கருணை: ஒரு குறுங்கதை

பெருமாளுக்குக் கொக்கரக்கோவைப் போல் ஒருநாளாவது வாழ்ந்து விட வேண்டும் என்பது தீராத ஆசை. வெறும் ஆசை இல்லை. பின்பற்ற வேண்டி மிகவும் முயற்சிக்கிறான். பெருமாளுக்கு அந்த ஆசை நிறைவேறாமலேயே இருப்பதற்கு முக்கியக் காரணம், கருணை. கருணை பற்றி சிந்திக்கும்போது பெருமாளின் இந்தக் குறிப்பிட்ட குணம் கருணையின் கீழ்தான் வருமா அல்லது இது வேறு ஏதாவது குணத்தின்பாற்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு உத்தேசத்துக்குக் கருணை என்றே நினைக்கிறான் பெருமாள்.

எல்லாம் ஒரு நண்பரின் மீது கொண்ட கருணையினால் வந்தது. நண்பரோடு பேச்சு வார்த்தை இல்லை. பெருமாளின் காரியங்கள் நண்பருக்குப் பிடிக்கவில்லை. பேசுவதை நிறுத்திக் கொண்டார். மாதம் ஒரு நண்பராவது பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொள்ளும் காரணத்தினால் பெருமாளுக்கு இதில் ஒன்றும் ஆச்சரியமும் ஏற்படவில்லை. உதாரணமாக, பெருமாள் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நாவலை கொக்கரக்கோ பெரிதாக சிலாகித்த ஒரு நெருங்கிய நண்பருக்கு அனுப்பினான். கொக்கரக்கோ அம்மாதிரி அந்த நண்பருக்கு அனுப்புவது வழக்கம் போல. நண்பரும் உடனடியாகப் படித்து கொக்கரக்கோவிடம் விவாதிப்பது உண்டு போல. ஒரு நாவல் அது வெளிவருவதற்கு முன்பே வாசிக்கக் கிடைப்பது எத்தனை பெரிய கௌரவம்! நண்பருக்கு அனுப்பி ரெண்டு வாரம் ஆகிறது. பெருமாளுக்கு நண்பரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. கிடைத்தது என்று கூட மெஸேஜ் இல்லை. இப்படித்தான் அவனுக்குப் பொதுவாக நடப்பது வழக்கம் என்பதால் அவனும் இதுபற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

பேசுவதை நிறுத்திக் கொண்ட நண்பர் சீலே போகிறார். சீலே என்றால் பெருமாளின் பெயர் ஞாபகம் வருவது சகஜம்தானே? பழைய நட்பின் காரணமாகவோ என்னவோ நான் சீலே செல்கிறேன் பெருமாள் என்று மெஸேஜ் அனுப்பினார் நண்பர். பெருமாளும் நல்லபடியாக வாழ்த்து அனுப்பி வைத்தான்.

அதோடு நிறுத்தியிருந்தால் இந்தக் கதையே இல்லை. பெருமாளின் கருணை குறுக்கே வந்து அவனைத் தூண்டியது. சீலேயில் பார்க்க வேண்டிய இரண்டு முக்கியமான இடங்கள் பற்றிய குறிப்பை நண்பருக்கு அனுப்பி வைத்தான். ஒரு பதிலும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மொபைலை எடுக்கவில்லை போல என்று நினைத்துக் கொண்டான். ஆனால் குறிப்பை அனுப்பும்போதே அவனுக்கு அனுப்பலாமா வேண்டாமா என்ற சம்சயம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. இருந்தாலும் கருணை சும்மா விடுமா? அனுப்பினான். இதோ இன்று திங்கள் கிழமையும் முடிவுக்கு வரப் போகிறது. பெருமாளின் குறிப்புக்கு பதிலே இல்லை. பதிலெல்லாம் வேண்டாம். ஒரு ஓகே கூட இல்லை. அதனால் பெருமாளுக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. உடம்பு கிடம்பு சரியில்லையோ?

நண்பரின் நெருங்கிய நண்பர் பெருமாளுக்கும் நண்பர். வேறோர் காரியமாகப் பேசுவது போல் அவரைத் தொடர்பு கொண்டு, தற்செயலாகக் கேட்பது போல் “நண்பர் சௌக்கியம்தானே? அவருடைய ஹெல்த்தெல்லாம் ஓகேவா?” என்று கேட்டான். அவரும் ”ஓ, ரொம்ப சௌக்கியமாக இருக்கிறார்” என்றார்.

இனிமேலாவது நாம் சும்மா இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் பெருமாள். இதுவே கொக்கரக்கோவாக இருந்தால் வாழ்த்து அனுப்பியதோடு விட்டிருப்பான். ஒருநாளாவது கொக்கரக்கோ மாதிரி வாழ்ந்தாக வேண்டும்.

சுபம்.