கூர்க் சென்றிருந்த போது அங்கே இருந்த மக்கள் தூரத்தில் தெரிந்த மலைகள் பலவற்றைக் காண்பித்து எல்லாம் உங்கள் சிதம்பரத்தினுடையது என்றார்கள். எல்லாம் காப்பித் தோட்டம், தேயிலைத் தோட்டம். நூற்றுக் கணக்கான ஏக்கர் இருக்கும். பெரிய ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர். தில்லியிலும் ராஜாவாகவே ஆண்டவர். ஜனநாயக நாடு என்பதால் அமைச்சர் என்கிறோம். நிதி அமைச்சராக, இன்னும் என்னென்னவோ முக்கிய முக்கிய அமைச்சராக பல ஆண்டுகள் இருந்தவர். இப்போது ஊழல் வழக்கில் லோக்கல் கேடியைப் போல் தலைமறைவாக இருக்கிறார்.
இப்போது சொல்லுங்கள் நண்பர்களே, நாம் பிறப்பிக்கும் ஒவ்வொரு குழந்தையும் இந்த தேசத்தில் எப்படி ஆகின்றன? நேற்று மூன்று நண்பர்களிடம் இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு கிரிமினல் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். என் குழந்தையையும் சேர்த்தே சொன்னேன். இந்தக் கிரிமினல் வளையத்தில் விழ வேண்டாம் என்றால் அமெரிக்காவுக்கு ஓடி விடுங்கள். அங்கே இந்த சிதம்பரம் மாதிரி மக்கள் பணத்தைத் திருடினால் 250 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுப்பான். இங்கே இந்தியாவில் சிதம்பரம் நிச்சயம் வெளியே வந்து விடுவார். அவரே உச்ச நீதிமன்ற வக்கீல். குடும்பமே வக்கீல் குடும்பம். இப்படி உச்சபட்சமாகப் படித்தவர்களே கிரிமினல்களாக இருக்கும் போது நம் குழந்தை மட்டும் மகாத்மா என்று எப்படி நீங்கள் நம்புகிறீர்கள்? இந்தியாவில் வாழும் ஒவ்வொரு அரசியல்வாதியும் கிரிமினல்தான். சாமான்ய மனிதர்களிலும் 99 சதவிகிதம் கிரிமினல்கள்தான்.
நான் வேலை பார்த்த தபால் இலாகாவில் ஒரு சீஃப் பீயெம்ஜி இருந்தார். அவருடைய பங்களா டி.பி.ஏ. அலுவலம் அருகில் இருந்தது. டிபிஏ என்றால் டைரக்டர் ஆஃப் போஸ்டல் அக்கவுன்ட்ஸ். இந்த சீஃபின் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் தீர்ந்து போய் விட்டால் டிபிஏ கேண்டீனில் உள்ள சிலிண்டர் ஒன்றை எடுத்துக் கொள்வார். கேள்வி முறையே கிடையாது. பங்களாவில் மின்சாரக் கட்டணம் சீஃப் தான் கட்ட வேண்டும். என்ன செய்தார் தெரியுமா? டிபிஏ அலுவலக லைனோடு தன் வீட்டு லைனையும் சேர்த்து விட்டார். என்னால் பெயரைச் சொல்ல முடியும். சொன்னால் கேஸ் போடுவார். அப்புறம் நான் தான் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடக்க வேண்டும்.
இம்மாதிரி ஆட்களெல்லாம் கிரிமினல்கள் இல்லையா? ஆனால் இவன்களெல்லாம் சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள்.