The Walls of Delhi என்ற புகழ் பெற்ற நூலை எழுதிய உதய் ப்ரகாஷும் நானும் ஒரிஸாவின் கிராமம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெட்டிக் கடையில் காரை நிறுத்தி வெற்றிலைப் பாக்கு வாங்கினேன். கடையில் ஒரு பதினைந்து வயதுப் பையன் இருந்தான். இந்தப் பட்டிக்காட்டில் எதைப் பார்க்க வந்தீர்கள் என்று கேட்ட அவனிடம் நாங்கள் எழுத்தாளர்கள் என்றார் உதய் ப்ரகாஷ். எழுத்தாளர் என்பதற்கு அவர் சொன்ன லேகக் என்ற சுத்த ஹிந்தி அந்த ஒரிஸா பையனுக்குப் புரியவில்லை. நான் கதை எழுதுபவர்கள் என்ற பொருளில் கஹானிகார் என்றேன். உடனே அவனுக்குப் புரிந்து விட்டது. வெற்றிலைப் பாக்குக்குக் காசு வாங்கிக் கொள்ளவும் மறுத்து விட்டான். அதற்கு அவன் சொன்னான், வியாசரின் பரம்பரையில் வந்தவர்களிடம் நான் எப்படிக் காசு வாங்குவேன்? இப்போது நினைத்துப் பார்த்தாலும் இப்படித்தான் நடந்ததா அல்லது கனவு கினவு கண்டோமா என்று இருக்கிறது எனக்கு.
இதன் அர்த்தம் என்ன? மஹாபாரதம்தான் இந்திய மண்ணின் அடையாளம். இந்தியக் கதை சொல்லும் மரபின் உச்சபட்ச உதாரணம். இலக்கியம் என்பது மேட்டுக்குடியினருக்கானது அல்ல; மக்களின் வாழ்க்கையோடு இணைந்தது என்பதற்கான நிரூபணம். மஹாபாரதத்தைப் போன்ற ஒரு இதிகாசத்தை உலகில் காண இயலாது என்று இதிகாசங்களைப் பயின்ற வல்லுனர்கள் கூறுகிறார்கள். உலகின் மகத்தான இலக்கியக் கர்த்தாவான போர்ஹேஸின் சிந்தனை உலகின் மூல ஊற்று மஹாபாரதம் எனப் பலமுறை சொல்லியிருக்கிறார். அப்பேர்ப்பட்ட இதிகாசம் தமிழில் முழுமையாகக் கிடைக்கவில்லை. ராஜாஜி, சோ போன்ற அத்தனை பேரும் மஹாபாரதத்தின் சுருக்கத்தையே எழுதியிருக்கிறார்கள். ஒரே ஒருத்தர்தான் வியாசரின் பாரதத்தை சம்ஸ்கிருதத்திலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து பதிப்பித்தார். அவர் பெயர் ம.வீ. ராமானுஜாச்சாரியார். அதை ம.வீ.ரா. பதிப்பு என்பார்கள். அது இப்போது அச்சு வடிவில் கிடைப்பதில்லை. வெளிவந்து 80 ஆண்டுகள் இருக்கும். ம.வீ.ரா. தன் சொத்தையெல்லாம் விற்றுத்தான் மஹாபாரதத்தின் பதினெட்டு பர்வங்களையும் பதிப்பித்தார். அது இப்போது நூல் வடிவில் வந்தால் அதை நீங்கள் எல்லோரும் வாங்குங்கள் என்று பரிந்துரைக்க மாட்டேன். ஏனென்றால், அது மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது. நம்மில் பலருக்கும் புரியாமல் போகலாம்.
ஆனால் இப்போது அருட்செல்வப் பேரரசன் மொழிபெயர்த்துள்ள மஹாபாரதம் அப்படிப்பட்ட மொழிநடையில் உள்ளது அல்ல. அருட்செல்வப் பேரரசன் இளைஞர். பல ஆண்டுகள் இரவு பகலாக உழைத்து இந்தப் பெரும்பணியை நிறைவேற்றியிருக்கிறார். இவரைப் பற்றியும் இவரது மகத்தான பணியைப் பற்றியும் நான் ஏற்கனவே இரண்டு மூன்று முறை விரிவாக எழுதியிருக்கிறேன். மஹாபாரதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புகளிலேயே தலைசிறந்தது கிஸாரி மோகன் கங்கூலியினுடையது. அதைத்தான் அருட்செல்வப் பேரரசன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இதற்காக ம.வீ.ரா. பதிப்பையும் ஒப்பீடு செய்வதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார். தற்சமயம் அச்சில் இராத ம.வீ.ரா. பதிப்பைத் தவிர மஹாபாரதத்துக்குத் தற்போது அருட்செல்வப் பேரரசனின் இந்த மொழிபெயர்ப்பைத் தவிர வேறு முழுமையான மொழிபெயர்ப்பு கிடையாது. இது ஒன்றுதான் இப்போது கிடைப்பது.
கெட்டி அட்டையில் 14 பர்வங்களாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மூலமாக வெளிவர இருக்கும் இதன் விலை 9999 ரூ. மஹாபாரதம் 14 பர்வங்கள். அப்படியெனில் கெட்டி அட்டையில் 14 புத்தகங்கள். மொத்த விலையான 12999 ரூபாயில் 24 சதவிகித சலுகையில் முன்பதிவுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோருகிறேன். என்னுடைய நாவல் புதிதாக வெளிவந்தால் ஆயிரம் பேர் முன்பதிவில் வாங்குவார்கள். இந்தத் தொகுதிகளுக்கு 2000 பேர் அப்படி முன்வர வேண்டும் என்பது என் ஆசை, எதிர்பார்ப்பு. இது உங்களுக்கு மலைப்பாக இருக்கும்.
மிகவும் சுலபம். 5000 முன்பதிவைக் கூடத் தொடலாம். விசாகா ஹரியை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவரைப் போன்றவர்கள், அவரது கதைகளைக் கேட்பவர்கள் இந்த மஹாபாரதம் தொகுதிகளை வாங்க வேண்டும். வேளுக்குடி கிருஷ்ணனைப் பின்பற்றுபவர்கள் இதை வாங்க வேண்டும். இஸ்கான் அமைப்பைப் பின்பற்றுபவர்களில் யாரேனும் தமிழர்கள் இருந்தால் அவர்கள் இதை வாங்க வேண்டும். மஹாபாரதம் இந்துக்களுக்கான பிரத்யேகமான ஆன்மீக நூல் அல்ல; இது ஒரு இலக்கியப் பிரதி. ஆனாலும் இந்துக்கள் இதை இந்து மரபின் அடையாளமாக வாங்க வேண்டும். இஸ்லாமியர்கள் இதை ஒரு இந்தியக் கலாச்சார அடையாளமாக, மாபெரும் கதைசொல்லி ஒருவனின் சாதனையாக, இந்திய மண்ணின் பெருமைக்குரிய சாதனைப் பிரதியாக வாங்க வேண்டும். கிறித்தவர்கள் ஜனநாயகத்தன்மை கொண்டவர்கள். அவர்களுக்கு நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கே தெரியும்.
மேலும், இதைப் பற்றி அறியும் நீங்கள் இதைக் கல்லூரி நூலகங்களுக்குப் பரிந்துரை செய்யலாம். தனவந்தர்கள் பத்து இருபது பிரதிகள் வாங்கித் தேவைப்படுவோருக்குக் கொடுக்கலாம். நீங்களே கூட யாருக்கேனும் பரிசு கொடுக்க வேண்டுமாக இருந்தால் இந்த நூல் தொகுதிகளைப் பரிசாகக் கொடுக்கலாம். திருமணங்களுக்கு, பிறந்த நாட்களுக்கு என்று… நான் படிப்பதில்லையே என்று சொல்ல வேண்டாம். உங்கள் குழந்தைகள் படிக்கலாம். பேரக் குழந்தைகள் படிக்கலாம்.
சின்மயி இந்தக் கொரோனா காலத்தில் ஒரு நற்காரியம் செய்திருக்கிறார். தேவைப்படுகின்றவர்களுக்கு, ஏழை மக்களுக்கு உதவி செய்வோருக்கு, அந்த உதவியின் ஆதாரத்தை அவருக்கு அனுப்பி வைத்தால், அவர்களுக்காக அவர் பிரத்தியேகமாகப் பாடுவார். இப்படி அவர் 25 லட்சம் ரூபாய்த் தொகையை வசூலித்து ஏழை எளியவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். சின்மயிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இதைப் போல்தான் மஹாபாரதத் தொகுதிகளுக்கும் செய்ய வேண்டும்.
பல philanthropistகள் ஏழைகளுக்கு உணவிடுவதை மட்டுமே தர்ம காரியம் என்று நினைக்கின்றனர். உணவு இல்லாவிட்டால் கல்வி. அந்தக் கல்வி எந்த மாதிரி கல்வி? பணம் சம்பாதிப்பதற்கான கல்வி. வேறு என்ன வேதபாடசாலைக்கா அனுப்பி வைக்கிறார்கள்? அல்லது, நூலகங்களின் மேம்பாட்டுக்காக உதவி செய்கிறார்களா? ஆனால் மனித இனத்துக்கு உணவும் பணமும் மட்டுமே போதாதே? மொழி, கலாச்சாரம், பண்பாடு என்றெல்லாம் இருக்கின்றனவே? அது போன்ற காரியங்களுக்கும் தனவந்தர்கள் தங்கள் பணத்தைச் செலவிட வேண்டும்.
இன்னொரு உதாரணம் சொல்கிறேன். ஒருநாள் ஒரு ஆட்டோ டிரைவர் என்னை வீட்டில் இறக்கி விட்டு ”சார், பணம் வேண்டாம், இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்” என்று ஒரு பைபிளைக் கொடுத்தார். அந்தச் சம்பவத்தை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். நான் அவரிடம் என்னிடம் நாலைந்து பைபிள் நூல்கள் உள்ளன, வேறு யாருக்கேனும் இல்லாதவரிடம் கொடுங்கள் என்று சொல்லி, பணத்தைக் கொடுத்து விட்டு வந்தேன். மதம் மாற்றுவது எனக்குப் பிடிக்காது. அது வேறு விஷயம். இந்த நண்பர் செய்தது வேறு. தனக்குப் பிடித்ததை, தான் நம்புவதை இன்னொருவருக்கு மிக எளிமையாக அறிமுகம் செய்கிறார். அவரது செயல்பாட்டில் இருந்த ஆழ்ந்த பிடிப்பு (passion) எனக்குப் பிடித்திருந்தது. என்னை அவர் கட்டாயப்படுத்தவில்லை. பணத்துக்குப் பதிலாக புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார். எப்பேர்ப்பட்ட விஷயம் அது.
நண்பர்களே, அதேபோல் மஹாபாரத நூல் தொகுதி விஷயத்தில் நீங்கள் ஆழ்ந்த பிடிப்போடு செயல்படுங்கள். இந்தியப் பாரம்பரியத்தின் கலாச்சார அடையாளத்தை வீட்டில் வைத்திருங்கள்; நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். எல்லோரையும் செவிவழிச் செய்தியாக இது சென்றடைய வேண்டும். தயவுசெய்து முகநூலில் இதைப் படித்து விட்டு லைக் போடாமல் உங்கள் பக்கத்தில் பகிருங்கள். காசா பணமா, பகிர்வதற்குக் கூட பலரும் யோசிக்கிறார்கள். யாரும் அதைக் கூட செய்வதில்லை.
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் எத்தனையோ நூல்களை வெளியிடுகிறது. அவற்றின் பெயர் கூட எனக்குத் தெரியாது. அதற்கெல்லாம் எனக்கு நேரமும் இல்லை. ஆனால் அருட்செல்வப் பேரரசனின் இந்த மஹாபாரதப் பணியை நான் என்னுடைய வேலையாகக் கருதுகிறேன். நான் செய்ய நினைத்து, எனக்கு நேரம் இல்லாததால் வேறொருவர் செய்த போது நானே செய்தது போல் பேருவகை கொள்கிறேன்.
ஏன் இதை முன்பதிவிலேயே வாங்க முயற்சிக்க வேண்டும் என்றால், இந்த நூல் பொன்னியின் செல்வனைப் போல் ஜனரஞ்சக வெளியீடாகவும் வர வேண்டும். மேலும், இப்படிப்பட்ட நூல்களை தைரியமாக கெட்டி அட்டையில் வெளியிடலாம், நாம் நினைத்தது போல் நூறு புத்தகம் அல்ல; பத்தாயிரம் பிரதிகள் விற்கிறது என்ற நம்பிக்கை பதிப்பாளருக்கு வர வேண்டும். அதனால்தான் இத்தனை எழுதுகிறேன்.
என் அமெரிக்க நண்பர்களுக்கும் தனித்தனியாக எழுத இருக்கிறேன். அவர்களும் இந்தப் பணியில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்குக்கு ஆதரவு தர வேண்டும். பல செல்வந்தர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள். தமிழ்ச் சங்கங்களுக்கும் கூட. நூல் பற்றிய விபரங்களுக்கு: