“நான் பெரிதாக மெனக்கெடவில்லை, விடுமுறை காலத்தில் இரண்டு நாட்கள் ஜாலியாக ஷூட் செய்தபோது இருந்ததோடு சரி. ஸ்கிரிப்ட் பேப்பர் கூட எழுதவில்லை. அவ்வப்போது திடீரென்று, சுரா வாங்க, மலர் வாங்க, இப்டி பண்ணுங்க, இப்டி எடுங்க என சீன் போட்டு விட்டு கொஞ்ச நேரம் கழிச்சி அடுத்த ஷாட் பாத்துக்கலாம் என வேப் தூக்கிக்கொண்டு பால்கனிக்கு சென்று விடுவேன். தன்னடக்கம், பணிவு எல்லாம் இல்லை. இப்படித்தான் நடந்தது.”
The Ghost Bug படம் பற்றி அராத்து தன் முகநூல் பக்கத்தில் இப்படி எழுதியிருந்தார். படம் பற்றியும் யாரும் ஒரு நல்ல வார்த்தை சொல்லவில்லை. எல்லோரும் ஏகோபித்த குரலில் படம் புரியவில்லை என்று சொல்லி விட்டார்கள். என்னுடைய நெருக்கமான நண்பர் ஒருவர் – இப்போது சினிமாவில் இருப்பவர் – எந்தக் குறும்படத்துக்கும் எதிர்வினை செய்பவர் – இந்தப் படத்தைப் பார்த்து விட்டு கமுக்கமாக இருக்கிறார். இந்த மொக்கைப் படத்தைப் போய் பாராட்டித் தொலைத்து விட்டு எல்லோரிடமும் உதை படணுமா என்று நினைத்திருக்கலாம்.
நண்பர்கள் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும். நண்பர் என்பதற்காக நான் யாருடைய படைப்பையும் பாராட்டுவேனா? இதுவரை பாராட்டியிருக்கிறேனா? அராத்துவை விட நெருங்கிய நண்பன் ஒருத்தன் முதல் நாவலை எழுதி என்னிடம் கொடுத்த போது பத்து பக்கம் படித்து விட்டு ஓடிப் போ என்று சொன்னவன் ஆயிற்றே நான்? படைப்பாளி அப்படித்தான் சொல்வான் ஐயா… ”நான் ஒண்ணுமே பண்ணலை. சும்மா லீவுல போனப்போ ஜாலியா ஷூட் பண்ணினேன்.” அதை நாம் நம்பி விடலாமா? சரி, 45 ஆண்டுகளாக உலக சினிமா பார்த்து வரும் நான் போயும் போயும் நட்பு கருதியா இந்தப் படத்தை வெளியிட சம்மதிப்பேன்? நட்பு என்றால் சரக்கு வாங்கிக் கொடுக்கலாமே தவிர, நாம் 45 ஆண்டுகளாகக் கட்டிக் காத்து வந்த நம்முடைய இண்டலெக்சுவல் வரலாற்றை விட்டுக் கொடுப்போமா? ஒரு மொக்கை படத்தையா நான் நட்புக்காக வெளியிட சம்மதிப்பேன்? அராத்துவின் முந்தைய குறும்படத்தைப் போலவே இந்தப் படமும் ஒரு மிஸ்ட்ரி த்ரில்லர். முந்தின படத்தை விட இதில் மிஸ்ட்ரி அதிகம். சில பேர் நிழல் தெரிகிறது என்கிறார்கள். கடவுளே, நிழல் தெரிகிறது என்றால் திரும்பத்தான் ஷூட் பண்ணுவார்களே ஒழிய அதை உங்களுக்கா போட்டுக் காண்பிப்பார்கள்? நிழல்தான் இந்தப் படத்தின் துணை ஹீரோ. படத்தைப் பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். சில பின்னூட்டங்களைப் படித்ததால் எழுதத் தோன்றியது.
படத்தை நான் யாருக்குமே அனுப்பவில்லை. முகநூலில் இருக்கிறது. பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன். தருண் தேஜ்பால் முகநூலில் இல்லாததால் வாட்ஸப் மூலம் அனுப்பினேன். இயக்குனர் வசந்த்துக்கும் அனுப்பினேன். அவர் அவ்வப்போது எனக்கு இப்படி ஏதாவது அனுப்புவார் என்பதால். தருண் நம் காயத்ரி மாதிரி. வாயிலிருந்து பாராட்டே வராது. அவரே கோஸ்ட் பக் பார்த்து விட்டு பாராட்டி எழுதி இருந்தார்.
எழுத்தைப் பற்றிக் கேட்டாலும் அராத்து இப்படித்தான் சொல்வார். எதையோ கிறுக்குகிறேன். அப்படிக் கிறுக்கியதற்கா நான் அப்படி ஒரு முன்னுரை எழுதினேன்? நாப்பது பக்க முன்னுரையோ என்னவோ. அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் நூலுக்கு. அந்த முன்னுரை பின்நவீனத்துவம் பற்றிய ஒரு manifesto.
சினிமாவைப் பொறுத்தவரை என்னிடம் ஒரு குணம் உண்டு. காஃபியும் அப்படியே. நான் எதிர்பார்க்கும் தரம் இல்லாவிட்டால் ஐந்து நிமிடம் கூடப் பார்க்க மாட்டேன். எல்லோரும் பாராட்டிய சூரரைப் போற்று ஐந்து நிமிடத்துக்கு மேல் பார்க்கவில்லை. மண்டேலா ரெண்டு நிமிடம். குறும்படமாக இருந்தால் ஒரு நிமிடத்தில் அது மொக்கையா தரமா என்று தெரிந்து விடும். அராத்துவின் கோஸ்ட் பக் முழுமையாகப் பதினைந்து நிமிடம் பார்த்திருக்கிறேன். என் அனுபவத்தில் அது ஒரு தரமான படம். அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. சினிமா என்பது இயக்குனரின் படைப்பு மட்டும் அல்ல. பலரது கலை வண்ணம் அதில் சேர்ந்துள்ளது. இந்தப் படத்தில் அது எல்லாமுமே சேர்ந்து இதை ஒரு முதல் தரமான படமாக ஆக்கியிருக்கிறது.
நான் எடுக்கப் போகும் படத்தில் இந்தக் குழப்பமெல்லாம் இருக்காது. செழியனோடு போய் ஒரு மரத்தில் இருக்கும் பல்லியை ஐந்து நிமிடம், தூங்கிக் கொண்டிருக்கும் காகத்தை ஐந்து நிமிடம் என்று 50 நிமிடத்துக்கு எடுக்க இருக்கிறேன். ஒவ்வொரு பிராணிக்கும் ஐந்து. பூனைக்கு மட்டும் பத்து கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார் செழியன். அவரும் ஒரு பூனைப் பைத்தியம். இருங்க, ஒரு நல்ல படம் குடுத்தா நொட்டா சொல்றீங்க. நான் தான் உங்களுக்கு லாயக்கு. ஒரு உலகப் படத்துக்குக் காத்திருங்கள்…