கவிதையை நிறுத்தும் எளிய வழி


என்னைப் பற்றியே எழுதுகிறாய்
என் வார்த்தைகளை
என் காலை மௌனத்தை
அந்த மௌனம் உனக்குத் தரும் துயரத்தை
என் பூனைகளின் விளையாட்டை
எல்லாவற்றையும் கவிதையாக்குகிறாய்

எப்போது ஓய்வெடுப்பாய், கவிஞனே?
எப்போது
உன் கணினியில்
தட்டச்சு செய்வதை நிறுத்தி விட்டு
உன் மேசையை விட்டு எழுந்து
உனக்குப் பிடித்தமான காஃபியைக் குடித்தபடி
ஜன்னல் வழியே மேகங்களைப் பார்ப்பாய்?
அல்லது
நீ கவிதையெழுதும் போதெல்லாம்
ஜன்னலில் வந்து எட்டிப் பார்த்துச் செல்லும்
உனக்குப் பிரியமான மைனாவுடன்
பேசுவாய்?

‘நீயே கவிதை
அதனால்
நீ பேசுவதெல்லாம் கவிதையாகிறது’
என்கிறாய்
பல நூறு முறை
பல நூறு கவிகளால்
சொல்லப்பட்ட தேய்மொழி

‘சரி, கவிதையை நிறுத்தவொரு
எளிய வழியிருக்கிறது அன்பே!
பயமுறுத்தும் அளவுக்கு எளிது
காலையில் என்ன சாப்பிட்டாய்?
மதியம் என்ன உணவு?
இரவுக்கு என்ன?
அதைப் பற்றி மட்டும் சொல்
நானும் சொல்கிறேன்
கவிதை
ஒரு மெல்லிய மௌனமாக
தானாக நின்று விடும்

பிறகு
நீ தேநீர் அருந்தியபடி
உன் தோட்டத்து
அணில்களின் நடனத்தை
வேடிக்கை பார்க்கலாம்
நானும் காஃபி குடித்தபடி
என் ஜன்னலில் வந்து அமரும்
மைனாவிடம் பேச முயல்வேன்

ஆனால் அன்பே,
அந்த மைனாவின் கண்களில்
நாம் இழந்த கனவுகள் மீண்டும்
துளிர்ப்பதைக் காண்கிறேன்
காஃபியின் மணம்
உன் தேநீரின் மெல்லிய புகை
எல்லாம் ஒரு பெரும் மௌனத்தில் கரைகின்றன
அங்கே
நாம் பேசாதவை
நம்மை ஒரு மரத்தின் இலைகளாக
ஒரு பறவையின் றெக்கைகளாக
ஒரு கணத்தில் நித்தியமாக மாற்றுகின்றனவே,
என்ன செய்யலாம்,
சொல்?