ஆறு மாதங்களுக்கு முன்னால் எஜமானை வேண்டிக் கொண்டேன். எந்தக் காரியத்துக்காகவும் கடவுளையோ குருநாதரையோ வேண்டுவதில்லை. அப்பனுக்கும் குருவுக்கும் தெரியாதா பிள்ளையின் தேவை என்று நினைப்பு. ஆனால் உயிருக்குயிரானவர்களின் மரணம் தாங்க முடிவதில்லை. அப்படி ஒரு தருணத்தில் எஜமானை வேண்டிக் கொண்டேன். உயிர் திரும்ப வந்தது. எப்போது போவது என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில்லை. அதில் நான் கொஞ்சம் பலவீனமானவன். எழுத்து விஷயத்தில் வாக்குக் கொடுக்காமலே காப்பாற்றுவேன். பணம் விஷயத்திலும் அப்படித்தான். ஆனால் மற்ற எந்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவதில்லை. அதனால் நம் வேண்டுதலை நிறைவேற்றாமல் போகுமோ என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வேன். ஆனால் எஜமானே என்னை அழைத்து விட்டார். வரும் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினமாம். அதற்காக நாகூர் நேஷனல் ஹைஸ்கூலின் பழைய மாணவர்கள் – பழைய என்றால் 50 ஆண்டுகளுக்கு முன்னால் படித்தவர்கள் – ஏதோ அலுமினியம் என்றார்கள். ஒன்றும் புரியவில்லை. அவர்கள் அந்த ஆசிரியர் தினத்தன்று நேஷனல் ஹைஸ்கூலில் கூடி ஆசிரியர்களை கௌரவிக்கிறார்களாம்.
எனக்கு 6 வயதிலிருந்து 16 வயது வரை ஞாபகம் காணவில்லை. சுத்தம். வெற்று சிலேட்டு மாதிரி இருக்கிறது. ஏதோ கொஞ்சம் நிழலாகத் தெரிகிறது. சீனி சண்முகம் சார், கண்ணையன் சார், ஹெட்மாஸ்டர் நடேசய்யர், ஆர்கே சார், சாம்பு சார் (அவர் பேசும் போது அடிக்கொரு தடவை இண்ட்டு இண்ட்டு என்று சொல்லுவார்), மசக்கெ என்று நாங்கள் கிண்டல் செய்யும் எம்.எஸ்.கே. சார், எனக்கு மிகவும் பிடித்த கலிஃபா சார் (எப்போதும் சிரித்த முகம்., பிறகு கௌதியா ஸ்கூலில் ஹெட்மாஸ்டராகப் போய் விட்டார். இவரை சில ஆண்டுகளுக்கு முன் நாகூரில் சந்தித்தேன். வீட்டுக்கு அழைத்துச் சென்று தேத்தண்ணி கொடுத்தார். நாகூர் தேத்தண்ணி மாதிரி உலகில் எங்கேயும் கிடைக்காது. ம்ம்ம், மவுண்ட் ரோடு புகாரி மட்டும் விதிவிலக்கு), மாணவர்களில் அல்வாக் கடை பஷீர், மரைக்கா வாப்பா, கௌஸ் சாஹிப், இஹ்ஸானுல்லாஹ் (இவர்கள் இருவரும் பணக்கார முஸ்லீம்கள் வசிக்கும் தெக்குத் தெரு), ஆரிஃப் (இவர் எங்கேதான் இருக்கிறார்? அந்தக் காலத்திலேயே பிரமாதமாக இங்லீஷ் பேசுவார்; எழுதுவார்; நானும் இவரை எங்கெங்கோ தேடி விட்டேன். தர்ஹா குளத்தின் எதிரேதான் இவர் வீடு இருந்தது), சாஹா சாஹிப்…
ஆசிரியர்களில் கண்ணையன் சாரும், சீனி. சண்முகம் சாரும்தான் அ-பிராமணர்கள். மற்றவர்கள் அனைவரும் அய்யர் சாதி. ஆசிரியர் என்றால் அந்தக் காலத்தில் பிராமணர்தான். சிவன் கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களும், பெருமாள் கோவில் அக்கிரஹாரமும் அய்யர்களுக்கானவை. ராமம் வைத்தவர்களை அப்போது அதிகம் நான் பார்த்ததில்லை. ஸ்ரீசூர்ணத்தை அப்போது நாங்கள் ராமம் என்றுதான் சொல்வோம். சீனி. சண்முகம் சார் ஏன் அ-பிராமணர் என்றால், அவர் தமிழாசிரியர். கண்ணையன் ஏன் அ-பிராமணர் என்றால், அவர் உடற்பயிற்சி ஆசிரியர். கண்ணையன் சாரையும் சீனி. சண்முகம் சாரையும் எல்லா மாணவர்களுக்கும் ரொம்பப் பிடிக்கும். பாருங்கள், எனக்கு ஃபோன் செய்து பேசிய விஜயலட்சுமி கூட சீனி. சண்முகம் சார் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும் அறிவழகன் என்றார். யாருக்குத்தான் அவரைப் பிடிக்காது என்று சொன்னேன். கண்ணையன் சாரும் சீனி. சண்முகம் சாரைப் போலவே பழகுவதற்கு இனியவர். வாலிபாலில் திறமையானவர். அந்தக் காலத்தில் மன்னார்குடியில் இருந்த நேஷ்னல் ஹைஸ்கூல் டீமுக்கும் நாகூர் டீமுக்கும் போட்டி நடக்கும். மன்னார்குடியில் அப்போது ராமமூர்த்தி என்ற வாலிபால் பிளேயர் இருந்தார். தமிழ்நாடு முழுவதும் பிரபலமான வாலிபால் ப்ளேயர் அவர்.
இவர்களெல்லாம் ஞாபகம் உண்டு. வகுப்பில் பத்துப் பனிரண்டு பெண் பிள்ளைகள் இருப்பார்கள். பதினோரு ஆண்டுகளாக இவர்களோடு நாங்கள் யாரும் ஒரு வார்த்தை பேசியதில்லை. பேசுவது பற்றி நினைக்கவும் முடியாது. கடவுளோடு பேசுவது மாதிரி அது. அதில் மூவர் பெயர் மட்டும் எனக்கு ஞாபகம் இருந்தது. விஜயலட்சுமி, சுப்பையர் சார் மகள் லட்சுமி, காஞ்சன மாலா.
சென்ற ஆண்டு விஜயலட்சுமி என்பவரிடமிருந்து போன்.
நீங்கள் அறிவழகன் தானே?
ஆமாம்.
நான் உங்களோடு படித்த விஜயலட்சுமி.
அடையாளத்தையும் சொன்னார். அடடா, அடையாளம் சொல்லாமலேயே தெரியும் என்று நினைத்துக் கொண்டேன். பிறகு சென்ற வாரம் பேசினார். காஞ்சனா பற்றி அவருக்கும் தெரிந்திருந்தது. பள்ளியிலேயே கோணல் வாகு எடுத்து வரும் ஒரே பெண். தெலுங்கு. வண்டிக்காரத் தெரு.
வரும் நான்காம் தேதி, ஐந்தாம் தேதி இரண்டு நாட்களும் நாகூரில் இருப்பேன். மூன்றாம் தேதி மாலையே கிளம்பி காரில் நாகூர் செல்வோம். செல்வாவும் வருகிறார். ஆறாம்தேதி கிளம்பி விடுவோம். சிவன் கோவில் துர்கையையும் பார்க்க வேண்டும். பார்க்கவும் பரிதவிக்கவும் நிறைய இருக்கிறது. (ஊர் பூராவும் கருவ மரமும் பிளாஸ்டிக் குப்பைகளும் நிரம்பி ஊரையே மூடி விடும் போல் இருக்கிறது. அதனால் அப்படிச் சொன்னேன்.)
எனக்கு அப்போது மூன்று நண்பர்கள். பேபி. சிவகுரு. வரதன். பேபிக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. 30 ஆண்டு ஆகிறது. சொக்கலிங்கம் டாக்டரின் மகன். (கம்பவுண்டர்தான். ஆனால் அந்த ஊரில் ஒரு டாக்டர் கூட இல்லாததால் அவரை நாங்கள் டாக்டர் என்றுதான் அழைப்போம். ஒரு முக்கியமான விஷயத்தில் அவர் எக்ஸ்பெர்ட்.) சிவகுரு, வரதன் இருவரும் நன்றாக இருக்கிறார்கள். சிவகுரு, வரதன், நான் மூவரும் சேர்ந்து செட்டியார் வீட்டு வாசலில் எடுத்துக் கொண்ட புகைப்படம்தான் இங்கே நீங்கள் காண்பது.