சவத்தை வணங்கும் சமூகம் (1)

சமூகம் தன்னுடைய மூடத்தனத்தையும் மௌடீக வாழ்வையும் நியாயப்படுத்திக் கொள்வதற்காக எழுத்தாளர்களைச் சாடுகிறது.  ரேப்பிஸ்ட்டைக் கேட்டால் அவனும் தன்னுடைய நியாயத்தை சொல்லத்தான் செய்வான்.  சிறைக் கைதிகளையே எடுத்துக் கொள்வோமே, எந்தக் கைதியைக் கேட்டாலும் அவன் தன்னை நிரபராதி என்றுதான் சொல்வான்.  ”நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.”  இதுதான் சிறைக் கைதிகளின் பொதுவாசகம்.  ஒரு கொலை நடந்திருக்கும். நாலு பேர் மேல் குற்றம் விழும்.  நாலு பேருமே நான் செய்யவில்லை என்பான்.  வேறு யார் தான் செய்தார்?  யாருமே செய்யவில்லை.  ஆனால் செத்தவன் கழுத்து அறுபட்டுச் செத்திருப்பான்.  யார் அறுத்தது?  யாருமே இல்லை.  நிலைமை இப்படி இருக்கும் போது எழுத்தாளர்களை வெறுத்து ஒதுக்கும் இந்தக் கேடு கெட்ட சமூகம் தன் மௌடீகத்தை மூடி மறைக்க எழுத்தாளர்களைத்தான் குறை சொல்லும்; குற்றம் சொல்லும்.  எழுத்தாளர்கள் வேறு eccentric ஆகவும், லௌகீக வாழ்க்கையை வாழத் தெரியாதவர்களாகவும், குடிகாரர்களாகவும், மனைவியிடம் மரியாதை கிடைக்காதவர்களாகவும் இருக்கிறார்களா, முடிந்தது கதை.   கண்ட கழுதையெல்லாம் ஏறி ஏறி மிதிக்கிறது. 

நான் எத்தனை தடவை இந்த வாசகத்தை மேற்கோள் காட்டிக் கொண்டே இருப்பது? 

நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  மகாப் பெரியவரே சொல்கிறார்.  ஆனாலும் அதை வசதியாக மறந்து விடுகிறீர்கள். 

கீழே உள்ளது மஹாப்பெரியவரின் அருள் வாக்கு: 
“ஒரு தேசம் என்று இருந்தால் அதில் நல்லவனும் இருப்பான், கெட்டவனும் இருப்பான். திருடன், பொய்யன், மோசக்காரன் எல்லாரும் இருப்பான்.  இருந்தாலும் ‘இந்த தேசத்தில் பண்பு இருக்கிறது, இந்த தேசம் பிழைத்துக் கொள்ளும்’ என்று தெரிந்து கொள்வது எப்படி?  ஒரு நோயாளிக்குப் பல கோளாறுகள் இருந்தாலும் டாக்டர் இருதயத்தைச் சோதித்து விட்டு, இருதயம் நன்றாக இருக்கிறது; ஆகவே பயமில்லை என்கிறார் அல்லவா? அதேபோல் ஒரு தேசத்தில் கோளாறுகள் இருந்தாலும் அதன் பண்பாட்டை உரைத்துப் பார்க்க ஒரு இருதய ஸ்தானம் இருக்கிறதா? இருக்கிறது.  ஒரு தேசத்தின் பண்பு உயர்ந்திருக்கிறது; மனோபாவங்கள் உயர்ந்திருக்கின்றன; ஆங்காங்கே அழுக்குகள் இருந்தாலும் மொத்தத்தில் அது சுத்தமாக இருக்கிறது என்பதை உரைத்துப் பார்ப்பதற்கு அந்த தேசத்து மகாகவிகளின் (இலக்கியக் கர்த்தாக்களின்) வாக்கே ஆதாரமாகும்.  ஒரு தேசத்தின் பண்புக்கு இதயமாக அல்லது உரைகல்லாக இருப்பது அந்த நாட்டு மகாகவியின் வாக்குதான்.”
பாருங்கள், மகாகவி என்று சொல்லிவிட்டு நமக்கு நன்றாகப் புரிய வேண்டும் என்பதற்காக ‘இலக்கியக் கர்த்தா’ என்று வேறு சொல்கிறார் மகாப் பெரியவர்.  அடுத்து, ஒரு இலக்கியவாதி எப்படி இருப்பான் என்று வர்ணிக்கிறார்.
“தனது என்று எதையும் பிடித்துக் கொள்ளாமல் விஷயத்தை உள்ளபடி பார்த்து objective-ஆக, பேதமில்லாமல் நடுநிலையோடு, சர்வ சுதந்திரமாக, திறந்த மனதோடு உள்ளதை உள்ளபடி சொல்வான்.  உலகம் முழுவதையும் இப்படியே படம் பிடித்துக் காட்டுவான்.  அதை உலகம் எடுத்துக் கொண்டாலும் சரி, தள்ளி விட்டாலும் சரி, அதைப் பற்றியும் இலக்கியக் கர்த்தாவுக்குக் கவலை இல்லை.  பயனை எதிர்பார்க்காதவன் அவன்.  ஒரு விஷயம் ஒரு நாட்டின் பண்புக்கு உகந்ததுதான் என்று அறிய வேண்டுமானால் அந்தப் பிரமாண வாக்கு (authority) அந்தத் தேசத்தின்மகாகவியின் வாக்குதான்.”

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், சென்ற வாரம் நாகேஸ்வர ராவ் பூங்காவில் வைத்து ஒரு சம்பவம்.  அங்கே புதிதாக மூன்று பூனைக் குட்டிகள் முளைத்திருக்கின்றன.  மற்ற குட்டிகளுக்கும் அவைகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால், பொதுவாக பூனைகள் தம்மை மனிதர்கள் தூக்க அனுமதிக்காது.  ஆனால் இந்த மூன்றும் மனிதர்களிடம் ஜாலியாக விளையாடுகின்றன.  ஆச்சரியம்.  ஆனால் அவைகளோடு விளையாடும் மனிதர்கள் ரெண்டு மூணு பேர்தான் என்பது மற்றொரு ஆச்சரியம்.  நான் அந்தப் பூனைகளைத் தூக்கிக் கொஞ்சி விளையாடுவதைப் பார்த்து ராமசேஷன் ராகவனிடம் “நமக்கு ஏன் அந்தப் பூனைகளோடு அப்படிக் கொஞ்சி விளையாடத் தோன்றவில்லை?” என்று கேட்டார்.  ராகவன் சிரித்தார்.  எனக்கும் அந்தக் கேள்வி பல ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறது.  ஏன் இந்தியர்களுக்கு நாய்களையும் பூனைகளையும் பிடிக்கவில்லை? 

அப்போது நான் என் பாக்கெட்டிலிருந்து பூனை உணவை எடுத்து அதுகளுக்குக் கொடுத்தேன்.  அதைப் பார்த்த வேறொரு நண்பர், ”ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்கொள்ளக் கூடாது?” என்று நெருங்கினார். ”உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் வாசகர்களிடம் காசு கேட்பதே தப்பு; அப்படிக் கேட்டு வாங்கும் பணத்தை இப்படிப் பூனைகளுக்குச் செலவழிப்பது அதைவிடத் தப்பு” என்றார்.  முட்டிக் கால் போட்டு அமர்ந்திருந்த நான் எழுந்து அவரிடம் போய் அவர் கன்னத்தில் அறைந்து விட்டேன்.  அவர் நல்ல பலசாலி.  என்னைத் தாக்க முயன்ற அவரை அங்கே சூழ்ந்திருந்த கனவான்கள் தடுத்தனர்.  தப்பித்தேன்.  ”’உங்களுக்குத் தெரியாதவர்களாக இருந்தாலும் அவர்களைப் பார்த்து புன்முறுவல் செய்யுங்கள்’ என்பது போன்ற வாழும் கலைத் தத்துவங்களைச் சொல்லும் சாமியார்கள் தங்கள் பேச்சுக்கு நாலாயிரம் ஐயாயிரம் என்று வாங்குகிறார்கள்.  நீங்களும் பயபக்தியுடன் கொண்டு போய் கொட்டுகிறீர்கள்.  ஒரே மணி நேரத்தில் சாமியார் அம்பது லட்சம் சம்பாதித்து விடுகிறார்.  அது தப்பு இல்லை.  ஒரு படத்தில் நடிக்க ஒரு நடிகர் அம்பது கோடி வாங்குகிறார். அது தப்பு இல்லை. ஆனால் எழுத்தாளன் தன் வாசகர்களிடம் ’என் எழுத்தைப் படிக்கும் நீங்கள் விருப்பப்பட்டால் பணம் அனுப்புங்கள்’ என்று சொன்னால் அது தப்பா?  அதை எனக்குச் சம்பந்தமில்லாத ஒருத்தன் நான் பூனைக்கு உணவு கொடுக்கும் போது வந்து சொல்கிறான்.  அவனை உதைக்க வேண்டாமா?” என்று “என்ன இருந்தாலும் அவரை நீங்கள் அடித்திருக்கக் கூடாது” என்று சொன்ன ராகவனிடம் சொன்னேன்.  கெட்ட கேடு, ஒரு கிரிக்கெட் மேட்ச்.  அதைப் பார்க்க ரெண்டாயிரம் ரூபாய் டிக்கட்.  நாலு பேருக்கு எட்டாயிரம் ரூபாய்.  அப்படிச் செலவு செய்யும் நீங்கள் சொல்கிறீர்கள், எழுத்தாளன் வாசகரிடம் காசு கேட்டால் தப்பு என்று?  இப்படிச் சொல்பவர்களெல்லாம் எழுத்தாளர்களிடம் தங்கள் வன்முறையைச் செலுத்துகிறார்கள் என்றே அர்த்தம்.  காந்தியம் பற்றிப் பேசும் நீங்கள் எப்படி இப்படி அடிதடியில் இறங்கலாம் என்று கேட்டார் ராமசேஷன்.  ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டால் அவன் தன் தடியைக் கொண்டு எல்லோர் மீதும் வீசுவான் இல்லையா, அப்படிப்பட்டதுதான் என் வன்முறையும் என்றேன். 

தெளிவாகச் சொல்கிறேன்.  எனக்கு சென்ற ஆண்டு ராயல்டி, ஒன்றரை லட்சம் ரூபாய்.  அதில் ஐம்பதாயிரத்தை என் ராஸ லீலா மொழிபெயர்ப்பாளருக்குக் கொடுத்து விட்டேன்.  மீதி ஒரு லட்சம்.  (ப்ரஸன்னா, இன்னும் சென்ற ஆண்டுக்கான ராயல்டி வரவில்லை.  கொஞ்சம் ஏற்பாடு செய்யுங்கள்.  என் புத்தகங்கள் எல்லாம் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்குக்குப் போய் விட்டதால் நீங்கள் கொடுக்க வேண்டியது கம்மியாகத்தான் இருக்கும்.  கொஞ்சம் கவனியுங்கள்.) 

கட்டுரைகளுக்குக் கிடைக்கும் தொகை 1500 ரூ.  10,000 ரூ. கொடுக்கலாம்.  கொடுக்க வேண்டும்.  ஆனால் கொடுப்பது 1500 ரூபாய்தான்.  அதுதான் சமூக எதார்த்தம்.  நிலவரம்.  இந்த நிலையில் நானும் பாரதி மாதிரி, புதுமைப் பித்தம் மாதிரி, தர்மு சிவராமு மாதிரி, கோபி கிருஷ்ணன் மாதிரி மற்ற பல எழுத்தாளர்கள் மாதிரி பட்டினி கிடந்து சாகவா?  செத்தால் என்னை நல்லவன் என்பீர்கள்.  மாலை போட்டுக் கொண்டாடுவீர்கள்.  ஏனென்றால், தமிழ்ச் சமூகம் ஒரு பிணம் தின்னிக் கழுகு.  பாரதி உயிரோடு இருந்த போது அவனைப் பட்டினி போட்டுக் கொன்றது இந்தச் சமூகம்.  அவருக்கு ஹை கோர்ட் ஜட்ஜெல்லாம் நண்பர்களாக இருந்தார்கள்.  (எனக்கும் ஹைகோர்ட் ஜட்ஜை விடப் பெரியவர்கள் எல்லாம் நண்பர்கள்!) ஆனாலும் வீட்டில் அரிசி வாங்கக் காசு இல்லாமல் கஷ்டப்பட்டார் செல்லம்மாள்.  பாரதிக்குக் கவலையில்லை.  அவன் கஞ்சா புகைத்து விட்டுக் கவிதை பாடிக் கொண்டிருப்பான்.  நாப்பது வயதில் செத்தும் வைப்பான்.  ஆனால் அவனைப் பட்டினி போட்டுக் கொன்று விட்டு இப்போது மாலை போட்டுக் கொண்டாடும் இந்தச் சமூகம் necrophelic தானே ஐயா?  நெக்ரோஃபீலியா என்றால் பிணத்தைப் புணர்வது, பிணத்தைத் தின்பது.  பாரதியின் பிணத்தைப் படமாக்கி மாலை போட்டு வணங்கும் சமூகம் நெக்ரோஃபீலிக் இல்லாமல் வேறு என்ன? 

தன் தாய் மொழிக்காக தன்னையே எரித்துக் கொள்ளும் சமூகம் இந்த உலகில் எங்காவது உண்டா?  தன் தாய் மொழியைக் கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி எழுந்து நின்று வணக்கம் பாடும் ஓர் இனம் எங்காவது உலகில் உண்டா? ஆனால் அப்படிப்பட்ட தாய்மொழியில் இங்கே யாருக்காவது எழுதவோ படிக்கவோ தெரியுமா? தாய் மொழியையும் சவமாக்கியாயிற்று.  சவத்துக்கு வாழ்த்துப் பாடி எழுந்து நிற்கிறது தமிழ் நெக்ரோஃபிலிக் சமூகம்.  இதைத்தானே எனக்கும் செய்ய ஆசைப் படுகிறீர்கள்?  வாசகரிடம் காசு கேட்காதே, பட்டினி கிடந்து செத்துப் போ.  நாங்கள் படம் வைத்துக் கொண்டாடுகிறோம்.  எங்களுக்கு சவம்தான் பிடிக்கும்.  எனக்கு உங்கள் மரியாதை தேவையில்லை.  எனக்கு இந்த சமூகத்திற்காகக் கொடுப்பதற்கென்று சில விஷயங்கள் உள்ளன.  அதைக் கொடுப்பதற்காக நான் பிச்சையும் எடுப்பேன்.  அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.  தியாகய்யர் எந்த ஆஃபீஸில் குமாஸ்தா வேலை பார்த்தார்?  பாரதி படிக்காத படிப்பா?  அவரால் அப்போது பெரிய அதிகாரியாகி கவர்னர் அளவுக்கு வந்திருக்க முடியுமே?  அவர் அதையெல்லாம் உதறி விட்டு கஞ்சா தானேடா அடித்தார்?  எத்தனை முறை உங்களைப் போன்ற மரமண்டைகளுக்கு நான் எழுதிப் புரிய வைப்பது? 

இதோ கேள் மூடப் பதரே… நான் உங்கள் அமைப்பை, ஸ்தாபனத்தை என் இடது காலால் தட்டி எறிகிறேன்.  உங்கள் குடும்பம், உங்கள் மரியாதை, உங்கள் மதிப்பீடுகள், உங்கள் கல்வி, உங்கள் பணம் எல்லாமே எனக்குத் தூசு.  கல்வி கற்றவன் எப்பேர்ப்பட்ட திருட்டுப் பயலாக இருக்கிறான் என்று எழுதிக் கொண்டே இருக்கிறேனே, உங்கள் ஆட்டு புத்திக்கு உறைக்கவில்லையா?  கிரிமினல்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் எனக்கு புத்திமதி சொல்கிறீர்களா?  ப. சிதம்பரம் படிக்காத படிப்பா?  அவர் என்ன செய்தார்?  நான் வேலை பார்த்த தபால் இலாகாவில் எப்படிப்பட்ட கிரிமினல்கள் இருந்தார்கள் தெரியுமா?

கேளுங்கள்.  சூப்பரிண்டெண்ட் என்று ஒருத்தர்.  அவருடைய டிவிஷனில் போஸ்ட்மேனுக்கு ஆள் எடுப்பார்கள்.  எல்லாமே சட்டப்படி நடக்கும்.  விளம்பரம் வரும்.  மதிப்பெண் அடிப்படையில்தான் எல்லாமே நடக்கும்.  மூன்று பேர் கொண்ட செலக்‌ஷன் கமிட்டி இருக்கும். மதிப்பெண் அடிப்படையில் மூன்று பேரும் தனித்தனியாக பட்டியல் தயாரிப்பார்கள்.  மூன்று பட்டியலுமே ஒன்றாக இருக்கும்.  மதிப்பெண் அடிப்படைதானே?  தப்பே இருக்காது.  கோல்மாலே செய்ய முடியாது.  நான்கு போஸ்ட்மேன் தேவை என்றால், முதல் நான்கு பேருக்கு வேலைக்கான உத்தரவு தயார் செய்யப்படும்.  தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபருக்குப் போக நான்கைந்து நாள் ஆகும்.

சூபரிண்டெண்டண்ட் அந்த நாலு பேரின் வீட்டுக்கு ஜீப்பில் போவார்.  பெற்றோரைப் பார்த்து, உங்கள் பையனுக்கு வேலை கிடைக்க வேண்டுமானால் எனக்கு 70,000 ரூ. கொடுங்கள்.  இப்போது 35000.  உத்தரவு கிடைத்த பிறகு 35000 ரூ.  உத்தரவு கிடைத்த பிறகு பணம் கொடுக்காமல் டபாய்க்க முடியாது.  உங்கள் மகன் என் பிரிவில்தான் வேலை செய்வான்.  ரெண்டே நாளில் 35000 ரூ.  கை மாறும்.  ஒரே வாரத்தில் அடுத்த 35000 ரூ. இப்படி நாலு பேரிடமும் 2,80,000 ரூ.  இது எப்போது? 1990 இல். இதில் நேரடியாக எந்த கோல்மாலும் இல்லை.  யாராலும் நிரூபிக்க முடியாது.  இதுதான் விஞ்ஞானரீதியான ஊழல்.  இதைச் செய்வதில் கை தேர்ந்தது தமிழகத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சி.  இதையேதான் சிதம்பரமும் தன்  modus operandi-யாகக் கையாண்டார்.  ஒட்டு மொத்த தேசத்துக்கே நிதி மந்திரி.  வெறுமனே ஒரு தகவலை தன் பையனிடம் சொன்னால் போதும், நூறு கோடி நிமிடத்தில் வரும்.  இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.  அது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு.  பிராமணர்கள் வசிக்கும் பகுதி.  எப்படி சிந்தாதிரிப் பேட்டையில் சேட்டுகள் அதிகமோ அதுபோல அங்கே பிராமணர்களே அதிகம். பிராமின்ஸ் கெட்டோ என்றே சொல்லலாம்.  அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் எட்டு வீடுகள்.  எட்டு குடும்பமும் பிராமணர்கள்.  அதில் ஒருவர் பார்க்க கடோத்கஜன் மாதிரி இருப்பார். சைவப் பழம் மாதிரி நெற்றியில் விபூதி. வயது முப்பது இருக்கும்.  ஐ.டி.  மாதம் ஒன்றரை லட்சம் வரும்.  மனைவியும் ஐ.டி.  ஒரே ஒரு குழந்தை. காரியங்களை நன்றாக எடுத்துச் செய்கிறார், நன்றாகப் பேசுகிறார் என்பதால் அவரையே அந்தக் குடியிருப்போர் சங்கத்தின் செயலராகப் போட்டார்கள்.  ரெண்டு வருஷம் ஆயிற்று.  ஆனதும், பொதுவாக இருக்கும் வராந்தாவில் தன்னுடைய உபயோகத்துக்காக ஒரு கொடி கட்டி அதில் ஜட்டி, அண்ட்ராயர் எல்லாம் காயப் போட்டார்.  பழைய சிலிண்டர், செருப்பு ஸ்டாண்ட் எல்லாம் வைத்தார்.  எங்கே?  எல்லோருக்கும் பொதுவான வராந்தாவில்.  மற்றவர்கள் தட்டிக் கேட்டார்கள்.  நீங்கள் இத்தனை ரூல்ஸ் பேசினால் நான் செயலராக இருக்க மாட்டேன், நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் தன் பதவியை ராஜினாமா செய்வார்.  எல்லோரும் பயந்து போய் தன்னையே இருக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள் என்று நினைத்தார்.  தோற்றார்.  வேறு ஒருத்தர் – அவர் ஒரு அரசு அலுவலகத்தில் ஆடிட்டர் – செயலராக ஆனார்.  எடுத்த எடுப்பில் ஒரு பிரம்மாண்டமான ஊழலைக் கண்டு பிடித்தார்.  பொது வராந்தாவில் ஒரு சிறிய லைட் இருக்கும்.  பல்ப் கண்டு பிடித்த போது உபயோகத்துக்கு வந்த பல்ப் மாதிரி இருக்கும்.  ஏதோ கடமைக்குக் கொஞ்சம் வெளிச்சத்தைத் துப்பிக் கொண்டிருந்தது.  மாதாமாதம் 200 ரூ. அதற்கு மின்கட்டணம். அந்த இருநூறு ரூபாயைத் தன் வீட்டு மின்கட்டணமாகவும், தன் வீட்டு மின்கட்டணமான 2000 ரூபாயை அந்த வராந்தா மின்கட்டணமாகவும் காட்டியிருந்திருக்கிறார் முன்னாள் செயலர்.  எல்லாமே அவர் கையில் இருந்ததால் யாரும் இதையெல்லாம் பரிசோதிக்கவும் இல்லை.  எல்லாம் ஒரே செலவில் போய்க் கொண்டிருந்தது.  இப்போது மாட்டிக் கொண்டார்.  திருதிருவென்று முழித்தபடி ஏதோ என் கவனத்திலேயே வராமல் போய் விட்டது என்று உளறினார்.  அது எப்படி ரெண்டு வருஷமாக ஒவ்வொரு மாதமும் இந்த பிரம்மாண்டமான விஷயம் கவனத்திலேயே வராமல் போகும்?  சரி, திருட்டு வெளிப்பட்டு விட்ட பிறகாவது, அதைச் சரி செய்ய முயலலாம் இல்லையா?  இல்லை.  எல்லா பணத்தையும் கட்டுங்கள் என்றால், இப்போ என்னண்ட அவ்வளவு காசு இல்லே; மாசாமாசம் கட்டிப்பிடறேன் என்றார்.  யாரும் ஒப்பவில்லை.  இப்போது அந்த எட்டு குடும்பமுமே ஒருவரோடு ஒருவர் ஒரே சண்டை. 

இவர்களெல்லாம்தான் உங்கள் பார்வையில் ஒழுக்கவாதிகள்.  இவர்களில் ஒருவர்தான் என்னைப் பார்த்து வாசகனிடம் காசு வாங்காதே என்றும் வாங்கிய காசில் பூனைக்குச் சாப்பாடு போடுகிறாயே என்றும் கேலி பேசுகிறார்.  பூனைக்கும் சாப்பாடு போடுவேன்; பிராத்தலுக்கும் போவேன்.  அதைக் கேட்க நீ யாரடா நாயே?  என்னைப் பார்க்கில் பார்த்துக் கேள்வி கேட்டவனிடம் கேட்கிறேன்.  நீ ஒரு சராசரி.  நீ பிராத்தலுக்குப் போனால் அதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும்.  ஆனால் நான் ஞானி.  நான் பிராத்தலுக்குப் போனால் அந்த பிராத்தலே கோவிலாக மாறுமடா மூடா!  ஏனென்றால், நான் அந்தப் பெண்களின் கதையைக் கேட்டு உலகோருக்குச் சொல்லுகிறேன்.  (சந்த்தியாகோ போன போதும் பிராத்தலுக்குப் போனேன்.  என் நண்பர் 65 வயது ஆனவர்.  செக்ஸ் செக்ஸ் என்றார்.  நான் அவரிடம் சொன்னேன், ”நான் இந்து.  (இந்து என்றால் அங்கே இந்தியன் என்று பொருள்)  இந்துக்கள் பொதுவாக அந்நியப் பெண்களிடம் போக மாட்டார்கள். (நம் நாட்டைப் பற்றி நம் நாட்டில்தான் திட்டிக் கொண்டிருப்பேன்.  வெளிநாட்டில் போய் கொஞ்சம் பெருமையாகப் பேச வேண்டும் அல்லவா?  நம் தமிழ்நாட்டுத் தத்தேரிகள் தாய்லாந்து பிராத்தல்களின் முன்னே க்யூவில் நிற்கும் அவலத்தையெல்லாம் சீலே நண்பரிடம் சொல்லலாமா?) நான் ஒரு இந்து.  நான் காதலிக்கும் பெண்ணை மட்டுமே தொடுவேன்.  இவர்களிடம் நான் கதை கேட்க வந்தேன் நண்பா.” நீண்ட நேரம் விளக்கினேன்.  கடைசி வரை அவருக்கு நான் சொன்னது புரியவில்லை.) 

ஆக, நீங்கள் எனக்கு இட்ட பிச்சையில்தான் நான் சந்த்தியாகோவில் பிராத்தலுக்குப் போனேன். 

பிச்சை என்றதும் பதறாதீர்கள்.  விவேகானந்தரிடம் அமெரிக்கக் கோடீஸ்வரர் கேட்டார்.  ”நான் உங்களுக்குக் கொடுத்த ஏகப்பட்ட பணத்துக்கு நீங்கள் நன்றியே சொல்லவில்லையே?” அதற்கு விவேகானந்தர் சொன்னார், எங்கள் இந்து தர்மத்தில் நீங்கள் கொடுப்பதன் பெயர் தட்சணை.  கொடுப்பவர் கைதான் அங்கே கீழே இருக்கும்.  நான் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்வதற்காக நீங்கள்தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். 

நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.  உங்கள் தோளில் கை போடுகிறேன் என்பதற்காக நீங்கள் என் ஆசான் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.  அப்படி நினைத்தால் உங்களைப் போன்ற மூடன் வேறு யாரும் இல்லை.  (ரவி ஷங்கர், புரிகிறதா?  நீங்கள் என்னோடு ஃப்ரான்ஸ் வரலாம்.  நான் விமர்சித்தால் அதைத் தலை சாய்த்து ஏற்கிறீர்கள்.  சோதனையில் தேறி விட்டீர்கள்.) நேற்று காவேரி மருத்துவமனையில் மூன்று சைக்கியாட்ரிஸ்டுகளைச் சந்தித்தேன். ஒவ்வொருவரும் பதினைந்து நிமிடங்களுக்கு 500 ரூ கட்டணம் வாங்கினர்.  ஒரு மணி நேரத்துக்கு 50,000 அல்லது ஒரு லட்சம் வாங்கும் உச்ச நீதிமன்ற வக்கீல்கள் உள்ளனர். அப்படியானால் என்னுடைய ஒரு மணி நேரக் கட்டணம் என்ன என்று நீங்கள் சொல்லுங்கள், பார்க்கிறேன்.  ஆனால் அதைச் சொல்வதற்கு முன் உங்களுக்கு நான் யார் என்று தெரிய வேண்டும்.  சுப்ரமணியம் சுவாமி  ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொராளாதாரப் பேராசிரியர். அமார்த்யா சென் நோபல் வாங்கியவர்.  நான் யார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.  நம்ப முடிந்தவர்கள் மட்டும் என்னோடு பழகலாம்.  நம்ப முடியாதவர்கள் இன்றே இந்தக் கணமே என்னை வாசிப்பதை நிறுத்தி விடலாம்.  நம்பாமல் படித்தால் வயிற்று வலி வரும்.  ஜாக்கிரதை.  தத்துவத்திலும், உளவியலிலும் ஹார்வர்ட் பேராசிரியர்கள் எதைக் கற்பிக்கிறார்களோ அந்தப் பாடங்களை எழுதுபவன்.  சும்மா புருடா அல்ல.  அப்படிப்பட்ட ஆய்வு ஒன்று இந்தக் கட்டுரையிலேயே உள்ளது.  தமிழர்களிடம் நெக்ரோஃபீலிக் ஆட்டிட்யூட் உள்ளது.  மேலே இருக்கிறது.  சரியாகப் படியுங்கள்.  இது என்னுடைய கண்டுபிடிப்பு.  Advanced psychologyயில்தான் இது போன்ற கண்டுபிடிப்புகளை நீங்கள் படிக்க முடியும்.  என்னுடைய Book of Fuzoos: பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் என்ற கதையில் இதை நான் 25 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டேன்.  இப்போது திரும்ப எழுதுகிறேன்.  தத்துவத்திலும், உளவியலிலும் பல்கலைக்கழகங்களில் அவர்கள் ரொலான் பார்த்தையும் தெரிதாவையும் ஃபூக்கோவையும் கற்பிக்கிறார்கள் அல்லவா?  நான் ரொலான் பார்த்துக்கு நிகரானவன்.  தெரிதாவுக்கு நிகரானவன்.  ஃபூக்கோவைத் தாண்டியவன். 

இன்னும் இந்து தர்மத்தின் (இந்து என்றால் இந்தியா என்பது பொருள்) அடிப்படையில் சொல்கிறேன்.  இந்திரா இந்தியாவையே கலக்கிக் கொண்டிருந்தார்.  சர்வாதிகாரிக்கு இந்தியாவே அஞ்சியது.  ஆனால் அவர் ஒரு நிர்வாணத் துறவியின் முன்னே கைகட்டி நின்று கொண்டிருந்தார். தேவ்ரஹா பாபா என்ற பெயருள்ள அந்தத் துறவி தரையில் இருக்க மாட்டார்.  தரையிலிருந்து பத்தடி உயரத்தில்தான் வசிப்பார்.  இந்திரா அவர் முன்னே நின்றார்.  அவர் தன் பாதத்தை இந்திராவின் தலை மீது வைத்து ஆசீர்வதித்தார். நான் அந்த நிர்வாணத் துறவியைப் போன்றவன்.  ஒரு சர்வாதிகாரியின் தலையிலே என்னுடைய பாதத்தை வைத்து ஆசீர்வதிக்கு என்னுடைய ஒரு மணி நேரத்தின் விலை என்ன?  நீங்கள் சொல்லுங்கள், கேட்டுக் கொள்கிறேன்.  எனவே, உங்கள் தோள்மீது கை போடுகிறேன் என்பதற்காக எனக்கு ஆசானாகப் பார்க்காதீர்கள். உங்களிடமிருந்து காசு வாங்குகிறேன் என்பதற்காக எனக்கு உத்தரவு போட முனையாதீர்கள்.  அதை நான் பூனைக்கும் செலவு செய்வேன்.  பிராத்தலிலும் செலவு செய்வேன். எனவே, என்னிடம் பணம் இல்லை; எனக்கு லௌகீக வாழ்க்கையை வாழத் தெரியவில்லை என்பதற்காக என் தலை மீது ஏறி உட்கார முயலாதீர்கள்…

இறுதியாக ஒன்றைச் சொல்லுகிறேன்.  மலக் கிடங்கைப் போல் நாற்றமெடுக்கும் உங்களுடைய ஒழுக்க விதிகளை அந்த ஒழுக்க விதிகளையெல்லாம் தாண்டிவிட்ட என் மீது திணிக்கப்பார்க்காதீர்கள்.  உங்கள் ஒழுக்கவியலைப் பார்த்தீர்கள்தானே?  ஒரு பிராமணக் குடியிருப்பில் 200 ரூபாய் மின்கட்டணத்தைத் தான் எடுத்துக் கொண்டு தன்னுடைய 2000 ரூபாய் மின்கட்டணத்தை மாற்றார் தலையில் கட்டிய பிராமணன்.  ஏன் பிராமணனை எடுத்தேன் என்றால், அவன் தான் உஞ்சவிருத்தி செய்து வேதம் கற்பித்தவன்.  அவன் தான் தர்மத்தைப் பரிபாலித்தவன்.  அவன் தான் அரசனுக்கும் குருவாக இருந்தவன்.  அவன் தான் கற்றறிந்தவன்.  எல்லாவற்றுக்கும் மேலாக அவன் துறவியாக வாழ்ந்தவன்.  லௌகீகத்தைத் தூக்கி எறிந்தவன்.  டேய் பதர்களே, உங்களைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்கிறேனடா… இப்படிக் கேடு கெட்டுப் போய் விட்டீர்களே… பணமே தெய்வம் பணமே எல்லாம் என்று வாழ யாரைப் பார்த்துக் கற்றீர்கள்?  நீங்களா என்னைப் பார்த்து – உங்களுடைய பணத்தைத் தூ என்று காறித் துப்பி விட்டு துறவி போல் வாழும் என்னைப் பார்த்து வாசகனிடம் வாங்கிய காசில் பூனைக்குச் செலவழிக்கிறாயே என்று கேட்பது?  கொஞ்சம் கூட வெட்கம் இல்லை உங்களுக்கு?  நீங்கள் எதை இழந்து விட்டீர்கள் என்பது கூடவாடா புரியவில்லை, மூடப் பதர்களே…

இனிமேல் என் வழியில் குறுக்கிடாதீர்கள்…

பின்குறிப்பு: இந்தக் கட்டுரையை இன்னும் மென்மையான தொனியில் காயத்ரியோ, இன்னும் கடுமையாக அராத்துவோ எழுதியிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.  ஆனால் அவர்கள் இருவருமே ஒரு விஷயத்தில் ஒத்த கருத்து உடையவர்கள்.  இது போன்ற விமர்சனங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்பது அவர்கள் என்னிடம் சொல்லும் விஷயம்.  ஆனாலும் நாகேஸ்வர ராவ் பார்க்கில் நான் ஒருவரை அறைய நேர்ந்தது என்னை மிகவும் பாதித்து விட்டது.

கட்டுரையில் இன்னும் ஒரு பகுதி உள்ளது.  எழுதுவேன்…

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai