லாட்டும் இரண்டு மகள்களும்…

கடந்த ஒரு வாரமாக அந்த்தோனின் ஆர்த்தோவின் எல்லா தொகுதிகளையும் படித்து விடும் முயற்சியில் இருந்ததால் இந்தப் பக்கம் வரவில்லை. நயநதினி அந்த்தோனின் ஆர்த்தோவின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவள் என்று தெரிந்ததால் ஆர்த்தோவை முழுதாகப் படிக்க முனைந்தேன். ஆணோ பெண்ணோ ஒருவர் மீது ஆர்வமும் ஈர்ப்பும் வருவது வெறும் சதையைப் பார்த்து அல்ல என்பதற்கு இது ஒரு உதாரணம். என்னுடைய ஆசான் என்று நான் யாரைக் கருதுகிறேனோ அவரையே நம் தோழியும் கருதும் போது ஏற்படும் ஈர்ப்புக்கு ஈடு இணை இல்லை. அதிலும் அந்த்தோனின் ஆர்த்தோவை இன்றைய காலகட்டத்தில் யார் ஆசானாக ஏற்பார்கள்? ஒருவரை கதாபாத்திரமாகக் கொள்ளும்போது அவராகவே மாறி விடுவது என் இயல்பு. அந்த வகையில் பெட்டியோவை எழுதுவது இப்போது நயநதினிதான். ஆர்த்தோவின் நான்கு தொகுப்புகளையும் படித்த போது அவர் ஒரு மேதை என்றே தோன்றியது. ஒரு மேதையைப் பைத்தியம் என்று சொல்லி மனநோய் விடுதியில் அடைத்து வைத்திருந்தது ஃப்ரஞ்ச் சமூகம். ஃப்ரான்ஸிலேயே இப்படி! என்ன ஒரு நகைமுரண்!

எனக்கு எது நிம்மதியாக இருக்கிறது என்றால் தமிழர்கள் மட்டும் இலக்கியம் வாசித்திருந்தால் என்னுடைய ஜோக்கர் கதைக்காகவே என்னை சிறையில் அடைத்திருப்பார்கள். அந்த அளவுக்கு மிகத் தீவிரமான அரசியல் பகடி அந்தக் கதை. நல்லவேளை, யாரும் இலக்கியம் படிக்காததால் தப்பினேன். இப்போது ஜோக்கர் கதை சிங்களத்தில் மொழிபெயர்ப்பு ஆகிக் கொண்டிருப்பதால் அந்த விஷயம் ஞாபகம் வந்தது.

என்னைப் பொருத்தவரை வாசிப்பு என்பது, ஒரு புத்தகத்தைப் படிப்பது மட்டும் அல்ல. அந்தப் புத்தகத்தில் வரும் முக்கியமான ரெஃபரன்ஸ் விஷயங்களையும் தெரிந்து கொண்டு விடுவேன். அந்த வகையில் ஆர்த்தோ குறிப்பிடும் லாட்டும் அவரது இரண்டு மகள்களையும் பற்றிய கதையையும் அது தொடர்பான சினிமாவையும் பார்த்தேன். சொதோம் அண்ட் கொமோரா என்ற படம். எடுத்து அறுபது ஆண்டுகள் இருக்கும். ஆனால் விவிலியக் கதையின் முக்கால்வாசிதான் படத்தில் வருகிறது. படம் எங்கே தொடங்க வேண்டுமோ அங்கே முடிந்து விடுகிறது. அதுவும் புரிந்து கொள்ளக் கூடியதுதான். உலகம் அழிந்து விட்டதாக நினைத்து லாட்டின் இரண்டு மகள்களும் லாட்டோடு பாலியல் உறவு கொண்டு குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். பாவ காரியங்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்படும் சொதோம் நகரம் ஜெஹோவா கடவுளால் அழிக்கப்படுகிறது. ஆனால், ஜெஹோவாவின் உண்மையான விசுவாசியான லாட்டும் அவர் மகள்களும் பாலியல் உறவு கொள்கிறார்கள். ஒரே ஒரு apologia என்னவென்றால், மகள்கள் இருவரும் லாட்டுக்கு வைனைக் கொடுத்து போதையுறச் செய்து உறவு கொள்கிறார்கள்.

ஆனால் சொதோம் நகரம் அழிந்ததுமே படம் முடிந்து விடுகிறது. மீதிக் கதை சினிமா ரசிகர்களுக்கு வேண்டாம் என இயக்குனர் முடிவு செய்திருக்கலாம்.

லூவ்ர் மியூசியத்தில் லாட்டும் இரண்டு மகள்களும் என்ற ஓவியம் இருப்பதாக ஆர்த்தோ சொல்கிறார். ஓவியர் Lucas van Leyden. இந்த ஓவியம் இணையத்தில் இருந்தால் லிங்க் அனுப்புங்கள். ஆர்த்தோ இந்த ஓவியம் பற்றி ஏழெட்டு பக்கம் எழுதியிருக்கிறார். ஆனால் இணையத்தில் கிடைக்கும் ஓவியம் ஆர்த்தோ சொல்லும் விவரணைகளுக்கு மாறாக உள்ளது. பாரிஸில் வசிக்கும் நண்பர்கள் யாரேனும் அதைப் புகைப்படம் எடுத்து அனுப்பினால் நலம். லூவ்ர் மியூசியத்தில் புகைப்படம் எடுக்க அனுமதி உண்டு. யாரையும் கேட்கக் கூட வேண்டியது இல்லை.

லாட்டும் இரண்டு மகள்களும் பற்றிய திரைப்படம் ஏதேனும் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை.