சமீபத்தில் ஒரு நண்பர் அ. மார்க்ஸை எங்கே பார்க்க முடியும் என்று கேட்டார்.
மனிதன் எங்கெல்லாம் துயருறுகின்றானோ, எங்கெல்லாம் ஒடுக்கப்படுகின்றானோ அங்கெல்லாம் அ. மார்க்ஸைப் பார்க்க முடியும் என்றேன்.
அதைத்தான் இப்போதும் சொல்கிறேன். கடந்த வாரம் ஒரு என்கௌண்டர் மரணம். அடுத்த நாள் அந்த இடத்தில் அ. மார்க்ஸ் நிற்கிறார். எனக்கு அ. மார்க்ஸை நினைக்கும் போதெல்லாம் Saint Paul of the Cross ஞாபகம் வருவார். துயரப்படுவோரையெல்லாம் தேடித் தேடிப் பணி செய்த ஒரு மகான் ஞானி பவுல். பவுலின் இன்றைய வடிவம்தான் அ. மார்க்ஸ். என் ஆசிரியர்களில் ஒருவர். நான் நிறப்பிரிகையிலிருந்து கற்றது அதிகம். அ. மார்க்ஸுடன் நான் அதிகம் பழகியதும் உரையாடியதும் நிறப்பிரிகை காலத்தில்தான். அவருக்கு ஸீரோ டிகிரி பப்ளிஷிங் – தமிழரசி அறக்கட்டளை வழங்கும் 2021ஆம் வருடத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் ஒன்றரை லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.
ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் உரிமையாளர்களும் என் நண்பர்களுமான ராம்ஜி நரசிம்மன் – காயத்ரி ஆர் இருவருக்கும், தமிழரசி அறக்கட்டளையின் பொறுப்பாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள். ஸீரோ டிகிரி பதிப்பகம் இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும் என்பது என் பிரார்த்தனை.