பெட்டியோ… நாவலிலிருந்து ஒரு பத்தி

கடந்த மூன்று தினங்களாக ஒரு நாடகப் பிரதியைப் படித்துக் கொண்டிருந்தேன். அதன் காரணமாகத்தான் இந்தப் பக்கம் வர முடியவில்லை. அந்த நாடகத்தைப் படிக்க மூன்று மணி நேரம் போதும். ஆனாலும் அதை நான் படிக்கும்போதே பல மணி நேரம் வெறுமனே அமர்ந்து அது பற்றி யோசிக்க வேண்டியிருந்தது. அந்த நாடகப் பிரதியை எழுதியது நயநதினி. நான் படித்தது அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு. ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் வெளிவரவில்லை. அதில் அந்த்தோனின் ஆர்த்தோ ஒரு பாத்திரமாக வருகிறார். நயநதினி அந்த்தோனின் ஆர்த்தோவின் படு தீவிர வாசகி. ஆர்த்தோவின் நாடகக் கோட்பாடுகளையே தன் நாடகங்களில் பயன்படுத்துகிறாள். அந்த நாடகத்தின் காணொலியையும் அனுப்பியிருக்கிறாள். இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

நாடகத்தில் மார்க்கி தெ ஸாத்-இன் ஒரு கடிதம் மேற்கோள் காண்பிக்கப் படுகிறது. அந்தக் கடிதத்தின் ஒரு பகுதியை பெட்டியோவில் பயன்படுத்திக் கொள்கிறேன் என்றேன். இதையெல்லாம் நீ கேட்கவே வேண்டியதில்லை என்றாள். உண்மைதான். அந்த நாவலையே இரண்டு பேரும் சேர்ந்துதானே எழுதுகிறோம்?

இப்போது மார்க்கி தெ ஸாத். இதை ஏன் இப்போதே வெளியிடுகிறேன் என்றால், இதுதான் என் வாழ்க்கைக்கும் அடிப்படை.

“என் சிந்தனா முறையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்கிறாய்.  அப்படியென்றால் என்ன அர்த்தம்?  யாராவது ஒருவர் மற்றொருவருக்குத் தன் சிந்தனாமுறையைப் பரிந்துரைக்க முடியும் என்றால் அவருக்கு புத்தி சுவாதீனம் இல்லை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.  என்னுடைய சிந்தனாமுறை என்பது முழுக்க முழுக்க என் பார்வையின் விளைவாக நிகழ்வது. 

என் சிந்தனாமுறைதான் என் வாழ்க்கை.  அதுதான் என் இயல்பு.  அதை மாற்றிக் கொள்வதற்கான சக்தி என்னிடம் இல்லை. அப்படி ஒருவேளை அந்த சக்தி என்னிடம் இருந்தாலும் நான் அதைச் செய்யக் கூடாது.  நீ கண்டிக்கும் என்னுடைய சிந்தனாமுறைதான் என்னுடைய வாழ்வில் எனக்குக் கிடைத்திருக்கும் சௌகரியம், சந்தோஷம்.  இந்த சிறைச்சாலையில் நான் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் என் சிந்தனாமுறைதான் என்னை விடுவிக்கிறது.  இந்த உலகின் அத்தனை இன்பங்களையும் அதுதான் எனக்கு வழங்குகிறது.  அந்த வகையில் என் சிந்தனாமுறை என் வாழ்வை விட எனக்கு முக்கியமானது. 

எனக்கு வரும் சிக்கல்கள் எல்லாம், பிரச்சினைகள் எல்லாம் என் சிந்தனாமுறையினால் வரவில்லை.  மற்றவர்களின் சிந்தனாமுறையினால்தான் வருகிறது.”  

mode of thought என்பதை சிந்தனாமுறை என்று தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். வேறு சரியான பிரயோகம் இருந்தால் சொல்லுங்கள்.