மீண்டும் ஜப்பான்… (1)

ரொப்பங்கி இரவுகள் நாவலுக்காக இன்னும் சில தரவுகள் தேவைப்படுகின்றன. அதற்காக அக்டோபர் 11 அன்று ஜப்பான் செல்கிறேன். ஜப்பானில் உள்ள நண்பர்கள் என்னைச் சந்திக்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்.

சில நிபந்தனைகள் மற்றும் சில விஷயங்கள்:

1.வாழை படம் பற்றிப் பேசக் கூடாது.

2. வீட்டுக்கு அழைக்கக் கூடாது. அழைத்தால் என் பூனைகளுக்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும். வீட்டில் பத்து பூனைகள். சாந்தோமில் பன்னிரண்டு பூனைகள். அந்தப் பூனைகளை அப்படியே அம்போ என்று விட்டு விட்டு வரவில்லை. அங்கே உள்ள சிலர் அவைகளுக்கு உணவு தரும் பொறுப்பை எடுத்துக்க்கொண்டிருக்கிறார்கள். ஒரு பூனை கூடக் குறையவில்லை. உணவு மட்டும் நான் அனுப்பி விடுகிறேன்.

3. தமிழ் உணவகங்களுக்கு என்னை அழைத்துச் செல்லக் கூடாது. இட்லி வடை சாப்பிடுவதற்காக நான் ஜப்பான் வரவில்லை.

4. ஸ்டேக் எனக்குப் பிடிக்காது. ஜப்பானில் மிக முக்கியமான விருந்தாளிகளுக்கு ஸ்டேக் கொடுத்து உபசரிப்பது வழக்கம் என்று தெரியும். ஸ்டேக் மிகவும் விலை மிகுந்ததும் கூட. அதை விட எனக்கு சாலையோரங்களில் விற்கும் நூடுல்ஸ்தான் ரொம்பவும் பிடிக்கும். சென்ற முறை வந்தபோது முழுக்க முழுக்க சுஷிதான் சாப்பிட்டேன். முழுக்க முழுக்க சாக்கேதான் குடித்தேன். தண்ணீருக்குப் பதிலாக சாக்கே. அப்படித்தான் இப்போதும் இருக்க விருப்பம்.

5. இரண்டு இடங்களுக்குச் செல்வதாக இல்லை. ஒன்று, குரஸவா சமாதி. அழைத்தால் கொலை கட்டுரை எழுதுவேன். இரண்டு, மவுண்ட் ஃபுஜி. மவுண்ட் ஃபுஜி ஜப்பானியர்களுக்கு வேண்டுமானால் புனித இடமாக இருக்கலாம். ஆனால் இமய தேசத்திலிருந்து செல்பவர்களுக்கு மவுண்ட் ஃபுஜி திருச்சி பொன்மலை மாதிரிதான் இருக்கும். என்னை அந்த மலை கவரவில்லை.

6. ஒரே ஒரு நாள் யார் வீட்டிலாவது ரசம் செய்தால் சாப்பிடலாம். என்னால் மூன்று நாட்களுக்கு மேல் ரசம் இல்லாமல் இருக்க முடியாது. ரசப் பைத்தியம் பிடித்து விடும்.

7. கத்திக் கத்திப் பேசுபவர்கள் என்னோடு இருக்கும்போதாவது கொஞ்சம் அமைதியாகப் பேச வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கத்திப் பேசுபவர்களின் தேசத்திலிருந்து ஒரு பத்து நாளாவது எனக்கு விடுதலை வேண்டும். சீனி கத்திப் பேசுவார். அவரிடம் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கலாம் என்று இருக்கிறேன். கேட்பார். மற்றபடி நீங்கள் சிகரெட்டைப் புகைத்து என் மூஞ்சி மீது விட்டால் கூட கோபப்பட மாட்டேன். கத்திப் பேசினால்தான் பிடிக்காது. பெண்களுக்குக் கூட விதிவிலக்கு இல்லை. சென்ற முறை ஒரு பெரிய உணவகத்தில் என் தோழி கத்திப் பேசிக்கொண்டிருந்தார். ஊசி விழுந்தால் சத்தம் கேட்கும் என்ற அமைதியான சூழலில் அந்த உரத்த பேச்சு ரசமாகவே இல்லை. கொஞ்சம் அமைதியாகப் பேசு தாயே என்றேன். மற்றபடி பப்பில் நீங்கள் எத்தனை வேண்டுமானாலும் கத்தலாம்.

8. ஒரு சின்ன வேண்டுகோள். ரொப்பங்கியில் பப்பில் ஒரு இளம் பெண்ணுடன் இரண்டு மணி நேரம் நடனம் ஆடிக்கொண்டிருந்தேன். செக்ஸ் ஒர்க்கர் அல்ல. அந்த பப்புக்கு வந்த பெண். ஆடி முடித்து விட்டு, யாராவது இதை ஒளிப்பதிவு செய்தீர்களா என்று கேட்டேன். நண்பர்கள் சொன்ன பதில் என்னை அதிர்ச்சி கொள்ளச் செய்தது. ”நீங்களோ இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ஒரு முக்கியஸ்தர். நீங்கள் இப்படி ஆடியதை விடியோ எடுத்தால் அது எத்தனை பெரிய பிரச்சினையைக் கொண்டு வந்து விடும்?”

அப்போது ஒரு நண்பர் ”இப்படித்தான் நீங்கள் பாரிஸில் நடனம் ஆடியதை ஒருத்தர் புகைப்படம் எடுத்து, அது உடனேயே பத்திரிகையில் பிரசுரம் ஆகி உங்கள் மனைவி பாரிஸிலிருந்து உடனடியாக இந்தியாவுக்குத் தூக்கியது பற்றி எழுதியிருந்தீர்கள்?” என்று ஞாபகமாகச் சொன்னார்.

“நான் என்ன விடியோ எடுத்து பத்திரிகையிலா கொடுக்கச் சொன்னேன்? என்னிடம் கொடுக்கலாமே?”

கடைசியில் அந்தப் பெண்ணும் நானும் சல்லாபித்துக் கொண்டிருந்ததை புகைப்படம் எடுத்தார்கள். (உ.வே.சா. காலத்தில் சல்லாபம் என்றால் உரையாடல் என்று அர்த்தமாம்.)

அதனால் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் விடியோ எடுத்து ரீல்ஸில் போட்டு விடாமல் அடியேனிடம் கொடுங்கள்.

9. சென்ற பயணம் அதிவேக ரயிலில் செல்வது போல் அமைந்தது. ஒன்பது நாளில் முழு ஜப்பானையும் பார்க்கும் திட்டம். க்யோத்தோவில் பகல் முழுவதும் சுற்றுவோம். இரவில் பப். காலை ஐந்து மணிக்கு வந்து ஆறு மணி வரை உறங்கி விட்டு ஆறுக்கு எழுந்து குளித்து விட்டு ஏழு மணி ரயிலைப் பிடித்து இன்னொரு ஊருக்குப் போவோம். இந்த முறை அப்படி அல்ல. எல்லாம் சாவகாசமாகச் செய்யலாம்.

10. பன்னிரண்டு நாள் பயணம். இந்த முறை அவசியம் ஹொக்கைதோ போக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தோக்கியோவிலிருந்து ஹொக்கைதோ 1300 கி.மீ. அதிவேக ரயிலில் சென்றால் நான்கு மணி நேரம்தான். ஹொக்கைதோவுக்கும் எனக்குமான கலாச்சாரத் தொடர்பு பற்றி விரிவாக எழுத வேண்டும். எழுதுவேன். ஜப்பானில் அக்டோபரில் குளிர் தொடங்கி விடும். சென்ற முறை குளிருக்கு முன்னாலேயே சென்று விட்டேன். ஹொக்கைதோ செல்வதற்கு அக்டோபர்தான் சிறந்த மாதம் என்கிறார்கள். ஆனால் எனக்கு டிசம்பரில்தான் ஹொக்கைதோவைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அங்கே பனிப்பொழிவு இருக்கும்.

11. ஹொக்கைதோ போக முடிகிறதோ இல்லையோ, யுஸாவா என்ற ஊரைப் பார்த்து விட வேண்டும். தோக்யோவிலிருந்து 180 கி.மீ. தூரம்தான். இந்த ஊரில்தான் யசுநாரி கவபாத்தாவின் ஸ்நோ கண்ட்ரி கதை நடக்கிறது. கவபாத்தா இந்த நாவலுக்காக நோபல் விருது பெற்றவர். இந்த நாவல் திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

12. ஆன்சென்னில் குளிக்க வேண்டும் என்பதற்காகவே உடம்பில் பச்சை குத்திக் கொள்ளாமல் இருக்கிறேன். பச்சை இருந்தால் ஆன்சென்னில் விட மாட்டார்கள். மற்றவர்கள் சொல்வது போல் ஆன்சென் எனக்கு ஒன்றும் ஆன்மீக அனுபவம் எதையும் தரவில்லை. ஜப்பானியர்களின் சாமான் பெரிதாகத் தொங்குவதைப் பார்த்துதான் ஆச்சரியப்பட்டேன். மற்றபடி வெந்நீர்க் குளியல் படு சுகம். எனக்கு நிர்வாணம் பிரச்சினை இல்லை என்பதால் அது ஒரு பொருட்டாகவே இல்லை.

தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com

தொடரும்…