சுருக்கமாக எழுதவே முயற்சிக்கிறேன். இப்போது நான் எழுதப் போகும் குறிப்பை என் நண்பர்கள் காயத்ரியோ ராம்ஜியோ விரும்ப மாட்டார்கள். ஏன், நானே கூட காலையிலிருந்து எழுதவில்லை. ஆனாலும் சமூக அநீதிகளைக் கண்டித்து எழுதுவதைப் போலவே எனக்கு ஒரு அநீதி நடந்தாலும் எழுத வேண்டியது என் கடமைதான் என்று நினைக்கிறேன். உதாரணமாக, டிஎம் கிருஷ்ணாவின் சமீபத்திய அட்ராசிட்டி பற்றி நாளை ஒரு பத்திரிகைக்கு எழுதப் போகிறேன். அதைப் போன்றதுதான் இப்போது நான் எழுதுவதும். அது கர்னாடக சங்கீதத்துக்கு நடந்திருக்கும் அநீதி. இப்போது எழுதுவது எனக்கு செய்யப்பட்ட ஒரு அநீதி.
குழந்தைகளையும் யோகிகளையும் abuse செய்பவன் மனிதன் அல்ல. மிருகம். மிருகம் என்று சொல்வது கூட வேறு வழியில்லாததால்தான். ஏனென்றால், எந்த மிருகமும் பசி வந்தால் தவிர தன் இரையைக் கொல்வதில்லை. மனிதன் மட்டுமே மிருகத்தை விடக் கீழான காரியங்களில் ஈடுபடுகிறான். நீ யோகியா என்று என்னை நீங்கள் கேட்கலாம். கேட்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. நான் எழுதியது போன்ற 100 புத்தகங்களை, எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல், அங்கீகாரத்தை விடுங்கள், செக்ஸ் ரைட்டர் என்ற பட்டத்தைச் சுமந்து கொண்டு இத்தனை புத்தகங்களை ஒரு கர்ம யோகியைப் போல் தொடர்ந்து எழுதி வருபவன் ஒரு ஞானிதான். அதுவும் தவிர, எனக்கு உறவு பந்தம் பாசம் என்று எதுவும் இல்லை. மரணத்தையும் தோழனைப் போல் வரவேற்பவன். சொத்தின் மீது எந்தப் பிடிப்பும் இல்லை. எப்போதும் இருந்ததில்லை. தாமரை இலையில் தண்ணீர் நிற்பது போல்தான் வாழ்கிறேன். எழுத்து மட்டுமே என் உயிர். அதற்காக மட்டுமே பயணங்களில் ஆர்வம். பயணம் என்பதும் என் எழுத்தின் ஓர் அங்கம்தான். அதை எழுத்திலிருந்து பிரிக்க முடியாது. எந்த ஒரு எழுத்தாளனும் தன்னை தன் கலையின் மாஸ்டர் என்றே நம்புகிறான். நானும் அப்படியே நம்புகிறேன். ஆனால் அதை விட அதிகமாக நான் ஒரு யோகி என நம்புகிறேன்.
இப்போது இன்றைய முகநூலில் காயத்ரி எழுதியிருக்கும் இந்தச் சிறு குறிப்பைப் படியுங்கள்.
ஸீரோ டிகிரி இலக்கிய விருது பற்றிய அறிவிப்பு வந்தவுடன் பல வாசகர்களும், எழுத்தாளர்களும் வாழ்த்தினார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. அனுபவித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கடலை உருண்டையில் ஒரு சொத்தைக் கடலை மாட்டாமலா போகும். ஒரு க்ரூப்பில் ‘சாரு நிவேதிதாவுக்கு ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருது பார்சல்’ என்று ஒருவர் கிண்டலாக அனுப்பியிருந்த செய்தி கிடைத்தது. இந்த வார்த்தைப் பிரயோகமே very disgusting. இல்லை வயிறு எரிவதாகக்கூட எடுத்துக் கொள்ளலாம்.
”சாருவிடம் இப்படி விருது கொடுக்கப் போகிறோம் என்று சொன்னவுடன், உடனே ‘நல்லது, இவர்களுக்கெல்லாம் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கலாம், மற்றும் பல பதிப்பாளர்கள், எழுத்தாளர்களையும் இந்த விருதுக்குப் பரிந்துரைக்கும்படி சொல்லுங்கள்’ என்று சொல்லி ஒரு பட்டியலைக் கொடுத்தார். ஒருவர் ‘சாருவுக்கு முதலில் கொடுக்கலாமே, நேரெழுத்தை எழுதிய பலருக்கு நிறைய விருதுகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன, தன்னுடைய ஒவ்வொரு அடியிலும் புறக்கணிப்பைச் சந்தித்தபடி 40 வருடமாக விடாமல் versatile ஆக எழுதிக்கொண்டு வரும் மனிதனை கௌரவிப்பதில் என்ன பிரச்சனை’ என்றார். சாரு கடுமையாக அதை மறுத்தார். ‘நீங்கள் எனக்கு விருது கொடுப்பது குழந்தைகள் தந்தைக்கு கொடுப்பதைப் போல், தப்பு…’ என்று சொல்லி விட்டார்.
இப்போது விஷயத்துக்கு வருவோம். அயல்நாட்டைச் சேர்ந்த ஒரு மதிப்பிற்குரிய விருது, விருது கொடுப்பவரின் குருநாதருக்கே கொடுக்கப்பட்ட போது அந்தப் ”பார்சல்” பரவாயில்லாமல் இருந்ததா? இப்போது சாருவை அசிங்கமான முறையில் கிண்டல் செய்யும் நண்பருக்கு அந்தப் பார்சல் மறந்து போயிற்றா? அல்லது, எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நீங்கள் சாருவை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஜெயமோகன் எழுதிய பிறழ்வெழுத்து என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள். அப்போதாவது புரிகிறதா என்று பார்ப்போம்.”
68 வயதில் எனக்கு எதற்கு என் குழந்தைகளே கொடுக்கும் விருது? என் எழுத்து சர்வதேச அளவில் வாசிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய என் ஆர்வம். அதற்கு என் எழுத்துக்குத் தகுதி இருக்கிறது. இல்லாவிட்டால் நான்கு ஆண்டுகளாக ஒரு ஐரோப்பிய ஆங்கில இதழில் தொடர் கட்டுரை எழுதிக் கொண்டிருக்க முடியாது. தினந்தோறும் நான் என்னைக் கிண்டல் செய்பவர்களிடம் என் பயோடேட்டாவை ஒப்பித்துக் கொண்டிருக்கவும் முடியாது. ஒரு சராசரி இந்தியனின் வயது என்ன? எண்பதா? அப்படியானால் எனக்குக் கிடைக்கக் கூடிய பதினெட்டு ஆண்டுகளை நான் நாவல்களுக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும். அந்தக் காரணத்தினாலேயே என் ஒவ்வொரு நிமிடத்தையும் அளந்து அளந்து செலவழிக்கிறேன். விவேகானந்தர் தன் உடலை நீத்த போது அவர் வயது 39. நம்ப முடியாத வயது. ஆனால் அவரது மரண காலம் அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து விட்டது என்பதால் அந்த ஐந்து ஆண்டுகளும் அவர் உறங்கவில்லை. இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே உறங்கினார். கன்னாபின்னா என்று புகைத்தார். நான் புகைப்பதில்லை. எனக்குக் கிடைத்திருக்கும் நேரத்தை புனைவுகளுக்காக மட்டுமே செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். என் மரண காலம் எனக்குத் தெரியும்.
இதை எழுதும் காரணம், விருதை பார்சல் என்று கிண்டல் செய்து அதில் என் பெயரைச் சேர்த்திருக்கும் நபர் யார் என்று எனக்குத் தெரியும். அவரை நான் மன்னிப்பதற்கு எதுவுமே இல்லை. அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு மாபெரும் அரச மரத்தின் அடியில் ஒருவன் மூத்திரம் பெய்தால் அந்த மரத்துக்கு வலிக்குமா என்ன? ஆனால் அந்த மரத்தின் அடியில் ஒரு பூனை தன் குட்டிகளைப் போட்டு விட்டு இரை தேடிப் போயிருக்கிறது என்று தெரிந்தும் அந்தச் சின்னஞ்சிறு குட்டிகள் மீது மூத்திரம் அடித்தான் எனில் – பூனைக் குட்டிகள் மீது நீர் பட்டால் அவை செத்து விடும் – அவனுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ அந்த தண்டனைதான் இந்தப் பார்சல் கிண்டல்காரருக்கும் கிடைக்கும் என்றே நான் பரிதாபம் கொள்கிறேன். இப்படி அநியாயமாக, அநாவசியமாக சுய வதையை ஏற்கிறார்களே என வருந்துகிறேன். மூத்தவர்களின் மீது எந்த மரியாதையும் அற்ற இவர்கள்தான் வாசிக்கவும் பழகியிருக்கிறார்கள். அதிலும் இவர் ஜெயமோகனின் வாசகர் என்று அறியும் போது இது ஜெயமோகனின் பெயருக்கு அல்லவா இழுக்கு என்று நினைத்துக் கொண்டேன். யார் யாரோ நான் ஜெயமோகன் வாசகர் என்று சொல்லிக் கொண்டு அவர் பெயரைக் கெடுக்கிறார்கள். அவருக்கு இவர் பெயர் கூடத் தெரியாது என்று நினைக்கிறேன். இந்த வாசகரைப் போன்ற அரைகுறைகள் ஜெயமோகனின் பிறழ்வெழுத்து என்ற கட்டுரையைப் படித்துப் பார்க்க வேண்டும்.
மேலும் ஒன்று. ஒருமுறை ஜெயமோகன் எழுதினார். எழுதினாரா என்னிடம் சொன்னாரா என்று ஞாபகம் இல்லை. சாருவுக்கு விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம்தான் கொடுக்க வேண்டும் என்றார். இது இந்தத் தமிழ் சமூகத்துக்கு அவர் கொடுத்த செருப்படி என்றும், எனக்குக் கிடைத்த ஆகப் பெரிய விருதாகவும் கொள்கிறேன். விருது கொடுத்து சாருவை கௌரவிக்கும் அளவுக்குத் தமிழ்ச் சமூகம் முன்னேறவில்லை என்பது அவர் சொன்னதன் பொருள். விருது பார்சல் எழுதிய அன்பருக்கு ஒன்றைச் சொல்கிறேன். சமீபத்தில் ஜெயமோகன் எழுதிய இரு நோயாளிகள் கதையில் வரும் புதுமைப்பித்தனிடம் ஒருவர் “உங்களுக்கு எப்படி காசநோய் வந்தது?” என்று கேட்பதற்கு புதுமைப்பித்தன் “இந்த உலகத்தில் உள்ள அத்தனை பேரும் என் முகத்தில் காறித் துப்பினார்கள், அதனால் காச நோய் வந்தது” என்கிறார். இந்த வாக்கியமும் “சாருவுக்கு விருது கொடுத்தால் விஷ்ணுபுரம் வட்டம்தான் கொடுக்க வேண்டும்” என்ற வாக்கியமும் ஒன்றுதான் என்பதை என்னைக் கிண்டல் செய்த அன்பருக்கு சொல்லிக் கொள்கிறேன்.
இதுவரை என்னைப் பற்றிய மதிப்பீடுகளில் ஜெயமோகனின் பிறழ்வெழுத்து, அபிலாஷின் கட்டுரைகள், என் வாழ்க்கையும் என் எழுத்தும் பற்றிய அராத்துவின் கட்டுரைகள்தான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய விருதுகளாக நான் கருதுகிறேன். இந்த மூவருக்கும் எப்போதும் என் நன்றி என் இதயத்தில் இருக்கும்.
கீழே ஜெயமோகனின் பிறழ்வெழுத்து: