அடியேனின் சீலே பயணம் பற்றி அராத்து

சாரு நிவேதிதா – சீலே

இந்நேரம் கடைசி நேர பரபரப்பில் இருப்பார்.நாளை அதிகாலை 3.30க்கு விமானம். அநேகமாக கடந்த 10 ஆண்டுகளாக சாரு சீலே போக வேண்டும் என்ற தன் ஏக்கத்தை சொல்லிக்கொண்டேயிருந்தார். விக்டர் ஹாரா கையை ஒரு ராணுவ வீரர் வெட்டிய பிறகும் அவர் கிதார் வாசித்துக்கொண்டு இருந்த கதையை இதுவரை என்னிடம் மட்டுமே 100 முறைக்கு மேல் சொல்லி இருப்பார். ஒவ்வொரு முறையும் அதே எனர்ஜி. இந்த கதையை அவர் சொல்லும்போது மட்டும், ஏற்கனவே சொல்லிட்டீங்க சாரு என்று நான் சொன்னதில்லை.

நிக்கனர் பார்ரா கதையை சாரு சொல்லக் கேட்டால் , ஏதோ வெப் சிரீஸ் பார்ப்பது போல இருக்கும்.

சில முகம் தெரியா நண்பர்கள் அழைத்து சாரு சீலே போவதற்கு பணம் கொடுக்கணும் என்பார்கள். எவ்ளோ என்பேன். 1000 ரூபாய் என்பார்கள். அவர்கள் பொருளாதார நிலைமை தெரிந்து அன்புடன் மறுத்திருக்கிறேன்.

ஒரு கல்லூரி மாணவர் 500 ரூபாய் கொடுத்தே ஆவேன் என ஏழெட்டு வருடங்களுக்கு முன் பிடிவாதம் பிடித்தது நினைவிருக்கிறது. சாரு சீலே போவதென்பது சிறு மதம் போல சாரு வாசகர்கள் மத்தியில் ஆகி விட்டது.

கிரிக்கெட் வீரர்களுக்கு லார்ட்ஸ் தான் மெக்கா என்பார்கள். அதுபோல சாருவுக்கு சாந்தியாகோ தான் மெக்கா !

சில முறை சில லட்சங்கள் தேத்துவார். வேறு செலவாகி விடும். ஒரு வழியாக ஒரு நண்பர் , இவ்ளோ நாள் இதை தள்ளிப்போட்டுட்டே இருப்பது துன்பம் எனக்கூறி ஆரம்ப கட்ட ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்ததும் பயண திட்டம் சூடு பிடித்தது.

மொத்த செலவு 8 லட்சத்து 50 ஆயிரம் என பட்ஜட். பத்து லட்சங்களை எட்டக்கூடும். இவை அனைத்தும் சாருவின் மேலும் அவர் எழுத்தின் மீதும் தீரா அன்பைக் கொண்டவர்களால் முன்னெடுக்கப்பட்டது.இதில் பெரும்பகுதி தொகையை கொடுத்தது ஒரு நண்பர்.

சாரு பணம் கேட்பது , சொத்து வாங்கவா ? வீடு கட்டவா ? இல்லை , மகளின் சாந்தி முகூர்த்தத்துக்கு பட்டுப்புடவையும் தங்க நெக்லசும் , எடுக்கவா ?

இந்தப்பயணத்தின் மூலம் சாரு தமிழகத்துக்கு கொடுக்க இருக்கும் பொக்கிஷங்கள் ஏராளம். இலக்கியப் பொக்கிஷம் என்று எழுத கை வந்து விட்டது. அது கெடக்குது தமிழ் இலக்கிய சனியன் , அதைத் தாண்டி சாரு கொடுப்பார் என்றுதான் “இலக்கிய” வை தூக்கி விட்டேன்.

முதலில் ஒரு நண்பர் சாருவுடன் வருவதாகச் சொன்னவர் , கடைசி நேரத்தில் வர இயலாமல் போனது. தனியா போய்ட்டு வரேன் , போயே ஆகணும் என்று பயண ஏற்பாடுகளைத் தொடங்கினார் சாரு. நல்ல வேளையாக இன்னொரு நண்பர் இணைந்து கொண்டார்.

இந்த வயதில் , இவ்வளவு செலவு செய்து , தனியாகவாவது சீலே , பெரு , பொலிவியா நாடுகளுக்கு 21 நாட்கள் போயே ஆக வேண்டும் என்ற சாருவின் ஆட்டிட்யூடில் தமிழக இளைஞர்கள் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது.

எனக்குத்தான் திரும்பி வருவாரா ? இல்லை அங்கேயே செட்டில் ஆகி விடுவாரா என்று ஒரு வினா ஓடிக்கொண்டு இருக்கிறது. திரும்பி வந்து , “நாம் சீலேயியர் ” என்று ஒரு கட்சி ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை