நாளை மாலை ஆறு மணிக்கு க்ளப் ஹவுஸில் உரையாடல். கேள்வி பதில். முதல் பதினைந்து நிமிடங்களில் ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேச இருக்கிறேன். கலந்து கொள்ளுங்கள்.
www.bittalk.in இல் ஏழ்மையைப் போற்றுதல் இலமே இரண்டாவது அத்தியாயம் வெளிவந்துள்ளது. முதல் அத்தியாயத்தை 42000 பேர் படித்திருப்பதாக அதன் ஆசிரியர் சொன்னார். புத்தகமாகப் போட்டால் இவர்களெல்லாம் எங்கே ஓடி ஒளிந்து விடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை. 200 பிரதிதான் அதிக பட்சம் போகிறது.
ஔரங்கசீப் 17 அத்தியாயங்களை எழுதி முடித்து விட்டேன். சீனிக்கும் ஸ்ரீராமுக்கும் அனுப்பினேன். இருவரும் சொன்னதை நான் இங்கே எழுதக் கூடாது என்று இன்னொரு நண்பர் சொன்னார். நாமே நம்மைப் புகழ்ந்து கொள்ளக் கூடாதாம். மற்றவர்கள்தான் புகழ வேண்டுமாம். நல்ல கருத்துதான். ஆனால் மற்றவர்கள் புகழாத போது நம்மை நாமே புகழ்ந்து கொள்ளலாம்தானே? மேலும், சீனியும் ஸ்ரீராமும் மற்றவர்கள்தானே? அவர்கள் புகழ்ந்ததை இங்கே எழுதினால் என்ன? ஒன்றுமே புரிய மாட்டேன் என்கிறது. ரொம்பக் குழப்பம்.
பத்து அத்தியாயத்துக்கு மேல் பாபரின் உரை என்ற பகுதி வருகிறது. அந்தப் பேருரை, மார்ட்டின் லூதர் கிங்கின் எனக்கொரு கனவு இருந்தது, லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை, நெல்ஸன் மண்டேலாவின் நான் சாவதற்குத் தயாராக இருக்கிறேன், சர்ச்சிலின் we shall fight on the beaches ஆகிய பேச்சுக்களை விஞ்ச வேண்டும் என்று எண்ணினேன். இதையெல்லாம் விட 1095-இல் போப் அர்பன் – 2 பேசிய உணர்ச்சிகரமான பேச்சை நெருங்கினால் போதும் என்று திட்டமிட்டேன். மற்றபடி நீங்கள்தான் சொல்ல வேண்டும். அடுத்த மாதமே அந்த அத்தியாயத்தை நீங்கள் படித்து விட முடியும். அந்தப் பேச்சை மட்டும் எழுதி முடிக்க நாலைந்து நாட்கள் எடுத்தது.