டியர் சாரு….
ஓகே கண்மணி விமர்சனம் படித்தேன். படம் பார்த்து விட்டு நான் நினைத்ததை அப்படியே எழுதியிருக்கிறீர்கள். உங்களை தொடர்ந்து வாசித்து வருபவன் என்பதால் உங்களுடைய விமர்சனம் இப்படியே இருக்கும் என நினைத்தேன்; அப்படியே இருந்தது. அருமை சாரு. ஒரு திரைபடத்தை எப்படி அணுக வேண்டும் என்பதை உங்களிடம் இருந்து கற்றுவிட்டேன் என நம்புகிறேன். லவ் யு சாரு….
என்றும் அன்புடன்,
ஜக்கரியா.
ஜக்கரியாவுக்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி. இத்துடன் ஓ காதல் கண்மணி விவாதத்தை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நேற்று கணேஷ் அன்பு கேட்டார், பிரகாஷ் ராஜ் பற்றிக் குறிப்பிடாததில் ஏதேனும் உள்குத்து உண்டா என்று. அதுசரி, வெளிக்குத்தே புரியாத இந்த மௌடீக ராஜ்ஜியத்தில் உள்குத்து வைத்து எழுத முடியுமா? இந்த சூழலைப் பற்றி மறந்து போய் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் கடிதங்களில் ஒரு அட்டகாசமான உள்குத்து வைத்திருந்தேன். பிச்சைக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர் போன்றவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் என்று நினைத்தேன். ம்ஹும். அவர்களுக்கே புரியவில்லை. சரி, ஜோக்கை சொல்லி விட்டுத் தானே அர்த்தமும் சொல்பவன் கதையாக நானே அந்த உள்குத்தை விளக்குகிறேன். ஜெ, எஸ்.ரா. இருவரும் சந்திகளில் ஒற்று வைப்பதில்லை. அதனால் அவர்கள் கடிதங்களிலும் எல்லா சந்திகளிலும் உள்ள ஒற்றெழுத்துக்களை வேலை மெனக்கெட்டு நீக்கினேன். அவரைப் பார்த்தேன் என்றால் இருவரும் அவரை பார்த்தேன் என்றுதான் எழுதுவார்கள். இது அவர்களின் தவறல்ல. படைப்பின் உன்மத்த நிலையில் எழுதுபவர்களுக்கு சந்திப் பிழையையெல்லாம் கவனிக்க நேரம் இருக்காது. ஆ, ஜெயமோகனே அப்படித்தான் எழுதுகிறாரா, நானும் அப்படியே எழுதுவேன் என்று குஞ்சு குளுவான்களும் ஆரம்பிக்கக் கூடாது. இது போன்ற சலுகைகள் எல்லாம் Masters –க்கு மட்டும்தான். சில்வண்டுகளுக்குக் கிடையாது. ஓரான் பாமுக், கார்ஸியா மார்க்கேஸ் போன்றவர்களே பல இலக்கணப் பிழைகளோடுதான் எழுதுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் புத்தகமாக வரும் போது அப்பிழைகள் ஒன்று கூட இருக்காது. காரணம், பதிப்பகத்தில் எடிட்டிங் வேலைக்கென்றே தனியாக ஒரு பிரிவு இருக்கும். அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். தமிழில் அப்படிச் செய்யும் ஒரே பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன் தான். புதிய எக்ஸைலைப் புரட்டிய போது ஒரு பக்கத்தில் ”எனக்குப் பிடித்த சிகரெட்டான பென்ஸன் அண்ட் ஹெட்ஜெஸ் லைட்ஸ்” என்ற வரியைப் பார்த்ததும் தப்பு என்று சொல்லி என்னைப் பார்த்துச் சிரித்தார். எப்படியென்றால், நாம் சிகரெட் புகைப்பது என்று சொல்வதில்லை; சிகரெட் பிடிப்பது என்றுதான் சொல்கிறோம். ஆக, எனக்குப் பிடித்த சிகரெட் என்று சொல்லும் போது பிடித்த என்ற வார்த்தை க்ஷண நேரக் குழப்பத்தை உண்டு பண்ணுகிறது. எனக்குப் பிடித்த பிராண்டு என்றுதான் எழுதியிருக்க வேண்டும் என்றார். இதுதான் எடிட்டிங்.
சரி, ஓகே கண்மணிக்கு வருகிறேன். பிரகாஷ் ராஜ் விஷயத்தை ஏன் எழுதவில்லை என்றால், எனக்கு இவ்வளவு பிடித்த படத்தில் ஏன் குறை சொல்ல வேண்டும் என்ற காரணத்தினால்தான். படம் முடிவதற்குப் பத்து நிமிடம் இருக்கும் வரை நான் பிரகாஷ் ராஜ் லீலா சாம்ஸனின் மகன் என்றே நினைத்திருந்தேன். லீலாவுக்கு படத்தில் 75 வயதுத் தோற்றம். பிரகாஷுக்கோ 50 வயதுத் தோற்றம். மகன் என்று நினைத்தது சரிதானே?
மற்றபடி படத்தில் ஒவ்வொரு இஞ்சிலும் மணி தான் தெரிகிறார். ஆதியும் தாராவும் ஆரம்பத்தில் பேசிக் கொள்ளும் இடம். உனக்கு நான் எத்தினியாவது என்ற ரீதியில் கேட்கிறாள் தாரா. (ரீதியில் என்று தான் எழுத முடியும். நான் பார்த்த பாடாவதி தேவி தியேட்டரில் வசனமே சரியாகக் காதில் விழவில்லை.) உடனே ஆதி சின்ன வயசிலேர்ந்து என்கிறான். தாரா அதற்கு “சீ… இதுவரைக்கும் நீ ஒரு பொண்ணைக் கூட தொட்டிருக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும்” என்கிறாள்.
அட அடா… இன்றைய இளைய சமுதாயத்தைப் பற்றி எந்த அளவுக்கு நுணுக்கமாகத் தெரிந்திருந்தால் மணி இந்த வசனத்தை எழுதியிருப்பார். இப்படிப்பட்ட எத்தனையோ இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். நாலைந்து தோழிகள் இருப்பார்கள். ஆனால் பையன் ஸ்த்ரீ சுகமே தெரிந்திராதவனாக இருப்பான். இதுதான் எதார்த்தம். ஆண்களை ‘அறிந்த’ பெண்களை விட பெண்களை ‘அறிந்த’ ஆண்கள் கம்மி தான்.
Comments are closed.