வணக்கம் சாரு ஐயா,
நான் தமிழ் சினிமாப் பாடல்களைத் தாண்டி மற்றவை ஏதும் பெரிதாகக் கேட்பதில்லை. உங்கள் பதிவுகள் சிலவற்றில் ஏதாவது வீடியோக்களோ பாடல்களோ இணைத்திருப்பீர்கள். நான் அதில் சிலவற்றைக் கேட்பேன். அவை எனக்கு ஒத்து வரவில்லை. நேற்றையப் பதிவில் சாமுவெல் பார்பரின் இசைக் கோர்வை ஒன்றை இணைத்திருந்தீர்கள். அதனைக் கேட்டேன். ஆரம்பத்தில் ஏதோ கறுப்பு வெள்ளை தமிழ் சினிமாப் பின்னணி இசை போல் இருந்தது. பின்னர் ஆங்கிலப் படத்தில் வரும் பின்னணி இசை போல் இருந்தது. அது என்ன உணர்வைக் கடத்துகிறது என்று புரியாமல் இருந்தேன். கேட்கக் கேட்க கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன் லயிக்க ஆரம்பித்தேன். அது ஒரு மென்சோகத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தது. நொடிகள் செல்லச் செல்ல எதன் மீதோ மிதப்பது போல் இருந்தது. இறுதியில் அதன் உச்சபட்சத்தில் அலைகளின் நடுவே நின்றுக் கொண்டிருக்க என் நெஞ்சை ஒரு கத்தி கீறிக் கொண்டுச் சென்றதைக் கண்டேன். பாடல் முடிந்ததும் என்னுள் ஒரு மௌனம் இருந்தது. அதில் நான் இதுவரைக் கேட்டிராத ஓர் இசையை உணர்ந்தேன். ஓர் அதியற்புதமான இசையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அதன் ரீமிக்ஸ் என்னைக் கவரவில்லை.
பெட்டியோ நாவல் சிறப்பாக முடிந்து வெளிவர வாழ்த்துக்கள்.
நன்றி
த.செந்தமிழ்