PTSD

(ராஸ லீலா பதிப்பகத்தின் மூலம் விரைவில் வெளிவர இருக்கும் இப்போதெல்லாம் ஊரில் யாரும் வாழ்வதில்லை என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதை.)

1

நான் புகுமுக வகுப்பில் ஐந்து சப்ஜெக்டுகளிலும் தோல்வி அடைந்தேன்.

தமிழ், ஆங்கிலம், கணிதம், பௌதிகம், ரசாயனம். நான்கு சப்ஜெக்டுகளில்தோல்வி என்றால் புரிகிறது. பிற்காலத்தில் ஒரு பேர் பெற்ற தமிழ்எழுத்தாளனாக உருவான நான் ஏன் தமிழிலும் தோல்வி? மிக எளியகாரணம்தான். நான்கிலும் தோல்வி என்பது தேர்வுக்கு முன்னரே தெரிந்து விட்டதால் தமிழையும் சரியாக எழுதவில்லை. புகுமுக வகுப்பு என்றால் இப்போதைய பன்னிரண்டாம் வகுப்பு.

இப்போது என்னுடைய எழுபத்து மூன்றாவது வயதில் என் நண்பன் ராமச்சந்திர மூர்த்தியை நினைத்தால், கால எந்திரத்தில் பின்னோக்கிப் போய் உயிரியல், பௌதிகம், ரசாயனம் எடுத்து மருத்துவப் படிப்பு படித்து மனநல மருத்துவராக ஆக வேண்டும் என்று தோன்றுகிறது.

மூன்று காரணங்கள். ராமச்சந்திர மூர்த்தி ஒன்றும் சைக்கியாட்ரி படிக்கவில்லை என்றாலும் அவனை என்னுடைய மாற்று வடிவமாகவே காண்கிறேன். ஆங்கிலத்தில் Other என்பார்களே, அப்படி. நான் வட துருவம். அவன் தென் துருவம். நான் அசுரன். அவன் உத்தமன். அவன் ராமச்சந்திர மூர்த்தி.  நான் கேஸனோவா. இங்கே

இன்னொரு விஷயம் கவனியுங்கள். பலருக்கும் பெற்றோர் வைத்தன் பெயருக்கு எதிராகவே அமையும் வாழ்க்கை. லட்சுமி காந்தன் என்றால் அவன் பிச்சைக்காரனாக இருப்பான். ஞானசேகரன் என்றால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், அவன் ஞானசூன்யம்தான்.. ஆனால் ராமச்சந்திர மூர்த்தி இருக்கிறானே, அவன் நம்முடைய இதிகாச ராமச்சந்திர மூர்த்தியேதான். ஒரு அட்சரம் பிசகில்லை.

பல சம்பவங்கள் உண்டு. எல்லாவற்றையும் எழுதினால் இது நெடுங்கதையாகி விடும். மேலும், இது ராமச்சந்திர மூர்த்தி பற்றிய கதை அல்ல. விநோதினி பற்றிய கதை. அதனால் ஒரே ஒரு சம்பவம் மட்டும் சொல்கிறேன்.

விநோதினிக்கு வயது இருபத்தாறு. கல்யாணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இப்போது ஒன்றிய அரசின் ஆட்சியாளர் தேர்வுக்குப் படிக்கிறாள். என்ன, வேறொரு கதையில் வரும் ரோஷ்ணியோடு குழப்பிக் கொள்கிறீர்களா? வேண்டாம். என்னுடைய வாசகிகளில் நான்கு பேர் அந்தத் தேர்வுக்குப் படிக்கிறார்கள். இந்தக் கதையில் நாம் காணப் போவது விநோதினியை. அவளை நான் அரக்க மனம் கொண்டவள் என்றே எண்ணி வந்திருக்கிறேன். ஏனென்றால், ரியூ முராகாமியின் பியர்ஸிங் என்ற நாவலைப் படித்தவள் அந்தத் திரைப்படத்தையும் பார்த்து என்னிடம் காட்சி காட்சியாக விவரித்தவள்.

நானும் அந்த நாவலைப் படித்திருக்கிறேன். சரி, திரைப்படத்தையும் பார்க்கலாம் என்று பார்த்தால் முதல் காட்சியிலேயே என் நெஞ்சு வலிக்க ஆரம்பித்து விட்டது. எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. எழுத்தில் எத்தனை கொடூரத்தையும் வாசித்து விடுவேன். ஆனால் காட்சி ரூபம் என்றால் நெஞ்சு வலிதான். பியர்ஸிங் திரைப்படத்தில், அந்த நாவலைப் போலவே, ஒரு மத்திம வயதுக்காரன் தன் பச்சிளம் குழந்தையின் வயிற்றில் ஊசியால் குத்தப் போகிறான். கடைசியில் குத்தாமல் திரும்பி விடுகிறான். என்றாலும் ஊசியை அவன் அந்தக் குழந்தையின் மீது குத்த ஓங்கும்போதே நான் திரைப்படத்தை நிறுத்தி விட்டேன்.

ஆனால் விநோதினிக்கு இதெல்லாம் பிரச்சினையே இல்லை. நாம் ஏதாவது ஒரு உப்புப் பெறாத விஷயத்தைச் சொன்னால் அவள் கை கால்கள் நடுங்க ஆரம்பிக்கும். ஏதோ பேய் பிசாசைக் கண்டது போல் அலறியபடி ஓடி விடுவாள். அப்புறம் மூன்று தினங்களுக்கு அவளுக்குப் பலவிதமான கொடுங்கனாக்கள் வந்து ஒரு வழி ஆகி விடும். அதனால் ஈ எறும்பைக் கூட இம்சிக்க விரும்பாத நான் அவளுக்குத் துளியும் நம்மால் இம்சை ஏற்பட்டு விடக் கூடாது என்று அவளோடு பேசுவதை நிறுத்தி விட்டேன். ஒரேயடியாக அல்ல. என்ன என்றால் என்ன. அதோடு சரி. .நாம் பேசி, அவளுக்கு அது இம்சையாகி, எதற்கு வம்பு?

ஆனால் அவள் சொல்லும் இம்சைக் கதைகளை மட்டும் ஆட்சேபணை இல்லாமல் கேட்டுக் கொள்வேன்.  சுயநலம்தான் காரணம்.  அதாவது, அவள் சொல்லும் ஒவ்வொரு இம்சைக் கதையும் என் நாவலில் ஒரு அத்தியாயம்.  அதனால் அவள் சொல்லும் கொடூரமான இம்சைக் கதைகளைக் கேட்டுக் கொள்வதோடு மட்டும் அல்லாமல் அதை எழுதும்போது ஏற்படும் சந்தேகங்களையும் அவ்வப்போது கேட்டுத் தெரிந்து கொள்வேன்.  

ஒரு சமயம் நான் ஒரு பத்திரிகைக்கு ஐந்து ஆங்கிலக் கவிதைகளை அனுப்ப வேண்டியிருந்தது. நான் தமிழில் எழுதிய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது விநோதினி. அவளோடு பேச எனக்குத் தயக்கமாக இருந்தது. தேர்வு இல்லாமல் இருந்திருந்தால் பேசியிருப்பேன். அதனால் என் காரியங்களில் வலது கரமாக இருந்து வரும் ராமச்சந்திர மூர்த்தியிடம் விஷயத்தைத் தெரிவித்தேன். ”விநோதினிக்கு ஃபோன் செய்து கவிதைகளை வாங்கிக் கொடு.”

கண்ணிமைக்கும் நேரத்தில் ராமச்சந்திர மூர்த்தியிடமிருந்து வந்த பதில், நான் லேடீஸுடன் பேசுவதில்லை பெருமாள்.  பிறகு என்ன செய்ய முடியும்?  நானும்தான் லேடீஸோடு – சமீப காலமாகப் – பேசுவதில்லை.  அது என்ன மேட்டர் என்றால், வைதேகிதான் எனக்கு அறிவுறுத்தினாள்.  

”பட்டதெல்லாம் போதும்.  விட்டு விடு.”

இப்படி மொட்டையாகச் சொன்னால் உங்களுக்குப் புரியுமோ, புரியாதோ, தெரியவில்லை.  அவள் வாக்கியத்தை முடிப்பதற்குள்ளாகவே எனக்குப் புரிந்து விட்டது.  

அவள் சொல்ல வந்தது, ’அளவுக்கதிகமாக விளையாடி விட்டாய். உன் விளையாட்டுக்காக நான் என் வாழ்க்கையையே இழந்திருக்கிறேன். போதும், நிறுத்து.’

வைதேகி சொல்வதை ஒருபோதும் கேட்பதில்லை என்று சபதம் எடுத்திருக்கும் நான் இந்த விஷயத்தில் கேட்டு விட்டேன்.  ஆனால் இப்போது காரியம் நடக்க வேண்டுமே?  ஐந்து கவிதைகளும் விநோதினியிடம்தான் உள்ளன.  சரி, ஆபத்துக்குப் பாவமில்லை என்று  நானே விநோதினியைத் தொடர்பு கொண்டு கவிதைகளைக் கேட்டு வாங்கி அனுப்பினேன். அப்போது ராமச்சந்திர மூர்த்தி சொன்னதைச் சொல்லாமல் இருக்க முடியுமா? அவளுக்கு இம்சையோ இம்சை இல்லையோ, சொல்லி விட வேண்டியதுதான். சொல்லாவிட்டால் மண்டை வெடித்து விடும். சொன்னேன். கண்ணிமைக்கும் நேரத்தில் விநோதினி கேட்டாள், “ஏன், உங்கள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி லேடி பேஷண்டுகளைப் பார்க்க மாட்டாரோ?”

கேட்டுச் சொல்கிறேன் என்று பேச்சைத் துண்டித்து விட்டேன். நீட்டித்தால்வேறு ஏதாவது இம்சை சமாச்சாரம் புகுந்து விடும்.

ஒன்று மட்டும் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. என் கண்ணீர்க் கதைகளும் இருள் படிந்த கதைகளும் எழுத்தாக மாறும்போது பெரும் வெடிச்சிரிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மாறி விடுகின்றன. ஆனால் பேசினால் மட்டும் இருள் இருளாக மட்டுமே இருப்பது ஏன்?

ராமச்சந்திர மூர்த்தியை எப்படி ஒரே எழுத்தினால் சாய்த்தாள் பாருங்கள் விநோதினி. அதனால்தான் அவள் ராட்சசி.

சரி, இப்போது புரிகிறதா, ஸ்ரீராமச்சந்திர – சேச்சே, கெட்ட பழக்கம் எப்படிசடுதியில் நம்மையும் தொற்றிக் கொள்கிறது பாருங்கள் – ராமச்சந்திர மூர்த்தியும் நானும் எப்படி எதிரெதிர் துருவமாக நிற்கிறோம் என்று?  ராமச்சந்திர மூர்த்தி சொன்னதை வைதேகியிடமும் சொன்னேன்.  மனுஷன்னா அவன் மனுஷன் என்றாள்.  அவள் சொல்லாத அடுத்த வாக்கியத்தை யூகிப்பது ஒன்றும் உங்களுக்குக் கடினமாக இருக்காது.

நான் மருத்துவம் படித்து, அதைத் தொடர்ந்து ஸைக்கியாட்ரி படிக்க நினைப்பதன் மற்றொரு காரணம், நான் காணும் ஸைக்கியாட்ரிஸ்டுகளே முக்கால்வாசிப் பேர் மனநலம் குன்றியவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஏதோ போகிற போக்கில் சொல்வதாக நினைக்க வேண்டாம். பலவிதமான கள ஆய்வு செய்து விட்டுத்தான் இதைச் சொல்கிறேன். உங்களுக்கே தெரிந்த ஒரு உதாரணம் சொல்வதானால், இப்போதெல்லாம் நடக்கும் தெரப்பி என்ற கண்கட்டு வித்தை. ஒரு அமர்வுக்கு நாலாயிரம் ரூபாய். நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஸைக்கியாட்ரிஸ்டும் கேள்வி கேட்பார். என்னதான் ஆனாலும் நூற்றுக்கு நூறு வெளிப்படையாகப் பேசும் ஆட்கள் ஆயிரத்தில் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். மேலோட்டமாகத்தான் சொல்வார்கள். பெரும்பாலான தெரப்பி கேசுகள் சைக்கியார்ட்ரிஸ்டுகளிடம் ஏன் போகின்றன?  எல்லாம் ஆண் பெண் உறவுச் சிக்கல்தான். 

எத்தனையோ உதாரணம் தரலாம்.  ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன்.  சுலோசனாவின் வயது நாற்பது.  திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள்.  ஐந்து ஆண்டுகளாக அவளுக்கு ஒரு ஆடவனோடு உறவு.  அந்த ஆடவனுக்குத் திருமணமாகி மனைவி, குழந்தை குட்டிகள் எல்லாம் உண்டு.  கணவன் வயது நாற்பத்தைந்து.  மூன்று ஆண்டுகளாக அவனுக்கு ஒரு பெண்ணோடு உறவு.  அந்தப் பெண்ணின் கணவன் இறந்து விட்டான்.  இப்போது இந்த நால்வரில் ஒருத்தர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, கிட்டத்தட்ட பைத்தியம் போல் ஆகி, தற்கொலை உணர்வு மிகுந்து வாரம் மூன்று முறை தெரப்பி எடுத்துக் கொள்கிறார்.  கண்டு பிடித்தீர்களா, இல்லையா?  ங்கொய்யால, சுலோசனாதான் அது.  மற்றவனுக்குக் கொட்டினால் தக்காளி, தனக்குக் கொட்டினால் ரத்தம்.

சொல்ல வந்ததே வேறு விஷயம்.  இப்போது சுலோசனா தன் சைக்கியாட்ரிஸ்டிடம் போய் என்ன சொல்வாள்?  தனக்கு ஒருத்தனோடு உறவு இருக்கிறது என்று சொல்வாளா?  சுலோசனா மட்டும் அல்ல.  எந்தப் பெண்ணும் சொல்ல மாட்டாள்.  கணவனின் பிறன்மனை உறவு பற்றி மட்டும்தான் சொல்வாள்  கண்ணீர் விடுவாள்..  

ஸைக்கியாட்ரிஸ்டுகளும் அந்தக் கண்ணீர்க் கதையை மணிக்கணக்கில் கேட்டுவிட்டுக் கடைசியில், தியானம் செய்யுங்கள், மயிரைப் பிடுங்குங்கள் என்று சொல்லி அமர்வை முடிப்பார்கள். யோவ், தியானம் செய்ய வேண்டும் என்றுதானே என் புருஷன் கூடச் சொல்கிறான்? அதைக் கேட்டுக் கொண்டு போகவா நாலாயிரம் கொடுத்தேன் என்று நீங்கள் கேட்க முடியாது. ஏனென்றால், உங்களின் பைத்தியக்கார உளறலை இரண்டு மணி நேரம் கேட்டிருக்கிறார் ஸைக்கியாட்ரிஸ்ட்.

மூன்றாவது காரணம், நான் சந்திக்கும் பத்தில் ஒன்பது பேர் PTSDயினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். எனக்கு யாரைப் பார்த்தாலும் அஜாக்ஸாகவே தெரிகிறார்கள். கவசம் மறுக்கப்பட்டவர்கள். துரோகத்தின் கசப்பைத் தின்றவர்கள்.

2

விநோதினி கண்களை மூடியபடி நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அறைக்குள் மேஜை விளக்கின் மெல்லிய ஒளி மட்டுமே இருந்தது. மேஜையில் வைத்திருந்த ஸோஃபாக்ளிஸின் Ajax நாடகத்தின் பக்கங்கள் இன்னும் திறந்தேயிருந்தன. அடுத்த அறையில் அவள் கணவன் நிரஞ்ஜன் டிவியில் ஏதோ வெப்சீரீஸ் பார்த்துக்கொண்டிருந்தான். சாதாரண இரவு. ஆனால் அவளுக்கு சாதாரணம் என்ற ஒன்று இல்லை.

நேற்று இரவு நிரஞ்ஜனுடன் நடந்த வாக்குவாதம் சம்பந்தமே இல்லாமல் ஞாபகம் வந்து விநோதினியின் உடல் உடனே உறைந்தது. கைகள் நடுங்கின. இதயம்கல்லாக இறுகியது போல் ஆனது. கால்கள் மரத்துப் போயின. உப்புப் பெறாத சமாச்சாரம். ஆனால் அந்தக் குரல் – அவளுடைய செவிப்பறையையே கிழித்து விடும் போல் தாக்கியது. பொதுவாக, அண்டை அயலில் வீடு கட்டுவதற்காக ஊரையே இரண்டு பண்ணுவது போல் கட்டுமான எந்திரங்கள் சத்தம் போடும். அந்தச் சத்தமெல்லாம் அவளை எதுவுமே பண்ணினதில்லை. ஆனால் அவளிடம் யாரேனும் குரலை உயர்த்திப் பேசினால் மண்டையில் இடி விழுந்தது போல் ஆகி விடுகிறது. இரண்டு நாட்கள் அந்த அதிர்ச்சி அவளிடம் தங்கி எந்த வேலையும் செய்ய முடிவதில்லை.

அவளுடைய சிறு பிராயம் முழுவதும் இரவுகள் ஒரே மாதிரிதான் இருந்தனபத்து மணி அளவில் அப்பா வருவார். காலடி ஓசைக்கு முன்னாலேயே மதுவின் நெடி எட்டி விடும். பிறகு குரல்.

“ஏன்டி தேவ்டியா, இங்க வாடி” என்று ஆரம்பித்து கை கால் மண்டை எல்லாம் உடைகிறாற்போல் அம்மாவுக்கு அடி உதை. சுவரோடு மோதி அடிப்பதும் நடக்கும்.

அந்த வைபவத்தின்போது பக்கத்தில் நின்று அழுது கொண்டிருக்கும் விநோதினிக்கும் மாற்றுக் குறையாமல் அதே அளவு அடியும் உதையும் கிடைக்கும். அடி உதை திட்டு. அடி உதை திட்டு. அந்த இரவுகள் இன்னமும் அவளை விட்டு அகலாமல் இருந்துகொண்டே இருந்தன.

விநோதினி கண்களைத் திறந்தாள். மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து வெளியேற்றினாள். “இது இப்போது. இது கடந்த காலம் இல்லை,” என்று தனக்குத்தானே வாய் விட்டுச் சொல்லிக்கொண்டாள். ஆனால் உடல் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தது. மறுநாள் முழுவதும் மனநிலை பாதிக்கப்படும் என்பது அவளுக்கு தெரியும். எரிச்சல். கவனச் சிதறல். தூக்கமின்மை.

**

சில மாதங்களுக்கு முன்பு ஒரு இலக்கிய வகுப்பில் அந்த நாடகத்தைப் படித்திருந்தாள். ட்ரோஜான் போரின் இரண்டாவது மிகப் பெரிய வீரன். Achilles இறந்த பிறகு அவரது புகழ்பெற்ற கவசத்தை Odysseus-க்கு கொடுத்தார்கள்.

அஜாக்ஸுக்கு அது பெருத்த அவமானம். துரோகம். அவன் தன் தலைவர்களைக் கொல்லத் திட்டமிட்டான். ஆனால் Athena அவனது மனதை மாற்றினாள். இரவில் அவன் கிரேக்கப் படையின் மாடுகளையும் ஆடுகளையும் தன் எதிரிகள் என நினைத்துக் கொன்று போட்டான். காலையில் கண் விழித்தபோது குருதியில் நனைந்து நின்றான். தான் செய்ததை உணர்ந்து வெட்கப்பட்டான். அழிக்க முடியாத அவமானம். “நான் இனி வாழத் தகுதியற்றவன்.” தன் வாளால் – எதிரி Hector-இடமிருந்து கிடைத்த வாளால் – தன்னை மாய்த்துக் கொண்டான்.

விநோதினிக்கு அஜாக்ஸ் தன்னைப் போலவே தோன்றினான். தன் குழந்தைப் பருவத்தின் “கவசத்தை” – பாதுகாப்பு, அன்பு, தகுதி – தந்தை என்ற அந்த அயோக்கியன் எடுத்துக்கொண்டு விட்டான். அவள் தன் உள்ளேயே “மிருகங்களை” கொன்றுகொண்டிருந்தாள். தன் உறவுகளை, நண்பர்களை. .. அன்றிரவு அவள் தன் அறைக்குள் உட்கார்ந்து அழுதாள். “நான் அப்பாவைப் போல ஆகிவிட்டேனோ? என் எரிச்சல், என் கோபம்… என் நண்பர்களுக்கும் இதையேதான் நான் கொடுக்கப் போகிறேனா?

மறுநாள் காலை எழுந்தபோது களைப்பாக இருந்தது. ஆனால் அவள் அன்றாடப் பணிகளை உடைக்கவில்லை. ஐந்து மணிக்கு எழுந்து, யோகா செய்தாள்.  “இங்கே இரு. இப்போது. இந்த அறையில்,” என்று தனக்குத்தானே பலமுறை சொல்லிக்கொண்டாள். 

பிறகு எனக்கு ஃபோன் செய்து நடந்ததைத் தெரிவித்தாள். நான் சொன்னேன் 

“பெண்ணே, அஜாக்ஸ் தனியாக இறந்தான். யாரும் அவனைத் தடுக்கவில்லை. ஆனால் நீ தனியாக இல்லை. இப்போது நீ உன் கவசத்தை நீயாகவே உருவாக்கிக்கொண்டிருக்கிறாய். இந்தத் தேர்வில் வெற்றி பெறுவது என்பது உன் வாள் அல்ல, உன் கேடயம். நீ அதை வைத்துக்கொண்டு உன் குழந்தைப் பருவத்தை வெல்லப் போகிறாய். அவமானம் உன் எதிரி. நீ அஜாக்ஸ் அல்ல. அவன் தன் அவமானத்தைத் தாங்க முடியாமல் இறந்தான். ஆனால் நீ அதை நேராகக் கண்கொண்டு பார்க்கிறாய். அதைப் பெயரிட்டு அழைக்கிறாய். அதோடு உரையாடுகிறாய். அதுவே உன் வெற்றி.”

மறுநாள் விநோதினியிடமிருந்து எனக்கு ஒரு மெஸேஜ் வந்தது:

”என் தந்தை என்னை அடித்தபோது நான் பலவீனமாக உணர்ந்தேன். ஆனால் அந்த பலவீனம் எனக்குக் கருணையைக் கற்றுக் கொடுத்தது. நான் சமூகத்தில் பலவீனமான ஜீவன்களுக்காகப் பணி செய்ய விரும்புகிறேன். ஆதரவற்றவர்கள், அவமானத்தில் வாழ்பவர்கள் – அவர்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்க விரும்புகிறேன். என் துயரம் என்னை உடைக்கவில்லை. அது என்னை வலிமையானவளாக்கியது. இதை எனக்குக் கற்பித்த உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.”

***

3

கதையின் இந்தப் பகுதியை விநோதினி எழுதுகிறேன். இப்படி ஒன்றை எழுதக் கூடுமென்று நான் கனவு கூடக் கண்டதில்லை. ஒரு மகத்தான ஹெடோனிஸ்ட், உடலை உறவை இன்பத்தை அதன் எல்லை வரை கொண்டு சென்ற கண்ணாயிரம் பெருமாள் தற்கொலை செய்ய முயன்றார். ஒரு கதைக்காகத் தேவைப்படுகிறது என்று சொல்லி டாக்டர் ராமச்சந்திர மூர்த்தியிடம் பெயரைக் கேட்டுக் கொண்டு அதை மெடிகல் ஷாப் வைத்திருக்கும் ஒரு நண்பர் மூலம் வாங்கி விழுங்கியிருக்கிறார்.  நல்லவேளை, வாந்தி வந்து விஷமும் வாந்தியோடு வந்து விட்டது.  வாழ்க்கையில் வாந்தியே எடுத்ததில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பார்.  எடுத்த முதல் வாந்தியே உயிரைக் காப்பாற்றி விட்டது.    

ஏன் என்று கேட்டேன்.  இம்சை தர விரும்பவில்லை என்றார்.  வற்புறுத்திக் கேட்ட போது சொன்னார்.  இவரோடு பழகிய ஒருத்தி இவரை ஃப்ராடு என்று சொல்லி விட்டாளாம்.  

நான் சிரித்தேன்.  “உங்களுக்கு இதெல்லாம் புதிதா?”

பெருமாளை ஃப்ராடு என்ற சொன்ன பெண்மணி நிச்சயம் ஒரு சராசரியாகத்தான் இருக்க வேண்டும்.  ஏனென்றால், கலைஞர்களின் சொல்லும் செயலும் காலமும் சராசரி மனித அர்த்தங்களோடு வைத்துப் பார்க்கக் கூடியது அல்ல.  உதாரணம் சொல்கிறேன்.  சென்ற ஆண்டு பெருமாள் யாரையோ பற்றி இறைவி இறைவி என்று உருகி டஜன் கணக்கில் கவிதை எழுதினார்.  நீங்களும் படித்திருப்பீர்கள்.  பிறகு சட்டென்று அந்தக் கவிதைகள் நின்று விட்டன.  ஏதோ நினைவு வந்து ஒருநாள் என்ன, இறைவியையே காணோம் என்று கேட்டேன். அவர் சொன்ன பதிலை தணிக்கை செய்யாமல் சொல்லவா?  “இறைவியாவது, சுன்னியாவது.”  இந்த பதிலைக் கேள்வியுற்றால் அந்த ‘இறைவி’ என்ன சொல்வாள்?  பெருமாள் ஒரு ஃப்ராடு.  அடத் தடிமாடுகளா!  நீங்களெல்லாம் ஏன்டி ஒரு கலைஞனிடம் வந்து பல்லைக் காண்பிக்கிறீர்கள்?   தன் காதை ஒரு பெண்ணுக்காக அறுத்துக் கொடுத்த வான் காக் கூட பெருமாள் சொன்ன பதிலைத்தானே சொல்லியிருப்பான்?  காரணம், கலைஞர்களுக்குக் கடந்த காலமோ எதிர்காலமோ இல்லை; அவர்கள் என்றென்றும் நிகழ்காலத்திலேயே வாழ்பவர்கள்.  

அதே சமயம் இன்னொரு சிந்தனையும் மனதில் வந்து உருட்டியது.  பெருமாளின் தற்கொலை முயற்சியே ஒரு நாடகமோ?  ஏனென்றால், பெருமாள் நம் உலக நாயகனை விட செமத்தியான நடிகர்.  உலக நாயகனுக்கு சினிமாவில்தான் நடிக்கத் தெரியும்.   நிஜ வாழ்வில் தொம்மை. ஆனால் நம் தலைவர் நிஜ வாழ்வில் ரகளையாக நடிப்பார்.  அதனால் இந்தத் தற்கொலை முயற்சியே பெருமாளின் சாகச விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கக் கூடுமோ என்று சந்தேகமாக இருக்கிறது.  தெரியவில்லை.  ஒருத்தி இவரை ஃப்ராடு என்று சொன்னால் அது பற்றி நூறு பக்கத்துக்குக் கதை எழுதி, சொன்னவளைத் தற்கொலை செய்ய வைக்கக் கூடிய ஆள் நம் ஆள்.  இவராவது தற்கொலை செய்து கொள்ளவாவது?  எல்லாம் ட்ராமா.

ஆனால், நிஜமாகவே தற்கொலைக்கு முயன்று அதை மற்றவர்கள் ட்ராமா என்று சொன்னால் அதைவிட வன்கொடுமை வேறெதுவும் இல்லை.  ஒருமுறை எனக்குமே அப்படி நடந்தது.  நான் பிழைத்துக்கொண்டதும் எல்லோரும் அப்படித்தான் சொன்னார்கள்.  தற்கொலைக்கு முயன்றால் அதில் வெற்றி பெற வேண்டும்.  தோற்றால் ஊர் வாயில் விழுந்து எழ வேண்டும்.  ஆனால் உண்மை எதுவாக இருந்தாலும் பெருமாள் பிழைத்துக்கொண்டது வாழ்வின் அற்புதத் தருணங்களில் ஒன்று.  அவரே பலமுறை சொன்னது போல, மரணம் என்பது ஒரு பறங்கி பழுத்து கொடியிலிருந்து பிரிவதைப் போல் நிகழ வேண்டும். 

அஜாக்ஸ் தன் வாளால் இறந்தான்.  பெருமாள் வாந்தியினால் பிழைத்துக் கொண்டார்.  வித்தியாசம் அவ்வளவுதான்.

இன்னொரு விஷயம்.  பெருமாளை ஃப்ராடு என்று சொன்ன அந்தப் பெண்ணுக்கு நன்றி.  இல்லாவிட்டால் இந்தக் கதைக்கு இன்னொரு அத்தியாயம் கிடைத்திருக்காது.  

மே 7, 2026