இசை பற்றிய சில குறிப்புகள் – 1

இந்த விஷயத்தில் நான் இந்தச் சமயத்தில் இறங்கவே கூடாது.  ஹராம்.  நாவலை முடிக்கும் அவசரத்தில் இருக்கிறேன்.  ஆனாலும் சூழலின் நெருக்கடி என்னை இந்த இடத்தை நோக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறது.  நான் எழுதாவிட்டால் இதை எழுத ஆட்களே இருக்க மாட்டார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.  அதனால்தான் அவ்வப்போது இதை எழுதி விடலாம் என்று நினைத்தேன்.  இது உங்களில் பெரும்பாலானவர்களுக்கு உவப்பளிக்காது என்று தெரியும்.  ஆனாலும் என்னைப் போல் யாரேனும் இதைப் பதிவு செய்யத்தான் வேண்டியிருக்கிறது.  இது ஒரு வரலாற்றுக் கடமை.  இதைப் படிக்கும் ஆயிரக்கணக்கான பேரில் ஒரே ஒருத்தராவது இந்த விளக்கைப் பற்றிக் கொண்டால் அது போதும்.  அதுவே இதை எழுதியதன் நோக்கத்தைப் பூர்த்தி செய்து விடும். 

Go deep என்பது செக்ஸ் வணிக தளங்களில் ஒரு அடிப்படை வார்த்தை.  ஆண் பெண் உறவிலும் கூட அப்படியே.  சிற்றின்பம்தான் இப்படி என்றால் பேரின்பம் என்று சொல்லப்படுகின்ற ஆன்மீகத்திலும் ஆழம் செல்லுதல்தான் அடிப்படை.  யாரும் மேலோட்டமாக தியானம் செய்வதில்லை.  தியானத்தின் மிக ஆழமான நிலைதான் சமாதி எனப்படுகிறது. லௌகீக வாழ்விலும் கூட யாரும் எதையும் மேலோட்டமாகச் செய்வதை விரும்புவதில்லை.  அப்படிச் செய்தால் அதில் வெற்றி பெறுவதும் இல்லை.  எல்லாமே ஆழம்தான்.

ஆனால் இந்தக் காலம் எதிலும் மேலோட்டமானதையே விரும்புகிறது.  இது மனித குலத்துக்கு எதிரானது.  உயிருக்கே உலை வைக்கக் கூடியது.  சீக்கிரமே மரணத்தை வரவழைக்கக் கூடியது.   நாமே வேட்டையாடி நாமே சமைத்து உண்பதற்கும் இரண்டு நிமிட நூடுல்ஸை உண்பதற்குமான வேறுபாடு.  வேட்டை இப்போது தடுக்கப்பட்டது.  தூண்டில் போட்டு மீன் பிடிப்பதும் வேட்டைதான்.  சைவ உணவில் உதாரணம் சொல்ல வேண்டுமானால், நாமே விளைவித்து உண்பது என்கலாம்.  ஏன், ஒரு பால்கனித் தோட்டத்தில் கூட விளைவித்து சமைத்து உண்பதற்கும் ஸ்விக்கியில் தருவிப்பதற்குமான வித்தியாசம்.  மொழியில் எடுத்துக் கொண்டால், நூறு வார்த்தைகளில் வாழ்தல்.  எல்லாவற்றிலுமே மேலோட்டம்.  எல்லாவற்றிலுமே நுனிப்புல் மேய்தல்.  எதிலுமே எதற்குமே உடம்பையோ மனதையோ மூளையையோ சிரமப்படுத்தி விடக் கூடாது.  சொகுசாகவே இருக்க வேண்டும்.  வேலை தராவிட்டால் அந்தந்த பாகங்கள் பயனற்றுப் போய் விடும்.  ஐம்பதாயிரம் குதிரைகளை வைத்துக் கொண்டு ஐந்து லட்சம் குதிரைகளைக் கொண்ட சீனப் படையை செங்கிஸ்கானால் எப்படி வெல்ல முடிந்தது?  சீனப் படை சொகுசுப் படை.  உடலுக்கும் மனசுக்கும் வேலை கொடுத்தால் வாழலாம்.  நவீன வாழ்வு தரும் வலுவற்ற வாழ்க்கை எல்லோரையும் சோம்பேறிகளாக்கி எல்லாவற்றிலுமே மேம்போக்கு என்று ஆகி விட்டது.

நல்ல தேர்ந்த இசை ரசிகர்கள் யார் என்று பார்த்தால் அவர்கள் ஒரு குழு.  அவர்களுக்கு இலக்கியம் தெரியாது.  தெரிந்த ஒரே இலக்கியவாதி சுஜாதா அல்லது பாலகுமாரன்.  நல்ல தேர்ந்த இலக்கிய வாசகர்கள் யார் என்று பார்த்தால் அவர்கள் ஒரு குழு. அவர்களுக்கு இசை தெரியாது.  தெரிந்ததெல்லாம் சினிமா பாட்டு. இதே கதைதான் ஓவியம், சினிமா மற்றும் எல்லா கலைகளிலும்.  எல்லாவற்றிலுமே தேர்ந்த உயர்ந்த ரசனை கொண்டோர் யார்?  யாருமே இல்லை.  காலையில் இட்லி சாப்பிடுவேன்.  இரவுக்கு மாட்டுச் சாணி.  வேறு எப்படிச் சொல்வது?  படிப்பது இலக்கியம்.  கேட்பது டப்பாங்குத்து.  கேட்க வேண்டாம் என்று சொல்லவில்லை. நானும் கேட்பேன். ஆனால் எப்போதுமா டப்பாங்குத்து, எல்லோருமா டப்பாங்குத்து என்று மட்டுமே கேட்கிறேன்.  நாற்பத்து சொச்சம் ஆண்டுகளாக எழுத்தாளர்கள் கூடும் மதுபான இரவுகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.  தமிழ் சினிமா பாடல்கள்தான் இரவு பூராவும் போகும்.  சினிமா பாட்டு வேண்டாம் என்று சொல்லவே இல்லை.  நாற்பது ஆண்டுகளாக நான் கலந்து கொண்ட அத்தனை எழுத்தாளர் இரவுகளும் அப்படித்தான் கடந்திருக்கிறது.  ஒரே ஒருத்தர் கூடவா கர்னாடக சங்கீதமும் ஹிந்துஸ்தானியும் கேட்பதில்லை.  கேட்கும் பழக்கம் உள்ள ஒரே ஒருவர் இருக்கிறார்.  அவரும் மது அருந்தியதும் சினிமா பாடலுக்குத் தாவி விடுவார்.  அதன் காரணமாகவே என் வாசகர் வட்ட சந்திப்புகளில் சினிமா பாடல்களைத் தடை செய்தேன்.  சுமாராக நூறு இரவுகள் இருக்கும்.  அதற்கு மேலும் இருக்கலாம்.  ஒரே ஒரு இரவில் ஒரு கர்னாடக சங்கீதக் கலைஞரை அழைத்திருந்தேன்.  அந்த இரவு முழுவதும் நண்பர்கள் அந்நியமாகி விட்டனர்.  எனக்காக ஏதோ கடனுக்கு விழித்திருந்தார்கள்.  அதிலிருந்து அதை நிறுத்தி விட்டேன்.  எப்படி சினிமா பாடலுக்குத் தடையோ அதேபோல் இதையும் தவிர்த்து விட்டேன். 

வெறும் ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றம் இது.  அதற்கு முன்னே இசை ரசனை சமூகத்தில் எப்படி இருந்தது என்று தி. ஜானகிராமனின் எழுத்திலும் ந. சிதம்பர சுப்ரமணியன் எழுத்திலும் காண முடிகிறது.  இன்றைய தினம் கிரிக்கெட் பற்றி எழுத இலக்கியத்தில் ஆள் இருக்கிறது.  அதைப் படிக்க ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள்.  ஏன், லட்சக்கணக்கில் என்று சொல்ல வேண்டும்.  இல்லாவிட்டால் ஒரு படைப்பிலக்கியவாதியான அபிலாஷை ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையான குமுதத்தில் கிரிக்கெட் பற்றி எழுத அழைப்பார்களா?  அதிலும் அது ஒரு நீண்ட தொடர்.  ஆனால் இசை பற்றி எழுத இப்படி ஒரே ஒரு படைப்பிலக்கியவாதி உண்டா? ஒரே ஒருத்தர்?  என் காலத்துப் படைப்பாளிகளில் இருவர் உண்டு.  பிரம்மராஜன். சுகுமாரன்.  இருவருமே இப்போது இசை பற்றி எழுதுவதில்லை.  நான் எழுதலாம் என்றால், என்னுடைய ஐம்பது ஆண்டு இசை அனுபவமும் வெறும் அனுபவம் மட்டுமே.  அடிப்படைப் பயிற்சி கிடையாது.  என்னால் ஒரே ஒரு ராகத்தைத் தவிர வேறு ராகங்களை அடையாளம் கூடக் காட்ட முடியாது.  தெரியாது.  ஆனால் ரசனையைப் பொறுத்தவரை உயர்தரம். 

ஏனென்றால், ஆரம்பமே அப்படி.  சமூகம் சொல்வதை நம்பாதே, பெரியவர்கள் சொல்வதைக் கேட்காதே என்ற முதல் பாடத்தை எனக்குக் கற்பித்தது ஜெயகாந்தன்.  குமுதம், விகடனில் அவர் எழுதும் பத்திகளின் மூலம் இதைச் சொல்வார்.  பெரியவர்கள் மு.வ.வைப் படி என்றார்கள்.  இந்தியும் சம்ஸ்கிருதமும் எதிரி என்றார்கள்.  கடவுளை நம்பாதே என்றார்கள்.  சினிமா பாட்டு கேட்டார்கள்.  இது எல்லாவற்றுக்கும் எதிராக இருந்தேன்.  பதின்மூன்று வயதில் ஆரம்பித்தது.  அகில இந்திய வானொலியில் ஒவ்வொரு சனிக்கிழமை இரவு ஒன்பதரை மணிக்கு சங்கீத் சம்மேளன் என்ற நிகழ்ச்சியில் பதினோரு மணி வரை சாஸ்த்ரீய சங்கீதக் கச்சேரி கேட்பேன்.  இந்தக் கச்சேரிக்காக வாரம் முழுவதும் காத்துக் கொண்டிருப்பேன்.  வீட்டில் ஒரே ஒரு ட்ரான்ஸிஸ்டர் என்று ஒரு டப்பாதான் இருந்தது.  ஊரில் இந்துக்கள் வசித்த மேற்குப் பகுதியில் நாணயக்காரத் தெருவில் வசித்த என் நண்பன் பேபியின் வீட்டில் மட்டுமே பெரிய கரண்ட் ரேடியோ இருந்தது.  வீட்டில் நிறைய பெண் பிள்ளைகள் இருந்ததால் அவர்கள் வீட்டுக்குள் பையன்களின் நண்பர்களை அனுமதிக்க மாட்டார்கள்.  அதனால் அந்தப் பெரிய ரேடியோவை பேபியின் அம்மா வீட்டுக் கதவைத் திறக்கும் போது ஒரு விள்ளல் பார்ப்பதோடு சரி.  கதவைத் திறந்ததும் ஹால்.  அந்த ஹாலில்தான் அந்த ரேடியோ இருக்கும்.  பின்னால் நான் வேலையில் சேர்ந்த பிறகு, பேபிக்குப் பைத்தியம் பிடித்த பிறகு வீட்டுக்குள் சர்வ சுதந்திரமாகப் புழங்க முடிந்தது.  அது வேறு கதை. 

எங்கள் வீட்டில் கரண்டில் இயங்கும் பெரிய ரேடியோவை வைத்துக் கொள்வதும் சாத்தியம் இல்லை, பார்த்துக் கொள்ளுங்கள்.  வீட்டில் கரண்டே இல்லையே.  அப்புறம் எப்படி ரேடியோ?  அதனால் டப்பா சைஸுக்கு ஒரு ட்ரான்ஸிஸ்டர்.  அதுவும் மூத்த பையன் நான் கேட்கிறேனே என்று.  அதுவும் நான் ரொம்ப ரொம்ப வித்தியாசமாக வளர்கிறேனே என்று.  அசல் தகர டப்பா மாதிரி இருக்கும்.  மாதிரி என்ன மாதிரி.  தகர டப்பாவேதான்.  அதற்கு பேட்டரி வாங்கிப் போட காசு இருக்காது.  ரொம்ப சிரமப்பட்டு காசு சேர்த்துத்தான் வாங்க வேண்டும்.  அப்படியே பேட்டரி போட்டாலும் கரகர கொரகொர என்று சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.  இன்னமும் ஞாபகம் இருக்கிறது.  அதன் வெளிப்புறத்தில் அலுமினியத்தால் ஒரு தகடு போல் இருக்கும்.  அதை ஒரு விரலால் தொட்டால் அந்தக் கொரகொரப்பு இருக்காது.  விரலை எடுத்து விட்டால் கொரகொர கர்ர் கர்ர்.  அதனால் விரலால் தொட்டுக் கொண்டே ஒன்றரை மணி நேரமும் சங்கீதம் கேட்பேன்.  ரவி ஷங்கர், மல்லிகார்ஜுன் மன்ஸூர், கங்குபாய் ஹங்கல், டாகர் பிரதர்ஸ், சிட்டிபாபு, பாலச்சந்தர், ஷிவ் குமார் ஷர்மா, குமார் கந்தர்வா, பண்டிட் ஜஸ்ராஜ், பிஸ்மில்லா கான், கிஷோரி அமோங்கர், டி.வி. பலூஸ்கர் என்று ஏராளமான பேர்.  எல்லோருடைய பெயரையும் பலமுறை சொல்லிச் சொல்லி மனப்பாடம் செய்து கொள்வேன்.

பதின்மூன்று வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரை இதுதான் எனக்கு இந்திய சாஸ்த்ரீய சங்கீதத்தின் அறிமுகம்.  மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதம் காரைக்காலில் நிறைய கேட்பேன்.  அது வேறு கதை.  இருபத்தைந்தாவது வயதில் ஒரு அதிசயம் நடந்தது.  யாரையெல்லாம் ரேடியோவில் காதை வைத்துக் கொண்டு கேட்டேனோ அவர்களையெல்லாம் நேரடியாக, ரொம்ப ரொம்பப் பக்கத்தில் கேட்கும் பாக்கியம் ஏற்பட்டது.  தில்லி மண்டி ஹவுஸைச் சுற்றி ஏராளமான அரங்குகள் இருந்தன.  கமானி ஆடிட்டோரியம், ஷங்கர்லால் அரங்கம், சப்ரூ ஹவுஸ், ரவீந்திர பவன் (சங்கீத நாடக அகாதமி ஹால்), மாவ்லங்கர் ஆடிட்டோரியம், ஃபிக்கி (FICCI) ஆடிட்டோரியம், லலித் கலா அகாதமி ஆடிட்டோரியம்.  இன்னும் பல.  பெயர்களை மறந்து விட்டேன்.   

ஹங்குபாய் ஹங்கல்

மேலே கண்டுள்ள ஹங்குபாய் ஹங்கலின் சங்கீதத்தைப் பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்.  இப்படிப் பாடுவதற்கு இன்று ஒரு ஆள் இருக்கிறாரா சொல்லுங்கள்.  இத்தனைக்கும் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்.  இந்த ஹங்குபாய் ஹங்கலை நேரடியாக பலமுறை கேட்டு அனுபவித்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போதே கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.  எப்பேர்ப்பட்ட தபசி அவர்! 

கீழே உள்ள இணைப்பு கிஷோரி அமோங்கர்.  சென்ற தலைமுறையின் கடைசிக் கொழுந்து. 

தில்லியில் 1978-இலிருந்து 1990 வரை இருந்தேன்.  வாரத்தில் எப்படியும் இரண்டு கச்சேரிகளைப் பார்த்து விடுவேன்.  அந்தக் காலகட்டத்தில்தான் பிரகதி மைதான் உருவாக்கப்பட்டது.  அதுவும் மண்டி ஹவுஸ் அருகில்தான் இருந்தது.  அங்கே ஒரு அரங்கம்.  காதம்பரி தியேட்டர்.  அங்கே பெரும் பெரும் கலைஞர்களை அழைத்து வந்து கச்சேரி நடத்துவார்கள்.  இரண்டு ரூபாய் மற்றும் மூன்று ரூபாய் டிக்கட்.  இங்கே மியூசிக் அகாதமியில் நடக்கும் ஆடம்பரங்கள் எதுவும் இருக்காது.  மூன்று ரூபாய் டிக்கட் கொஞ்சம் பின்னால்.  அதுவும் பிஸ்மில்லா கான் போன்றவர்கள் மேடையில் வந்து அமர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்வார்கள்.  கிஷோரி அமோங்கர் மட்டும்தான் கொஞ்சம் கெடுபிடி.  சிரிக்கவே மாட்டார்.  பத்திரிகையாளர்களுக்கு அவர் சிம்ம சொப்பனம்.  பேட்டி கேட்டால் சங்கீதம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், சொல்லுங்கள் என்பார்.  நீங்கள் சொல்ல வேண்டும்.  தயங்கக் கூடாது.  சொன்னால், நீங்கள் இன்னும் பத்து ஆண்டுகள் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும், பிறகு வாருங்கள் என்று சொல்லி அனுப்பி விடுவார்.  யாராவது நூற்றில் ஒருத்தர் கிஷோரியின் கேள்விகளுக்குத் தக்க பதில் சொல்லி விட்டால், அடுத்த மாதம் பதினெட்டாம் தேதி வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்வார்.  பதினெட்டாம் தேதி போனால், சொன்னேன் தான், ஞாபகம் இருக்கிறது, அடுத்த ஆண்டு பார்க்கலாம் என்று சொல்வார்.  அடுத்த ஆண்டு போனால் பேட்டி கொடுப்பார்.  மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் கொடுத்த பேட்டியில் என்னோடு ஹிந்துஸ்தானி இசை முடிவுக்கு வருகிறது என்று சர்ச்சையான ஒரு பேட்டி கொடுத்தார்.  எனக்கு ஆனால் பிடித்திருந்தது.  ஏனென்றால், என் நண்பர்களிடம் அடிக்கடி நான் சொல்லும் வார்த்தை அது.  என்னோடு பிழையின்றி தமிழ் எழுதும் வழக்கம் முடிவுக்கு வருகிறது.   கிஷோரி அமோங்கர் சொன்னதன் பொருள் என்னவென்றால், ஆத்மார்த்தமாக இசையில் மூழ்குவது என் காலத்தோடு முடிகிறது என்பதுதான்.  அதனால்தான் இப்போதைய கலைஞர்கள் பலரையும் எனக்குப் பிடிக்க மாட்டேன் என்கிறது.  யார் வாயால் பாடுகிறார்கள், யார் ஆத்மாவினால் பாடுகிறார்கள் என்று தெரிந்து விடுகிறது. 

அது எனக்குக் கடவுள் கொடுத்த வரம்.  ஒரு உதாரணம் சொன்னால் கோபித்துக் கொள்ளக் கூடாது.  தில்லிக்குப் போனதும் அதுவரை ஒரு டப்பாவுக்குள் கரபுரா சத்தத்தோடு கேட்டுக் கொண்டிருந்த மேதைகளை நேரில் கேட்கிறேன்.  ஆனால் அதிலும் எனக்கு ஒரு தேர்ந்தெடுப்பு இருந்தது.  டாகர் பிரதர்ஸ் என்றால் முதல் ஆளாய் ஓடுவேன்.  வேறு சிலர் என்றால், ஏதாவது ஐரோப்பிய சினிமாவுக்குப் போகலாமே என்பேன்.  இதற்கெல்லாம் எனக்குக் காரணம் தெரியாது.  பிறகுதான் தெரிந்து கொண்டேன்.  நான் முக்கியத்துவம் கொடுப்பதெல்லாம் த்ருபத் என்ற இசை வகை.  அடுத்த முக்கியத்துவம் கயால்.  டும்ரி (Tumri), டப்பா (Tappa) என்றால் அதை விட்டுவிட்டு ஐரோப்பிய சினிமாவுக்குப் போய் விடுவேன்.  

த்ருபத் பற்றி நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.  இதுதான் ஹிந்துஸ்தானி இசையின் உச்சம்.  ஆலாபனையே ஒரு மணி நேரம் போகும்.  ஆலாபனை என்றால் உங்களுக்குத் தெரியும்.  பக்க வாத்தியங்கள் இல்லாமல் (தம்புரா மட்டுமே விதிவிலக்கு) ராகத்தை ஆலாபனை செய்வது.  வார்த்தைகள் இருக்காது.  த்ருபத்தைக் கேட்கும்போது என் உடலும் மனமும் தம் ஸ்மரணையையே இழந்து விடும்.  தியானத்தில் கூட அந்த இடம் லபிப்பதில்லை.  கிட்டத்தட்ட சமாதி நிலை என்று சொல்லலாம்.  த்ருபத் கொடுக்கும் இசை வெளியில் ஆன்மா சுதந்திரமாக சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும்.  கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பார்களே, அது போல.  ஒரு மணி நேர ஆலாபனை முடிந்து தப்லா சப்தம் கேட்கும் போதுதான் உடம்பிலும் மனசிலும் உணர்வு திரும்ப வரும்.    

த்ருபத் என்ற இந்த மகத்தான இசை வகை ஹரிதாஸ் மற்றும் தான்ஸென் காலத்தில் பிரசித்தி பெற்றது.  தான்ஸென் அக்பரின் அரசவைக் கலைஞராக இருந்தவர்.  இந்த இருவரோடு இன்னொருவரும் த்ருபத் வடிவத்தைப் பிரபலமாக்கினார்.  அவர் பெயர் பைஜு பாவரா (Baijju Bawara).  இவருடைய கதையை அடிப்படையாக வைத்து இதே பெயரில் 1952-இல் ஒரு படமும் வந்திருக்கிறது.   

அதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.  இப்போது இதயநாதம் நாவலில் வரும் ஒரு வர்ணனை இது:

அவனுடைய இளங்குரல் கணீரென்று பெருகி வந்தது. அவனுக்குள்ள ஞானமும், லயத்திலும் சுருதியிலுமுள்ள சுத்தமும் போகப்போக வெகு நன்றாகப் பிரகாசித்தன. அவன் கைக்கொண்டிருந்த பாணியோ அப்படியே சபேசய்யர் பரம்பரை வழியாக, கச்சிதமாக இருந்தது. அவர் போட்ட மார்க்கத்தில் சர்வ லாவகமான அவனுடைய கற்பனைக் குதிரையை விட்டு மேலும் கீழும் சஞ்சாரம் செய்தான். குரலில் ஒரு பிசிர் கிடையாது; ஒரு தேசல் ஸ்வரம் இல்லை. ஸ்வரங்கள் குண்டு குண்டாக, அதற்குரிய கமகங்களுடன் வந்தன. ஸ்வரச் சேர்க்கைகளும் அந்தந்த ராகங்களுக்குரிய ஜீவனைக் காட்டும் கோர்வைகளாகவே இருந்தன.

சாய்வெழுத்தில் குறிப்பிட்டிருக்கும் பகுதியைப் பாருங்கள்.  இப்படி எழுத இன்று யாரேனும் இருக்கிறார்களா?  ஸ்வரங்கள் குண்டு குண்டாக, அதற்குரிய கமகங்களுடன் வந்தன.  இது பற்றி நான் என் நண்பர் சோமனிடம்தான் கேட்க வேண்டும்.  அவர் அந்த குண்டு குண்டைப் பாடியே கொண்டு வந்து விடுவார்.  நிஜமான கலைஞன்.  இந்த நாவலில் கிட்டுவின் குருவாக வருபவர் பெயர் திருவையாறு சபேசய்யர்.  தியாகராஜர் பரம்பரையில் நான்காவது தலைமுறை.  ஆச்சரியம் என்னவென்றால், நிஜத்திலுமே அக்காலத்தில் அதேபோல் தியாகராஜரின் நான்காவது தலைமுறையில் வந்த திருவையாறு சபேசய்யர் இருந்தார்.  அவருடைய குரு மஹா வைத்யநாத சிவன்.  சிவனின் குரு மானம்பூச்சாவடி வெங்கடசுப்பய்யர்.  இவர் தியாகராஜரின் நேரடி சிஷ்யர்.  சபேசய்யரின் தந்தை சாம்பசிவ ஐயர் ஒரு வயலின் கலைஞர். இவரிடம்தான் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் சங்கீதம் பயின்றார்.  சபேசய்யரின் தாத்தா பல்லவி துரைசுவாமி ஐயர். அதேபோல் சபேசய்யரிடம் பயின்றவர் முசிறி சுப்பிரமணிய ஐயர்.  ஆனால் இந்த நிஜ சபேசய்யர் நாவலில் வரும் கிட்டுவைப் போல் கஷ்ட ஜீவனம் செய்யவில்லை.  1929-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறையின் தலைமைப் பொறுப்பை முதன்முதலாக  ஏற்றவர். 1937 வரை அவர் அதே பொறுப்பில் இருந்தார்.  இவரது சீடர்கள்தான் பிரபலமான எஸ். ராமநாதன், ஓ.எஸ். சுப்ரமணியம்.  இவரைப் பற்றிப் படித்தபோது ஒரு சுவாரசியமான தகவல் கண்ணில் பட்டது.  புரசைவாக்கத்தின் வெள்ளாளர் தெருவில் இருந்த முசிறி சுப்ரமணிய ஐயருக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்கும்போது அந்த வீட்டுத் திண்ணையில் பெரும் கூட்டம் கூடி விடுமாம். 

அந்தக் கூட்டம்தான் இப்போது எங்கே என்று தேடுகிறேன்…

இன்னும் வரும். கட்டுரை பற்றி எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

இந்த முதல் அத்தியாயத்தை முடிக்கும் முன்னர் எனக்கு மிகவும் பிடித்த இப்போதைய கலைஞர் ஒருவரின் இணைப்பையும் தருகிறேன். இவர் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். கௌஷிகி சக்ரவர்த்தி.

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai