சாமுவெல் பார்பர் உருவாக்கிய அடாஜியோ ஃபர் ஸ்ட்ரிங்ஸ் பாடலின் ஒரிஜினல் வடிவத்தை நயநதினி பெருமாளுக்கு அறிமுகப்படுத்தினாள். பார்பரை இப்போதுதான் கேட்கிறேன், நீ அதன் ரீமிக்ஸ் வடிவத்தைக் கேட்டிருக்கிறாயா என்றான். கேட்டிருக்கிறேன், ஆனால் அத்தனை கவர்ந்தது இல்லை என்றாள். இப்போது கேள் என்று அவள் கேட்டிராத ஒரு லைவ் வர்ஷனைப் போட்டுக் காண்பித்தான். உன்னிடமிருந்து வரும்போது அது வேறு மாதிரி இருக்கிறது என்று சொல்லி விட்டு அதற்கு நடனமாட ஆரம்பித்தாள். நடனம் தெரிந்தவள். அந்த நடனம் எப்படி இருந்தது என்பது ஆறு பக்கங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அந்த அத்தியாயத்தை மட்டும் ஸ்ரீராமுக்கு அனுப்பினேன்.
பிரபஞ்சம் அழிந்து பின் சிவனும் சக்தியும் நடனமாடி திரும்பவும் இந்த உலகம் சிருஷ்டிக்கப்பட்டது போல் இருந்தது.
அழித்த போதும் உன்மத்தம்.
உருவாக்கப்பட்ட போதும் உன்மத்தம்.
-இப்படி எழுதினார் ஸ்ரீராம்.
அந்தப் பாடலில் தெரியும் உன்மத்த நிலையில்தான் பெட்டியோ…வின் அடுத்த வடிவத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். சீனியிடம் கொடுத்திருப்பது குறுநாவல் வடிவம். 115 பக்கம். இப்போதைய வடிவம் 250 பக்கத்திலிருந்து 300 வரை போகலாம்.
ஸீரோ டிகிரியை எந்த விதமான உன்மத்த நிலையில் எழுதினேனோ அதே போன்ற மனநிலையில்தான் பெட்டியோவையும் எழுதுகிறேன். பொதுவாக என்னுடைய மொழியைப் பற்றி சுந்தர ராமசாமியிலிருந்து (நேர்ப்பேச்சில்) போகன் சங்கர் வரை பிரமாதமாகப் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள். போகன் சங்கர் பாராட்டியதுதான் உச்சம். அந்தப் பாராட்டுகளையெல்லாம் கேட்கும்போது எனக்குக் கூச்சமாக இருக்கும். இதற்கெல்லாம் நமக்குத் தகுதி உண்டா, நம் மீதான அன்பின் மிகுதியால் சொல்கிறார்களா என்றெல்லாம் தோன்றும். ஒருவித அடக்கவுணர்வும், தாழ்வு உணர்வும் உண்டாகும்.
இப்போது பெட்டியோ… நாவலை எழுதும்போதுதான் எனக்கே அந்த விஷயம் புரிபட்டது. மிக நிச்சயமாகவே சொல்லுவேன், பெட்டியோவில் ஸீரோ டிகிரியின் மொழியைத் தாண்டி விட்டேன். இந்த நாவலை ஒருவித trance நிலையில்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
பெட்டியோவை எழுதிக் கொண்டிருக்கும்போது என் மனம் ஏதோ ஓர் பிரபஞ்ச சக்தியுடன் ஒன்றாகி இருப்பது போல் உணர்கிறது. கஞ்ஜா, போதை மாத்திரை, மதுவகைகள் போன்ற எதுவுமே கொடுக்க முடியாத கடுமையான களிவெறியில் துள்ளிக் கொண்டிருக்கிறது மனம். ஆகாயத்திலே பறக்கும் பறவை கீழே இறங்குவதை மறந்து விட்டு மேலே மேலே சஞ்சரித்துக் கொண்டிருப்பதைப் போல் களி மயக்கம் கொண்ட நிலையில்தான் நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். சீக்கிரமே சீக்கிரமே இதை உங்களிடம் கொடுத்து விட வேண்டும் என்று துள்ளுகிறது மனம். ஆனாலும் இந்த ஆனந்த சாகரத்திலிருந்து கரையேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்.
பெட்டியோ… நாவலின் கதையை விடுங்கள். இதில் உள்ள இசைக் கோர்வைகளையும் நவீன இசையையும் கேளுங்கள். அது ஒன்றே போதும், உங்களை அது வேறோர் அற்புத உலகுக்குக் கொண்டு செல்லும்.
இப்போது இங்கே நயநதினி பெருமாளுக்கு அறிமுகப்படுத்திய சாமுவெல் பார்பரின் இசைக் கோர்வையையும் பெருமாள் அவளுக்கு அறிமுகப்படுத்திய ரீமிக்ஸையும் தருகிறேன்.
அடாஜியோ ஃபர் ஸ்ட்ரிங்ஸ் என்ற அந்தப் பாடலையும் தன் வாழ்வையும் இணைத்து இருபத்தைந்து பக்கங்களில் பெருமாளுக்கு எழுதியிருந்தாள் நயநதினி. பேரிலக்கியங்களில் மட்டுமே காணக் கூடிய ஒரு பகுதி அது. நாவலை வேறோர் தளத்துக்கு எடுத்துக் கொண்டு போகும் பக்கங்கள் அவை. அபத்தக் காட்சிகளால் நிறைந்திருந்த ஒரு நாவலை ஒரு சிங்களப் பெண் பேரிலக்கியத்தின்பால் நகர்த்தி விட்டாள்.
Adagio for Strings – Samuel Barber – First recorded in 1938. Conducted by Toscanini
Adagio remix by Tiesto –