பெண்கள்தான் இப்படிச் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். நான் ஏதாவது சொன்னால் அது பலித்து விடுகிறது. ஒரு பெண் அதிலும் தீவிரம். நீண்ட காலம் பார்த்திராத யாரையாவது பார்க்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றினால் அந்த நபர் செத்து விடுகிறார். இப்படி அவள் ஒன்பது பேரை பார்க்க நினைத்திருக்கிறாள். அவள் மீது என்ன தப்பு? அவளுக்கு மனதில் தோன்றுகிறது, அதற்கு அவள் என்ன செய்ய முடியும்?
என்னிடம் பெண் தன்மை அதிகம் என்பதனாலோ என்னவோ நான் சொன்னாலும் பலித்து விடுகிறது. அதனாலெல்லாம் நான் ஒரு புடுங்கி என்று நினைத்துக் கொள்வதில்லை. அப்படி நினைப்பவன் உருப்பட மாட்டான்.
ஆனால் ஒருமுறை நான் தீர்மானமாகச் சொல்லியும் ஒரு விஷயம் நடக்காமல் போயிருக்கிறது. சீனியிடம் ஆரம்பத்தில் சொன்னேன், நீங்கள் ஒருக்காலும் எழுத்தாளன் ஆக முடியாது என்று.
அது மட்டும் பலிக்கவில்லை. ஆனாலும் நல்லதே நடந்தது. அவரும் எல்லா சக எழுத்தாளர்களாலும் வெறுக்கப்படும் ஒரு எழுத்தாளராக உருவாகி விட்டார்.
அவர் எழுத்தாளர் ஆக முடியவே முடியாது என்று நான் சொன்னதற்குக் காரணம், எழுத்தாளன் என்றால் மணிக்கணக்கில் அமர்ந்து தட்டச்சு செய்ய வேண்டும். செக்கு மாட்டு வாழ்க்கை. உடல் உழைப்பை வெகுவாகக் கோரும் ஒரு பணி எழுத்து. ஆனால் அதிலும் சீனி என் வாக்கைப் பொய்யாக்கி விட்டார். ஓப்பன் பண்ணா என்ற நாவலை மூன்று நான்கு தினங்களில் ராப்பகலாக அமர்ந்து எழுதி முடித்தார்.
இந்த ஒன்றைத் தவிர மற்ற விஷயங்களெல்லாம் நான் சொன்னால் பலித்து விடுகிறது. இதெல்லாம் எழுதுவதற்கு உகந்த விஷயமே இல்லைதான். ஆனாலும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயங்களை எழுதி விடுவது என் பழக்கம். அதனால்தான் இந்த சப்பை மேட்டரை எழுதத் துணிந்தேன்.
என் நண்பர்களில் பாதிக்குப் பாதி மது அருந்தும் பழக்கம் இல்லாதவர்கள். அவர்கள் எல்லோருமே சொல்லும் ஒரே காரணம், தந்தை. தந்தையின் குடி. குடியினால் விளைந்த குடும்பத்தின் சீரழிவு. ஆனால் அவர்களின் ஞானத் தந்தையாக விளங்கும் நான் குடியை எப்படி ஒரு கொண்டாட்டமாக மாற்றியிருக்கிறேன், அதனால் என் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் என்பதெல்லாம் அவர்களுக்குப் பொருட்டு இல்லை. (அதாவது, நான் குடிப்பதே என் மனைவிக்குத் தெரியாது. அதாவது, நான் சென்னையில் இருக்கும்போது குடிப்பதே இல்லை, எட்ஸெட்ரா…)
நண்பர்கள் வட்டத்தில் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அனைவரோடும் நான் மது அருந்தியிருக்கிறேன். ஒரே ஒருவரைத் தவிர. அவர் சுதேஷ். அவரோடு நான் மது அருந்தியதில்லை. காரணம், அவரை நான் சென்னையை விட்டு வெளியூரில் சந்தித்ததே இல்லை.
ஆனால் சென்னையில் மாதம் ஒருமுறையாவது சந்திப்போம். ஏதாவது ஒரு உணவகத்தில். அதிலும் ஒரு பிரச்சினை என்னவென்றால், அவர் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர். நானோ சைவர்களோடு பழகுவதே இல்லை. இருந்தாலும் சுதேஷ் விதிவிலக்கு. ஏனென்றால், நாங்கள் அசைவ உணவகங்களுக்குச் சென்றாலும், சுதேஷ் சைவம் எடுத்துக் கொள்வார். அதில் எதுவும் பிரச்சினை இல்லை.
ஆனால் ஒரே ஒருமுறை என்னை ஒரு சைவ உணவகத்துக்கு அழைத்துச் சென்றார். சென்னையின் ஹை எண்ட் உணவகம். அதை நடத்துவது அவர் நண்பர். இது உங்களுக்குப் பிடிக்கும் என்றார்.
விதவிதமான அய்ட்டங்கள் வந்தன. துரதிர்ஷ்டவசமாக என் நாக்குக்கு எதுவுமே பிடிக்கவில்லை. இதுதான் நான் சாப்பிட்ட மிக மோசமான சைவ உணவகம் என்றேன். அது பற்றி எழுதவும் போகிறேன் என்றேன். மற்றவர்களைப் போல் சுதேஷ் சினம் கொண்டு ஆர்ப்பாட்டம் பண்ணவில்லை. சிரித்துக்கொண்டே ”தாராளமாக எழுதுங்கள்” என்றார். எழுதவும் செய்தேன்.
ஆனால் அங்கே நான் சாப்பிட்ட போது – அதாவது, ஒவ்வொரு அய்ட்டமாக ரத்து செய்துகொண்டிருந்த போது “இது அவந்திகாவுக்கு மிகவும் பிடிக்கும், சந்தேகமே இல்லை, அவளை அழைத்துக்கொண்டு ஒருமுறை இங்கே வர வேண்டும், இது அவந்திகாவுக்குப் பிடித்த மஹா முத்ராவை விட நன்றாக இருப்பதாக அவள் சொல்வாள்” என்றேன்.
இந்த முப்பது வருட தாம்பத்ய வாழ்வில் நானும் அவளும் ஒன்றாகப் போய் உணவருந்திய ஒரே உணவகம் மஹா முத்ராதான். அதை கொரோனா சமயத்தில் மூடி விட்டார்கள். அதற்குப் பிறகு திறக்கவில்லை. அவளிடம் நான் அடிக்கடி சொல்வதுண்டு. உனக்காக நான் செய்யும் பல தியாகங்களில் ஒன்று, மஹா முத்ராவில் உன்னோடு சாப்பிடுவது என்று. அந்த அளவுக்கு அது எனக்குப் பிடிக்காததாக இருந்தது.
எனக்கு சைவ உணவும் பிடிக்கும். ஆனால் எனக்குப் பிடித்த மாதிரி சைவம் சமைப்பவர்கள் மிகவும் அரிதாகவே உள்ளனர். பட்டப்பா, அவந்திகா என்று விரல் விட்டு எண்ணி விடலாம். வத்தக் குழம்பு, அரைத்து விட்ட சாம்பார், மோர் ரசம், இஞ்சித் துவையல், பூசணிக்காய் மோர்க்குழம்பு என்று எனக்குப் பிடித்த பல சைவ அய்ட்டங்கள் உண்டு. ஆனால் அதையெல்லாம் பக்குவமாக சமைக்கத்தான் ஆள் இல்லை.
இப்போது அடையாறு காந்தி நகருக்கு ஜாகை மாற்றியாயிற்று. நல்ல நாளிலேயே நாயகம். இப்போது பத்து பூனைகளோடு வீடும் மாற வேண்டும் என்றால் எப்படி இருக்கும்? ஐம்பது கொலைகார மனநோயாளிகள் வசிக்கும் மனநோய் விடுதி மாதிரி ஆகி விட்டது வீடு. அதை விடுங்கள். அந்த மாதிரி இருந்தால்தான் என்னால் பாந்தமாக எழுத முடிகிறது. காரணம், அதெல்லாம் எனக்குக் கதைக்கான களன்கள்.
காந்தி நகர் வீட்டுக்கு எதிரே இரண்டு உணவகங்கள். ஒன்று, மண் வீடு. அவந்திகா சமைக்கும் அசைவ உணவு போல் உள்ளது. அப்படி ஒரு அமர்க்களமான ருசி. என்னதான் பிரமாதமாக சமைத்தாலும் அசைவ உணவகங்களில் ரசத்தில் சொதப்பி விடுவார்கள். மண் வீட்டில் ரசமும் அட்டகாசம். அதற்கு அருகிலேயே இன்னொரு சைவ உணவகம். ஹம்ஸா. அங்கிருந்து ஒருநாள் அவந்திகாவுக்கு உணவு வரவழைத்தேன். நான் சுதேஷிடம் சொன்ன அதே வார்த்தைகளைச் சொன்னாள் அவந்திகா. மஹா முத்ராவை விட நன்றாக இருக்கிறது.
அந்த ஹம்ஸாவுக்குத்தான் சுதேஷுடன் சில மாதங்களுக்கு முன் சென்றிருந்தேன்.
இந்த ஒரு விஷயம் மட்டுமல்ல. இன்னொரு விஷயமும் சமீபத்தில் பலித்தது. தக்ஷிணா மூர்த்தி என் வீட்டில் பிரமாதமான முறையில் புத்தக அடுக்குகளைச் செய்து கொடுத்திருந்தார். அப்போது அவரிடம் சொன்னேன், நாம் இருவரும் அன்றாடங்காய்ச்சிகள், வேலை செய்தால்தான் கூலி என்று.
அதுவும் பலித்தது. வீடு மாற்றிய ரகளையில் ஒரு வாரமாக நான் எதுவும் எழுதவில்லை. மடிக்கணினி புது வீட்டுக்குப் போய் விட்டது. வாய்ஸ் டைப்பிங் செய்யலாம் என்றால் அதன் தொழில்நுட்பம் தெரியவில்லை. சீனி சொல்லிக் கொடுத்தும் நடக்கவில்லை. நேரில் இருந்தால்தான் சாத்தியம் என்று தெரிந்தது. பூனைகளைக் காபந்து பண்ணிக்கொண்டு ஒரு வாரமும் மைலாப்பூர் வீட்டிலேயே கிடந்தேன். அமேஸான் ப்ரைமில் பணம் கட்டி மூன்று ஜேம்ஸ் பாண்ட் படம் பார்த்தேன். படு குப்பை. ஒரு படத்துக்கு 120 ரூபாய்.
வேலை செய்தால்தான் கூலி என்று சொன்னேன் இல்லையா, ஒரு வாரமும் சந்தா, நன்கொடை எதுவும் வரவில்லை. வாயில தோச, கையில காசு என்றுதான் இருக்கிறது சமூகம். ஒன்றிரண்டு பேர்தான் அனுப்பினார்கள். ஒரு படத்துக்கு 120 ரூ. நான் என் உயிரை எழுத்தாக்கிக் கொடுத்தும் ஒரு கட்டுரைக்குப் பத்து ரூபாய் என்று விலை வைத்தேன். மாதம் 300 ரூ. முதல் மாதம் நூறு பேர் அனுப்பினார்கள். அடுத்த மாதம் பத்து பேர். 300 ரூ. என்பதை ஆயுள் காலச் சந்தா என்று எடுத்துக்கொண்டு விட்டார்கள் போல. புத்தக அடுக்குகளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாயிற்று. இன்னுமே பல மூட்டைகள் பிரிக்கப்படாமல் கிடக்கின்றன. பிரித்து, புத்தக வரிசைகளை இரண்டாக ஆக்க வேண்டியதுதான். ஒரு வரிசைக்கு மேலே இன்னொரு வரிசை. அப்படிச் செய்தால் உள்வரிசையில் என்ன புத்தகங்கள் இருக்கின்றன என்று தெரியாது, எடுப்பதும் கஷ்டம். ஆனால் வேறு வழியில்லை.
நண்பர் ஒரு விஷயம் சொன்னார். அவர் ஒரு நிறுவனம் நடத்துகிறார். ஆட்களுக்குப் பயிற்சி கொடுத்து ஐ.டி. நிறுவனங்களில் வேலை வாய்ப்பு தேடிக் கொடுக்கும் நிறுவனம் அது. பயிற்சிக்கு முப்பதாயிரம் கட்டணம் என்றால் அஞ்சாயிரம் அஞ்சாயிரமாக இருபதாயிரம் கொடுத்து விட்டு பத்தாயிரம் கொடுக்க மாட்டார்கள். வேலை கிடைத்ததும் தருகிறேன் என்பார்கள். இப்படி ஏதாவது சாக்குபோக்கு.
அதே சமயம் இன்னொரு ஆள் இன்னொரு விதமாக இதே காரியத்தைச் செய்கிறார். ஆளுக்கு ஒன்றரை லட்சம். ஒரே நாளில் தர வேண்டும். உடனடி வேலை. ஒரே நாளில் பத்து பேர் ஒன்றரை லட்சம் தந்து விடுவார்கள். வேலை கிடைக்காது. ஒன்றரை லட்சமும் கோய்ந்தா. போலீஸ் கீலீஸ் என்று போனால் பத்து பேரில் ஒரு ஆளுக்கு அம்பதாயிரம் திரும்பக் கிடைக்கும். அடித்த பதினைந்து லட்சத்தில் அம்பதாயிரம் போலீஸுக்குக் கட்டணம்.
என் நண்பர் சொன்னார். அவனும் ஆரம்பத்தில் என்னைப் போல்தான் நியாயமாக நடத்தியிருப்பான். எல்லாம் பயிற்சி எடுத்துக்கொண்டு கட்டணம் கட்டாமல் ஏமாற்றியிருப்பார்கள். இவன்களுக்கு இது சரி வராது என்றுதான் அவன் இப்படி ஒரு வழியில் இறங்கியிருக்கிறான்.
எனக்கும் அதுதான் ஞாபகம் வந்தது. குப்பை படங்களைப் பார்க்க ஒரு படத்துக்கு 120 ரூ கொடுக்கிறோம். இந்தியாவில் மட்டும் பத்து கோடி பேராவது நெட்ஃப்ளிக்ஸுக்கு மாதம் ஐநூறு என்று கட்டணம் கட்டுகிறார்கள். என் எழுத்துக்கு ஒரு கட்டுரையின் கட்டணம் பத்து ரூபாய் என்றால் மாதச் சந்தா 300 என்பது ஆயுள் சந்தாவாக மாறி விடுகிறது! என்ன சமூகம் இது என்று நினைத்துக்கொண்டேன். அதுவும் சரிதான். என் உறவுக்கார இளைஞர்களே என் ரத்தத்தை உறிஞ்சுவதில் குறியாக இருக்கும்போது மற்றவர்களை சொல்லி என்ன பயன்? மாமா என்ற முறையில் நான் காரியம் மட்டும் செய்து கொடுக்க வேண்டும். ஆனால் எனக்கு ஒரு வேளை சோறு போடுவதற்கு அவர்களுக்கு ஆயிரம் இடைஞ்சல் வந்து விடும். நாதாரிக் கூட்டம்.
ஆனாலும் வழக்கம் போல் நன்கொடை அனுப்பி எனக்குப் பணக்கஷ்டம் வராதபடி பார்த்துக் கொள்ளும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பழைய வீட்டிலிருந்து எல்லா சாமானும் போய் விட்ட பிறகும் வீடு மாற்றும் படலம் ஒரு வாரம் தொடர்ந்ததால் நான் ஒரு வார காலம் அங்கேயே பூனைகளுக்குக் காபந்தாக இருந்தேன் அல்லவா, அப்போது படுக்கை இல்லாமல் வெறும் பலகையில் படுத்து எலும்பெல்லாம் வலியெடுக்க ஆரம்பித்து விட்டது. ஒரே நாளில். உடனே சுதேஷ் எனக்காக ஒரு மடிக்கும் மெத்தையை அனுப்பி வைத்திருந்தார். சுகமாகத் தூங்கினேன். அதேபோல் ஒரு வார காலமும் எனக்கும் அவந்திகாவுக்கும் அற்புதமான மதிய உணவு அனுப்பி வைத்தார். அதையே இரவுக்கும் வைத்துக்கொண்டோம்.
அதேபோல் என்னுடைய இன்னொரு நண்பர் தினமும் ஒரு முழுப் பகலுக்கும் கார் அனுப்பி வைத்தார். சமயங்களில் நள்ளிரவு கூட ஆகி விடும். அதுதான் வீடு மாற்றும் பணிகளுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. பெயர் சொன்னால் அவருக்குக் கஷ்டம். ஒருநாள் மிகவும் நன்றி என்று மெஸேஜ் அனுப்பினேன். நன்றியெல்லாம் சொல்லி சங்கடப்படுத்தாதீர்கள், உங்களுக்கு வேலை செய்வது எனக்கு மகிழ்ச்சி என்றார். ’உங்களுக்கு உதவி செய்வது’ என்று அவர் சொல்லவில்லை என்ற nuanceஐ கவனியுங்கள். அதைத்தான் என் எழுத்து சமூகத்துக்கு போதிக்கிறது.
சந்தா/நன்கொடை அனுப்பி வையுங்கள். புத்தக அடுக்குகளுக்குக் கொடுத்த ஒன்றரை லட்சத்தை ஓரளவுக்காவது ஈடு கட்ட வேண்டும்.
மூளையில் நெளியும் தேக்கரண்டிகள் என்று ஒரு குறுநாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். டீஸ்பூன்களை முன்வைத்து ஒரு தத்துவ விசாரணை என்ற தலைப்பை வைக்கலாமா என்றும் யோசனை. எந்தத் தலைப்பு நலம் என்று எழுதுங்கள்.
ஒரே ஒரு குட்டிப் பூனை என் நண்பரின் வசம் உள்ளது. அதைத் தத்து எடுத்துக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதுங்கள். நண்பர் வீட்டில் ஏற்கனவே ஒரு பூனை இருப்பதால் அந்தப் பூனை இந்தக் குட்டியை ஏற்க மறுக்கிறது.
charu.nivedita.india@gmail.com
சந்தா மற்றும் நன்கொடையை ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)
ரேஸர்பே மூலமாகவும் அனுப்பலாம்.
***
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai.