டியர் சாரு,
உங்களுடைய வாசிப்பு முறை பற்றி நேற்று எழுதியிருந்ததைப் படித்து ஆச்சரியம் அடைந்தேன். ஏனென்றால், உங்களுடைய ராஸ லீலாவை நான் மூன்று ஆண்டுகளாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாக நான் அதிவேகமாக வாசிக்கக் கூடியவள். நீ என்ன படிக்கிறாயா, ஸ்கேன் பண்ணுகிறாயா என்று என் கணவன் என்னைக் கிண்டல் பண்ணுவான். நான் படிக்கும் வேகத்தை நம்ப முடியாமல் ஒருநாள் அவன் என்னை சோதித்தும் பார்த்தான். இன்னொரு கொடுப்பினை, படித்ததெல்லாம் அப்படி அப்படியே ஞாபகமும் இருக்கும். ஆனால் கடவுள் ஒரு வஞ்சகம் பிடித்தவர். நான் படித்தது ப்ளஸ் டூ வரைதான். தந்தை என்னை கல்லூரியில் சேர்க்கவில்லை. தந்தையை மீறி என்னால் எதுவும் செய்ய இயலாத நிலை. சொந்தக் கதை சோகக் கதை இருக்கட்டும். நம்ப முடியாத வேகத்தில் படிக்கக் கூடிய நான் ஏன் ராஸ லீலாவுக்கு மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன்? காரணம் உங்களுக்கே தெரியும். ராஸ லீலாவை நான் இரண்டு முறை படித்தேன். முதல் முறை, ஒரே நாள். இரண்டாம் முறைதான் மூன்று ஆண்டுகளாக முடிக்காமல் படித்துக் கொண்டிருக்கிறேன். காரணம், அதில் வரும் ஒவ்வொரு ரெஃபரன்ஸிலும் முழுமையாக மூழ்குவேன். உதாரணமாக, அதில் நீங்கள் விரிதியானா படம் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். உடனே விரிதியானா படத்தைப் பார்த்து விட்டுத்தான் அடுத்த அத்தியாயம் போவேன். ஜெர்ஸி கோஸின்ஸ்கியின் Hermit of 69th Street பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். உடனே நான் ஹெர்மிட்டைப் படித்தேன். இப்படியே மூன்று ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நீங்கள் இப்போது பெட்டியோ நாவலை அப்படித்தான் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியானால் காலம் அதிகம் எடுக்குமே? பெட்டியோவை சீக்கிரம் கொடுங்கள். பெட்டியோவை என்.எஃப்.டி.யில் வாங்குவதற்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். எப்போது வரும் என்று ஓரளவு கணித்துச் சொல்ல முடியுமா?
ஸ்ரீ
டியர் ஸ்ரீ,
இன்னும் ஒரு மாதத்தில் கொடுத்து விட முடியுமென நினைக்கிறேன்.
நயநதினியின் ஒரே ஒரு நாடகத்துக்கு நாவலில் அறிமுகம் கொடுத்தாலும் அது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமாக ஆகி விடும். அவள் அந்த்தோனின் ஆர்த்தோவின் நாடகக் கோட்பாட்டின்படி நாடகம் இயக்குகிறாள். அவளுடைய ஓரிரு நாடகங்களின் காணொலி பார்த்தேன். ஆனால் நாவலில் அந்த நாடகங்கள் பற்றி எழுதக் கூடாது என்று நினைத்தேன். பெட்டியோ ஒரு நாவல் என்பதால் நயநதினி ஒரு புதிய நாடகத்தை எழுதி இயக்கினால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். நான்தான் இப்போது நயநதினி. பெட்டியோ முடியும் வரை. எனவே லாட்டின் இரண்டு புதல்விகள் என்ற நாடகத்தை நானே எழுதி நாவலில் சேர்க்கப் பார்க்கிறேன். அவ்வளவுதான். நாவல் முந்நூறு பக்கங்களுக்கு மேல் போகாமல் இருக்குமாறு முயற்சிக்கிறேன். அப்போதுதான் படிப்பார்கள் என்று புரிந்து விட்டது. பெரிய நாவல்களை இப்போது யாரும் படிப்பதில்லை என்கிறார்கள். இருநூற்று ஐம்பது பக்கம் என்றால் இன்னும் சிலாக்கியம். இப்போது லாட்டின் இரண்டு புதல்விகளை நாடகமாக எழுதுவதில் இருக்கிறேன். இதற்கும் மேல் நாவல் பற்றிப் பேசக் கூடாது. இப்படி சொல்லிக்கொண்டே பேசிக் கொண்டிருக்கிறேன். நிறுத்த வேண்டும்.
இனி பெட்டியோ பற்றிய கேள்விகளுக்கு இணைய தளத்தில் பதில் எழுதக் கூடாது. சஸ்பென்ஸ் போய் விடும்.
என்.எஃப்.டி.யில் வாங்க பணம் சேர்ப்பதாகச் சொல்கிறாய். நீ அனுப்பியுள்ள புகைப்படத்தைப் பார்த்தால் நீ செல்வந்தர் வீட்டு சீமாட்டி போல் தெரிகிறது. நீ ஏன் பணம் சேர்க்க வேண்டும்? ஐந்து லட்சம் கொடுத்து வாங்கப் போகிறாயா?
சாரு