பிஸ்மில்லா கானும் முகமூடிகளின் பள்ளத்தாக்கும்…

முகமூடிகளின் பள்ளத்தாக்கு இன்று அச்சுக்குப் போய் விடும்.  எல்லா எழுத்தாளர்களுக்குமே தாங்கள் எழுதிய நாவல்தான் தங்கள் குழந்தை மாதிரி.  ஆனால் எனக்கு முகமூடிகளின் பள்ளத்தாக்கு அப்படி அல்ல.  ஏனென்றால், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல், அப்படி ஒரு நாவலை என் வாசிப்பு அனுபவத்தில் கண்டதில்லை.  இதை நான் மட்டுமல்ல, படிக்கும்போது நீங்களும் உணர்வீர்கள் என்பதை அறுதியிட்டுக் கூறுவேன்.  ஆஷிஷ் நந்தியும் அதையேதான் சொல்லியிருக்கிறார்:  இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை.  

நான் அறுதியிட்டுக் கூறுகிறேன்.  ஆஷிஷ் நந்தி அநேகமாக என்று சொல்கிறார்.

இன்னொரு விஷயம், இந்த நாவலின் கடைசி அத்தியாயமான இறுதி ரகசியம்.  இதை வாசிப்பவர் யாராக இருந்தாலும் கண்கள் கசியாமல் இருக்காது.  எந்த அசட்டு உணர்ச்சியினாலும் அல்ல.  Sentimentality அல்ல.  பிஸ்மில்லா கானின் ஷெனாயில் அவர் சில உயரங்களைத் தொட்டு கடவுளை இழுத்துக் கொண்டு வந்து உங்கள் மடியில் உட்கார வைக்கும்போது இதயம் விம்மி விம்மி அடங்கி அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு தாங்க முடியாமல் போய் கண்கள் கசியும் அல்லவா, அப்படி ஒரு உணர்வை இந்த நாவலின் கடைசி அத்தியாயமான இறுதி ரகசியம் என்பதில் நீங்கள் அனுபவம் கொள்வீர்கள்.  உண்மையில் இந்த நாவலை தமிழில் ஒரு லட்சம் பேர் படிக்க வேண்டும்.  ஆனால் அது நடக்காது எனத் தெரியும்.  நான் உங்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.  இந்த நாவலை நீங்கள் சந்தர்ப்பவசமாகப் படிக்க நேர்ந்தால் அந்த அனுபவத்தைப் பற்றி யாரிடமாவது சொல்லுங்கள்.  ஒரு வரியாவது எழுதுங்கள்.  முகநூலிலோ உங்கள் நண்பருக்கோ. 

இதை எழுதியவர் தருண் தேஜ்பால் என்ற மனிதர் என்பதும் கூட ஒரு சந்தர்ப்பவசம்தான்.  இதை மொழிபெயர்த்த தாமரைச் செல்வி, காயத்ரி, சாரு நிவேதிதா போன்றவர்களும் கூட முக்கியம் அல்ல.  இந்தப் பிரதியில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம், நாம் வாழ்கின்ற இந்தக் காலகட்டத்தை எதிர்கொள்கிறது.  மனிதன் சிந்திக்கத் தொடங்கிய தருணத்திலிருந்து இந்தக் கணம் வரை மானுட குலத்தைப் பற்றிக் கவலைப்பட்ட அத்தனை பேரின் அடிப்படைப் பிரச்சினையும் ஒன்றேதான் என்ற மகத்தான உண்மையை இது கண்டுபிடித்துக் கொடுக்கிறது.  மகத்தான உண்மை என்பதன் அபத்தத்தையும் முகத்தில் அறைகிறாற்போல் சொல்லி முடிக்கிறது.  அந்த வகையில்தான் இந்த நாவல் இதுவரை இலக்கிய உலகில் எழுதப்பட்ட எல்லா நாவல்களிலிருந்தும் வித்தியாசப்படுகிறது. 

இந்த நாவலை 15 வயதிலிருந்து 100 வயது வரையிலான எல்லா மனிதர்களும் படிக்கத் தகுந்தவர்கள். 

என் வாழ்க்கையில் என்றைக்கும் மொழிபெயர்ப்பின் பக்கமே செல்லக் கூடாது என்ற முடிவில் இருந்த என்னை, முகமூடிகளின் பள்ளத்தாக்கு என்ற இந்த மகத்தான படைப்பின் மொழிபெயர்ப்பில் ஈடுபடச் செய்த தாமரைச் செல்வி, காயத்ரி இருவருக்கும் என் மனம் கனிந்த நன்றி. 

முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி:

அழகிய கற்பனை வளம் மிகுந்த இந்தப் புதினம் எல்லைக்கோடுகள், கலாச்சாரங்கள், வாசிப்புப் பழக்கங்கள், மற்றும் இலக்கிய மோஸ்தர்களைக் கடந்து விளங்குகிறது.  முழுமுற்றான பரிசுத்தத்தை முன்வைக்கும் எந்த ஒரு மானுட முயற்சியும் மனித குலத்துக்கே எதிராகத்தான் போகும் என்பதைச் சொல்லும் இந்தக் கதைக்கு இணையாக அநேகமாக நம் இலக்கிய உலகில் இதுவரை எழுதப்பட்டதில்லை.  ஒரு நீதிக்கதை என்ற முறையில், இதிலிருக்கும் நீதி திரும்பத் திரும்ப உங்கள் முன்னே வந்து உங்களைப் பீடிக்கவல்லது.”  

-ஆஷிஷ் நந்தி.

 ”அபாரமான, மிகவும் புதியதான, அதி ஆழமான விதத்தில் தருண் தேஜ்பால் இந்தியாவுக்காக எழுதியிருக்கிறார்

– வி.எஸ்.நய்பால்.

 ‘அதீதங்களை நோக்கித் தள்ளப்படும் லட்சியப் பயணங்களால் எப்படி சர்வாதிகாரம் தோன்றித் தழைக்கிறது என்பதை ஒரு தொடர்சித்திரமாக உருவகித்துத் தந்திருக்கிறதுமுகமூடிகளின் பள்ளத்தாக்கு . இதன் படைப்பாக்கச் சாதனை அசாதாரணமானது. இந்தப் புதினம் ஒரு தனிப்பெரும் வெற்றி, உலகப் பொதுக் கதை.’

– சஷி தரூர்

600 ரூ. விலையுள்ள முகமூடிகளின் பள்ளத்தாக்கு நீங்கள் 480 ரூ. செலுத்தி முன்பதிவு செய்தால் புத்தகம் தயாரானதும் உங்களுக்குக் கிடைக்கும்.  முன்பதிவு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், நான் தனிப்பட்ட முறையில் முக்கியமான புத்தகங்கள் மிக உயர்ந்த முறையில், அந்தக் காலத்து வாசகர் வட்டம் புத்தகங்கள் போல் வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுபவன்.  முன்பதிவே ஆயிரம் பேர் செய்தீர்கள் என்றால் பதிப்பாளர்கள் தைரியமாக மேலும் மேலும் புத்தகங்களின் தயாரிப்பில் தரத்தைக் கூட்டுவார்கள்.  எனவேதான் முன்பதிவு முக்கியமாகிறது.