ஒரு பிரபல எழுத்தாளரோடு அடிக்கடி பேசுகிறேன். கொரோனா காலம் என்பதால் நேரில் பார்ப்பதில்லை. இல்லையென்றால் நிச்சயம் நேரிலும் சந்தித்திருப்பேன். பெயரைக் கூட குறிப்பிடலாம். மறுபடியும் புகார் வரும். புகார் என்னவென்றால், ரொம்ப நெருங்காதீர்கள் என்பதுதான். ஏன், அவ்வளவு கெட்டவரா அவர்? சே, சே, நீங்கள் மகாத்மா மகாத்மா என்று பலரையும் சொல்வீர்களே, அப்படி ஒரு மகாத்மாதான் அவர். ஆனால் அதே சமயம் நீங்கள்தானே வள்ளலாராகவே இருந்தாலும் என்னோடு பழகினால் கத்தியால் குத்தி விடுவார் என்பீர்கள், அதனால் அந்த மகாத்மா நாளை உங்களைக் கத்தியால் குத்தி விட்டால் என்ன செய்வது? அதுதான் பயமாக இருக்கிறது.
அப்படியா, உங்கள் பயம் நியாயமானதுதான். ஆனால் அவர் இதுவரை வாழ்க்கையில் யாரையுமே குத்தியதில்லையே?
என் நண்பர் கிட்டத்தட்ட ராம்ஜெத்மலானி மாதிரி. அடுத்த கேள்வியைப் போட்டார்.
நீங்கள்தானே சாரு சொல்லியிருக்கிறீர்கள், இதுவரை வாழ்க்கையில் ஒருமுறை கூட யாரையும் குத்தியறியாத வெளி ரெங்கராஜனே உங்களைக் குத்தி விட்டார் என்று. அந்த மாதிரி ஆகி விட்டால்?
அதற்கு என்னிடம் பதில் இல்லாததால் பேச்சை மாற்றி விட்டேன்.
பதில் இல்லாவிட்டாலும் நண்பரின் பேச்சு எனக்கு அபத்தமாகப் பட்டது. குழந்தை பிறக்கிறது. தொண்ணூறு ஆண்டுகள் கழித்து அந்தக் குழந்தையும் எல்லா மனிதர்களையும் போல் இறக்கப் போகிறது என்பதற்காக அதன் கழுத்தை நெறித்தா கொல்கிறோம்? என் உறவினர் ஒருத்தர் அவந்திகா பற்றிக் கேட்டார். திருமணம் ஆகி ரெண்டு நாள் ஆகியிருந்தது. அவந்திகா எப்படி என்றார். தேவதை என்றேன். ம்க்கும், இப்போது இப்படித்தான் சொல்வீர்கள், பிறகு பிசாசு என்பீர்கள் என்றார். இப்போது நான் எழுதும் பட்டினிக் கதைகளைப் படித்தால் அவர் என்ன சொல்வாரோ என்று பயமாக இருக்கிறது. நல்லவேளை, ஆசாமிக்கு இலக்கியம் படிக்கும் பழக்கம் இல்லை…