இதை நான் பத்துப் பதினைந்து தினங்களுக்கு முன்பே எழுத எண்ணினேன். நேரம் இல்லை. முழு நேரத்தையும் குருபூஜை (பழுப்பு நிறப் பக்கங்கள்) எடுத்துக் கொள்கிறது. எக்கச்சக்கமாக வாசிக்க வேண்டியிருக்கிறது. நேற்று ஒரு கட்டுரையில் ஒரு சின்ன தடங்கல். இல்லை, தடங்கல் பெரிது. குருநாதர் இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். அதில் நான்கை அவசியம் படிக்க வேண்டும். அந்த நான்கும் தான் அவர் எழுதியதில் ஆகச் சிறந்தது. மூன்றைப் படித்து விட்டு எழுத ஆரம்பித்தேன். அந்த மூன்றில் இரண்டு சந்தையில் கிடைக்கிறது. ஆனால் மற்ற இரண்டு நாவல்களும் கிடைக்கவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.எஸ்.ஆர். லிங்கம் அவர்களிடம் கேட்டேன். இல்லை. டாக்டர் ஸ்ரீராமைத் தேடச் சொன்னேன். அவர் உளவுத்துறையில் இருக்க வேண்டியவர். என்ன கேட்டாலும் தேடிக் கண்டு பிடித்து விடுவார். நான் கேட்ட புத்தகங்கள் அவர் மூலமும் கிடைக்கவில்லை. ரோஜா முத்தையா நூலகத்திலும் இல்லை. ஒரு புத்தகத்தை உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் எலெக்ட்ரானிக் நூலகத்திலிருந்து மின்புத்தகமாகக் கொடுத்தார் நண்பர் திருநாவுக்கரசு. இவரும் என் தளபதிகளில் ஒருவர். இன்னொரு புத்தகம் கிடைக்கவில்லை. எங்கேயும் யார் மூலமும் கிடைக்கவில்லை. கட்டுரையைக் கொடுக்க வேண்டிய நாள் தாண்டி விட்டது. மூன்று நாவல்களையும் படித்து விட்டேன். மூன்றும் க்ளாஸிக்ஸ். உலகத் தரம். ஆனால் அவரது நான்கு நாவல்களையும் கட்டுரையில் குறிப்பிட்டாக வேண்டும். அந்த நான்காவது நாவல் மஹோன்னதமான படைப்பு என்று சொல்லியிருக்கிறார் சி.சு. செல்லப்பா. அதனால் நான்கு நாவல்களுமே க்ளாஸிக்ஸ் என்று எழுதி விடலாமா என்று யோசித்தேன். அதில் தவறு ஏற்பட வாய்ப்பே இல்லை. ஏனென்றால் மூன்றுமே க்ளாஸிக்ஸ். நான்காவதும் அப்படித்தான் இருக்க வேண்டும்.
ஆனால்
நான் பொய் சொல்லுவதில்லை. எங்கெங்கோ கேட்டு விட்டோமோ, நற்றிணை யுகனிடம் கேட்கலாமா என யோசித்தேன். கேட்டால் அவரிடம் இருந்தது. ஒருநாள் இரவு பத்து மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து கொடுத்து விட்டுப் போனார். இரவு முழுவதும் படித்தேன். காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லாமல் கட்டுரையை எழுதி முடித்து அனுப்பினேன். நான்காவது நாவல் மூன்று நாவல்களையும் விட ஆகப் பிரமாதம். ஒரு கிரேக்கத் துன்பவியல் நாடகத்தைப் போல் இருந்தது.
எழுத்துக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஒரு கட்டுரை எழுத எவ்வளவு செலவு ஆகிறது தெரியுமா? நூலகங்களில் ஸ்கேன் எடுக்க ஒரு பக்கத்துக்குப் பத்து ரூபாய். நான் குறைந்த பட்சம் நூறு பக்கம் எடுப்பேன். பயணத்துக்கு ஆகும் செலவு எவ்வளவு போகும் என உங்களுக்கே தெரியும். இது எல்லாவற்றையுமே பத்து பேர் கொண்ட ஒரு குழு தான் கவனித்துக் கொள்கிறது. யார் யார் உதவி செய்கிறார்கள் என்று ஒருவருக்கொருவர் தெரியாது. உதவி என்றால் லட்சங்களில் அல்ல. சென்ற வாரம் ஒரு வாசகி (குழுவில் ஒருவர்) 6000 ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கி அனுப்பினார். ஒரு கட்டுரைக்கு ஐந்தாயிரம் ரூபாயிலிருந்து பத்தாயிரம் வரை செலவாகிறது. அதாவது, இதை நீங்கள் நிரவித்தான் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். ஒரு கட்டுரைக்கு செலவே ஆகாது. இன்னொரு கட்டுரைக்கு 20,000 ரூ ஆகும். எல்லாவற்றையும் நிரவினால் ஒரு கட்டுரை எழுத 5000 ரூ செலவு என்று வைத்துக் கொள்ளலாம். பத்திரிகையில் கொடுப்பது ஆயிரமோ ரெண்டாயிரமோ. அவ்வளவுதான். ஆங்கிலத்திலும் அதிகம் இல்லை. நாலாயிரம். அவ்வளவுதான்.
இங்கே என்ன நடக்க வேண்டும் என்றால், ஒரு எழுத்தாளனின் நூல் 50000 பிரதிகள் விற்க வேண்டும். குறைந்த பட்சம் 20000. ஆனால் எதார்த்தத்தில் 2000 போகிறது. நான் சொல்வது நட்சத்திர எழுத்தாளர்களின் நூல்கள். அதனால்தான் இங்கே எழுத்தாளர்கள் பிச்சை எடுக்கிறார்கள். 2000 ஆண்டுகளாக இங்கே எழுத்தாளர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஔவை ஒரு அரசனின் வாயிற்காப்போனிடம் அந்த அரசனைப் பற்றிக் கன்னாபின்னாவென்று தூற்றி விட்டுப் போகிறாள். ஒரு காசு சீந்த மாட்டாத கஞ்சப் பிசுநாறிப் பயல் உன் அரசன் எனத் தூற்றுகிறாள். பாரி எப்படிக் கடை ஏழு வள்ளல்களில் ஒருவனானான்? ஒருநாள் கபிலர் அரசிளங்குமரர்களைச் சந்திக்கிறார். அப்போது பாரியிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவனிடம் பேசுவதைத் தவிர்க்கிறார். பாரி அது பற்றிக் கபிலரிடம் கவலையுடன் விசாரிக்கிறான். கபிலர் பாரியின் அப்பனின் கஞ்சப் பிசுநாறித்தனத்தைப் பற்றிக் கேவலமாகத் திட்டுகிறார். அந்தச் சம்பவம் பாரியின் மனதை மாற்றி விடுகிறது.
2000 ஆண்டுகளாக எழுத்தாளர்களைப் பிச்சைக்காரன்களாக வைத்திருக்கும் சமூகம் தமிழ்ச் சமூகம். நவீன காலத்தில் நான் தான் முதல்முதலாக இந்த விஷயத்தைப் பகிரங்கப்படுத்தினேன். அதற்காக இணையப் பிச்சைக்காரன் என்ற பட்டத்தையும் பல வசைகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டேன். பட்டம் கொடுத்தவர்கள் இருவர். பிறகு சில ஆண்டுகளில் அவர்களில் ஒருவர் இணையத்தில் பிச்சை எடுக்கும்படி நேர்ந்தது. இன்னொருவருக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது ஒரு பிரபல இயக்குனர் அந்தச் செலவை ஏற்றுக் கொண்டார். ஒரு ஆறு லட்சம் இருக்கும். எனக்கு இயக்குனர் நண்பர்கள் யாரும் இல்லை. அதனால் இணையத்தில் பிச்சை எடுத்தால்தான் எழுத முடியும்.
எழுத்தாளனின் நிலை வேசியின் நிலையை விடக் கேவலம் என்பதை அந்த இரண்டு எழுத்தாளர்களுமே புரிந்து கொள்ளாமல் எழுதியது எனக்குக் கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஒரு உதாரணம் தருகிறேன். வின் டிவியில் 50 வாரங்கள் சர்வதேசத் திரைப்படங்கள் பற்றி ஒவ்வொரு வாரமும் ஒரு படம் வீதம் பேசினேன். ஒரு வாரத்தில் இதற்காக எனக்கு மட்டும் நான்கு நாட்கள் ஆயின. ஒரு நாள் படம் பார்ப்பேன். ரெண்டு மூன்று நான்கு முறை பார்ப்பேன். இரண்டு நாள் அந்தப் படம் பற்றிப் படிப்பேன். நோட்ஸ் எடுப்பேன். நான்காம் நாள் முழுவதும் படப்பிடிப்பில் போய் விடும். இது என்னுடைய நாள் கணக்கு. அந்தப் படத்தின் டிவிடியைத் தேடி இரண்டு நண்பர்கள் ஊர் பூராவும் அலைந்து கொண்டிருப்பார்கள். அதற்கு இரண்டு நாள் எடுக்கும்.
முதலில் இரண்டு மூன்று வாரம் என் செலவில் படப்பிடிப்புக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். ஆட்டோ செலவு 300 ரூ. என் கைக்காசு. பிறகு வண்டி அனுப்பி விடுங்கள் என்று சொன்ன பிற்பாடு வண்டி அனுப்பினார்கள். 50 வாரமும் பணம் கொடுப்பார்கள்; சேர்த்துக் கொடுப்பார்கள் என்றே காத்திருந்தேன். இந்த விஷயத்தில் என்னைப் போன்ற ஒரு கேணப்பயலை நீங்கள் உலகம் பூராவும் தேடினாலும் கிடைக்க மாட்டான். 50 வாரம் – ஒரு ஆண்டுக்கும் மேலாக ஓசியிலேயே அந்த நிகழ்ச்சியைச் செய்தேன். கடைசியில் புழுவுக்கும் வீரம் வந்தது. காசு கொடுத்தால்தான் இனிமேல் நிகழ்ச்சி செய்ய முடியும் என்றேன். நான் பத்தாயிரம் எதிர்பார்த்தேன். அவர்கள் 500 ரூ என்றார்கள். நிறுத்திக் கொண்டேன். செய்து கொடுத்த நிகழ்ச்சிகளுக்கும் 500 x 50 = 25000 ரூ வரவில்லை. நானும் சீ போ என்று கேட்கவில்லை. ஆனால் ஒரு வாசகர் எழுதுகிறார், நான் நண்பர்களின் காசில் ஆடம்பரமாக வாழ்கிறேனாம். எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
எனக்கு செலவே இல்லை. செலவே இல்லாதவன் எப்படி ஆடம்பரமாக வாழ முடியும்? காலையில் மகாமுத்ராவில் ஒரு காஃபி 50 ரூபாய்க்குக் குடிக்கிறேன். அதுதான் என்னுடைய ஒரே ஆடம்பரச் செலவு. ஒரு நாளைக்கு 50 ரூபாய் செலவு செய்பவது ஆடம்பரமா? எனக்கு வேறு செலவே கிடையாது. போன் பில் மாதாமாதம் 770 ரூ ஒரு வாசகி கட்டுகிறார். புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது இன்னொரு வாசகி. மற்றும் பல வாசகர்கள். சினிமா டிக்கட் வாங்கி அனுப்புவது ராஜேஷ். (அவரை மட்டும்தான் நான் பெயர் போட முடியும். ஏனென்றால், அவர் மனைவி ஸ்ரீவாணியும் என் வாசகர். மற்றவர்களின் பெயரைக் குறிப்பிட்டால் விவாகரத்து ஆகி விடும்!) முன்பு குடித்துக் கொண்டிருந்த காலம் வரை ஒரு நண்பர் மாதம் ஒரு ரெமி மார்ட்டின் அனுப்பி வந்தார். இப்போது குடிப்பதை நிறுத்தி விட்டதால் ரெமி மார்ட்டின் வருவதும் நின்று போனது. ஒருநாள் அவரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்த போது ரெமி மார்ட்டினுக்கு ஆன பைசாவை (ஒரு போத்தல் 6000 ரூபாய்) கொடுத்தீர்களானால் என் மாத்திரை செலவுக்கு ஆகும் என்றேன். ”உங்களுக்கென்ன பணக் கஷ்டம்?” என்று கேட்டார். ”என்னது?” என்றேன். அவர் சொன்னார். ”மாதம் பத்து நிகழ்ச்சிக்குப் போவீர்களா? (டிவி) ஒரு நிகழ்ச்சிக்கு எப்படியும் ஒரு லட்சம் கொடுப்பான்ல? பத்து லட்சம் ஆச்சே?” இதுதான் என்னைப் பற்றிய என் தெருவாசிகளின் எண்ணமும். சொல்லி வைத்தாற்போல் என் அண்டை வீட்டுக்காரரும் இதையே கேட்டார். பிறகு அவரிடம் நான் வின் டிவி கதையை விலாவாரியாகச் சொன்னேன். அதுசரி, பத்து லட்சம் வருமானம் வரும் ஆளுக்கு ஏன் ஐயா ரெமி மார்ட்டின் அனுப்பினீர்? என்று கேட்டேன். ”எழுத்தாளருக்குச் செய்யும் மரியாதை; மேலும் ரெமி மார்ட்டின் சரியான கலப்பிடமில்லாத சரக்கு இந்தியாவில் எங்கேயும் கிடைக்காதே?”
போனது போனதுதான். ரெமி மார்ட்டின் பைசாவை அவர் எனக்குக் கொடுக்கத் தயாராக இல்லை. அவர் ஒரு கோடீஸ்வரர். இதையும் படிப்பார். ஆனால் கோபித்துக் கொள்ள மாட்டார். என் நண்பர்களின் குணவிசேஷம் அதுதான். படித்த பிறகும் பணம் அனுப்ப மாட்டார்கள்; கோபித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
என்னுடைய பயணச் செலவுக்கு மட்டுமே பணம் தேவை. லட்சங்களில் தேவை. உடனே ஒரு நண்பர் “நான் ஆயிரம் ரூபாய் அனுப்பினால் ஏற்பீர்களா?” என்று கேட்டு எழுதியிருக்கிறார். என் வாசகர் ஒருவர் சில ஆண்டுகளாக மாதாமாதம் 500 ரூ பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார். அவரது தயையை நான் வணங்குகிறேன். என்னையும் குடும்பத்தில் ஒருவனாக ஏற்றிருந்தால் மட்டுமே அது சாத்தியம். ஒரே ஒருமுறை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக சொற்பமான சம்பளம் வாங்குகிறார். பணம் அனுப்ப வேண்டாமே என்றேன். என் தந்தைக்குச் செய்கிறேன் என்றார். அதற்கு மேல் நான் பேசவில்லை.
எனக்கு மூன்று நண்பர்கள் – பணக்காரர்கள் அல்ல; மாதச் சம்பளக்காரர்கள் – அவ்வப்போது பண உதவி செய்வதுண்டு. இணையத்தில் பகிரங்கமாகப் பணம் கேட்டு அவமானப்படுவதை விட அவர்கள் மூவருக்கும் ஒரு கடிதம் எழுதலாம். ரகசியமாக இருக்கும். அவர்கள் பண உதவி செய்வது அவர்களது குடும்பத்துக்கே தெரியாது. தெரிந்தால் முடிந்தது கதை. ஆனாலும் இந்த சமூக அவலத்தை நான் பகிரங்கப்படுத்த விரும்புகிறேன். இது எனக்கு அவமானம் அல்ல. சமூகத்துக்கு அவமானம். அதனால்தான் பகிரங்கமாக எழுதுகிறேன், பணம் அனுப்புங்கள் என்று. ஆனாலும் யாரும் பணம் அனுப்புவதில்லை. யாரோ இரண்டொருவர் ஆயிரம் ஐநூறு என்று அனுப்புவதோடு சரி. மீண்டும் அந்த மூன்று பேர் மட்டுமே அனுப்புவார்கள். நான் ஏன் பகிரங்கமாகப் பணம் கேட்டு எழுதுகிறேன் என்று இப்போதாவது புரிகிறதா?
எழுத்தாளன் பிச்சை எடுப்பது சமூக அவலம். அவனுடைய புத்தகங்கள் விற்பதில்லை. லட்சக் கணக்காக விற்பனையாகும் பத்திரிகைகளிலேயே ஆயிரம் ஐநூறு என்றுதான் கூலி கொடுக்கிறார்கள். அதனால்தான் எழுத்தாளன் பிச்சை எடுக்க நேர்கிறது. பிச்சை எடுக்காமல் கௌரவமாக தர்மு சிவராமு போல், கோபி கிருஷ்ணன் போல் நானும் சாகலாம். ம்ஹும். எனக்கு மான அவமானம் முக்கியமில்லை. என் மானமே போனாலும் நான் எழுத வேண்டும். காசில் இல்லை கௌரவம். என் அடையாளம் என் எழுத்தில் தெரியும். காசு தான் மானத்துக்கும் கௌரவத்துக்கும் அறிகுறி என்று நினைப்பவர்கள் மட்டுமே இதை வைத்து என்னை எடை போடுவார்கள். அவர்களைப் பற்றி நான் கவலை அடையவில்லை.
இந்நேரம் நான் ஒரு ஐரோப்பிய நகர் ஒன்றில் இருந்திருக்க வேண்டும். என் வங்கிக் கணக்கில் பணம் குறைகிறது; வீசா தர மாட்டார்கள் என்று என் ட்ராவல் ஏஜெண்ட் இன்னும் வீசாவுக்கு விண்ணப்பிக்கவில்லை. நிச்சயம் ஐரோப்பா செல்வேன். பணம் வேண்டும். பணம் பெற்று நான் வீடு கட்டவில்லை; வீண் செலவு செய்யவில்லை. பயணம் செல்வது என் எழுத்தின் உப செயல்பாடுகளில் ஒன்று.
ஜெயமோகன் மற்றவர்களுக்காகப் பணம் கேட்கிறார்; நீங்களோ உங்களுக்காகக் கேட்கிறீர்களே? என்று ஒருவரின் கேள்வி. முதலில் எனக்கு என் எழுத்து முக்கியம். மற்றவரைப் பற்றிக் கவலைப்படும் அளவுக்கு நான் பாக்கியசாலி அல்ல.
முடிந்தவர்கள் பணம் அனுப்புங்கள்…
Account holder’s Name: K. ARIVAZHAGAN
Axis Bank Account number: 911010057338057
Branch: Radhakrishnan Salai, Mylapore
IFSC UTIB0000006
MICR CODE: 600211002
***
ICICI ACCOUNT K. Arivazhagan,
ICICI Bank Account No. 602601505045
t.nagar branch, chennai 28.
FSC Code: ICIC0006026
Branch Code: Last six characters of IFSC Code represent Branch code.
MICR Code: 600229010
Comments are closed.