6.12.2022 அன்று நடந்த மொராக்கோ – ஸ்பெய்ன் கால்பந்தாட்டம் பார்த்தேன். கால் பந்தாட்டம் எனக்கு விளையாட்டு மட்டும் அல்ல. அரசியலோடு தொடர்பு உடையது.
உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க ஏன் நான் யாரும் ஈடுபாடு காண்பிக்காத மொராக்கோ என்ற ஒரு நாட்டைத் தேர்ந்தெடுத்து, அங்கே எழுதப்படும் இலக்கியத்தை ஒரு முப்பது ஆண்டுக் காலமாகப் படித்து அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தேன்? ஏன் ஜான் ஜெனே ”நான் இறந்து போனால் என் பிரேதத்தை ஃப்ரான்ஸில் புதைக்காதீர்கள், மொராக்காவிலேயே புதையுங்கள்” என்று சொன்னார்?
ஏனென்றால், என்னதான் கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு என்றாலும், ஃப்ரான்ஸ் அவரை paedaphile என்றே கருதியது. திருடன் என்றே கருதியது. சிறையில் அடைத்தது. அவர் செய்த குற்றங்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தால் சுமார் இருநூறு ஆண்டுகள் சிறைத் தண்டனையே கிடைத்திருக்கும். அவர் செய்த குற்றங்கள் ஃப்ரெஞ்ச் சட்ட்த்தின்படி அப்படிப்பட்டவை.
ஆனால் அதே ஃப்ரான்ஸில்தான் பாப்லோ பிக்காஸோ, ஜான் பால் சார்த்தர் போன்ற புத்திஜீவிகளும் கலைஞர்களும் ஒன்று திரண்டு ஃப்ரெஞ்ச் அதிபருக்கு எழுதி ஃப்ரெஞ்ச் அதிபர் ஜான் ஜெனேவின் எல்லா குற்றங்களிலிருந்தும் அவரை விடுவித்தார்.
ஃப்ரெஞ்ச் காலனியாதிக்கத்தை எதிர்த்து அல்ஜீரியாவில் சுதந்திரப் போர் நடக்கிறது. அப்போது அல்ஜீரியர்கள் ஃப்ரெஞ்சுக்கார்ர்களை நடுத்தெருவில் வைத்து வெட்டிக் கொன்றார்கள். ஒருமுறை ஒரு சிறுவர் பஸ்ஸைப் பிடித்து ஃப்ரெஞ்ச் சிறார்களை வெட்டினார்கள். ஃப்ரான்ஸ் தேசமே கொந்தளித்த்து. சார்த்தர் அந்தத் தருணத்திலும் அல்ஜீரியாவை ஆதரித்தார். ”மூடர்களே, பல ஆண்டுகளாக நீங்கள் அல்ஜீரியாவைப் பிடித்து வைத்துக் கொண்டு அல்ஜீரியர்களை அவர்களுடைய சொந்த நாட்டிலேயே அடிமைகளாக வைத்திருக்கிறீர்கள். அப்படித்தான் அவர்கள் கத்தியை எடுப்பார்கள்” என்றார் சார்த்தர். சார்த்தரை தேசத் துரோகக் குற்றத்தில் கைது செய்யுங்கள் என்று ஃப்ரான்ஸ் தேசமே கொதித்தபோது அதன் அதிபர் “வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்?” என்ற புகழ்பெற்ற வாசகத்தைச் சொன்னார்.
இப்படிப்பட்ட அபூர்வமான தருணங்கள் எல்லாம் ஃப்ரான்ஸில் சாத்தியம்தான் என்றாலும், அதே ஃப்ரான்ஸில்தான் அந்தோனின் ஆர்த்தோ (Antonin Artaud) என்ற கலைஞனை அவனுடைய மிகச் சாதாரணமான ஒரு விதிமீறலுக்காக அவனைப் பைத்தியம் என்று சொல்லி மனநோய் விடுதியில் அடைத்து, மனநோயை குணப்படுத்துகிறோம் என்று அவன் தேகத்தில் எக்கச்சக்கமான மின்னதிர்ச்சிகளை பாய்ச்சி அவனை சித்ரவதை செய்தனர். இது எப்படி நடந்தது தெரியுமா?பாரிஸ் நகரில் உள்ள Sainte-Anne என்ற மனநோய் விடுதியில் 1938-39 ஆண்டுகளில் அடைக்கப்பட்டார் அந்த்தோனின் ஆர்த்தோ. இங்கே யாரையெல்லாம் மனநோயாளிகள் என்று அடைத்து வைக்கலாம் என்று முடிவு செய்யும் அதிகாரியாக – அந்த மனநோய் விடுதியின் இயக்குனராக இருந்தார் Jacques Lacan. அப்போதுதான் ஆர்த்தோ அந்த மனநோய் விடுதிக்குக் கொண்டு வரப்பட்டார். ”குணப்படுத்தவே முடியாத நிலையில் இருக்கும் மனநோயாளியான இவருக்கு மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்” என்று சான்றிதழ் அளித்தார் ஜாக் லக்கான்.
லக்கான் மற்றும் ஆர்த்தோவின் எழுத்துக்களில் நாம் மிகப் பெரிய இணைத்தன்மைகளைக் காண முடியும். இருவருமே உளவியலை ஆய்வு செய்தவர்கள். ஒருவர் தத்துவார்த்தமாக, ஒருவர் தன் வாழ்வையே சோதனையாகக் கொண்டு. ஆனால் தத்துவவாதிதான் கலைஞனை மனநோய் விடுதியில் அடைத்தது. லக்கானை ஆர்த்தோ வேசி மகன் என்று திட்டி எழுதினார்.
இங்கே நீங்கள் மிகவும் கவனமாக ஒரு விஷயத்தை அவதானம் கொள்ள வேண்டும். மொராக்கோ போன்ற ஆஃப்ரிக்க நாடுகளில், தென்னமெரிக்க நாடுகளில் அல்லது ஆசியாவில் இப்படி நடக்குமா?இங்கே மனநோய் என்பது ஒரு சாதாரண விஷயம். மனநோயாளிகளை நம் சமூகம் குற்றவாளிகளாகப் பார்க்கவில்லை. நோயாளிகளாகக் கூடப் பார்க்கவில்லை. ஒரு சின்ன சலனம். நேர்க்கோட்டிலிருந்து ஒரு சின்ன பிறழ்வு. பைத்தியக்காரர்களை நம் குடும்பங்களில் வீட்டுக்குள்ளேயேதான் வைத்துக் கொண்டார்கள். கூண்டுக்குள் அடைக்கவில்லை. 4000 ஆண்டுகளில் அப்படி நடக்கவில்லை.
மனநோய் மட்டுமல்ல. எல்லா வித பிறழ்வுகளையும் இந்தியச் சமூகம் சகித்துக் கொண்டது. இன்னொரு மூன்றாம் உலக நாடான மொராக்கோவும் அப்படித்தான். இத்தனைக்கும் மொராக்கோ இஸ்லாமிய நாடு. ஆனாலும் சகித்துக் கொண்ட்து.
மொராக்கோவிலும் பீடஃபைலுக்கு தண்டனை உண்டு. ஆனால் எல்லாம் காகிதத்தில்தான். இந்தியாவைப் போலவே எல்லா வித தடைகளும் அங்கே உண்டு. ஆனால் தடை மீறலை இந்தியாவைப் போலவே மொராக்கோவும் சகித்துக் கொண்டது. ஓரினச் சேர்க்கையும் பீடஃபைலும் அமெரிக்காவில் மிகப் பெரிய குற்றங்களாகக் கருதப்பட்டு நாற்பது ஆண்டுகள் ஐம்பது ஆண்டுகள் என்று தண்டனை வழங்கப்பட்ட போது மொராக்கோ அதை ஒரு புன்சிரிப்போடு கடந்து சென்றது. உள்ளூர் ஆட்கள் என்றால், ஒரு ஐம்பது திர்ஹாம் லஞ்சம் வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள் போலீஸார். அமெரிக்காவில் ஐம்பது ஆண்டுகள் சிறை. அதனால்தான் ஜான் ஜெனே என் சடலம் மொராக்கோவில் புதைக்கப்பட வேண்டும் என்றார். ஐரோப்பா அவரை செக்ஸ் குற்றவாளியாகவே பார்த்தது. அதே சமயம் அவர் கலைஞர் என்றதால் மன்னிப்பு வழங்கியது. ஆனால் மொராக்கோவோ ஜான் ஜெனே என்ற ஓரினச் சேர்க்கையாளனைக் கண்டு கொள்ளவே இல்லை. பலாத்காரம் செய்யாதவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. நீ இருக்கிறபடியே இருந்து கொள். அவ்வளவு சகிப்புத்தன்மை கொண்டவை ஆசிய ஆஃப்ரிக்க நாடுகள்.
இதே காரணத்தினால்தான் மொராக்கோவைத் தன் தாய்நாடாக்கிக் கொண்டார் வில்லியம் பர்ரோஸ். பர்ரோஸ் அமெரிக்காவிலேயே இருந்திருந்தால் அவரையும் பீடஃபைல் என்று சொல்லி நூறு ஆண்டுகள் சிறையில் தள்ளியிருக்கும் அமெரிக்க சமூகம். இப்போதும் கூட விதிமீறல் என்பது ஐரோப்பிய சமூகங்களில் மிகப் பெரிய குற்றம். ஒரு இந்தியன் சுவிட்ஸர்லாந்து போன்ற ஒரு நாட்டில் பத்து ஆண்டுகள் வசித்தால் அவன் பைத்தியமாகி விடுவான். அந்த அளவு கட்டுப்பாடுகள் கொண்ட நாடு சுவிட்ஸர்லாந்து. அதனால்தான் மேற்கத்தியர் பலர் இந்தியாவில் வாழ்க்கை லகுவாக இருக்கிறது என்கிறார்கள், இங்கே பெண்களுக்கு அத்தனை பாதுகாப்பு இல்லை என்றாலும் கூட.
எனவேதான் கால்பந்தாட்டத்தைக் காண்பது என்பதே என்னைப் பொருத்தவரை ஒரு அரசியல் செயல்பாடாக இருக்கிறது. நான் மொராக்கோவை ஆதரிக்க பல காரணங்கள். இன்றைய தினம் மொராக்கோவில்தான் மகத்தான இலக்கியம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. முஹம்மது ஷுக்ரி போன்ற எழுத்தாளரை உலகின் எந்த மொழியிலும் நீங்கள் காண முடியாது. அப்படி ஒரு ஐம்பது எழுத்தாளர்கள் மொராக்கோவில் உண்டு. இத்தனைக்கும் மொராக்கோ ஒன்றும் ஃப்ரான்ஸ் போல பெரிய புத்திஜீவிகளின் தேசம் அல்ல. அது ஒரு சாதாரண மூன்றாம் உலக நாடுதான். பெருமளவு லஞ்சமும் ஊழலும் உள்ள நாடு. ஆனாலும் உலகம் பூராவிலும் உள்ள எழுத்தாளர்களுக்கு புனித பூமியாகத் திகழ்ந்தது மொராக்கோவில் உள்ள தாஞ்ஜியர் நகரம்.
நேற்றைய ஆட்டத்தில் ஸ்பெய்னை ஆதரிக்காததற்கு மேலும் சில காரணங்கள் உண்டு. 1. 1920களில் மொராக்கோவின் பெர்பெர் இனக்குழு மக்களை ஒடுக்கியது ஸ்பெய்ன். 2. ஸ்பெய்ன் இன்று ஒரு ஏழை நாடாக இருந்தாலும் அதுவும் ஒரு காலத்தில் காலனியாதிக்க நாடாக இருந்திருக்கிறது. ஒட்டு மொத்த தென்னமெரிக்காவையே ஸ்பானியக் கலாச்சாரத்தினால் அழித்தொழித்தது. 3. ஐரோப்பிய இனவாதம்.
ஆனால் ஆட்டத்தின் ஒன்றரை மணி நேரமுமே பந்து மொராக்கோ பகுதியில்தான் ஓடிக் கொண்டிருந்தது. ஒன்றரை மணி நேரமும் ஒரு பக்கத்தில் ஸ்பெய்ன் கோல்கீப்பர் சும்மாவே நின்று கொண்டிருந்தார். ஒன்றரை மணி நேரமும் ஸ்பெய்ன் பகுதிக்குப் பந்து வரவே இல்லை. ஒன்றரை மணி நேரமும் ஸ்பானிய ஆட்டக்காரர்களின் வசம்தான் பந்து இருந்தது.
ஆனாலும் நம்ப முடியாத ஒரு விஷயம் நடந்தது. ஒன்றரை மணி நேரமும் மொராக்கோ கோல் கீப்பரான யாசின் போனோ ஒரு பந்தைக் கூட வலைக்குள் விடவில்லை. அதில் அவர் ஒரு மந்திரவாதி போல் செயல்பட்டார். மிகச் சில சமயங்களில் மொராக்கோ ஆட்டக்காரர்கள் ஸ்பெயின் பகுதிக்கு பந்தைத் தட்டி விட்டாலும் பந்தை கோலில் போடுவதற்கு அங்கே மொராக்கோ ஆட்கள் இல்லை. அவர்கள்தான் எல்லாருமாகச் சேர்ந்து மொராக்கோ பக்கமே இருந்து கொண்டிருக்கிறார்களே? பந்து மெதுவாக நகர்ந்து ஸ்பெய்ன் கோல் கீப்பரை அடைந்தால் அவர் மறுபடியும் பந்தை ஒரு உதை விட்டு, மொராக்கோவின் பக்கம் அடித்து விடுகிறார். அதற்குப் பிறகு ஒரு பத்து நிமிடங்கள் பந்து மொராக்கோ பக்கத்திலேயே ஸ்பானிய ஆட்டக்காரர்களின் கால்களிலேயே சுற்றிக் கொண்டிருக்கும். இப்படியே தொண்ணூறு நிமிடங்களும் கோல் இல்லாமல் கடந்தது.
பிறகு எக்ஸ்ட்ரா டைம் கொடுக்கப்பட்டது. பதினைந்து நிமிடங்கள். வழக்கம் போல் பந்து மொராக்கோ பக்கமே சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் யாராலும் கோல் போட முடியவில்லை. அதற்கடுத்து ஒரு பதினைந்து நிமிடங்கள் எக்ஸ்ட்ரா டைம். ம்ஹும். அப்போதும் பந்து ஸ்பெய்ன் பக்கம் வரவே இல்லை. மொராக்கோ எல்லையிலேயே சுற்றிக் கொண்டிருந்த ஸ்பெய்னால் கோலும் போட முடியவில்லை.
பெனால்டி உதையை நோக்கித் தள்ளப்பட்டது ஆட்டம். ஆளுக்கு ஐந்து உதை. அங்கேதான் யாசின் போனோ தன் மேஜிக்கை நிகழ்த்தினார். வரும் பந்தையெல்லாம் தன் கைகளினால் தட்டி விட, ஸ்பெய்ன் கோல் கீப்பரோ பந்து எங்கே வருகிறதோ அதற்கு எதிர்த்திசையில் தன் உடம்பைத் தள்ளினார். சரக் சரக் என்று கத்தி பாய்வது போல் பந்து வலைக்குள் பாய்ந்தது. ஸ்பெய்ன் படுதோல்வி அடைந்ததிலும், என் பிரார்த்தனை பலித்து மொராக்கோ வென்றதிலும் எனக்குப் படு சந்தோஷம்.
ஆனால் மற்ற ஐரோப்பிய நாடுகளைச் சந்திக்கும் அளவு மொராக்கோவிடம் வலு இல்லை. அவர்களால் எதிரணியின் கோட்டையைத் தகர்த்து கோல் கீப்பரிடம் செல்லவே முடியவில்லை. வெறும் பாதுகாப்பு ஆட்டமே ஆடினால் அவர்களால் மேலும் முன்னேற முடியாது. இந்த முறை உலகக் கோப்பையில் ஐரோப்பிய நாடுகளே பெரிதும் முன்னணியில் நிற்பது வருத்தத்தை அளிக்கிறது. ஏதாவது ஒரு தென்னமெரிக்க நாடு கோப்பையைப் பெற வேண்டும். நடக்குமா என்று தெரியவில்லை. கணேஷ் அன்புவிடம்தான் கேட்க வேண்டும். மொராக்கோ டீமின் ஆட்டம் மட்டும் அல்ல, மைதானத்தில் இருந்த மொராக்கர்களின் intense பிரார்த்தனையும் அவர்களின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று நம்புகிறேன்.