அய்யனார் விஸ்வநாத்துடன் ஓர் நேர்காணல்

அய்யனாரின் கவிதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருந்த போது அவரோடு ஒரு நேர்காணல் செய்யலாம் என்று தோன்றியது. முதல் இரண்டு கேள்விகளை இங்கே தருகிறேன். அவர் பதிலை இங்கே முகநூலில் கொடுக்காமல் புத்தகத்திலேயே வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அப்போதுதான் சஸ்பென்ஸ் இருக்கும். இனி கேள்விகள்:

கேள்வி: உங்கள் முன்னுரையில் இந்தத் தொகுதிக்கும் முன்பாக மூன்று தொகுதிகள் வந்திருப்பதை அறிந்தேன். இதுவரை தெரிந்து கொள்ளாததற்கு மன்னிக்கவும். இங்கே யாரும் கவிதை பற்றிப் பேசுவதில்லை. சூழல் அப்படி இருக்கிறது. நானும் சமகாலத் தமிழ் எழுத்தின் மீதுள்ள அவநம்பிக்கையால் அதிகம் சமகாலப் படைப்புகளைப் படிப்பதில்லை. உங்களின் இந்தத் தொகுதி அதிலிருந்து வித்தியாசமாக இருந்தது. அந்தக் காலத்தின் ஞானக் கூத்தன், தர்மு சிவராமு, ஆத்மாநாம், தேவதச்சன், தேவதேவன் போன்றவர்களின் கவித் திறத்துக்கு சமமாக இருந்தன உங்கள் கவிதைகள். ஆனால் உங்கள் கவிதைகளில் நான் இந்தத் தமிழ்க் கவிஞர்களின் தொடர்ச்சியைப் பார்க்கவில்லை. சங்க இலக்கியம், வேதங்கள் (குறிப்பாக அதர்வ வேதம்), அங்கிருந்து நேராக பாரதி, பிறகு ஒரே பாய்ச்சலாக உலக கவிதை – முக்கியமாக தாகூர், அதை விட முக்கியமாக பாப்லோ நெரூதா போன்றவற்றின் தொடர்ச்சியாகவே உங்கள் கவிதைகளை நான் பார்த்தேன். குறிப்பாக, நெரூதாவையும், தாகூரையும் உங்கள் கவிதையின் intensity தாண்டியிருக்கிறது.

இப்போது என் கேள்வி என்னவென்றால், வேதங்களில் நான் கண்ட கவித்துவத்தின் வீச்சை உங்கள் கவிதைகளில் காண்கிறேன் என்று நான் சொல்லும் போது அதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? வேதங்களை நீங்கள் படித்திருக்கிறீர்களா? அவற்றின் பாதிப்பு உங்களிடம் உண்டா? உதாரணமாக, அதர்வ வேதத்தின் இந்த ஸூக்தத்தைப் பாருங்கள்:

என் நாக்கின் நுனியில் தேன்
நாக்கின் மூலத்தில் அதி இனிய தேனாகும் நீ
எனது சங்கற்பத்திலே ஆக வேண்டும்
நீ எனது சித்தத்திலே வருவாயோ?

எனது சலனம் தேன்மயம்
என் கமனம் தேன்மயம்
நான் மொழியால்
தேன்மயமாய் மொழிகிறேன் 
நான் தேன் தோற்றமாக வேண்டும்

நான் தேனை விட தேனாயுள்ளேன்
மதுகத்தை விட மதுவாயுள்ளேன்
நீ என்னை
என்னையே தேன் மிகும் சாகையாக 
விரும்பு

அதர்வ வேதத்தின் இன்னொரு ஸூக்தம் இது:

எனது தேகத்தை விரும்பு
பாதங்களை விரும்பு
உனது கேசமும் கண்களும் என்னை நாடி
காமத்தால் காய்க

இப்படி ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது உங்கள் கவிதை ஒன்று. அதன் பெயர் மன்றாடல் என்று இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அதற்கு நான் பிரார்த்தனை என்று தலைப்பிட்டுக் கொண்டேன். உலகின் மிகச் சிறந்த கவிதைகளில் அது ஒன்று. அதர்வ வேதத்தின் சாரம் அனைத்தும் அந்தக் கவிதையில் உள்ளது. அதிலிருந்து ஒரு பத்தி இது:

தூயச் செந்நிற மது நானாவேன். தூய வெண்ணிற மதுவும் நானாவேன். அதிதூய போதையாய் இரு. இருள் கிழிக்கும் ஒளி நானாவேன். ஒளி மூடும் இருள் போர்வையும் நானாவேன். நீ என் ஆதவனாய் சந்திர பிம்பமாய் எப்போதுமிரு. விருட்சம் நான். கிளை நான். இலை நான். சருகு நான். நீ என் வேராய் இரு. நீ என் நீராய் இரு. நீ என் விழுதாய் இரு. என் இறையே, என் காதலே, என் மதுவே, எனக்கான எல்லாமாய் நீ இரு.

என் இரண்டாவது கேள்வி: பாப்லோ நெரூதாவின் 20 காதல் கவிதைகளை நீங்கள் படிக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அக்கவிதைகளை உங்கள் கவிதைகள் தாண்டி விட்டன என்றே நான் சொல்வேன். நெரூதாவின் கவிதைகள் உங்களை பாதித்திருக்கிறதா? நெரூதாவிடம் தாகூரின் பாதிப்பு உண்டு என்று சொல்வார்கள். நான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை. நெரூதாவிடம் காணும் காதலின் உக்கிரமும், அந்தக் காதல் எப்படி வேதங்களிலும் பாரதியிடமும் பிரபஞ்ச ஓர்மையாக மாறுகிறதோ அதேபோல் உங்களிடமும் ரசவாதமாக மாறுகிறது. Please comment.

இந்த நேர்காணல் அய்யனாரின் கவிதைத் தொகுப்பில் வர இருப்பதால் பதிலை இங்கே வெளியிடவில்லை. அதைத் தொகுப்பிலேயே படித்துக் கொள்ளுங்கள்.

இப்போது கேள்வி மூன்று:

இப்போதுமே கூட ஒரு வாக்கியத்தை எழுதினால் இது வெளியிடும் அளவுக்குத் தகுதி உடையதா அல்லது பேத்தலா என்றுதான் சந்தேகம் வருகிறது.  அந்த வகையில் எப்போதுமே ஒரு 22 வயதுப் பையனின் முதல் கவிதையைப் போலவே தான் என் ஒவ்வொரு எழுத்தையும் பார்க்கிறேன்.  எனவே இந்த இரண்டாவது கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருந்தால் ரத்து செய்து விடலாம்.  The Paris Review பத்திரிகையில் பாப்லோ நெரூதாவிடம் ஏன் இப்படி ஒரு புனைப்பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.  அந்த தைரியத்தில் இந்தக் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.  

“கவி மனதின் உக்கிரத்தோடு இயல்பு வாழ்வு சாத்தியமில்லை என்பதால் உரைநடைக்கு நகர்ந்தேன். ஆனால் கலையின் வடிவங்களில் கவிதையே முதன்மையானது என நம்புபவர்களில் நானும் ஒருவன்” என்று இத்தொகுப்பின் முன்னுரையில் எழுதியிருக்கிறீர்கள்.  இதையே வேறு வார்த்தைகளில் நானும் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன்.  ஆர்த்தர் ரேம்போ, வெர்லெய்ன், மற்றும் நம்முடைய தமிழ்க் கவிகள் பலர் – இவர்களுடைய schizoid state of mind-ஐப் பார்க்கும் போது நீங்கள் சொல்வதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.  ஆனால், ”அந்தப் பித்தநிலைக்குச் செல்லாதே, அது உன் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல” என்று என் நண்பர்கள் எனக்குத் தொடர்ந்து அறிவுறுத்தியபடியே இருக்கிறார்கள்.  உதாரணமாக, அதிகம் குடிக்காதே என்னும் அன்பு உத்தரவு.  இன்னொன்று,  முகநூலில் புழங்குவது.  ”இது உங்கள் தகுதிக்கு உகந்ததல்ல” என்பது நண்பர்களின் கருத்து.  இது போன்ற விஷயங்கள் என்னை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.  ஒவ்வொரு செயலையும் மிகுந்த யோசனை மற்றும் திட்டமிடலுடன் தான் செய்ய வேண்டுமா?  தர்மு சிவராமு தன் நண்பர்களுக்கெல்லாம் ஜோதிடம் பார்ப்பார்.  அவரிடம் ஜோதிடம் பார்த்துக் கொள்ளாத ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்.  ஒருவேளை  அதிலெல்லாம் நம்பிக்கையில்லாத கம்யூனிஸ்ட் என்று என்னைப் பற்றி அவர் நினைத்து விட்டாரோ என்னவோ?   எண் கணிதத்திலும் வல்லவர் அவர்.  வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி, நாரணோ ஜெயராமன் போன்ற பல பெயர்கள் அவருடைய எண் கணித அடிப்படையில் அவரது ஆலோசனையின் பேரில் வைத்துக் கொண்டதுதான்.  என் மீது அன்பு கொண்டவர்களிடமெல்லாம் நான் சொல்வது, நான் என்ன வான்கோ மாதிரி என் காதையா அறுத்துக் கொடுத்தேன் என்பதுதான்.  அதிர்ஷ்டவசமாக வாரம் ஒருமுறையாவது காதை அறுத்துக் கொடுக்கும் தருணமும் வாய்த்துத்தான் விடுகிறது.  ராஸ லீலா நான் மிகவும் திட்டமிட்டு எழுதியது.  ஆனால் ஸீரோ டிகிரியும் எக்ஸைலும் ஒருவித schizoid மனநிலையிலேயே எழுதினேன்.  இரண்டுமே எனக்கு ரொம்பவும் அந்தரங்கமான நாவல்கள்.  துரதிர்ஷ்டவசமாக பலருக்கும் எக்ஸைல் பிடிக்காமல் போய் விட்டது. 

என்னுடைய கேள்வி, இம்மாதிரி சூழலை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?  பித்த மனநிலை கவிதையில்தான் உச்சமாக வெளிப்படுகிறது என்றாலும் கவிதை, உரைநடை இரண்டிலுமே செயல்படும் நீங்கள் இதை எப்படிக் கடந்து செல்கிறீர்கள்?  உதாரணமாக, உங்களுடைய மன்றாடல் என்ற பகுதியை வாசித்து ஒரு இரவு முழுவதும் குடித்துக் கொண்டாடி, அதன் காரணமாக ஏதேனும் ஆரோக்கியக் கேடு நேர்ந்தால் அதனால் என்ன என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. 

Please comment.