முன்பெல்லாம் புத்தக அட்டைகளுக்கு எழுத்தாளர்கள் ரொம்பவே மெனக்கெடுவார்கள். இப்போதும் அப்படித்தான் மெனக்கெடுகிறார்கள். ஆனால் இப்போது ஓவியர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான இடைவெளி மிகவும் அதிகமாகி விட்டது. கிட்டத்தட்ட இரண்டு இனமும் ஒன்றை ஒன்று அறியாத வேற்றுக் கிரகவாசிகளாகவே ஆகி விட்டனர். முன்பு கிருஷ்ணமூர்த்தி தான் எல்லா புத்தகங்களுக்கும் அட்டை போடுவார். அவருடைய ஓவியங்கள் லட்சக்கணக்கான ரூபாய் விலை போகும். ஆதிமூலம் இன்னும் மேலே. இன்னமுமே அவர் ஓவியங்கள் லட்சக்கணக்கான ரூபாய் விலைக்குத்தான் விற்கின்றன. சுந்தர ராமசாமியின் நெருங்கிய நண்பர். தன்னை அணுகும் அனைவருக்கும் ஓவியம் தருவார். பாஸ்கரனும் அப்படியே. என்னைப் போலவே பாஸ்கரனுக்கும் பூனைதான் உலகம். இப்படி பலர்.
என்னுடைய கோணல் பக்கங்கள் முதல் தொகுதிக்கு என் நண்பர் நடேஷ் வரைந்த கோட்டோவியத்தை என்னால் மறக்கவே முடியாது. என் புத்தக அட்டைகளிலேயே அது தனித்துவமானது.
இப்போதெல்லாம் புத்தகங்களே அம்பது நூறுதான் விற்பதால் எழுத்தாளர்கள் இந்த அட்டைப்பட விவகாரத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டு விட்டனர். முன்பெல்லாம் எழுத்தாளர்களே தங்கள் பதிப்பாளர்களாக இருந்தார்கள் – இப்போது தங்கள் புத்தகங்களை பதிப்பகங்களிடம் ஒப்படைத்து விடுகின்றனர். நேற்று வரை நானும் அப்படியே இருந்தேன். அதாவது, பெருந்தேவியின் உடல் பால் பொருள் என்ற நூலைப் பார்க்கும் வரை. அட்டை ஓவியம் யார் என்று தேடினேன். ரோஹிணி மணி என்று இருந்தது. அப்புறம் பார்த்தால் அவர் ஏகப்பட்ட புத்தகங்களின் அட்டைக்கு வரைந்திருக்கிறார். அவற்றில் என்னை ஆகக் கவர்ந்தது பெருமாள் முருகனின் மாயம் என்ற புத்தகத்தின் அட்டை. உலகத் தரம்.
ரோஹிணி மணியை நேரடியாகத் தெரியாது என்பதால் கொஞ்சம் தயக்கத்தோடுதான் அணுகினேன். சிநேகபூர்வமான ஓவியராகவே தெரிந்தார். முக்கியமாக, புத்தகத்தின் content பற்றி மணிக்கணக்கில் பேசி விஷயத்தை வாங்கிக் கொண்டார். என் இரண்டு புத்தகங்களின் அட்டையும் பிரமாதமாக வந்திருக்கிறது. ஆனால் இதையெல்லாம் விடவும் அவர் சிருஷ்டிகரமானவர். சிற்பியும் கூட. அவரது சமீபத்திய இரண்டு படைப்புகளின் லிங்க் கீழே: