1
நண்ப,
உனை அழைத்தேன்
ஒரு பயணியின் குரலில்
நதியின் கரையில் அமர்ந்து
ஞானத்தின் புதிர்களைப் பகிர்ந்து கொள்ள
பிஸி என்றாய்
சில தினங்கள் சென்று அழைத்தேன்
சற்றே குற்ற உணர்வுடன்
நானே அழைக்கிறேனென்றாய்
காத்திருந்தேன், காஃபி குடித்தபடி
சுவர்களின் விரிசல்களை எண்ணிக்கொண்டு
நீ வரவில்லை, மனதில் பதிந்து வைத்தேன்
தற்செயலாய் ஒரு மாலையில்
நண்பர்களின் சந்திப்பில்
உனைக் கண்டேன்
அருகில் அமர அழைத்தேன்
நெருக்கியடித்து அமர்வது அசௌகர்யமென
தூரத்தில் அமர்ந்தாய்
நீ என்னைத் தவிர்க்கவில்லை, தெரியும்
ஆனால்,
நீ வேறோர் உலகத்தில் இருக்கிறாய்
அன்று அலெஹோ கார்ப்பெந்த்தியர்
குறித்துப் பேசினேன்
அது காற்றில் மிதந்து
நிலவின் ஒளியில் கரைந்தது
கேட்காத தொலைவில் நீ
இருந்தாய்
அதற்கு முன் பேசியதில்லை
இனி பேசப் போவதுமில்லை
அது வெறுமனே வந்து போனது
வைனை கோப்பையில் ஊற்றும்போது
ஒரு துளி சிந்துவதைப் போல
திட்டமிட்டுச் செய்வதில்லை
எழுபத்து மூன்று ஆண்டுகள்
என் உடலில் கோடுகளாக எழுதப்பட்டன
அறுபதிலேயே டிக்கட் கொடுத்து
பயணத்தை முடியென்று சொல்லும்
தேசமிது
அறுபதா?
ஐம்பதில் கூட கதவு மூடப்படுகிறது
எனக்கு எத்தனைக் காலம் இருக்கிறது?
இரண்டு ஆண்டு?
மூன்று ஆண்டு?
எவருக்கும் தெரியாது
ஒருவேளை கோள்களுக்குத் தெரிந்திருக்கலாம்
செல்வதற்குள் என் பெட்டகத்தை
இறக்கி வைக்க வேண்டும்
அதனாலேதான் உன்னை அருகில் அழைத்தேன்
நீ சொல்கிறாய், நெருக்கம் சுமை
பட்டினி கிடந்து தேடிய அறிவு
நட்சத்திரங்களின் தூசியில் பிணைந்து
உனக்கு வழங்க விரும்பினேன்
திரவியம் தேடி
உடல் நோக மனம் நோகப்
பறக்கிறீர்கள்
ஆனால்
என் ஆன்மாவின் விலையில் பெற்றவை
ஒரு பாலையின் கூடாரத்தில் தூங்குகிறது
கடை விரித்தேன், கொள்வாரில்லை
என்றான் என் மூத்தோன்
அதுவேதான் எனக்குமாகிறது
2
நண்ப,
அருகே அமர்ந்தால் அசௌகரியமென்கிறாயே
நீ கபிலனின் அருகே அமர்ந்திருக்கிறாயா?
பரணனின் அருகே அமர்ந்திருக்கிறாயா?
ஆண்டாளின் அருகே அமர்ந்திருக்கிறாயா?
பாரதியின் அருகே அமர்ந்திருக்கிறாயா?
புதுமைப்பித்தனின் அருகே அமர்ந்திருக்கிறாயா?
தி. ஜானகிராமனின் அருகே அமர்ந்திருக்கிறாயா?
ஷேக்ஸ்பியரின் அருகே அமர்ந்திருக்கிறாயா?
ஷெல்லியின் அருகே அமர்ந்திருக்கிறாயா?
எலியட்டின் அருகே?
ஹெமிங்வேயின் அருகே?
வில்லியம் பர்ரோஸின் அருகே?
கேத்தி ஆக்கரின் அருகே?
ஜான் ஜெனேயின் அருகே?
லூயி ஃபெர்தினாந் செலின் அருகே?
பெர்க்மன் அருகே?
ஃபாஸ்பைண்டர் அருகே?
யுகியோ மிஷிமாவின் அருகே?
யஸுநாரி கவாபட்டாவின் அருகே?
இவர்கள் எல்லோரின் மரபணுவிலிருந்தும்
உருவாகி வந்த என்னருகில் அமர்வதற்கு
உன் அசௌகரியம் தடுக்கிறதா?
3
நண்ப,
இனி நாம் சந்திக்கப் போவதில்லை
அது உனக்குத் தெரியுமா?
காலம் ஒரு முகமற்ற பயணி
சந்தித்தாலும்
நான் தள்ளி நிற்பேன்
பழிக்குப் பழி அல்ல
நீ என்னை அறியவில்லை என்பதனால்
தாஜ் மஹலின் நிழலில் வாழ்பவன்
அதன் ஒளியை உணர்வானா?
ஆனால்,
நீ என்னை அறிந்து அழைத்தால்
நான் ஒரு காற்றாக
உன் கூடாரத்துக்கு வருவேன்
கேட்பவருக்கு மறுத்ததில்லை
நான்
4
ஒரு நண்பர்
திரைப்பட இயக்குனர்
எப்போதும் ‘என் படங்களைப் பார்’ என்பார்
பார்த்ததில்லை
ஆனால்
என் புத்தக வெளியீட்டில்
அவர் பேசாமல் இருந்ததில்லை
ஒருநாள், அவரது
கடைசி படத்தைப் பார்த்தேன்
பரவசமானேன்
நகரிலேயே சிறந்ததொரு
பூச்செண்டு வாங்கிக்கொண்டு
போய்ப் பார்த்தேன்
தன்னால் வளர்ந்த இரு நடிகர்கள்
ஒரு வார்த்தை பாராட்டு அனுப்பவில்லையென
வருந்தினார்
அடுத்த வாரம் மறைந்தார்
அந்த நடிகர்கள்
மலர்மாலையுடன் அவர் நிழலுக்கு
அஞ்சலி செலுத்தினர்
நண்ப,
அடுத்த ஆண்டோ
அதற்கடுத்த ஆண்டோ
நான் மறைந்தால்
மலர்மாலையுடன்
முதல் ஆளாய் வருவது
நீதானெனத் தெரியும்
அதைச் செய்யாதே
முடிந்தால்
இப்போதே வா
அசௌகரியமென்றாலும்
என்னருகே அமர்ந்தால்
ஞானத்தை வழங்குவேன்
இல்லையெனில் இழப்பு எனக்கில்லை
உன்னை எனது சிறந்த
மாணாக்கனென நினைத்தேன்
நீயென்னை சிறந்த ஆசானெனக்
கொள்ளவில்லை
அது என் விதி
5
நண்ப,
வாழ்க்கை அலுத்து விட்டது
காரணம்,
நூற்றியிருபது நூல்களை எழுதியும்
வாசிப்போர் யாருமில்லை
அதனால்
அகவை எழுபத்து மூன்றிலும்
பிச்சையெடுக்கிறேன்
அலுக்குமா, அலுக்காதா,
சொல்?
நானெல்லாம் மலத்தில் நெளியும் புழு
என் ஆசான் தியாகராஜன்
இறையருள் பெற்றவன்
அவனுக்கே அலுத்து விட்டது
எத்தனை காலம்தான்
உப்பு புளி மிளகாயைப் பிச்சையெடுத்து
உண்பேனெனப் பாடுகிறான்
இந்த அந்திமத்தில் உன்னைக் கேட்கிறேன்
அருகில் அமர்ந்து கேளென்று
அசௌகரியமென தொலைவில் செல்கிறாயே,
எங்கே இறக்குவது என் ஞானத்தை?
எழுதி வைத்து விட்டுப் போ
என்கிறாயா?
பத்து சதமே சாத்தியம்
மீதியை எழுத்தில் கொண்டு வர முடியாது
எழுத்தின் எல்லையே அதுதானே?
கிங் லியர் நாடகத்தை என்னைப் போல்
எடுத்துச் சொல்ல ஷேக்ஸ்பியராலும்
முடியாதே, நண்ப?
என்னவென்று எழுத?
6
நிலவு ஒளிர்கிறது
பனி பொழிகிறது
தென்றல் வீசுகிறது
குயில் பாடுகிறது
நானும் கொஞ்சம் இருந்து விட்டு
நினைவாக மறைகிறேன்
நண்ப,
விடைபெறுகிறேன்
(இந்த நீண்ட கவிதையை எழுத எனக்கு எட்டு மணி நேரத்துக்கும் மேல் ஆயிற்று. மாரத்தான் ஓட்டம் போல் இருந்தது. இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. எழுதி முடித்ததும் பெரும் ஆசுவாசம் ஏற்பட்டது. வெட்னஸ்டே என்ற டெலிசீரியல் பார்க்கப் போகிறேன். இல்லாவிட்டால் மண்டை வெடித்து விடும். எலும்பின் மஜ்ஜையை மையாகக் கொண்டு என் ஆன்மா எழுதிய கவிதை. நாளை வளன் அரசு எழுதிய ஒரு நீண்ட சிறுகதை வெளியாகும். அதியற்புதமான ஒரு கதை அது.)