமெரிக்க நாடுகள் பற்றிய சினிமா விழா நடந்தால் காணக் கிடைக்கலாம்.  கூப சினிமா கூட பார்க்கக் கிடைக்கும்.  நிகாராகுவா சினிமா எல்லாம் வாய்ப்பே இல்லை.    

இது லத்தீன் அமெரிக்க சினிமா பற்றிய புத்தகம் மட்டும் அல்ல.   தென்னமெரிக்கா பற்றிய ஒரு அறிமுக நூலாகவும் கொள்ளலாம். 

வாங்கவும் முன்பதிவு செய்யவும்: