பெங்களூர் ரயில் நிலையம்.
வந்தே பாரத் ரயிலுக்காக
நிற்கிறேன்.
அப்போது ஒரு காட்சி:
இளம்ஜோடி,
நவீன உடைகளில்.
அவள் அழுது கொண்டே,
முத்தங்களைப் பரிமாறி,
ரயிலில் தனித்து ஏறுகிறாள்.
ஏறிய பின்னும் கண்ணீர்
அடங்கவில்லை என்பதைக்
கண்டேன்
சங்க காலப் பெண்டிருக்குத்
தம் காதலனைப் பிரிந்து
வளை கழன்று விழுந்த
கதையெல்லாம் மனதில்
தோன்றியது
என் நண்பன் சொல்கிறான்,
‘தற்கொலை செய்து
கொள்ளலாம் போலிருக்கிறது,
பைத்தியம் பிடித்துவிடும்
போலிருக்கிறது’
என்று.
’காதல் தோல்வியா?’
’இல்லை. வெறும் பிரிவு,
காதலி வெளியூரில்’
தாய்க்கு மகனையும் பேரர்களையும்,
தந்தைக்கு மகளையும் பேரர்களையும்,
காதலிக்குக் காதலனையும்
காதலனுக்குக் காதலியையும்
பிரிய முடியவில்லை.
நண்பன் தற்கொலை என்று
புலம்புகிறான்.
என் செல்லப் பிராணியைப்
மரணத்திடம் தந்த போது
எனக்கும் அப்படித்தான்
இருந்தது.
இந்த உலகம்
பிரிவின் வலியில்
துடிக்கிறது.
ஆனால்
ததாகதன் மட்டும்
தன் குதிரையை விட்டு
எப்படிப் பிரிந்தான்
என்பது புதிராக
நிற்கிறது