பூச்சி 118: பொய்களின் உலகம்

நான் பயணம் செல்லும் போது தவறாமல் செய்யும் விஷயம், அங்கே உள்ள டான்ஸ் பார்களுக்குச் செல்வது.  குடிக்க அல்ல.  டான்ஸ் ஆட.  உஸ்பெகிஸ்தானில் என்ன காரணத்தினாலோ டான்ஸ் பார் சென்றாலும் நடனங்களில் கலந்து கொள்ளவில்லை.  சீனி எவ்வளவோ வற்புறுத்தினார்.  அந்தப் பெண்களும் வற்புறுத்தினார்கள்.  ஆனால் அந்த இடங்கள் ரொம்பவும் மலினமாக இருந்ததால் நான் என் வசத்திலேயே இல்லை.  எங்கேயோ ஒரு பிச்சைக்கார நாட்டுக்கு வந்து விட்டாற்போல் இருந்தது.  அது வறுமை மட்டும் அல்ல.  கலாச்சார வறுமை.  அருவருப்பாக இருந்தது.  சீலேயிலும் வறுமை இருந்ததுதான்.  ஆனால் அடடா… அந்தப் பெண்கள் என்னமாய்ப் பழகினார்கள்.  அற்புதம்.  அங்கே வெறும் காஃபி குடித்து விட்டே ஆடினேன்.

கடைசியாக டான்ஸ் பாரில் ஆடியது ஒரு மூன்று ஆண்டுகள் இருக்கலாம்.  தி.நகர் டென்.டௌனிங்.  இரவு எட்டரையிலிருந்து பன்னிரண்டு வரை.  தோழிக்கு இருபத்தைந்து வயது இருக்கும்.  ஆடி முடித்து அவள் சொன்ன வார்த்தையை என்றைக்கும் மறக்க மாட்டேன்.  உங்களைப் போய் எல்லோரும் தப்பான ஆள் என்று சொல்கிறார்களே, இத்தனை நேரம் ஆடியதில் ஒரு நொடி கூட ஒரு தப்பான டச் இல்லாமல் ஆடினீர்களே, உங்களைப் போன்ற ஒரு ஜெண்டில்மேனைப் பார்ப்பது கடினம் என்றாள். பொதுவாக என்னோடு பழகியவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும்.  வெறும் வதந்தியை வைத்து முடிவு கட்டுபவர்களைப் பற்றி நாம் என்ன சொல்வது?  அந்தப் பெண்ணோடு நான் அன்று நடனம் ஆடிய போது அந்தச் சிறிய நடன அரங்கில் இருந்த ஒரு பத்திரிகையாளன் ஒரு படம் எடுத்துக் கொள்ளவா என்று கேட்ட போது அதிர்ந்து விட்டேன்.  தெரிந்தவர் பார்த்தால் என்னைப் பற்றி எம்மாதிரி இமேஜ் கிடைத்திருக்கும்? அந்தப் பெண் வேறு ஒரு மினி ஸ்கர்ட் அணிந்திருந்தாள்.  அவளுமே ஒரு மிக நல்ல பெண்.  ஆடையை வைத்து எடை போடும் தமிழ்ச் சமூகத்தில் என்ன நினைப்பார்கள் என்பது பற்றிக் கவலை அற்றவள்.    

பொதுவாக வதந்திதான் உண்மையை விட சுவாரசியமாக இருக்கிறது. என்னைப் பற்றிக் கேள்விப்பட்ட வதந்திகளிலேயே ஆகச் சிறந்ததாக நான் கருதுவது, சென்ற வாரம் என் தோழி ஒருத்தி சொன்னது.  ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் உங்களையும் —————–அவரையும் (ஒரு நடிகையின் பெயர்) பாண்டிச்சேரியில் வைத்து ஒரு ரிஸார்ட்டில் பார்த்ததாக ஒருத்தர் சொன்னார்.   அடப் பாவிகளா!  அந்த நடிகையோடு போயும் போயும் பாண்டிச்சேரிக்கா போவார்கள்?  கற்பனை செய்வதில் கூட இத்தனை வறட்சியா?  நான் பாண்டிச்சேரிக்கு சீனியைத் தவிர வேறு யாரோடும் சென்றதில்லையே?  ஆனால் அந்த நடிகையை ஒருமுறை பார்த்தாலே ஜென்ம சாபல்யம் அடைந்து விடலாம் என்று கருதும் ஆள் நான் என்பது வேறு விஷயம்.  எம்.எஃப். ஹுசேனின் மாதுரி தீட்சித் போல அவர் எனக்கு. 

சரி, ஏன் இத்தனை வியாக்கியானம் என்றால், நான் இன்னமும் நடனம் ஆடிக் கொண்டுதான் இருக்கிறேன்.  சம்பந்தம் இல்லாமல் அபிலாஷ் ஞாபகம் வருகிறது.  சாரு பொய்யும் சொல்வார், ஆனால் அவர் குழந்தை மாதிரி.  அந்தப் பொய் பொய் என்று உடனேயே தெரிந்து விடும்.  என்ன செய்ய?  மேலே சொன்ன டென்.டௌனிங் சம்பவத்தை நான் யாரிடமாவது சொன்னால் பொய் என்றுதானே சொல்வார்கள்?  எனக்கு நடக்கும் விஷயங்களை என்னாலேயே நம்ப முடியவில்லையே சாமி.

சில உதாரணங்களைச் சொல்லவா?  அதற்கு முன்னால் ஒரு விஷயம்.  உண்மை தட்டையாக இருக்கும்.  சுவாரசியமற்றதாக இருக்கும்.  உண்மையில் complexities கிடையாது.  Truth is terribly boring.  ஆனால் பொய் இதற்கு எதிரானது.  செம சுவாரசியம்.  ஆனால் என் விஷயத்தில் பொய்க்கு இருக்கும் அத்தனை ரசமான குணாம்சங்களுடன் கூடியது என்னுடைய உண்மை. 

 பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் பஹூஜன் சமாஜ் பார்ட்டியில் என்னை சேரச் சொல்லி அதன் பொதுச் செயலாளர் என்னைக் கேட்டுக் கொண்டார்.  காரணம், அப்போது என் பெயர் கேரளத்தில் அத்தனை பிரபலமாக இருந்தது.  அப்போது சில சமயங்களில் என் அலைபேசியில் பேசுவதற்கான காசு இருக்காது.  பொதுத்தொலைபேசியிலிருந்து மாயாவதி ஜீ மாயாவதி ஜீ என்று கத்துவேன்.  இந்தி தெரிந்தவர்கள் அப்போது என்னைக் கேட்டிருந்தால் பைத்தியம் என்றே நினைத்திருப்பார்கள்.  அதற்குப் பிறகு பல ஆண்டுகள் சென்ற பிறகுதான் சிவகாமி அதில் சேர்ந்தார். 

ராஸ லீலாவை காகிதத்தில்தான் எழுதினேன்.  கணினி இல்லை.  ஆனால் எங்கே தெரியுமா?  பார்க் ஷெரட்டன் ஓட்டலில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாரில்.  வாரம் மூன்று நாட்கள் செல்வேன்.  மதியம் பன்னிரண்டு மணிக்குப் போய் மாலை ஐந்து மணி வரை எழுதுவேன்.  ஸ்காட்ச் விஸ்கி எனக்குப் பிடிக்காது என்பதால் மெக்ஸிகன் டக்கீலாதான்.  ஏழு எட்டு ஷாட்டுகள்.  ஒருநாள் பிரபஞ்சனையும் அழைத்துப் போயிருந்தேன்.  மதியம் பன்னிரண்டுக்கு ஆரம்பித்து இரவு எட்டு வரை போனது.  கையில் பரம்பைசா இருக்காது.  அவர்களே எவ்வளவு ஆயிற்று என்று குறித்துக் கொள்வார்கள்.  மாதம் முடிந்ததும் பில் செட்டில் செய்து விடுவார் நண்பர்.  ஒரு மாதத்துக்கு ஐம்பதாயிரம் என்றால் இரண்டு ஆண்டுகள் எழுதினேன்.  கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.  வாரத்தில் மூன்று நாளா?  அதில் இரண்டு நாள் இதை ஸ்பான்ஸர் செய்யும் நண்பர் வந்து இரண்டு மணி நேரம் என்னோடு இருந்து விட்டுச் செல்வார்.  அவர் வந்தவுடன் நூறு ரூபாய் வாங்கி வைத்துக் கொள்வேன்.  திரும்பிப் போக ஆட்டோவுக்குக் காசு இருக்காது.  பல நாட்கள் உண்டியலை உடைத்து ஐம்பது ரூபாய்க்கு நாணயங்களாக எடுத்துக் கொண்டு பார்க் ஷெரட்டன் போய் ஆட்டோக்காரருக்கு அந்த ஐம்பது ரூபாய்க்கான நாணயங்களைக் கொடுத்திருக்கிறேன்.  பல சமயங்களில் என் கோடீஸ்வர நண்பரிடம் நூறு ரூபாயை வாங்கிக் கொள்ள மறந்து விடுவேன்.  அப்போதெல்லாம் பார்க் ஷெரட்டன் ஆட்டோ டிரைவர்களே என்னை வீட்டில் கொண்டு வந்து விடுவார்கள்.  காசு வாங்கிக் கொள்ளாமல்.  என்னிடம் வாங்கினால் நூறு.  நண்பரிடம் வாங்கினால் ஐநூறு கிடைக்கும்.  ஒருநாளும் நடந்து போனது கிடையாது.  ஒருநாள் ஷெரட்டனில் பசிக்கவில்லை.  ஆனால் ஆட்டோவில் ஏறியதும் பசித்தது.  நேராக வீடு இல்லை; ஸாம்கோவுக்கு விடுங்கள்.  சாப்பிட்டேன்.  கையில் காசு இல்லை.  ஆட்டோக்காரரிடம் வாங்கிக் கொள்ளுங்கள்.  அவரும் கொடுத்தார் போல.  மறுநாள் நண்பர் அவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டார்.  இப்போதும் நான் பார்க் ஷெரட்டன் போனால் அந்த ஆட்டோக்காரர்கள் என்னைப் பார்த்து சார், நான் தான் உங்களை வீட்டில் கொண்டு போய் விடுவேன் என்பார்கள்.  எனக்கு அவர்களை இந்த ஜென்மத்தில் பார்த்தது போலவே இருக்காது.  ஆனால் சம்பவங்களை எல்லாம் சொல்வதால் நம்பித்தான் ஆக வேண்டும்.  ஒருநாள் பார்க் ஷெரட்டன் வாசலில் ஒரு ட்ரான்ஸ்ஜெண்டர் எனக்கு ஐ லவ் யூ சொல்ல, நானும் பதிலுக்கு முழங்காலைத் தரையில் மடித்து ஐ லவ் யூ சொல்லி என் மோதிரத்தைக் கழற்றிக் கொடுக்க, அப்புறம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது.  மறுநாள் பார்க் ஷெரட்டன் ஊழியர்தான் சொன்னார்.  அந்த ட்ரான்ஸ்ஜெண்டர் ரொம்ப நல்லவர், மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டாராம்.  ஆமாம், அப்படித்தான் இருக்க வேண்டும்.  விரலில் மோதிரம் அப்படியே இருந்தது.  இருந்தாலும் சார், செக் அப் செய்து கொள்ளுங்கள், எதற்கும் நல்லது என்றார் ஊழியர்.  என்ன ஐயா இது அபச்சாரம் என்றேன்.  இல்லை சார், லிப் கிஸ் எல்லாம் அடித்தீர்கள் என்றார்.  அடப் பாவிகளா, நீங்களெல்லாம் எதற்கு இருக்கிறீர்கள், என்னை ஏன் அப்படியெல்லாம் விட்டீர்கள் என்று செம டோஸ் விட்டேன்.  நம்ப முடிகிறதா?

அத்தனையும் ராஸ லீலாவில் இருக்கிறது. இன்னும் பல கதைகள் இருக்கின்றன.  இப்போது நான் கனவான் ஆகி விட்டேன்.  ஏகப்பட்ட மகள்கள் என் எழுத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  கனிந்து விட்டேன்.  லஜ்ஜையாகத்தான் இருக்கிறது.  எல்லாவற்றையும் ராஸ லீலாவில் படித்துக் கொள்ளலாம். 

எதற்குச் சொன்னேன் என்றால், இது எல்லாமே பொய் மாதிரிதான் தெரியும்.  நம்ப முடியாவிட்டால் பொய்.  ஆம், என் வாழ்க்கை நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது.  ஆனால் அபிலாஷ் மெயின் பாயிண்ட்டைத் தொட்டு விட்டார்.  என் வாழ்க்கையும் எழுத்தும் ஒன்றுதான் என்பதே அது.  அதிகம் எழுதி விட்டேன்.

இப்போது எம்மாதிரி இசையைக் கேட்கிறேன் என்பதற்கு சில பாடல்கள்:   

https://www.youtube.com/watch?v=EqIpkMDRjYw

இந்தப் பாடலில் வரும் சாக்ஸஃபோனைக் கேட்டு உருகாதார் இருக்க மாட்டார்.

பின்வரும் குரலுக்குச் சொந்தக்காரர் மைக்கேல் கிவானூகா.  பிரிட்டிஷ்காரர்.  இவர் குரலுக்கும் ரிதத்துக்கும் நான் அடிமை.  ஆயிரம் முறைகளுக்கு மேல் கேட்டிருக்கிறேன் என்று சொல்லலாம்.  இவர் பாடல்களைக் கேட்டபடியே இரவு பூராவும் கண் விழித்திருப்பேன்.  எப்பேர்ப்பட்ட குரல்.  டிவைன்.  டிவைன்.

இவர் குரலைக் கேட்ட பிறகு என்னால் எழுத முடியவில்லை.